சில மாதங்களுக்கு முன்பு ஆளாளுக்கு தங்கள் கிறுக்குத்தனங்களை எழுதிக்கொண்டிருந்தபோது நண்பர் மா. சிவகுமார் என்னையும் எழுத அழைத்திருந்தார். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு அந்த அழைப்பை ஏற்று இன்று எழுதத்தான் வேண்டுமா என்றால், ஆம்!(வாக்கு கொடுத்துட்டோம்ல!) வெகுநாட்களாக வலைப்பதிவு பக்கம் வரமுடியாமல் இருந்துவிட்டு இப்போது மீண்டும் தொடர எத்தனிக்கையில், என்ன எழுதுவது என்று குழம்பிக்கொண்டிராமல், இந்த அழைப்பையே ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன் ;) நன்றி சிவகுமார்!
என்னிலிருக்கும் வினோதங்களைப் பற்றி யோசிக்கையில், முண்டியடித்துக்கொண்டு முதலில் வந்து நிற்பது என் கனவுகள் தான்! நான் கனவுகாணாத இரவுகளே இல்லை எனலாம். முன்பே இங்கு சொல்லியிருப்பதுபோல் கனவுகளும் இன்னொரு நிஜ வாழ்க்கைதான் எனக்கு. நிஜத்தில் நிகழும் சம்பவங்கள் ஏற்படுத்தும் உணர்வுகளுக்குச் சற்றும் குறைவில்லாத உணர்வுகளையே எனக்குக் கனவுகளும் கொடுத்திருக்கின்றன. நிகழ்வுகள் எத்தகையதாயினும் நாம் பெறும் உணர்வுகள்தானே நம் அனுபவம். அந்த வகையில் நான் நிஜத்தில் அறிந்திராத பல உணர்வுகளைக்கூடக் கனவுகளில் கண்டிருக்கிறேன்! அவற்றுள் ஒன்றுதான் இந்தப்பதிவு.
பல சமயங்களில், கனவுகளின்போது என்னைச்சுற்றி நிகழும் புற, அக சங்கதிகள் கூட என் கனவுகளுடன் இணைந்துகொள்ளும்! உதாரணத்திற்கு, கனவின் போது வெளியில் ஏதேனும் சப்தங்கள் எழுந்தால், அவை எந்த லாஜிக் இடைஞ்சலும் இல்லாமல் கனவுடன் இணைந்து, கனவில் காணும் சம்பவத்தின் போது எழும் சப்தங்களாகவே நான் உணர்வேன். இன்னொரு உதாரணம் சொன்னால் உங்களுக்கு எளிதாய்ப் புரியலாம். சின்ன வயதில் ஒரு கனவு. நானும் என் மாமாவும் யாரையோ சைக்கிளில் துரத்திக்கொண்டிருக்கிறோம். அசுர வேகத்தில் அவர் சைக்கிள் மிதித்துக்கொண்டிருக்கிறார். பின்னால் அவரை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன். அப்போது எனக்கு அவசரமாக 'பிஸ்' அடிக்க வேண்டும்போல் இருக்கிறது. இந்த அவசரத்தில் மாமாவிடம் எப்படி கேட்பது என்று அடக்கிக் கொள்கிறேன். பின்னும் சற்றைக்கெல்லாம் என்னால் அடக்கவே முடியவில்லை. மாமாவிடம் வண்டியை நிறுத்தச்சொல்லி அடம்பிடிக்கிறேன். அவரும் வேறு வழியில்லாமல் என்னைத் திட்டிக்கொண்டே நிறுத்துகிறார். நான் அவசர அவசரமாக இறங்கி, சாலையோரம் சென்று நிம்மதிப் பெருமூச்சுடன் விடுதலை பெறுகிறேன். உடனே படுக்கை சில்லிட்டுப்போக விழித்துக்கொள்கிறேன்! எழுந்து பார்த்தால் படுக்கையிலேயே..!! இப்படி வாரத்திற்கு நான்கு நாட்களாவது நடக்கும். கனவில் வருவது எந்த நிகழ்வாயினும் இடையில் உண்மையில் தோன்றும் இந்த அவசர உணர்வும் சேர்ந்துகொள்ளும். கனவில் என்னவோ சரியான இடம் தேடித்தான் போவேன். நிஜத்தில்தான் படுக்கை நனைந்துபோகும்!
ஒரு முறை ஒரு முழு திரைப்படத்தையே என் கனவில் பார்த்திருக்கிறேன்! எழுத்தும் இயக்கமும் யாரெனத்தெரியவில்லை. அது ஒரு குழந்தைகளுக்கான படம். உண்மையில், நிஜத்தில் கூட அவ்வளவு சுவாரஸ்யமான ஒரு படத்தை நான் பார்த்ததேயில்லை. அந்தப் படத்தின் பல காட்சிகளும், குறிப்பாக கிளைமாக்ஸூம் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. அவ்வளவு கோர்வையாக, அருமையான ஒரு திரைக்கதை எப்படி என் கனவில் அமைந்தது என்று இன்றுவரை புரியவேயில்லை! எப்படிச் சொன்னாலும் உணர்த்திவிடமுடியாத அந்தத் திரைப்படத்தின் முழு வீச்சையும், யாருடனும் பகிர்ந்துகொள்ள இயலாமலேயே போய்விட்டதே என்ற ஏக்கம் இன்னமும் இருக்கிறது!
தூக்கத்தில்தான் என்றில்லை. விழித்திருக்கும்போதும் கனவு காண்பவன் நான்! பயணங்கள், காத்திருப்புகள் என தனித்திருக்கும் வாய்ப்புகள் எப்போது கிடைத்தாலும் என்னையறியாமல் விழித்துக்கொள்ளும் என் கனவுலகம். எனக்குப் பிடித்தமான பல சூழல்களை என் கற்பனை தானாகவே அமைத்துக்கொள்ளும். எதிராளியின் வசனங்கள் உட்பட என் மனமே எல்லாவற்றையும் பேசிக்கொள்ளும். இந்த சூழலுக்கான முகபாவங்கள் மட்டும் என்னில் மாறிக்கொண்டிருக்கும். பெரும்பாலும் தனியாக சிரித்துக்கொண்டிருப்பேன். எத்தனையோ பேர் என்னை அந்த நிலையில் பார்த்து, நினைத்துக்கொண்டு போயிருக்கலாம்... 'லூசுப்பய...' என்று!
வழக்கம்போல, பதிவு வளவளவென்று நீண்டுகொண்டேயிருப்பதால் மற்ற வினோதங்கள் அடுத்த பதிவில்..!
6 மறுமொழிகள்:
அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ.... தல.. டெம்ளேட் சூப்பரா இருக்கு... அதுக்காக இந்த பின்னூட்டம்.
பதிவை படிச்சுட்டு திரும்பவும் வாரேன்.
//எப்படிச் சொன்னாலும் உணர்த்திவிடமுடியாத அந்தத் திரைப்படத்தின் முழு வீச்சையும், யாருடனும் பகிர்ந்துகொள்ள இயலாமலேயே போய்விட்டதே என்ற ஏக்கம் இன்னமும் இருக்கிறது!//
என்னங்க அருள் என் கிட்டயாவது சொல்லியிருக்கலாமே! ஆனாலும் ரெம்ப ஓவரூ...
:)))))))))))
அருள்,
டெம்பளேட் நல்லாருக்கு.. அத விடுங்க.. இந்தப்பக்கம் கண்ணாடி போட்டுகிட்டிருக்கும் படம் ஒண்ணு போட்ருக்கீங்களே, அது யாரு? ;)
நன்றி தல!
ஜெய், அதெல்லாம் சொன்னா அவ்ளோ திருப்தியா இருக்காதுங்க. அன்னிக்கு கூட நீங்க எங்கயோ ஒரு ஃபிகர் பாத்தேன்னு வந்து புலம்பினீங்களே... அப்படி ஆகிடும்!
//இந்தப்பக்கம் கண்ணாடி போட்டுகிட்டிருக்கும் படம் ஒண்ணு போட்ருக்கீங்களே, அது யாரு? //
பொன்ஸ்,
அதுதாங்க உண்மையான பழைய அருள். அப்பல்லாம் ஒரு நாளைக்கு நாலுதரம் 'என்ன ஏன்டா இவ்ளோ அழகா படைச்ச ஆண்டவா?'-ன்னு புலம்பிகிட்டு இருப்பேன். சில பல பிரச்சனைகளுக்கு அப்புறம் என்ன எப்பவுமே நான் அவ்வளவு அழகா காட்டிக்கறதில்ல! ஒரு சாம்பிள் தான் இது. ஆமா, இந்த போட்டோல நான் அழகாத்தானே இருக்கேன் ;)
அசத்தல் டெம்ளேட். அருள் எனக்கு வரும் கனவுகள் ஏறத்தாழ முழுமையாக ஞாபகம் இருக்கும். கோர்வையான திரைக்கதையாக இல்லாவிட்டாலும் மிகப்பிரமாண்டமான போர்கள் நிறைந்த அரச காலத்து காட்சி அமைப்புகளோடு வரும். மூச்சா போன அனுபவம் இதுவரை இல்லை :-)
நன்றி முத்துகுமரன் :)
Post a Comment