கூர்க் - தொடர்ச்சி...

03 July 2007

கூர்கில் எங்களது இரண்டாம் நாள் மிக இனிதாக விடிந்தது. வழக்கம்போலில்லாமல் அன்று நேரத்திலேயே எழுந்துவிட்டோம் - மலைப்பிரதேசத்தின் விடியல் அழகை ரசிக்க. எங்குமே காலை வெய்யிலின் அழகே தனி. காடு மலைகளுக்கிடையே என்றால் கேட்கவேண்டுமா என்ன? சுத்தமான கற்றை சுவாசித்தபடி சின்னதாக ஒரு நடைபயணம். இன்றைக்கும் இங்கேயே இருந்துவிடலாமா இல்லை வேறு ஏதாவது பார்க்கச்செல்லலாமா என்று யோசித்தபடி நடந்தோம்.

Click to enlarge

நிம்மதியாக இங்கேயே இன்றைக்கும் ஓய்வெடுக்கலாம் என்று தோன்றினாலும், புகைப்படங்களில் பார்த்த 'கோல்டன் டெம்பில்'-ன் பிரம்மாண்டமும், பளபளப்பும் ஆசைகாட்டியது. இனி இங்கே எப்போது வருவோமோ... அதையும் பார்த்துவிட்டே போய்விடலாம் என்று முடிவெடுத்தோம்.

Click to enlarge

காலை உணவுக்குப்பின் அந்த இடத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். புத்தர் ஆலயமான அந்த 'தங்கக் கோயில்' இருப்பது 'குஷால் நகர்'-ல். மடிக்கேரி சென்று அங்கிருந்து குஷால் நகர் சென்றோம். வழியில் தலைக்காவேரிக்குச் செல்லும் பாதைகள் பிரிகின்றன. நேரமின்மையால் அங்கெல்லாம் செல்ல முடியவில்லை.

Click to enlarge Click to enlarge

மடிகேரியிலிருந்து குஷால் நகர் செல்லும் வழியில் 'நிசர்கதாமா' சென்றோம். காவேரி ஆற்றினால் சூழப்பட்ட ஒரு குட்டித் தீவுதான் இந்த நிசர்கதாமா. உள்ளே செல்ல ஒரு தொங்கும் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் மூங்கில் காடுதான் உள்ளே. குழந்தைகள் விளையாட ஊஞ்சல் முதலான நிறைய விஷயங்கள் இருக்கின்ற. நாங்கள் எதையும் விட்டுவைக்கவில்லை! மரத்தின் மேல் அமைக்கப்பட்ட ஒரு சின்ன குடில் இன்னொரு விசேஷம். அப்புறம் படகுசவாரி, யானை சவாரி கூட இருக்கிறது.

Click to enlarge


காவேரியில் இறங்கிக் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டுக் கிளம்பினோம். அங்கிருந்து மிக அருகிலேயே குஷால் நகர் தங்கக் கோயில். கூர்கில் நான் ரொம்பவும் ரசித்தவற்றுள் இந்தக் கோயிலும் ஒன்று. கோயிலின் கூரை முதல் எல்லாமே தங்கத்தில் பளபளக்கிறது. நல்ல வடிவமைப்பு. சின்னச்சின்ன அழகிய சித்திர வேலைப்படுகளும் ஓவியங்களும் ரசிக்க வைக்கின்றன.

Click to enlarge Click to enlarge


உள்ளே சென்றால் பிரம்மாண்டமான புத்தர் சிலை. அதுவும் தங்கத்தில் ஜொலிக்கிறது. நீளம் மற்றும் சிவப்பு வண்ணப் பின்னனியில் சிலை மிக எடுப்பாக இருக்கிறது. மனிதனின் அகந்தையை அழிக்க, சமய வேறுபாடின்றி பெரும்பாலான ஆலயங்களில் பயன்படுத்தப்படும் "பிரம்மாண்டம்", இங்கும் சரியாய்ப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது!

Click to enlarge Click to enlarge

Click to enlarge Click to enlarge


கூர்கின் முழு அழகையும் ரசிக்க வேண்டுமானல் நிச்சயம் இரண்டு நாட்கள் போதாது. குறைந்தபட்சம் ஒரு வாரமாவது தங்கி சுற்றிப்பார்க்க வேண்டும். திரும்பத் திரும்ப ஊட்டி கொடைக்கானல் என்று சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் கூர்க் ஒரு நல்ல மாற்றாக அமையும்!

கூர்க் - இயற்கையின் கொண்டாட்டம்!

28 June 2007

ல்லா வேலைகளையும் தூக்கிப்போட்டுவிட்டு ஒரு இரண்டு நாளைக்காவது எங்காவது போய் எந்த கமிட்மென்ட்டும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. இப்படியே யோசித்துக்கொண்டிருந்த சில நண்பர்களையும் அழைத்துக்கொண்டு சமீபத்தில் கர்னாடக மாநிலம், கூர்க்(coorg) சென்றுவந்தேன்.

Click to enlarge Click to enlarge

பொதுவாக கூர்க் போகவேண்டுமென்றால் அங்குள்ள 'மடிகேரி' என்ற ஊருக்கு தான் வழிகாட்டுவார்கள் போலிருக்கிறது. இந்த மடிகேரியைச் சுற்றித்தான் கூர்கின் பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. ஆனால் நாங்கள் யாரையும் எதுவும் விசாரிக்க நேரமில்லாமல் இணையத்தில் கூர்க் பற்றி தேடினோம். பல நல்ல, பெரிய தங்கும் விடுதிகள் மடிகேரியில் தான் இருந்தன. ஒரு இணைய பக்கத்தில் 'home stay' வகையிலான தங்குமிடங்கள் பற்றி காணக்கிடைத்தது. வழக்கமான ஹோட்டல்களைத் தவிர்த்துவிட்டு இப்படி வித்தியாசமாய்த் தங்கலாம் என்ற ஆர்வம் எழுந்ததால் ஏதாவது ஒரு 'home stay'-விலேயே தங்கலாம் என்று முடிவெடுத்துவிட்டோம். அதையும் இணையத்திலேயே தேடி, புகைப்படங்கள் எல்லாம் பார்த்து 'நரிகடி ஹோம் ஸ்டே' என்ற இடத்தைத் தேர்வுசெய்தோம். உடனே தொலைபேசி, முன்பதிவும் செய்துவிட்டோம்.

ஆனால் பெங்களூர் சென்று, அங்கிருந்து கூர்க் நோக்கிப் பயணமாகும்போதுதான் தெரிந்தது, நாங்கள் தங்குவதற்குத் தேர்வுசெய்த இடம் - குட்டா டவுன் - கூர்கின் இன்னொரு எல்லையில்(மடிகேரியிலிருந்து வெகுதொலைவில்) இருக்கிறதென்று. எல்லா இடங்களையும் பார்க்கவேண்டுமென்றால் ரொம்ப அலைய வேண்டியிருக்கும் எனத் தெரிந்தது. ஆனாலும் நாங்கள் தங்கும் இடத்திற்கு வெகு அருகில் 'இருப்பு' என்கிற அருவி இருக்கிறதென்ற தகவல் மட்டும் ஆறுதலாய் இருந்தது.

பெங்களூர்-மைசூர் சாலையில் மைசூருக்குச் சற்று முன் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் வலதுபுறம் திருப்பி, ஹுன்சூர் அடைந்தோம். அங்கிருந்து மடிகேரி செல்லவும் குட்டா டவுன் செல்லவும் வேறு வேறு வழிகள். குட்டா டவுன் செல்லும் வழியில் 'நாஹ்ரஹோலே'-வில் ஒரு தேசிய பூங்கா இருக்கிறது. நாங்கள் அதையெல்லம் தவிர்த்துவிட்டு நேராக குட்டா டவுன் சென்றுவிட்டோம்.

Click to enlarge Click to enlarge

ஹுன்சூர் தாண்டி கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஏதோ புதிய உலகத்திற்குள் வந்த மாதிரி அடர்ந்த காடுகள் ஊடாகவே பயணம். அதற்கப்புறம் வெறும் காடும் மலைகளும் தான்! அங்கங்கே இயற்கையை இம்சிக்கத்தெரியாத சின்னச்சின்ன கிராமங்கள். வழி நெடுக பல இடங்களில் மான்கள் கூட்டம் கூட்டமாக மேய்ந்துகொண்டிருக்கின்றன. எத்தேச்சையாக மிக நல்லதொரு இடத்தைத் தேர்வுசெய்துவிட்டதாகவே எனக்குத் தோன்றியது. இப்படி ஒரு இடத்தில் ஒரு நாளாவது தங்கவேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆசை!

குட்டா டவுன் கொஞ்சம் பெரிய கிராமமாகத் தெரிந்தது. அதன் ஒரு எல்லையில்தான் நங்கள் முன்பதிவு செய்திருந்த 'நரிகடி ஹோம் ஸ்டே'. இம்மாதிரி 'ஹோம் ஸ்டே'-க்கள் அங்கு நிறைய இருக்கின்றன. பெரும்பாலும் இவை அனைத்திற்கும் இணையதளங்கள் இருக்கின்றன. இணையதளம் இல்லாத விடுதிகளில் தங்குதல் பாதுகாப்பானதில்லை என்கிறார்கள். இவை அனைத்துமே முற்றிலும் இயற்கை சூழவே அமைந்திருக்கின்றன. ஒரு விடுதியிலிருந்து பார்த்தால் இன்னொன்று தெரிவதில்லை. மலைகளுக்கும் காடுகளுக்கும் இடையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இவை சிதறிக்கிடக்கின்றன. நரிகடி ஹோம் ஸ்டே மிக அழகானதொரு நில அமைப்பில் இருந்தது. எதிரில் பசுமை படர்ந்த மலைகள்.

Click to enlarge Click to enlarge

விடுதியில் நல்ல வரவேற்பு. உரிமையாளர் தன் மனைவி, மகளுடன் அங்கேயே வசிக்கிறார். விடுதிக்கு அருகிலிருக்கும் மலை வரை அவர்களின் காஃபி எஸ்டேட். டிசம்பர், ஜனவரியில் சீசனாம். அவர்கள் தங்கும் பகுதி தவிர்த்து இரண்டு பகுதிகளில் இரண்டு குடும்பங்கள் தங்கலாம். நமக்கும் சேர்த்து அவர்கள் வீட்டிலேயே சமைத்துவிடுகிறார்கள். மின்சாரம் எல்லா நேரமும் இருப்பதில்லை. மின் இணைப்பு இல்லாத இரவுகளில் தூங்கச் செல்லும் வரை ஜெனரேட்டர் போடுகிறார்கள். நண்பர்கள் வீட்டில் சென்று தங்குவது போலத்தான் இருக்கிறது. மூன்று வேளை உணவு, வேண்டியபோது டீ, காஃபி, தங்குமிடம் எல்லவற்றுக்கும் சேர்த்து ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 1000 அல்லது 1200 ரூபாய் பெற்றுக்கொள்கிறார்கள். தரமான, ருசியான உணவு தாராளமாக தரலாம் என்று சொல்லவைக்கிறது. அசைவம் உட்பட, நம் விருப்பம் கேட்டு சமைத்துத்தருகிறார்கள்.

விடுதிக்கு வெளியே மேசை நாற்காலிகளுடன் இரண்டு சின்ன குடில்கள். மழைச்சாரல் தூவும் நேரங்களில் அங்கு அமர்ந்து தேனீர் அருந்துவதை விட வேறெதுவும் சுகம் உலகில் இருக்குமா எனத் தெரியவில்லை! குளிர்ந்த இரவில், சின்ன மின்விளக்குடன் இந்த குடிலில் அமர்ந்திருக்கையில் நம்மைச் சுற்றி இருட்டும், பூச்சிகளின் ரீங்காரமும் மட்டுமே. இப்படி காடு, மலைகளுக்கு நடுவில் சின்ன குடிலில் இரவில் அமர்ந்து உலகின் பிரம்மாண்டத்தை யோசித்தால் எப்படியெல்லாமோ இருக்கிறது!

Click to enlarge

அந்த விடுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்குள் 'இருப்பு' அருவி. அந்த அருவிநீர் செல்லும் ஓடைக்குப் பெயர் 'லட்சுமணதீர்த்தா'. இராமனும், இலட்சுமணனும் சீதையைத் தேடி காட்டில் அலைந்தபோது இந்தப் பக்கமாக வந்தார்களாம். அப்போது இராமனுக்கு தாகம் எடுக்கவே, தண்ணீர் தேடினார்களாம். அருகில் தண்ணீர் எங்கும் கிடைக்காததால் லட்சுமணன் ஒரு பாறையில் அம்பெய்தி தண்ணீர் வர வைத்தாராம். அதுதான் லட்சுமணதீர்த்தமாக இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறதாம். இராமன் சென்னைக்கு வந்து சீதையைத் தேடாமல் போய்விட்டாரே என்று ஏக்கமாக இருந்தது!

Click to enlarge Click to enlarge

அரை கிலோமீட்டருக்கும் மேலாக நடந்துமட்டுமே அடையக்கூடிய மலைப்பாதையுடன் அந்த அருவி மிக அழகாகவே இருந்தது. நல்ல குறுகலான மலையிடுக்கில் அமைந்த அருவி. நம் பாதம் படமுடியாத பள்ளங்களிலெல்லாம் ஏகத்திற்கும் சேர்ந்துவிட்ட ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களும், பலிதீன் கவர்களும்தான் மிகுந்த வேதனை அளித்தது.

அருவிக்குச் சென்றுவந்ததோடு அன்று வேறு எங்கும் செல்லவில்லை. மாலையில் அந்த மலைப்பாதைகளில் உலாத்தியது நல்ல ஓய்வாக இருந்தது.

தொடரும்...

மொக்கை போட்டு நாளாச்சு! பதிவர் சந்திப்பு :)

08 June 2007


வணக்கம் நண்பார்களே!

நாம் சந்தித்து நாட்களாகிவிட்டன. இதோ.. மீண்டும் மொக்கை போட ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள் இரு பதிவர்கள். அவர்கள் தமிழகத்திற்கு வெளியே இருந்து வருகிறவர்கள். பதிவர்களை சந்திக்கவேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வருகிறார்கள். இது அரட்டைக் கச்சேரிக்கான சந்திப்பு.

இச்சந்திப்பின் சிறப்பு விருந்தினர்கள்...

டெல்லியிலிருந்து முத்துலெட்சுமி
துபாயிலிருந்து அபிஅப்பா

ஆர்வமிக்கவர்கள் படை எடுக்கவேண்டிய இடம்: காந்தி சிலை, மெரீனா கடற்கரை.
நாள்: 24.ஜூன்.2007.
நேரம்: மாலை 4 மணி முதல் 6.30 வரை.

அப்பால...
சந்திப்புல பார்க்கலாம்.

லூசுப்பய!

31 May 2007

சில மாதங்களுக்கு முன்பு ஆளாளுக்கு தங்கள் கிறுக்குத்தனங்களை எழுதிக்கொண்டிருந்தபோது நண்பர் மா. சிவகுமார் என்னையும் எழுத அழைத்திருந்தார். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு அந்த அழைப்பை ஏற்று இன்று எழுதத்தான் வேண்டுமா என்றால், ஆம்!(வாக்கு கொடுத்துட்டோம்ல!) வெகுநாட்களாக வலைப்பதிவு பக்கம் வரமுடியாமல் இருந்துவிட்டு இப்போது மீண்டும் தொடர எத்தனிக்கையில், என்ன எழுதுவது என்று குழம்பிக்கொண்டிராமல், இந்த அழைப்பையே ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன் ;) நன்றி சிவகுமார்!

என்னிலிருக்கும் வினோதங்களைப் பற்றி யோசிக்கையில், முண்டியடித்துக்கொண்டு முதலில் வந்து நிற்பது என் கனவுகள் தான்! நான் கனவுகாணாத இரவுகளே இல்லை எனலாம். முன்பே இங்கு சொல்லியிருப்பதுபோல் கனவுகளும் இன்னொரு நிஜ வாழ்க்கைதான் எனக்கு. நிஜத்தில் நிகழும் சம்பவங்கள் ஏற்படுத்தும் உணர்வுகளுக்குச் சற்றும் குறைவில்லாத உணர்வுகளையே எனக்குக் கனவுகளும் கொடுத்திருக்கின்றன. நிகழ்வுகள் எத்தகையதாயினும் நாம் பெறும் உணர்வுகள்தானே நம் அனுபவம். அந்த வகையில் நான் நிஜத்தில் அறிந்திராத பல உணர்வுகளைக்கூடக் கனவுகளில் கண்டிருக்கிறேன்! அவற்றுள் ஒன்றுதான் இந்தப்பதிவு.

பல சமயங்களில், கனவுகளின்போது என்னைச்சுற்றி நிகழும் புற, அக சங்கதிகள் கூட என் கனவுகளுடன் இணைந்துகொள்ளும்! உதாரணத்திற்கு, கனவின் போது வெளியில் ஏதேனும் சப்தங்கள் எழுந்தால், அவை எந்த லாஜிக் இடைஞ்சலும் இல்லாமல் கனவுடன் இணைந்து, கனவில் காணும் சம்பவத்தின் போது எழும் சப்தங்களாகவே நான் உணர்வேன். இன்னொரு உதாரணம் சொன்னால் உங்களுக்கு எளிதாய்ப் புரியலாம். சின்ன வயதில் ஒரு கனவு. நானும் என் மாமாவும் யாரையோ சைக்கிளில் துரத்திக்கொண்டிருக்கிறோம். அசுர வேகத்தில் அவர் சைக்கிள் மிதித்துக்கொண்டிருக்கிறார். பின்னால் அவரை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன். அப்போது எனக்கு அவசரமாக 'பிஸ்' அடிக்க வேண்டும்போல் இருக்கிறது. இந்த அவசரத்தில் மாமாவிடம் எப்படி கேட்பது என்று அடக்கிக் கொள்கிறேன். பின்னும் சற்றைக்கெல்லாம் என்னால் அடக்கவே முடியவில்லை. மாமாவிடம் வண்டியை நிறுத்தச்சொல்லி அடம்பிடிக்கிறேன். அவரும் வேறு வழியில்லாமல் என்னைத் திட்டிக்கொண்டே நிறுத்துகிறார். நான் அவசர அவசரமாக இறங்கி, சாலையோரம் சென்று நிம்மதிப் பெருமூச்சுடன் விடுதலை பெறுகிறேன். உடனே படுக்கை சில்லிட்டுப்போக விழித்துக்கொள்கிறேன்! எழுந்து பார்த்தால் படுக்கையிலேயே..!! இப்படி வாரத்திற்கு நான்கு நாட்களாவது நடக்கும். கனவில் வருவது எந்த நிகழ்வாயினும் இடையில் உண்மையில் தோன்றும் இந்த அவசர உணர்வும் சேர்ந்துகொள்ளும். கனவில் என்னவோ சரியான இடம் தேடித்தான் போவேன். நிஜத்தில்தான் படுக்கை நனைந்துபோகும்!

ஒரு முறை ஒரு முழு திரைப்படத்தையே என் கனவில் பார்த்திருக்கிறேன்! எழுத்தும் இயக்கமும் யாரெனத்தெரியவில்லை. அது ஒரு குழந்தைகளுக்கான படம். உண்மையில், நிஜத்தில் கூட அவ்வளவு சுவாரஸ்யமான ஒரு படத்தை நான் பார்த்ததேயில்லை. அந்தப் படத்தின் பல காட்சிகளும், குறிப்பாக கிளைமாக்ஸூம் இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. அவ்வளவு கோர்வையாக, அருமையான ஒரு திரைக்கதை எப்படி என் கனவில் அமைந்தது என்று இன்றுவரை புரியவேயில்லை! எப்படிச் சொன்னாலும் உணர்த்திவிடமுடியாத அந்தத் திரைப்படத்தின் முழு வீச்சையும், யாருடனும் பகிர்ந்துகொள்ள இயலாமலேயே போய்விட்டதே என்ற ஏக்கம் இன்னமும் இருக்கிறது!

தூக்கத்தில்தான் என்றில்லை. விழித்திருக்கும்போதும் கனவு காண்பவன் நான்! பயணங்கள், காத்திருப்புகள் என தனித்திருக்கும் வாய்ப்புகள் எப்போது கிடைத்தாலும் என்னையறியாமல் விழித்துக்கொள்ளும் என் கனவுலகம். எனக்குப் பிடித்தமான பல சூழல்களை என் கற்பனை தானாகவே அமைத்துக்கொள்ளும். எதிராளியின் வசனங்கள் உட்பட என் மனமே எல்லாவற்றையும் பேசிக்கொள்ளும். இந்த சூழலுக்கான முகபாவங்கள் மட்டும் என்னில் மாறிக்கொண்டிருக்கும். பெரும்பாலும் தனியாக சிரித்துக்கொண்டிருப்பேன். எத்தனையோ பேர் என்னை அந்த நிலையில் பார்த்து, நினைத்துக்கொண்டு போயிருக்கலாம்... 'லூசுப்பய...' என்று!

வழக்கம்போல, பதிவு வளவளவென்று நீண்டுகொண்டேயிருப்பதால் மற்ற வினோதங்கள் அடுத்த பதிவில்..!