என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

06 June 2006

நாங்க போட்ட நாடகம்

(சற்றே பெரிய சிறுகதை)

அந்த நாடகப்போட்டியில் கலந்துகொள்ள நாங்கள் முடிவுசெய்ததற்கு இரண்டு மிக முக்கியமான காரணங்கள் இருந்தன. முதலாவதும், மிக முக்கியமானதுமான காரணம் எங்கள் எதிரி(பின்னே... நாங்கள் போட்டியிடுகிற அத்தனை மேடையிலும் எங்களை ஜெயிக்கிறவள் எங்கள் எதிரிதானே?) பத்மா & கோ அந்த போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை! இரண்டாவது, அந்த போட்டிக்கு நடுவராக வரப்போகிறவர் எங்கள் டீமில் இருக்கும் வினோத்தின் அப்பா!! இது போதாதா, நாங்கள் இரண்டாவது பரிசாவது வாங்கிவிட?! இந்தமுறை கிட்டத்தட்ட முடிவை எழுதிவைத்துக்கொண்டுதான் நாங்கள் களத்தில் இறங்கினோம்.

மயிலாடுதுறை பக்கத்தில் ஆனதாண்டவபுரம் என்ற ஊரில் "கோபால கிருஷ்ண பாரதி விழா" ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறதாம். தமிழில் முதன் முதலில் நலுங்குப் பாடல்கள் பாடியது கோபால கிருஷ்ண பாரதிதானாம்(இனிமேல் கோ. கி. பா. ஓக்கேவா?!). கோ. கி. பா வின் வாழ்வில் ஒருபகுதி, ஆனதாண்டவபுரத்தில் கழிந்ததால் அவர் பெயரில் ஆண்டுதோறும் அங்கு விழா எடுக்கிறார்களாம். இந்த வருடம் வினோத்தின் அப்பா(விழா கமிட்டியின் மெம்பர்!) சொன்ன யோசனையின்படி கல்லூரிகளுக்கிடையேயான இசை, நடனம் மற்றும் நாடகப்போட்டி வைக்கிறார்களாம். இவற்றைச்சொன்னபோதே பத்மா இந்த போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்பதையும் வினோத் சொல்லிவிட்டான்.

போட்டிக்கான அறிவிப்பு officiaலாய் வந்ததும், எங்கள் கல்லூரியின் நுண்கலை மற்ற(fine arts association) ஒருங்கிணைப்பாளர் K.V எனப்படுகிற, பேராசிரியர் K. வேலாயுதம்('சொம்பு'ன்னு சொன்னாதான் காலேஜ்ல முக்காவாசி பேருக்கு தெரியும். அவரை மொத்தமா பாக்க அப்படித்தான் இருக்காராம். எங்கள் முன்னோர்கள் வைத்த பெயர். நாங்கள் வழிமொழிந்துகொண்டிருக்கிறோம்!) அவர்களிடம் பெயர் கொடுக்க சென்றபோது பத்மா இந்த போட்டிக்கு வரவில்லை என்பதை கீழ்கண்டவாறு உறுதிசெய்துகொண்டோம்.

அவர் பெயர் எழுதிக்கொண்டிருந்த பேப்பர் வெறுமையாய் இருப்பதை பார்த்துக்கொண்டே பாலாஜிதான் கேட்டான் -

'ஈவினிங் காலேஜ்-ல யாரும் பேர் கொடுக்கலீங்களா சார்...?'

யாரும் என்ன யாரும். அவளைத்தவிர வேறு யார் வரப்போகிறார்கள். இருந்தாலும் அவள் பேர் சொல்லி கேட்க அவனது ஈகோ இடம் கொடுக்கவில்லை போலும். ஆனாலும் அவர் ஓப்பனாய் சொல்லி மானத்தை வாங்கிவிட்டார்.

'இல்லப்பா. பத்மாதான் லீவ்ல இருக்கால்ல. அவ இல்லாம அவ டீம் வரலன்னு சொல்லிட்டாங்க...'

ஆமா. டீம் பெரிய டீம். அவங்க டீமுக்கு பத்மா மேல அவ்ளோ பாசம்னெல்லாம் நினைச்சிடாதீங்க. அங்க வேற எவளுக்கும் ஸ்கிரிப்ட் எழுதி டைரக்ட் பண்ணத்தெரியாது! ஆனா எங்க டீம்ல எல்லாரும் டைரக்டர்தான்(அதனாலதான் சொதப்பிக்கிதோ?!).

எப்படியோ, இம்சை, வராமல் வயிற்றில் பாலை வார்த்தாள். அப்போ தியாகு சொன்ன தகவல் நிஜம்தான். தியாகுவிற்கு வித்யா மூலம் தெரிந்திருக்கலாம். எங்க டீம் தியாகுவுக்கும் அவங்க டீம் வித்யாவுக்கும் வெகு சீரியஸாய் ஒரு லிங்க் ஓடிக்கொண்டிருக்கிறது. எங்கள் டீம் தோற்றால் அவள் கண்கள் கலங்கிவிடும். அவங்க டீம் தோற்றால் இவன் கண்கள் கலங்குமா எனத்தெரியவில்லை. ஏனென்றால் அப்படி ஒரு சந்தர்ப்பம் இதுவரை வரவேயில்லை! :(

எங்கள் கல்லூரியில் இது ஒரு வசதி. டே காலேஜ், ஈவினிங் காலேஜ் என்று இரண்டு கல்லூரிகளாக இயங்குகிறது. டே காலேஜ் பசங்களுக்கு. ஈவினிங் காலேஜ் பொண்ணுங்களுக்கு. PG மட்டும் கோ-எட். இதனால் எல்லா இன்டர் காலேஜ் போட்டிகளிளும் டே காலேஜ், ஈவினிங் காலேஜ் என்று இரண்டு அணிகளாய் போட்டியிடுவோம். ஈவினிங் காலேஜ் என்றால் பொழுதுசாய ஆரம்பித்து இருட்டியபின்னெல்லாம் விடமாட்டார்கள். எங்களுக்கு 9 to 2, அவங்களுக்கு 1 to 5. சனிக்கிழமை அவங்களுக்கு மட்டும் full day. பெரும்பாண்மையான எங்கள் ஒத்திகைகளை சனிக்கிழமையில்தான் வைத்துக்கொள்வோம். அன்றைக்குத்தான் எங்கள் கல்லூரி, பெண்களின் முழு ஆக்கிரமிப்பில் ஜகஜோதியாய் இருக்கும். சைட் அடிக்க வசதியான எங்களின் இந்த ஏற்பாட்டுக்கு ஆசிரியர்களுக்கு மத்தியில் நல்ல பேர் வேறு. வகுப்புக்கு OD கேட்க்காமல் விடுமுறையில் ஒத்திகை செய்துகொள்கிறோமாம்! ஞாயிறும் விடுமுறைதானே. அன்னிக்கு ரிகர்சல் வச்சுப்பாத்தா தெரியும். ஒரு பய வரமாட்டான்(என்னயும் சேத்துதான்!).

சரி மேட்டருக்கு வருவோம். நாடகத்திற்கு தீம் அவர்களே கொடுத்துவிட்டார்கள்(அப்பாடா... எங்களுக்குள் தகராறு இல்லாம ஒரு மேட்டர் ஓவர்!). கோ. கி. பா. எழுதிய 'நந்தனார் சரித்திர கீர்த்தனை' வெகு பிரசித்தம் என்பதால், நந்தனார் வாழ்க்கை வரலாறு சம்பந்தமாகத்தான் நாடகம் இருக்கவேண்டுமாம். 'என்னடா இவர் வரலாறு...?!' என்று குழம்பிக்கொண்டிருந்த எங்களுக்கு, வினோத்தான் சொன்னான். நந்தனார் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவராம். தீவிரமான சிவ பக்தராம். மேல் ஜாதிக்காரர்கள் இவரை கோயிலுக்குள் அனுமதிக்காததால் வாசலில் நின்றே வழிபடுகிறார். நம்ம கோயில்லதான் 'நடுவுல நந்தி மாதிரி' ஒரு நந்தி இருக்குமே!(ஹ.. ஹா.. இங்கு எது கொடுக்கப்பட்டதோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது!) அதனால் சிவபெருமானை தரிசிக்க முடியாதுபோன நந்தனார், எனக்கு காட்சிதரமாட்டாயா சிவபெருமானே என மனமுருகிப் பாடுகிறார். அப்போதுதான் யாரும் எதிர்பார்க்காத அந்த ஆச்சர்யம் நடக்கிறது. இவர் பக்தியை மெச்சிய சிவபெருமான் நந்தியை சற்று விலக்கி இவருக்கு காட்சிகொடுக்கிறார். ஆம், இவருக்காக நந்தி கொஞ்சம் விலகி நிற்கிறது! ஆகக்கூடி ஒன்றுமட்டும் புரிகிறது. சாமி கூட தாழ்ந்த ஜாதி பக்தனுக்கு கஷ்ட்டப்பட்டு கருங்கல் நந்தியை விலக்கியாவது காட்சிகொடுக்குமே தவிர, கோயிலுக்குள் அனுமதிக்காது!

போதுவாய் நானும் பாலாஜியும்தான் ஸ்கிரிப்ட் ஒர்க் பண்ணுவோம். முதல்கட்ட வேலையாக நந்தனார் பற்றி நிறைய விஷயங்கள் சேகரித்தோம். என்னதான் எங்களுக்கு பரிசு நிச்சயமென்றாலும் அதற்கு ஒரு வேல்யூ இருக்கணுமில்லயா?! அதனால் கொஞ்சம் கஷ்டப்பட்டு நந்தனாரின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்தோம். ஆனால் மேற்சொன்ன மேட்டர் தவிர்த்து, நந்தனார் வாழ்வில், சொல்லும்படி வேறொன்றும் சுவாரஸ்யமாய் இல்லை. அட இதை மெயின் ட்ராக்காக வைத்துக்கொண்டு சைடில் மைல்டாக ஒரு லவ் ட்ராக் இருந்தால்(பூவிழி வாசலிலே மாதிரி!) நல்லாயிருக்குமே என்று பார்த்தால், மனிதர் வாழ்க்கையில் அப்படி ஒரு மேட்டரே இல்லை! எனவே அந்த சம்பவத்தையே மையமாக வைத்து ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுவது என ஒருமனதாக(வேற வழி!) முடிவுசெய்தோம். என்ன ஒன்று, எனது திறமையை(நான் காதல் வசனங்கள் எல்லாம் கலக்கலாக எழுதுவேன்னு மத்தவங்க சொல்வாங்க!) காட்ட இந்த நாடகத்தில் இடம் இல்லை. பரவாயில்லை என்று மனதை தேற்றிக்கொண்டேன்.

ஒருவழியாக ஸ்கிரிப்ட் எழுதி முடித்தாயிற்று. அடுத்தகட்டமாக, ஆர்ட்டிஸ்ட் செலக்ஷன். இதில் மெயின் கேரக்டர் என்று பார்த்தால் நந்தனார் மட்டுமே. நாடகத்தின் ஹீரோ அவர்தானே. அதில் யார் நடிக்கப்போவது என்று எங்கள் மனதிற்குள்ளாகவே ஒரு போட்டி. அதுவும் சும்மாவா... கண்டிப்பாக பரிசு வாங்கப்போகிற நாடகம் வேறு! இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள்தான் எங்கள் நட்பின் ஆழத்தை சோதனை செய்யும். ஒருவருக்கொருவர் என்னை அவன் முன்மொழிவான் என்று நானும், அவனை நான் முன்மொழிவேன் என்று அவனும் எதிர்பார்த்தபடி ஒரு முடிவுக்கு வராமல் மேட்டர் இழுத்துக்கொண்டிருந்தது. கடைசியாக நான்தான் பொதுப்படையாக ஒரு தீர்வு சொன்னேன்.

"நம்மளோட எய்ம் நாடகத்துல கண்டிப்பா ஜெயிக்கணும். அதும் first prize வாங்கணும். சோ, இந்த கேரக்டர்ல நாம நடிக்கிறத விட கர்நாடிக் நல்லா பாடத்தெறிஞ்ச நம்ம ராஜேஷ் நடிக்கறதுதான் பெஸ்ட். என்ன சொல்றீங்க...!"

"அவன் இதுவரைக்கும் நடிச்சதே இல்லையேடா...?" - வேஷம் கைநழுவிப் போய்விடுமோ என்ற ஏக்கத்துடன் பாலாஜி.

"பரவாயில்ல. நாம சொல்லி கொடுத்துக்கலாம். இதுல பெரிசா நடிக்க ஒன்னுமில்ல. முக்கியமா அந்த பாட்டை மனமுருக பாடணும். அதும் கர்நாடக சங்கீதத்துல. அவன்தான் வாய்ப்பாட்டுல எங்க போணாலும் first வரானே..."

"ஆமாண்டா... அது ஒரு பெரிய ப்ளஸ் நமக்கு..." - எப்படியும் நமக்கில்லை என்கிற நம்பிக்கையில் வினோத்.

ஒருவழியாக, அறைமனதுகளான அனைவரின் முழுமனதுடன், அந்த வேடத்தில் ராஜேஷ் நடிப்பதாய் முடிவாயிற்று. அவனைப்போய்க் கேட்டால் 'இதுவரைக்கும் நான் நடிச்சதில்லையேப்பா...' என விலகப்பார்த்தான். மேற்படி மேட்டரெல்லாம்(அதாங்க, கண்டிப்பா prize உண்டுங்கற மேட்டர்!) விளக்கி, 'அந்த பாட்டை மட்டும் வந்து உருப்படியா பாடு. மத்ததேல்லாம் நாங்க பாத்துக்கறோம்' னு சமாதானப்படித்தி உள்ள இழுத்து விட்டோம்.

அப்புறம்... நந்தி. அதற்கொன்றும் பெரிதாக போட்டியில்லை! கருப்பு போர்வை போர்த்தி நந்திமாதிரி படுத்துக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட வரியை நந்தனார் பாடும்போது சற்று தலைசாய்த்தபடி விலகுவதில் பெரிதாய் என்ன திறமையை வெளிப்படித்திவிட முடியும்?! குறைந்தபட்சம், அந்த கேரக்டரில் நடிக்கிறவர் யார் என்றுகூட பார்ப்பவர்களுக்கு தெரியப்போவதில்லை. எனவே நந்தியாக நடிக்க யாரும் முன்வருவதாய்த் தெரியவில்லை. 'சரி இது வேலைக்கு ஆகாது. புதுசா யரையாச்சும்தான் உள்ள இழுத்துவிடனும்' னு முடிவு பண்ணிட்டேன். ஆனா யார கூப்பிடலாம்...?! சரி நம்ம ரூம்மேட் செந்திலை ட்ரை பண்ணலாம்னு தோணிச்சு. செம ஜாலி பார்ட்டி அவன். எப்பவும் எங்களையும் எங்க நாடகத்தையும் கலாய்ச்சுகிட்டே இருப்பான். ஒருமுறை உள்ள வந்து பாத்தாத்தான் அவனுக்கும் எங்க கஷ்டம் தெரியும். நாங்கள்லாம் கடலை போடத்தான் fine arts ல இருக்கோமாம்(ஒரு விதத்துல அதென்னவோ வாஸ்த்தவம்தான்!). ஆனா, அவனுக்கும் நடிக்கனும்னு உள்ளுக்குள்ள ஒரு ஆசை இருக்குன்னு எனக்குத்தெரியும். நடிக்க ஆள் இல்ல, நீ வாடான்னு கேட்க்க முடியாது. ஈகோன்னு ஒன்னு இருக்கே. வேற மாதிரிதான் அப்ரோச் பண்ணணும்!

'மச்சி செந்திலு... புதுசா ஒரு டிராமா போடறோம். ஆர்ட்டிஸ்ட் செலக்ஷன் நடந்துகிட்டு இருக்கு. நா சொன்னா OK சொல்லிடுவாங்க. உனக்கு எதும் இன்ட்ரஸ்ட் இருக்கா..?' - மீன் சிக்குதான்னு ஒரு லீட் விட்டுப்பாத்தேன்.

'பெரிசா ஒன்னும் இன்ட்ரஸ்ட் இல்லடா. ச்சும்மா ஒரு ஜாலிக்கு வேணும்னா செய்யலாம்...' - ம்.. ம்.. மீன் சிக்குது. ஆனால் அதுக்கும் கொஞ்சம் ஈகோ. ஹும்... யாருக்குதான் இல்லை. OK சமாலிச்சுக்கலாம்!

'ஆனா ஹீரோவால்லாம் வேணாம் மச்சி...' - மீன் சீரியஸாய் நம்மள கலாய்க்குதாம்! 'வாடி மகனே வா. என்ன கேரக்டர்னு அங்க வந்து பாரு' என்று மனசுக்குள் சிரித்துக்கொண்டேன். எடுத்தவுடன் நந்தி வேஷம் என்று சொன்னால் பையன் ஓடிவிடுவான். கொஞ்சம் ஜாக்கிறதையாத்தான் ஹேண்டில் பண்ணணும்.

'உனக்கென்னடா... ஹீரோ மாதிரிதானே இருக்கே. நாலைக்கு காலைல ரிகர்சலுக்கு ஆடிட்டோரியம் வந்துறு. உனக்கு என்ன ரோல்னு அங்க பாத்துக்கலாம். ஓக்கேவா?!'

மறுநாள் காலை வேண்டுமென்றே வேறுவேலை வைத்துக்கொண்டு ஆடிடோரியம் செல்லவில்லை நான். செந்தில் அங்கு போனதும், பாலாஜியும் வினோத்தும் ரொம்ப சீரியஸாய் 'யேய் நந்தி வந்தாச்சுப்பா...' என்று அவனை பேசவிடாமல் அவசரப்படுத்தி, நந்தி கேரக்டரைச் சொல்லி தரையில் கவிழ்த்துப்போட்டிருக்கிறார்கள். இருவரையும் செந்திலுக்கு அதிக பழக்கமில்லாததால் வேறு வழியின்றி மாட்டிக்கொண்டான். சற்று நேரம் கழித்து நான் அங்கு போனபோது, செந்தில் மேடையின் நடுவே நந்தி மாதிரி சுறுங்கிக் கவிழ்ந்திருந்தான். பக்கத்தில் நந்தனார் பக்திப்பரவசத்துடன் பாடிக்கொண்டிருந்தார். சட்டென்று அந்த நிலையில் அவனைப்பார்க்க அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது. ட்ரெஸ்ஸிங் ரூம் போய் தனியே சிரித்துவிட்டு வந்தேன். திரும்பி வந்து பார்த்தபோது நந்தி எப்படி விலகவேண்டும் என்று பாலாஜியும் வினோத்தும் கவிழ்ந்திருந்த செந்திலின் கழுத்தைப் பிடித்து பெரேட் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சொன்னபடியெல்லாம் தலையையும் உடலையும் சாய்த்துக்கொண்டிருந்தான் அவன். இப்போது பார்க்க கொஞ்சம் பாவமாவே இருந்தது! ரிகர்சல் முடிந்து எழுந்த செந்தில் என்னைப்பார்த்துவிட்டான். 'நீ ரூமுக்கு வா உன்னை பாத்துக்கறேன்...' என்பதாய் இருந்தது அவன் பார்வை.

அவன் வெறுப்பு புரியாமல் பாலாஜி வேறு அட்வைஸ் கொடுத்துக்கொண்டிருந்தான் - 'நல்லா ஞாபகம் வச்சிக்கோ செந்தில். உன்ன அப்படியே ஒரு ஜடப்பொருளா feel பண்ணிக்கணும். ஒரு சின்ன அசைவு கூட தெரியக்கூடாது. நீ சாயிறப்போதான் ஒரு ஆள் அங்க இருந்ததாவே ஆடியன்ஸ்கு தெரியணும். டெய்லி ரூம்ல கூட கொஞ்சம் பிராக்டிஸ் பண்ணு. திரும்ப நாளைக்கு காலைல பாக்கலாம். ஓக்கேவா?'

'நாளைக்குமா...?!!!' என்ற அதிர்ச்சியிலும், என்மீதிருந்த கோபத்திலும் எதுவும் பேசாமல் பேய்விட்டான் செந்தில். இரவு அவனை சமாதானப்படுத்துவது பெரும்பாடாகிவிட்டது எனக்கு. கத்து கத்தென்று கத்தித் தீர்த்துவிட்டான். 'போன உடனே நந்தி வந்திருச்சிங்கறான். உண்மைய சொல்லு. நேத்திக்கே உனக்கு தெரியும்தானே...?' என்று திரும்பத்திரும்ப கேட்டான். 'கழுத்து இடுப்பேல்லாம் வலிக்குதுடா. கால் மறத்துப்போச்சு தெரியுமா...' - விட்டால் அழுதுவிடுவான் போலிருந்தது. நாளைக்கெல்லாம் வரவேமுடியாது என்றவனை, 'இனிமேல் புதுசா ஆள் பாத்து சொல்லிக்கொடுக்க டைம் இல்லடா', 'இந்த டிராமாவே உன்னை நம்பித்தான் இருக்கு', 'இதுல என்னடா தப்பு. எவ்ளோ வித்தியாசமான கேரக்டர் தெரியுமா', 'அடுத்த டைம் உனக்கு புடிச்சமாதிரி நல்ல கேரக்டர் வாங்கித்தறேன்' என்றெல்லாம் கெஞ்சி, ஒருவழியாக சம்மதிக்க வைத்தேன்.

அப்புறமென்ன... நந்தனாரை உள்ளே விட மறுக்கிற உயர்ந்த ஜாதிக்காரர்கள், 'மற்றும் பலர்'-ஆக நாங்கள், நுண்கலை மன்ற இசைக்குழுவிலிருந்து இசையமைக்க இரண்டுபேர் என எங்கள் ஒத்திகைகள் அமர்க்கலமாகத்தொடர்ந்தன. செந்திலுக்கு எல்லாம் தெளிவாய் சொல்லப்பட்டிருந்தது. அவனுடைய சீன் வரும்போது, ஸ்கிரீன் மூடியிருக்கும்போதே அவன் ஓடிவந்து மேடையின் நடுவே நந்தி மாதிரி படுத்துக்கொள்ள வேண்டும். இரண்டுபேர் ஓடிவந்து அவனுக்கு கருப்பு போர்வை போத்தி, 'நந்தி தலை' செட்டை மட்டிவிட்டு சென்றுவிடுவார்கள். அந்த சீன் முடியும்போது, விலகியிக்கிற நந்தியை எல்லோரும் வியந்து பார்த்துக்கொண்டிருக்க, ஸ்கிரீன் போட்டுவிடுவார்கள். பக்கத்தில் நிர்ப்பவன் எழுப்பிவிட, இவன் எழுந்துவரவேண்டியதுதான். செந்தில், எப்படியும் தன் முகத்தை யாரும் பார்க்கப்போவதில்லை என்கிற வகையில் கொஞ்சம் நிம்மதியாக இருந்தான்.

ஒத்திகைக்கு ராஜேஷ் மட்டும் அதிகம் வரமாட்டான். அவனுக்கான பாடலை அவன் வீட்டிலேயே பாடி பிராக்டிஸ் பண்ணிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டான். அவ்வப்போது வந்து அந்தப்பாடலை மெய்மறந்து மனமுருகப்பாடுவதுபோல் பாடுவான். எளிய தமிழ்ப்பாட்டுதான் என்றாலும், 'படிச்சவன் பாட்ட கெடுத்தான்' கதையாக, கர்நாடக சங்கீதத்தில் பாடும்போது எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ராஜேஷ் பாட ஆரம்பித்து சரியாக இரண்டாவது நிமிடத்தில் அவன் குறிப்பிட்ட 'நந்தி மறைக்குதய்யா' என்று தொடங்கும் அந்த வரி வரும். அதுதான் செந்திலுக்கு catchword. அந்த வரியை பாடும்போதுதான் நந்தி விலவேண்டும். செந்திலும் அந்த வரியை நன்றாக மனப்பாடம் செய்துகொண்டான். தூங்கும்போது யாராவது அந்த வரியை சொன்னால்கூட சற்று விலகிப்படுத்துக்கொள்வான் போலிருந்தது!

அடுத்த பகுதி...


16 மறுமொழிகள்:

Anonymous said...

/*ஆகக்கூடி ஒன்றுமட்டும் புரிகிறது. சாமி கூட தாழ்ந்த ஜாதி பக்தனுக்கு கஷ்ட்டப்பட்டு கருங்கல் நந்தியை விலக்கியாவது காட்சிகொடுக்குமே தவிர, கோயிலுக்குள் அனுமதிக்காது!
*/

super..

Krish

துளசி கோபால் said...

ஆஹா........... சூப்பர்.

இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன். பாவம்ப்பா செந்தில்.

அருள் குமார் said...

மிக்க நன்றி கிரிஷ்.

நன்றி துளசி மேடம். இதுக்கே செந்தில் பாவம்னா... இன்னும் இருக்கே! :)

துபாய் ராஜா said...

அருள்!நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்.

//(சற்றே பெரிய சிறுகதை)//

ஆமா!இது நடந்த கதையா?கற்பனையா????!!!!.

அருள் குமார் said...

நன்றி ராஜா.

அப்படி ஒரு நாடகம் போட்டதும் அதில் சில காமெடிகள் நடந்ததும் நிஜம். ஆனால் இந்த கதையில் அந்த சம்பவங்கள் ஒரு 10% இருக்கலாம். மற்றபடி என்னை பாதித்த பல சம்பவங்களை இதில் கற்பனையுடன் சேர்த்து இந்த கதையை உருவாக்கிவிட்டேன்! :)

- யெஸ்.பாலபாரதி said...

:-))))))))))
நல்ல இருக்கு அருள்... அடுத்த பார்ட் எப்போ...?

அருள் குமார் said...

நன்றி யாழிசைச்செல்வன். அடுத்த பார்ட் கூடிய சீக்கிறம் போட்டுடலாம் :)

Anonymous said...

officela indha story padichu sirichu thittuvanginen! nice story. witing for the next part :)

-pramod

அருள் குமார் said...

நன்றி pramod :)

வீரமணி said...

குமார்... கலக்கீட்ட..ஒவ்வொரு காட்சியும் கண்களில் விரிகிறது. சிறூகதைக்கான படிமம் நெடுக இருக்கிறது.. வாழ்த்துக்கள் வீரமணி

அருள் குமார் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி வீரா.

சீனு said...

அடடா! பால பாரதி எள்ளு-னு சொன்னதும் இப்படி எண்ணையா இருகீங்களே!!! கலக்கிட்டீங்க சார் காபி...

அருள் குமார் said...

நன்றி சீனு :)

//அடடா! பால பாரதி எள்ளு-னு சொன்னதும் இப்படி எண்ணையா இருகீங்களே!!! //
மற்றவர்களுக்கு புரிந்திருக்காது என்பதால் சொல்கிறேன். சென்ற ஞாயிறு பாலாவையும் சீனுவையும் சந்திக்க நேர்ந்தபோது, கட்டுரைகளை விடுத்து சிறுகதைகள் எழுதிப்பழகுமாறு நண்பர் பாலா வலியுறுத்தினார். அடுத்த நாளே இந்த பதிவு வந்துவிட்டது.

சீனூ, நான் தான் சொன்னேனே, ஏற்கனவே ஒரு சிறுகதை எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று :)

அருள் குமார் said...

வாங்க இலவசக்கொத்தனார். னுதல்முறையா இந்தபக்கம் வரீங்கன்னு நினைக்கிறேன். நன்றி :)

ஜொள்ளுப்பாண்டி said...

அருள் கலக்கீட்டீங்க போங்க !! சிரிப்பை அடக்கவே முடியலே ! நகைச்சுவை கன்னா பின்னான்னு தாண்டவமாடுதுங்கண்ண உங்ககிட்டே !! :)))))))))))))

அருள் குமார் said...

நன்றி ஜொள்ளுப்பாண்டி :)

//நகைச்சுவை கன்னா பின்னான்னு தாண்டவமாடுதுங்கண்ண உங்ககிட்டே !! :)))))))))))))
//
- உங்கள விடவா?! :))