என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

21 September 2006

காணக்கிடைக்கும் தெய்வங்கள்

வாழ்வில் அலுக்கவே அலுக்காத விஷயங்கள் என்று ஒவ்வொருவருக்கும் சின்னதாகவாவது ஒரு பட்டியல் இருக்கும். என்னுடைய அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது, குழந்தைகளும் அவர்களின் குறும்புகளும்!

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். நான் புரிந்துகொண்டவரை கடவுள் என்பது ஒரு நிலை. கண்ணில் படுகின்ற எதையும், அவற்றின் மீதான எந்த கற்பிதங்களும் அற்று, அவற்றை அவைகளாகவே பார்க்கும் பாக்கியம் அந்த நிலையில் மட்டுமே வாய்க்கும். அந்த நிலையில் இருப்பவர்கள் குழந்தைகள் மட்டுமே. வாழ்வின் எல்லைகளை உணர்ந்து அடங்கிய, முதிர்ந்த வயதோரையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்!

மாலை வேளைகளில், எங்கள் அலுவலகத்தின் எதிர் வரிசையிலிருக்கும் ஒரு வீட்டின் வாசலில், குழந்தையாய்க் கனிந்துவிட்ட ஒரு முதியவர், சில மாதங்களேயான ஒரு கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சிக்கொண்டிருப்பார். நான் என்னை மறந்து பார்க்கும் காட்சி அது. இருவரின் முகங்களுக்கும் அதிகபட்சம் ஆறு வித்தியாசங்கள் கூட சொல்ல முடியாது! வேறு யாருக்கும் புரியாத, அவர்களுக்கு மட்டுமேயான ஒரு மொழியில் அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். உள்ளம் மலர்ந்து சிரிக்கும் அந்த முகங்களைப் பார்க்கக் கிடைக்க, நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாழ்வின் இரண்டு எதிரெதிர் விளிம்புகளும் ஒன்றானவையே என்று சொல்லாமல் சொல்லும் காட்சியது. அப்பப்பா... இடையில்தான் எவ்வளவு பிரச்சனைகள், அனுபவங்கள். குழந்தைப்பருவத்தின் உன்னதங்கள் உணர்ந்து மீண்டும் அப்படி மாற நம் வாழ்நள் முழுதும் தேவையாயிருக்கிறது நமக்கு!

நான் எனது குழந்தைப்பருவத்தைக் கடந்துகொண்டிருந்த நாட்களிலேயே, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைத்துவிட்டன. ஒவ்வொரு ஆண்டும், விடுமுறையில் பாட்டி வீட்டிற்குச் சென்றால், மாமாவின் குழந்தை, சித்தியின் குழந்தை என்று மாற்றி மாற்றி கைக்குழந்தைகள் இருந்துகொண்டேயிருக்கும். அவர்களை விருப்பத்துடன் பார்த்துக்கொள்பவன் நான் என்பதால், அவர்களின் அம்மாக்கள் என்னிடம் விட்டுவிட்டு அவர்கள் வேலையை நிம்மதியாய் பார்ப்பார்கள். அக்காவின் குழந்தைகள், தங்கையின் குழந்தைகள் என்று இன்னமும் அது தொடர்கிறது. கூட்டுக் குடும்பமென்பதால், கைக்குழ்ந்தையில் இருந்து பள்ளி இறுதியாண்டு வரை, எப்போதும் எல்லா வயதிலும் குழந்தைகளுண்டு எங்கள் வீட்டில்.

நாம் உருவாக்கி வைத்திருக்கும் உலகின் கறைகள் படிந்துவிடாத ஓர் இயல்பான உலகின் தரிசனம், குழந்தைகளுடன் விளையாடும்போது கிடைத்துவிடுகிறது. அந்த உலகின் பொய்களும் கோபங்களும் கூட மிக அழகானவையாகவே இருக்கின்றன. மொழிகளற்றுப் பேசவும், சிரிக்கவும் அங்கே வாய்க்கிறது. மிக முக்கியமாக, அங்கு ஃபார்மாலிட்டி என்கிற ஒரு விஷயமே இல்லை! சக மனிதனிடத்தில் சதி, மதம், அந்தஸ்து என்று எந்த பேதமும் இல்லை!! உள்ளம் உணர்ந்ததை உடற்கூறுகள் சொல்லும் சுதந்திரம், அந்த வயதின் வரம்.

நாம் ஒவ்வொருவரும், நமக்கே தெரியாமல், சொல்லவொண்ணா துயரத்துடன் கடந்துவருகிற நம் வாழ்வின் நாட்கள் எவை தெரியுமா? நம் குழந்தைப் பருவத்தைக் கடக்கிற நாட்கள் தான். அதிலும் குறிப்பாக, ஓஷோ சொல்வது போல், பள்ளிக்கு கொண்டுவிடப்படுகிற நாட்கள்! அங்கேதான், இயற்கை அளித்த நமக்கேயான நம் பாதையிலிருந்து விலகி, முற்றிலும் கற்பிதங்களினாலான ஒரு பாதையில் செல்ல நாம் வற்புறுத்தப்படுகிறோம். நமக்கு இயல்பேயில்லாத கட்டுப்பாடுகளுக்கும், விதிமுறைகளுக்கும் நாம் கட்டாயப் படுத்தப்படுகிறோம். எத்தனை அழுதாலும் புரண்டாலும், இத்தனை மணிவரை இந்த இடத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பணிக்கப் படுகிறோம். நினைத்துப்பார்க்கமுடியாத வன்முறை நம்மீது பிரயோகிக்கப்படுகிற நாட்கள் அவை.

அப்புறம் நம் வாழ்வில் எதுவுமே நமதில்லை! சமூகம் இழுக்கும் எல்லா இழுப்புகளும், முடிந்தவரை வளைந்து கொடுப்பதும், முடியாதவற்றை எதிர்ப்பதால் வெறுக்கப்படுவதும் மாறி மாறி நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. பெற்றோர்கள் தங்கள் வாழ்வில், சரியாகவோ அல்லது தவறாகவோ கற்ற பாடங்களை முன்னிருத்தி, குழந்தைகளின் தனித்தண்மைகள் புரக்கணிப்படுவது இன்னொரு பெரும் சோகம்!

எண்ணற்ற விதிமுறைகளும் கற்பிதங்களும் தந்த சிக்கல்கள் நிறைந்த நம் வாழ்வில், சில மணித்துளிகளாவது இயல்பான வாழ்க்கை வாழ முடிகிறதென்றால், அது நாமும் குழந்தையாய் மாறி முழந்தைகளுடன் விளையாடும்போது மட்டும் தான்! யோசித்துப்பார்த்தால் ஒரு உண்மை மிக ஆச்சர்யமாய் இருக்கிறது. இன்றைக்கு இருக்கிற நல்லவன், கெட்டவன், ஞானி, அரசியல்வாதி, தீவிரவாதி, etc., etc., எல்லோரின் குழந்தைப்பருவத்திலும் அவர்களின் எண்ணமும் மனசும் ஒன்றுபோலவேதானே இருந்திருக்கும்! இயற்கை தந்த இனிய வாழ்வை இடையில் வந்து மாற்றிப்போட்டது யார்?

பூங்கா செப்டம்பர் 25, 2006 இதழில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.
Read More

04 September 2006

பிடிபட்டவர்கள்

எழுத மறந்த நாட்குறிப்புகள் - 3: பிடிபட்டவர்கள்

'விஸ்வநாதன் ராமமூர்த்தி' திரைப்படத்தில் விவேக் தன் மனைவியிடம் "யார் திருடன், சொல்லுபாப்போம்?" என்று கேட்பார். அதற்கு அவர் மனைவியின் பதில் - "திருடுறவன் தான் திருடன்!". இந்த கேள்விக்கான, நம் அனைவரின் பதிலும் கூட இதுவாகத்தான் இருக்கக்கூடும். ஆனால் இதை இல்லை என்று மறுத்துவிட்டு விவேக் பதில் சொல்வார்-

"மாட்டிக்கிறவன் தான் திருடன்..!"

அதைத் தொடர்ந்து வந்த நகைச்சுவைக் காட்சிகளுக்கும் கூட சிரிக்கமுடியாமல், சட்டென்று முகத்திலறையும் நிஜம் இது!. 'மாட்டிக்கொள்பவன் தான் திருடன்' என்பதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது, மாட்டிக்கொள்பவன் திருடியவனாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. ஒரு நிரபராதி மாட்டிக்கொண்டால் கூட அவன் திருடன் தான்! ஆக, திருடன் என்பவன் திருடியவன் அல்ல; மாட்டிக்கொண்டவனே!


சின்ன வயதில், திருடன் என்றால் மனசுக்குள் ஒரு பிம்பம் இருந்தது. நம்மைப் போல இல்லாமல் வேறு எப்படியோ இருப்பான் என்று மிதமிஞ்சிய கற்பனைகள். எல்லாம், படித்த கதைப்புத்தகங்கள் மற்றும் பார்த்த திரைப்படங்களின் புண்ணியம்.

ஒருமுறை எங்கள் அத்தையின் ஊருக்கு திருவிழாவிக்குப் போயிருந்தபோதுதான் முதன் முதலாய் ஒரு திருடனைப் பார்த்தேன். முதல் ஆச்சர்யம், அவன் கண்களைச் சுற்றி கருப்புத் துணி கொண்டு கட்டியிருக்கவில்லை! இரண்டாவது, அவன் நம் எல்லோரையும்போலவே வெகு சாதாரணமாய் இருந்தான். திருவிழாக் கடைகளில் ஏதோ திருடிப் பிடிபட்டவனை, ஒரு மரத்தில் கட்டிவைத்து அடித்துக்கொண்டிருந்தார்கள். வைக்கோல் பிரி கொண்டு கட்டப்பட்டிருந்த அவன் உடலின்மேல் தண்ணீர் ஊற்றினார்கள். தண்ணீர் பட்டால் ஏற்கனவே இறுக்கி கட்டப்பட்ட வைக்கோல் பிரி, இன்னும் இறுகி ரத்தம் கட்ட வைக்குமாம்! கூட்டத்தில் யாரோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். கொடுமைப்படுத்தவென்று என்னவெல்லாம் கற்று வைத்திருக்கிறார்கள் என்று வியப்பாய் இருந்தது. ஒரு மத்திம வயதுக்காரன், மிகுந்த கோபத்துடன் அவன் முகத்தில் நச் நச்சென்று குத்திக் கொண்டிருந்தார். வாயிலிருந்து ஒழுகும் ரத்தத்துடன், 'இல்லை... இல்லை...' என்பதாய் தலையசைத்தபடி சோர்ந்து தொங்கியவனைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. ஒருவேளை, வேறுயாரோ திருடியதற்கு இவன் மாட்டிக்கொண்டு அடிவாங்குபவனாயிருந்தால் அது எவ்வளவு கொடுமை என்றோர் எண்ணம் மனசுக்குள் ஓடியது.

திருட்டைப் பற்றியும் மாட்டிக்கொள்ளுதல் பற்றியும் யோசிக்கும்போதெல்லாம், இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வரும். நான் மூன்றோ நான்கோ படித்துக்கொண்டிருந்தபோது, கடலூரின் பொது மைதானத்தில், அந்த ஆண்டிற்கான பொருட்காட்சி ஆரம்பித்திருந்தது. தினமும் பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் கண்ணில் பட்டு ஆர்வத்தை தூண்டிவிட்ட பொருட்கட்சிக்கு, ஆரம்பித்து சில நாட்கள் ஆகியும் போக முடியவில்லை. அப்பாவுக்கு தினமும் வேறு ஏதேதோ வேலைகள். 'இப்பதானே ஆரம்பித்திருக்கிறது போகலாம் போகலாம்' என தினமும் தள்ளிப்போட, நான் அடம் பிடிக்க ஆரம்பித்தேன். அதனால், முதலில் நானும் என் அண்ணனும் மட்டும் அடுத்த நாளே பொருட்காட்சிக்கு போய்வர அனுமதிக்கப்பட்டோம். இன்னொரு நாள் எல்லோருமாக சேர்ந்து போகலாம் என்று அப்பா சொல்லிவிட்டார்.

அடுத்த நாள் மாலை வீட்டுக்கு வந்ததும் கலர் ட்ரஸ் மாற்றிக்கொண்டு கிளம்பிவிட்டோம். 'என்னென்ன வேணும்னு பாத்து வச்சிக்கோங்க. அப்பாவோட போறப்ப வாங்கிக்கலாம்...' என்ற அம்மா, டிக்கெட்டுக்குப் போக ஆளுக்கு ஐந்து ரூபாய் மட்டும் கொடுத்து அனுப்பினார்கள்.

பொருட்காட்சியில் நல்ல கூட்டம். பாதுகாப்பாய் கைகளைக் கோர்த்துக்கொண்டு, எங்கள் விருப்பத்திற்குச் சுற்றினோம். எதை வாங்குவது எதை விடுவது என்று ஒரே குழப்பம். வீட்டில் கேட்டால் வாங்கித்தரமாட்டார்கள் என்று நம்பிய ஒரு 'வாட்டர் கேம்' -ஐ வாங்கினான் அண்ணன். எனக்கு என்ன வாங்குவதென்று தேடிக்கொண்டிருந்தோம்.

ஒரு கடையில் வித விதமான பேனாக்கள் இருந்தன. எழுது பொருட்களின் மீது எனக்கு எப்போதுமே ஒரு ஈடுபாடு உண்டென்பதால், வித்தியாசமான பேனா ஏதாவது வாங்கலாம் என பார்த்தோம். சில வகைகள் பொருட்காட்சியில் மட்டுமே கிடைக்கும். ஒன்றை எடுத்து விலை கேட்க, கூட்டத்தில் கடைக்காரர் அதை கவனித்ததாகவே தெரியவில்லை. சட்டென்று ஒரு எண்ணம். கையில் வைத்திருந்த பேனாவை கால்சட்டைப் பையினுள் போட்டுக் கொண்டு, வேரொன்றை கையில் எடுத்துக்கொண்டு விலை கேட்டேன். அவர் விலை சொன்னபின் வேண்டாமென்பதாய் வைத்துவிட்டு அண்ணனை இழுத்துக் கொண்டு வெளியில் வந்துவிட்டேன்.

வந்தபின் மனசுக்குள் ஒரே பதட்டம், யாரும் பார்த்திருப்பார்களோ என. கொஞ்சதூரம் கடந்தபின்தான் தைரியம் வந்தது. இனி பயமில்லை என்றான பின்பு, சற்று பெருமையாகக் கூட இருந்தது! பேசிக்கொண்டே வந்த அண்ணன் முன், சட்டென்று பேனாவை உருவி, 'எப்படி...?!' என்று காட்டினேன். ஆச்சர்யப்பட்ட அவனைப் பார்த்து எனக்குப் பெருமிதம்! ஆனால் அந்தப் பெருமிதம் சில நொடிகள் கூட நீடிக்கவில்லை. பேனாவை கையில் வைத்து ஆட்டிக் கொண்டிருந்த போதே வெடுக்கென்று யாரோ பின்னாலிருந்து இழுத்து தூக்கினார்கள். அந்த கடைக்காரர்!

அப்படியே தூக்கிக்கொண்டே தன் கடைக்குப் போனார் அவர். ஏனோ அப்பா அம்மாவையெல்லாம் நினைத்து அழ ஆரம்பித்துவிட்டிருந்தேன். என்ன செய்வதென்று தெரியாமல் அண்ணன் கலங்கிய முகத்துடன் பின்தொடர்ந்தான். "தெரியாம எடுத்துடேன்... காசு வேண்னா வச்சிக்கங்க..." என்று தேம்ப்பித் தேம்பி அழுதபடி, சட்டைப் பையில் வைத்திருந்த ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துக்கொடுத்தேன். எனது அழுத முகமும், கசங்கிய ஐந்து ரூபாய் நோட்டுடன் நீண்டிருந்த பிஞ்சுக் கையையும் பார்க்க அவருக்கு மிகப் பாவமாக இருந்திருக்கவேண்டும். "காசெல்லாம் வேணாம்... இனி இப்படில்லாம் செய்யக்கூடாது; என்னா..." என்று பேனாவை வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பிவிட்டார்.

வாழ்வில் என்னையே மிகக் கேவலமாக உணர்ந்த தினம் அதுதான். அந்த ஒரு வினாடியில் அப்படி ஏன் தோன்றியதென்று இன்றுவரை தெரியவில்லை. பொருட்காட்சிக்குக் கிளம்பியபோது இருந்த சந்தோஷம் மொத்தமும் வடிந்துபோயிருந்தது இருவரிடத்தும். வீட்டில் அண்ணன் இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனாலும், சில வருடங்கள் வரை, எங்களுக்குள் எழும் சண்டைகள் உச்சத்தை அடைந்து அவனால் சாமாளிக்க முடியாத பட்சத்தில், "பொருள்காட்சித் திருடா" என்பான் சத்தமாக! எனக்குள் சர்வமும் ஒடுங்கிவிடும். இப்படி அந்த நிகழ்ச்சிக்குப் பின் வந்த எல்லா சண்டைகளிலும் அவனே தொடர்ந்து ஜெயித்தான்! 'அன்னைக்கு ஏன்தான் அப்படிச் செய்தோமோ' என்று என்னையே நொந்துகொள்வேன்.

பின்னாட்களில், அன்று மாட்டியிருக்கவிட்டால் திருட்டு என்னை மேலும் ஊக்கப்படுத்தியிருக்கக் கூடும் என நினைத்துக்கொள்வேன். இந்த இரண்டு சம்பவங்களையும் நினைக்கிற பொழுதெல்லாம் எனக்குத் தோன்றும் ஒரு விஷயம் - முதல் திருட்டில் பிடிபடுகிற எவனும், மீண்டும் திருட்டைப்பற்றியே யோசிக்கமாட்டான் என்பதுதான்!
Read More

17 May 2006

கடிதங்கள்

எழுத மறந்த நாட்குறிப்புகள் - 2: கடிதங்கள்

சில வருடங்களுக்கு முன்பு எனது வாழ்தலின் அத்தியாவசியங்களுள் ஒன்றாக விளங்கிய கடிதங்கள், இன்று வெறும் நினைவுச்சுவடுகளாக மட்டுமே எஞ்சியிருக்கிறது. கடிதங்கள் என் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகள் மிகப்பெரியவை. அப்படியிருந்த கடிதங்களை இன்று சுத்தமாக மறந்தே போய்விட்டது மிக ஆச்சர்யமாய் இருக்கிறது!

நேற்று என் நண்பன், தனது திருமண அழைப்பிதழ்களை அனுப்புவதற்காக, அருகில் தபால் நிலையம் எங்கிருக்கிறது எனக்கேட்டான். வெகு இயல்பாக 'தெரிலடா... பக்கத்ததுவீட்டு ஆன்ட்டி கிட்ட வேணா கேட்டுப்பாரு...' என்று சொன்ன பிறகுதான் உணர்ந்தேன்... ஒரு காலத்தில், எந்த இடத்திற்கு வீடு மாறி சென்றாலும், எனது முதல்வேலை அருகிலிருக்கும் தபால் நிலையத்தைத் தேடுவதுதான். இப்போதிருக்கும் இந்த வீட்டிற்கு வந்தபின், கடந்த இரண்டு வருடங்களாக, அருகில் தபால் நிலையம் எங்கிருக்கிறது என்ற தேடலுக்கு அவசியமே இல்லாதிருந்திருக்கிறேன்! இது எப்படி சாத்தியமாயிற்று என தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துவிடேன்.

தொலைபேசியும், மின்னஞ்சலும் எனது அன்றாட வாழ்வில் நுழைய நுழைய, கோபித்துக்கொண்ட கடிதங்கள், என்னிடம் சொல்லாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக வெளியே சென்றுவிட்டன. அடுத்த வினாடிகளில் பதில் கிடைத்துவிடுகிற தொலைபேசியும் மின்னஞ்சலும் இருக்கிறபோது, பதிலுக்காக நான்கைந்து நாட்கள் காக்கவைக்கிற கடிதங்களுக்கு அவசியமில்லாமல் போயிற்று. ஆனால் அதிலிருக்கிற அன்னியோன்யமும், உயிர்ப்பும் இதில் இருக்கிறனவா என யோசித்துப்பார்த்தால், நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடிதங்களுக்கான காத்திருப்புகள் தரும் தவிப்பும், எழுதியவரின் கையெழுத்து தரும் உயிர்ப்பும் அலாதியானவை. கையெழுத்து கொண்டு, அந்த கடிதம் எப்படிப்பட்ட மன நிலையில் எழுதப்பட்டிருக்கிறது என்பதைக்கூட உணர்ந்திருக்கிறேன். எந்த மொழியிலும் நமது உணர்வுகளை நூறு சதவிகிதம் பகிர்ந்துகொள்ள இயலாதெனினும், கடிதங்களில் சில வசதிகள் உண்டு. உதாரணத்திற்கு, 'நீண்ட' என்கிற வார்த்தையில் உள்ள மூன்று சுழி 'ண' வில் பத்துப்பதினைந்து சுழி போட்டு எவ்வளவு நீண்ட என்று உணர்த்துவோம்!

இதுவரை எனக்கு வந்த எல்லா கடிதங்களையுமே நான் சேமித்து வைத்திருக்கிறேன். எனக்காக பிறர் எழுதிய நாட்குறிப்புகள் அவை. நாட்குறிப்புகளை மீண்டும் எடுத்து படிப்பதுபோல், எனக்கு வந்த பழைய கடிதங்களை படிக்க ஆரம்பித்து தூங்காமல் போன இரவுகள் நிரைய. நமது பழைய நாட்களை மீட்டுத்தரும் வல்லமை நாட்குறிப்புகளுக்கு அடுத்து கடிதங்களுக்கே வாய்த்திருக்கிறது.

தபால் நிலையம் மற்றும் கடிதங்களுடனான எனது முதல் பரிச்சயம், எங்கள் கிராமத்து வீட்டில் தான் நிகழ்ந்திருக்கிறது. எங்கள் கிராமத்திற்கு தபால் நிலையம் வந்தபோது எங்கள் உறவினர்களில் ஒருவர்தான் 'போஸ்ட் மாஸ்டர்'. அவர் வீட்டில் தபால் அலுவலகம் வைக்க வசதி இல்லாததாலும், அது கூறை வீடு என்பதாலும், எங்கள் வீட்டின் திண்ணை பக்கம் சாளரம் கொண்ட ஒரு அறையில் தபால் அலுவலகம் வைத்துக்கொள்ள அவர்அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்கு பிறகு எங்கள் வீட்டின் சூழலே சற்று மாறித்தான் போயிருந்தது. வீட்டின்முன் மின்கம்பத்தில் கட்டப்பட்ட தபால் பெட்டி, திண்ணையில் கட்டப்பட்டிருந்த சிவப்பு நிற அறிவிப்பு பலகைகள், அந்த அறையின் உள்புற வாசலில் மாட்டப்பட்டிருந்த "அனுமதியின்றி உள்ளே வராதீர்" போர்டு எல்லாம் எங்களுக்கு வினோதமாக இருந்தன.

எங்கள் கிராமத்து வீட்டில் தபால் நிலையம் வந்தபின், முதல்முறையாக அங்கு விடுமுறைக்கு சென்ற நாட்கள் இன்னும் உயிர்ப்புடன் நினைவில் இருக்கிறது. அந்த அறையை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. விடுமுறைக்கு அங்கு சென்றால் பெரும்பாண்மையான நேரம் அந்த அறையில்தான் இருப்பேன். காலையில் எப்போதடா போஸ்ட் ஆபீஸ் திறப்பார்கள் என்றிருக்கும். டவுனில் சென்று படிப்பவர்கள் என்பதால், தபால்களை கட்டும் சாக்குப்பை, சீல்வைக்கும் அரக்குகள் மற்றும் அச்சுகள், தினமும் தேதி மாற்றி வைக்கப்படும் முத்திரைகள் எல்லாவற்றையும் அணுகும் அனுமதியை நாங்கள் பெற்றிருந்தோம்! தபால் கட்டு வந்தவுடன் அவற்றை ஊர் மற்றும் தெரு வாரியாக பிரிப்பதிலிருந்து, முத்திரை குத்துவது வரை நாங்களே செய்வோம். கடிதம் கிடைக்கப்பெற்றவர்களில் பலர், மீண்டும் அதை எங்கள் வீட்டிற்குத்தான் கொண்டுவருவார்கள். அவற்றை அவர்களுக்கு படித்துக்காட்டி, பதில்கடிதம் எழுதித்தரும் வேலையும் எங்களுடையது. அனேகமாக நான் எழுதிய முதல் கடிதம் எனக்காக இல்லை என்றே நினைக்கிறேன்.

பள்ளிப்படிப்பு முடியும்வரை எனக்கென்று பெரிதாக ஏதும் கடிதங்கள் வந்ததில்லை. பொங்கலுக்கு ஊருக்கு செல்லும்போது வகுப்பில் முகவரிகளை பரிமாறிக்கொள்வோம். 'இந்த அட்ரஸ் போட்டா கரக்டா உனக்கு வந்துடுமாடா?' என நண்பர்கள் கேட்கும்போது, 'டேய்... போஸ்ட் ஆபீஸே எங்க வீட்லதான் இருக்கு. நாங்கதான் கட்டு பிரிப்போம்...' என்று பெருமையாய் சொல்வேன். நண்பர்கள் ஆச்சரியமாய் கேட்கக் கேட்க, போஸ்ட் ஆபீஸில் உபயோகிக்கும் technical-terms எல்லாம் பயன்படுத்தி பந்தா விட்டுக்கொண்டிருப்பேன். எங்கள் கூட்டுக்குடும்பத்தில் நாங்கள் சகோதர சகோதரிகள் மொத்தம் ஏழு பேர். பொங்கலின்போது எங்களின் மனசுக்குள் ஒரு போட்டியே நடக்கும். யாருக்கு அதிக பொங்கல் வாழ்த்துக்கள் வருகிறதென்று!

கல்லூரிக்கு சென்றபின்தான் ஏராளமான கடிதப்போக்குவரத்துகள். முழு நீள வெள்ளைத்தாளில் பக்கம் பக்கமாக எழுதிக்கொள்வோம். கடிதம் எழுதி முடித்தபின்னும் ஏதாவது தோன்றும். margin விட்ட இடங்களும் போதாமல் இண்டு இடுக்குகளிலெல்லாம் எழுதி நிரப்புவோம். காதலர்களின் பேச்சுபோல, 'அப்படி எழுத என்னதான் இருக்கிறது' என அடுத்தவர்கள் வியக்கும்படி எழுதுவோம். உன்ன எப்டில்லாம் miss பண்றேன் தெரியுமா-விலிருந்து இன்னைக்கு எங்க ஹாஸ்டல் மெஸ்ஸில் என்ன மெனு என்பதுவரை அனைத்தையும் எழுதுவோம். 'to my dear lover' என்றெல்லம் முகவரியிலேயே எனது பெயருக்கு முன்னால் ஒரு நண்பன் எழுதுவான்!

தெரிந்த நண்பர்கள் பேதாதென்று பேனா நண்பர்கள் வேறு! பெரிய அறிவுஜீவிகள் கணக்காக சீரியஸான விஷயங்களை எடுத்துக்கொண்டு மாதக்கணக்கில் பேனா நண்பர்களுடன் விவாதிப்போம். அதில் மறக்கவே இயலாத ஒரு நண்பர் - புதுக்கோட்டை அன்னசத்திரம் என்கிற ஊரிலிருந்து வெங்கடாஜலபதி என்பவர். குடும்ப சூழலால் பள்ளிப்படிப்பை தொடர இயலாமல், சைக்கிள் கடையில் வேலைபார்த்துக்கொண்டு, கடிதங்களை தன் வாழ்வின் வடிகாலாகக் கொண்டவர். அருமையாக எழுதுவார். அந்த சூழலிலும், பாலகுமாரன் முதற்கொண்டு ஏகப்பட்ட எழுத்தாளர்களை எப்படியாவது படித்துவிடக்கூடியவர். அவர் எனக்கு அறிமுகப்படுத்திய எழுத்துக்கள் நிரைய. இப்போது அவருடன் கடிதத்தொடர்பு இல்லையென்றாலும், இன்றும் அவரின் பழைய கடிதங்களை அடிக்கடி எடுத்து படிப்பேன்.

ஹாஸ்டலில் கடிதம் வருவது ஒரு கௌரவம். அது எனக்கு மிக அதிகமாகவே கிடைத்தது. B.Sc படிக்கும்போதும் சரி, MCA படிக்கும்போதும் சரி... அதிக கடிதங்கள் வருவது எனக்குத்தான். B.Sc நண்பர்களும் சேர்ந்துகொள்ள, MCA வில் கடிதங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. B. Sc நண்பர்களைப்பிறிந்து MCA சேர்ந்த புதிதில் கடிதங்களே எனக்கு மிகப்பெரும் ஆறுதல். மிக நெருங்கிய நண்பர்கள் வட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்திலேயே தங்கள் மேற்படிப்பைத்தொடர, நான் மட்டும் சென்னை வந்துவிட்டேன். அப்போது 'முஸ்தபா... முஸ்தபா...' பாடல் வெகு பிரசித்தம். "கல்விபயிலும் காலம் வரையில்/ துள்ளித்திரியும் எங்கள் விழியில்/ கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி/ நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்/ நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்/ கண்ணீரில்தானே எங்கள் farewell party" - நண்பர்களை பிரிந்த சூழலில் கேட்டதாலோ என்னவோ, என்னை மிகவும் பாதித்த வரிகள் இவை. ஹாஸ்டல் மொட்டை மாடியில் தனியாய் வாக்மேனில் இந்த பாடல் கேட்டு அழுதிருக்கிறேன்! உடனே ஓடிப்போய் நண்பர்களின் கடிதங்களை எடுத்து படிக்க ஆரம்பித்துவிடுவேன். அவர்களெல்லாம் ஒன்றாக இருப்பதால் அவர்கள் அனைவரின் கடிதங்களிலும் பெரும்பாண்மையான விஷயங்கள் ஒன்றாக இருக்கும். இருப்பினும் ஒவ்வொருவரிடமிருந்தும் தனித்தனி கடிதம் வரும். நான் அவர்களுக்கு எழுதும் கடிதங்களிலும் பெரும்பாண்மையான விஷயங்கள் ஒன்றாகத்தானிருக்கும். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கடிதம் எழுதுவேன்!

ஹாஸ்டலில், பொங்கல் மற்றும் தீபாவளியின் போது போஸ்ட்மேன் பணம் கேட்க வந்தால், நேராக என் அறைக்குத்தான் அனுப்பிவைப்பார்கள். 'இங்க வர்ர லெட்டெர்ஸ்ல பாதிக்குமேல அவனுக்குத்தான் வருது. அவன் கிட்ட போய்க் கேளுங்க...' என்பார்கள். அதுவும் பிறந்தநாளென்றால் கேட்கவே வேண்டாம். வாழ்த்து அட்டைகளும், பரிசுப்பொருள்களுமாய் போஸ்ட்மேன் அள்ளிக்கொண்டு வருவார். ஹாஸ்டலில் எனது அலமாரி முழுக்க கடிதங்கள், கடிதங்கள், கடிதங்கள்தான்... ஒவ்வொரு நாளின் பெரும்பகுதியும் கடிதங்களை படிப்பதிலும் எழுதுவதிலுமே போய்விடும். தேர்வுநாட்களில் கடிதங்களைக் காண இயலாமல் பைத்தியம் பிடிப்பது போலாகிவிடும்.

இப்போது நகரங்களிலும் பெருநகரங்களிலும் கடிதங்கள் வெறும் பத்திரிக்கைகள் அனுப்பவும் ஆவணங்களை அனுப்பவும் மட்டுமே என்றாகிப்போனது மனதை வருந்தச்செய்கிறது. எனது நெருங்கிய நண்பர் ஸ்டாலினுடன் இதுபற்றி பேசிக்கொண்டிருந்தபோது, அவரும் இப்படி சில நாட்களாய் யோசித்துக்கொண்டிருப்பதாயும், மீண்டும் அந்த பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டுமென்று, எனக்கு மிக நீண்டதாய் ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருப்பதாயும் சொன்னார். இந்த 'நீண்ட' வில் பத்துப்பதினைந்து சுழியில் 'ண' போட்டிருந்தால் பொருத்தமாய் இருந்திருக்கும்தானே!?
Read More

02 May 2006

இலக்கற்ற பயணங்கள்

எழுத மறந்த நாட்குறிப்புகள் - 1: இலக்கற்ற பயணங்கள்

சின்ன வயதிலிருந்தே எங்கும் எதிலும் இலக்குகள் வேண்டும் என்றே போதிக்கப்பட்டதாலோ என்னவோ, இலக்கற்ற பயணங்களின் சுவை உணர வாழ்வின் பெரும்பகுதி கடக்கவேண்டியிருந்தது. இலக்கில்லாமல் திரிதல் சுகம். இத்தனை மணிக்கு இன்னாரை பார்க்கவேண்டும் அல்லது இதைச்செய்யவேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லாமல் பயணிப்பதின் சுகம் அதை அனுபவித்தவர்க்கே தெரியும்.

+2 நாட்களில் நண்பன் புருஷோத்தமனுடன் மிதிவண்டியில் இப்படி பயணித்தபோது இதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் இந்த சுகம் எப்படி வருகிறது என்றெல்லாம் ஆராயவில்லை. எங்களுக்கு அதைவிட முக்கியமான வேலைகள் அப்போது இருந்தன! ஆளுக்கொரு மிதிவண்டியில் வந்தாலும் ஏதவது ஒரு தேனீரகத்தில் ஒரு வண்டியை போட்டுவிட்டு ஒரு வண்டியில் சுற்ற ஆரம்பிப்போம். பின்புறம் கேரியர் இருந்தாலும் ஒருமுறை கூட கேரியரில் அமர்ந்ததில்லை. யார் ஓட்டினாலும் மற்றவர் முன்புறம் உள்ள கம்பியில் அமர்ந்து பயணிப்பதே எங்களின் வழக்கம். அதுதான் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் பேசிக்கொண்டே பயணிக்க வசதியாக இருக்கும்.

கல்லூரி நாட்களில் இப்படி பயணிக்க எனக்கு கிடைத்த அரிய துணை, என் நண்பன் சுந்தரமூர்த்தி. இருவருக்கும் ஒரே பிறந்த நாள்(வருடம் உட்பட), ஒரே blood group மற்றும் ஒரே ரசனை! எங்களின் விவாதத்தில், இத்தகைய பணங்களில் காணக்கிடக்கும் சுகத்திற்கான காரணம் இலக்கின்றி பயணிப்பதே என்பதையறிந்தோம். கல்லூரி காலங்கள் முடிந்த பின்னும், இப்போதும் கூட, இப்படி பயணிப்பதற்காகவே நான் மயிலாடுதுறை செல்வதுண்டு.

அவனுடைய bike எடுத்துக்கொண்டு சுற்ற ஆரம்பிப்போம். நினைத்த இடத்தில் நிறுத்தி சூடாக தேனீர் அருந்துவோம். சட்டென்று மனதிற்கு பிடிக்கும் மரநிழல், நீர் சுழித்தோடும் சிற்றோடை, ஏதேனும் ஒரு பாலத்தின் மதில் சுவர் எப்படி ஏதேனும் பார்த்தல் வண்டியை ஓரம்கட்டிவிட்டு அமர்ந்து பேசுவோம், பேசுவோம் பேசிக்கொண்டே இருப்போம்.

வீட்டிலிருந்து கிளம்பும்போது கூட எங்கு செல்வது என்ற எந்த முடிவும் எடுத்திருக்க மாட்டோம். மயிலாடுதுறையைச் சுற்றி ஒரு நாற்பது அல்லது ஐம்பது கிலோமீட்டர் சுற்றளவில் எங்காவது செல்வோம். பூம்புகார் கடற்கரை, தரங்கம்பாடி கடற்கரை, அதையொட்டி அமைந்த டச்சு கோட்டை, கங்கைகொண்டசோழபுரம், வைத்தீஸ்வரன் கோயில், திருக்கடையூர் இப்படி எங்காவது பயணிப்போம்.

திருக்கடையூர் என்றால் அபிராமி கோயிலுக்கு செல்லவேண்டும் என்றில்லை. திருக்கடையூருக்கு சற்று முன்பே ஏதேனும் ஒரு பாலத்தின் மதில் சுவரில் அமர்ந்திருந்துவிட்டுத் திரும்பியிருக்கிறோம். வழிநெடுகிலும் எத்தனையோ பாலங்கள் இருப்பினும், குறிப்பாக அந்தப் பாலத்தைத் தேர்வுசெய்யவென்று பெரிதாக எந்தக் காரணமும் இருக்காது. அதைக் கடக்கையில் எங்கள் மனம் சொல்லும், இங்கு அமரலாமென்று. அவ்வளவுதான். சில சமையம் மயிலாடுதுறை தொடர்வண்டி சந்திப்பின் மேம்பாலத்துடன் எங்கள் பயணம் முடிந்திருக்கும்.

நாங்கள் வழக்கமாக பெட்ரோல் போடும் பங்க் இருக்கும் திசை, சென்றுகொண்டிருக்கும் சாலையின் போக்குவரத்து நெரிசல், முன்னே செல்லும் வாகனத்தின் பின்னே அமர்ந்திருக்கும் அழகிய பெண், சாலையில் எதிர்படும் "அறுவை" அன்பர்கள்... இப்படி யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் எங்கள் பயணத்தின் திசையை தீர்மானிக்கலாம்! ஏனெனில் எங்களின் விருப்பம் ஒரு இலக்கை அடைவதன்று. just பயணிப்பது!

இப்படித்தான் ஒருமுறை, கும்பகோணம் சாலையில் போகலாம் என கிளம்பினோம். மேம்பாலத்தை தாண்டியதும் சித்தர்காடு என்னும் கிராமத்தைல் "டென்ட் கொட்டகை" திரையரங்கை பார்த்தோம். மாலை மற்றும் இரவு காட்சிகள் மட்டுமே திரையிடப்படுகிற அந்த திரையரங்கில், ஏதோ ஒரு பழைய படம் ஓடிக்கொண்டிருந்தது. பால்யங்களில் எங்கள் கிராமத்து திரையரங்கில் படம் பார்த்த உணர்வுகளை மீட்டெடுக்க, என்ன படம் என்றுகூட யோசிக்காமல் உள்ளே புகுந்துவிட்டோம். பெஞ்ச் டிக்கெட்! மண் தரையில் அமைக்கப்பட்ட பெஞ்சுகள், ஆண்-பெண் தடுப்புச்சுவர், பல வேட்டிகளை ஒன்றாக இணைத்து தைத்தது போன்ற திரை, கதை நிகழும் களத்திலேயே அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது போல் எல்லாவற்றையும் மறந்து ரசிக்கும் கிராமத்து மக்கள், கடலை மிட்டாய், கலர் சோடா என களைகட்டும் இடைவேளை... இப்படி எதுவும் மாறாத திரையரங்கு எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது. சின்னச்சின்ன விஷயங்களைக்கூட கவனித்து, 'இது கூட மாறல பார்டா...!' என அதிசயித்தோம்.

இலக்குகளற்ற எங்கள் பயணங்களில் எதிர்பார்ப்புகளே இல்லை. எதிர்பார்ப்புகள் இல்லாததால் எங்கள் பயணங்கள் ஏமாற்றங்களைச் சந்தித்ததே இல்லை. மாறாக, எங்களுக்கு கிடைத்த சின்னச்சின்ன சந்தோஷங்கள் கூட எதிர்பாராதவையாக அமைந்ததால் அவற்றின் சுவை இருமடங்காயிற்று!

தங்களைவிட மென்மையானவற்றை விலக்கியும், வலிமையானவற்றிற்கு வளைந்துகொடுத்தும், தன்னிச்சையாய் பாதையமைத்துச்செல்லும் நதிகள் போன்றவை எங்களின் இத்தகைய பயணங்கள். கடலினை அடையவேண்டும் என்கிற இலக்குடன் நதிகள் பயணிப்பதாய் நான் உணரவில்லை. தன் பாதையில் சட்டென எதிர்ப்படுகின்ற கடலுடன் கறைந்துபோவதாகவே அறிகிறேன். இச்செயல் நதிகளின் வெற்றியோ அல்லது தோல்வியோ அன்று. ஒரு அனுபவம். அவ்வளவே.

இத்தகைய பயணங்களின்போதான எங்களின் மனநிலை, வரையறைக்குட்படாத உன்னத நிலையிலிருக்கும். இவற்றையெல்லாம் இவனிடம் சொல்லவேண்டாமென மனதிற்குள் தணிக்கை செய்துவைத்த விஷயங்களைக்கூட, தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளத்தூண்டும். எண்ணற்ற வேஷங்களுக்கிடயே மறைந்துகிடக்கும் 'உண்மையான எங்களை' மீட்டெடுக்கும் திறன் வாய்ந்தவை இப்பயணங்கள். ஒவ்வொரு பயணமும், சின்னதாய் ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட்ட திருப்தி தரும். இப்படி இருத்தல்தான் உயிர்களின் இயல்போ என்று திகைத்துப்போவோம். நமது அன்றாட வாழ்க்கை நம்மை இயல்பிலிருந்து கண்காணாத தொலைவிற்கு அழைத்துச்சென்றுவிட்டதாய் அயர்ந்துபோவோம். இலக்குகள் நிரைந்த நம் வாழ்வு, நமக்கேயான நம் நாட்களின் பெரும்பாண்மையை, நம் கண்ணெதிறே கொள்ளையிட்டுப்போகும் சோகம் உணர்வோம்.

என்ன உணர்ந்து என்ன? எல்லாம் முடிந்து சென்னை செல்லும் பேருந்து ஏறி இருக்கையில் சாய்ந்ததும், எனது நாளைய இலக்குகளை மனதிற்குள் பட்டியலிட்டபடி, மீண்டும் தொலைந்துபோய்க்கொண்டிருப்பேன் 'நான்'!
Read More

23 March 2006

எழுத மறந்த நாட்குறிப்புகள்

வாழ்வின் அத்தியாவசியங்களில் ஒன்று பகிர்தல். எல்லோரும் எல்லா இடங்களிலும் எதையாவது யாருடனாவது பகிர்ந்துகொண்டேதான் இருக்கிறோம். அது ஒரு உணர்வாகவோ, எண்ணமாகவோ அல்லது பொருளாகவோ... எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பகிர்தல் மிக அவசியமாகிறது. phone, mobile phone, email, chat, blog என்று நமது தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை பகிர்தலை சார்ந்தே இருக்கிறன. பகிர்தல் இல்லாத ஒரு வாழ்வை நினைத்துப்பார்க்கவே முடிவதில்லை.

இதில் பெரிதும் பங்கு வகிப்பவர்கள் நண்பர்கள். வெகு அன்னியோன்யமான உணர்வுகளைக்கூட பகிர்ந்துகொள்ள, நமக்கு கிடைத்த வரம் நண்பர்கள். தன் வாழ்க்கைத்துணையிடம் கூட பகிர்ந்துகொள்ளாத விஷயங்களை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்பவர்கள் அதிகம். ஓர் இனிய நட்பு வாழ்க்கைத்துணையாகவோ அல்லது வாழ்க்கைத்துணை ஓர் இனிய நட்பாகவோ அமையப்பெற்றவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.

பள்ளி நாட்களில், அமைதியாய் இருக்க பணிக்கப்பட்டும், கட்டுப்படுத்தவே முடியாமல் புருஷோத்தமனுடன் பேசி அடிவாங்கிய ஆசிரியர் வராத வகுப்புகள்தான் எனக்கு பகிர்தலின் அவசியத்தை முதன்முதலாய் உணர்த்தின. ஏதாவது ஒரு வகுப்புக்கு ஆசிரியர் வராவிட்டால் பக்கத்து வகுப்பு ஆசிரியர் எங்கள் வகுப்புக்கு வந்து, "யார்டா இங்க மானிட்டர்..?" என்பார். கலர் வர்மா எழுந்து நிர்ப்பான். "பேசரவங்க பேரெல்லாம் board-ல எழுதி வை. வந்து கவனிச்சிக்கறேன்..." என்று சொல்லிவிட்டுப்போவார்.

எங்கள் வகுப்பு மானிட்டர் எங்களின் நெருங்கிய நண்பன் என்பதால் இரண்டு மூன்று எச்சரிக்கை சலுகைகள் கிடைக்கும். ஆனாலும் சிறிது நேரத்தில் எங்கள் பெயர்கள் தாங்கிய கரும்பலகை கலர் வர்மாவின் கடமை உணர்வைச்சொல்லும். அதைப்பார்த்த பின்புதான் நாங்கள் மறுபடி பேசியிருக்கிறோம் என்பதே எங்களுக்கு தெரியும்! எப்படியும் பிரம்பு அடி நிச்சயம் என்றான பின்பு மறுபடியும் பேசத்துவங்குவோம். என்ன செய்வது..?! பதிண்ம வயதுகள் புரிந்தும் புரியாமலும் நமக்கு அறிமுகப்படுத்தும் ஆயிரமாயிரம் ரகசியங்களை நண்பர்களிடம் மட்டும்தானே நாம் பகிர்ந்துகொள்ளமுடியும்! அப்பப்பா... எத்தனை ஆச்சர்யங்கள், பயங்கள், இன்ப அதிர்ச்சிகள், கேள்விகள், பதில்கள்!

நண்பர்களுடனான நமது பகிர்தல்கள் அட்சயப்பாத்திரம் போன்றவை. பேசப்பேச விஷயங்கள் தீர்ந்துபோவதில்லை. மறாக இன்னும் பல கிளைகளாக எல்லையற்றுப் பிரிந்து நீள்கின்றன. காலையில் எழுந்ததிலிருந்து அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும்வரை நிகழும் சின்னச்சின்ன விஷயங்களைக்கூட சேர்த்துவைத்து, அனைத்தையும் தொலைபேசியில் சொல்லித்தீர்த்தால்தான் இரவு தூக்கம் வரும் என்று சொல்லும் நண்பர்கள் நமக்கு இருக்கிறார்கள். நம் நெஞ்சைத்தொடுகிற எந்த ஒரு உணர்வும் யாருடனாவது பகிர்ந்துகொண்டாலொழிய முழுமையடைவதேயில்லை. இன்பங்கள் இரட்டிப்பாவதும், துன்பங்கள் பாதியாய் குறைவதும் பகிர்தலின்போதுதானே!

"ஏய்... நான் இங்க வடபழனி கோயில்ல இருக்கேன்டா. இங்க ஒரு குழந்தை என்ன cute தெரியுமா. அதும் மாம்பழ கலர் பட்டுப்பாவாடைல. செம சேட்டை பண்ணுது. நீமட்டும் பாத்த... அப்படியே கடிச்சி சாப்ட்டுடுவ!" - எங்கோ இருக்கும் என் தோழியை நிமிட நேரத்தில் எப்படியாவது வடபழனி முருகன் கோயிலுக்கு கொண்டுவந்து அந்த குழந்தையை அவளுக்கு காட்ட முடியாதா எனத்தவித்துப் பின் முடியாமல், தொலைபேசியில் அழைத்து சொல்லியிருக்கிறேன்.

"அருமையான படம்டா. frame by frame செதுக்கியிருக்கான். என்ன play தெரியுமா...?! ச்சான்சே இல்ல!" - படம் முடிவதற்கு முன்னாலேயே, இடைவேலையில் நண்பனை தொலைபேசியில் அழைத்து புலம்பியிருக்கிறேன்.

"ஹைய்ய்ய்யோ..! செம figure மச்சி..!!" - சாலையில் எதிரில் கடந்த அந்த பெண்ணின் காதில் விழக்கூடும் என்றுகூட யோசிக்காமல், பைக் ஓட்டிக்கொண்டிருந்த நண்பனின் தோளை இறுகப்பற்றியிருக்கிறேன்.

"அப்பா...! university level-ல second prize-பா." - பாரதிதாசன் university festivel-ல் painting-ல் பரிசு வென்றதை, அதிகாலையில் என் அழைப்புமணிக்கு கதவுதிறக்கப்போகும் அப்பாவிடம் சொல்லி அசத்தவேண்டுமென்று திருச்சியில் பஸ் ஏறியதிலிருந்து மனதிற்குள் ஒத்திகை பார்த்தபடி பயணித்திருக்கிறேன்.

இதுபோல சின்னதும் பெரிதுமாய் லட்சோபலட்சம் விஷயங்கள். ஒவ்வொன்றையும் பகிர்ந்த பின்புதான் மனம் நிறைவுற்றது. எவ்வளவு யோசித்தும் புரியவே புரியாத ஆச்சர்யம் அது. நாம் தான் அதை அனுபவிக்கிறோம். அதன் சுவை முழுதும் உணர்கிறோம். ஆனால் பகிர்ந்தால்தான் மனம் நிறைவுறுகிறது!

இங்கே எனது மன நிறைவிற்காய், என்னை பாதித்த பல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன். ஆனந்த விகடனில் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் "துணையெழுத்து" படித்தபோது அந்த வடிவம் என்னை மிகவும் கவர்ந்தது. கதை, கவிதை மாதிரி புனைவதற்கு யோசிக்காமல் உணர்ந்ததை உணர்ந்தபடி பகிர்ந்துகொள்ள உதவும் ஓர் அருமையான வடிவம் அது. சிறுகதையை ஒத்த கட்டுரைபோலவும், மென்மையான சிறுகதைக்கே உரிய ஒரு முடிவுடனும், படிப்பதற்கு அலாதியான வடிவம். படிக்கும்போது யாரோ நமக்கு கதை சொல்லிக்கொண்டிருப்பதுபோல் தோன்றச்செய்யும் இதமான வடிவம். அந்த வடிவத்திலேயே என் உணர்வுகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

கேட்ப்பவர்களுக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பது பற்றியெல்லாம் கூட கவலைப்படாமல் எதைப்பற்றியாவது சுவாரஸ்யமாய் சிலர் பேசிக்கொண்டேயிருப்பார்கள். எனது இந்த பகிர்தல்கள் கூட அப்படி இருக்கலாம்! ஆனாலும், அதைப்பற்றியெல்லாம் நான் கவலைபடப் போவதில்லை!! குறைந்தபட்சம், நான் எழுத மறந்த எனது நாட்குறிப்புகளின் ஒரு பதிவாகவாவது இவை இருந்துவிட்டுப்போகட்டுமே :)
Read More

09 December 2005

தலகோனா

பொதுவாய் கோயில்களுக்கு அவற்றின் சூழலையும், வடிவமைப்பையும் ரசிக்க மட்டுமே செல்வேன். எனக்கு மிகப்பிடித்த கோயில் - கங்கை கொண்ட சோழபுரம் கோயில். காரணம் அந்த புல்வெளியில் நிரம்பியிருக்கும் ரம்மியமான அமைதி. மென்மையான புல் வெளியில் விளைந்த கற்கோபுரங்கள் தரும் அழகு. அந்த சூழல் மிக ரசிக்கத்தக்க வகையில் இருக்கும். பிரார்த்தனைகளில் நம்பிக்கை இல்லாத போதும் எனக்கு மிகப்பிடித்த இடம் கோயில்களே!

சென்னையில் இருப்பதால், நேரம் அமைந்தால் அடிக்கடி மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு செல்வேன். மனம் அமைதியற்று இருக்கும் வேலைகளில் கண்டிப்பாக அங்கு செல்வேன். முதலில் இருக்கும் விநாயகர் சன்னிதியில் திருநீறு வைத்துக்கொண்டு, அருகிலிருக்கும் மண்டபத்தில் அமர்ந்து கொள்வேன், மணிக்கணக்காய்.

இருந்தும், எத்தனையோ நண்பர்கள் அழைத்தும் செல்ல மறுக்கும் இடம் - திருப்பதி. 10-ம் வகுப்பு படிக்கும் போது கடைசியாய் சென்றதாக நினைவு. முதலில் எனக்கு அங்கு பிடிக்காத விஷயம் அங்கு நிரம்பி வழியும் கூட்டம் தான். அந்த நெரிசலும்... நசநசப்பும்... எப்போதடா கிளம்புவேம் என்றாகிவிட்டது.

சமீபத்தில் என் நண்பனுக்காக, அவன் வேண்டுதலுக்காக திருப்பதி சென்றேயாக வேண்டிய சூழல். இரண்டு மாதங்களுக்கு முன்னரே தரிசனத்திற்கு பதிவு செய்தோம். அப்போதிலிருந்தே விசாரிக்க ஆரம்பித்துவிட்டேன்- திருப்பதிக்கு அருகில் ஏதேனும் பார்க்கத்தகுந்த இடங்கள் இருக்கின்றதாவென.

கீழ் திருப்பதியில் இருந்து 60 கி. மீ. தொலைவில் "தலகோனா" என்கிற இடத்தில் ஒரு அருவி இருப்பதாயும், அங்கு "அதர்மம்", "காதல் கொண்டேன்" மற்றும் சில திரைப்படங்களின் படப்பிடிப்பு நிகழ்ந்ததாயும் அறிந்தேன். "காதல் கொண்டேன்" climax அங்குதான் எடுக்கப்பட்டதாம். அருவி என்றதும் மனம் மிக உற்சாகம் கொண்டது. நீரின் வடிவங்களில் எனக்கு மிகப்பிடித்தது அருவிதான். நண்பர்களிடம் அப்படியே அங்கும் செல்லலாம் என சம்மதம் பெற்று, அதன் படி ஒரு நாள் முன்னதாகவே சென்று "தலகோனா" நீர்வீழ்ச்சியையும் பார்ப்பதென முடிவானது.

காலை 11 மணிக்கு கீழ் திருப்பதியை அடைந்தோம். அங்கேயே ஒரு அறை எடுத்து, luggage எல்லாம் போட்டுவிட்டு, தலகோனா விற்கு வழி விசாரித்துக்கொண்டு கிளம்பினோம். கீழ் திருப்பதியிலிருந்து தலகோனா வரை - மெல்லிசை மிதந்த மகிழூந்தில்(அதாங்க... car), இயற்கையை தனிமையில் ரசிக்க மலைகளில் ஏறி இறங்கி தன்னிச்சையாய் ஓடிய சாலையில், மிதமான வேகத்தில் சென்றதே ஒரு சுகானுபவம்.

அருவியை அடைய சுமார் 2 கி. மீ. தூரம் மலைப்பாதையில் நடந்து செல்லவேண்டும் என்றார்கள். அதுதான் நாம் செய்த பாக்கியம் என்று சொல்ல வேண்டும். அந்த மலைப்பாதையில் பாதுகாப்பிற்காக செய்யப்பட்ட சில விஷயங்களைத்தவிர அனைத்தும் இயற்கை... இயற்கை... இயற்கை..!

முதலில் அடைந்த அருவியின் ஒரு பகுதி, சுற்றிலும் மலை சூழ, ஒரு குகைக்குள் சென்ற உணர்வு. ஒருபக்கம் மட்டும் தண்ணீர் விழ, பிரம்மாண்டமான மலைகளுக்கிடையில் நின்றபோது, நான் இயற்கையின் மிகச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சிறிய அங்கம் என உணர்ந்தேன். நாங்கள் சென்றிருந்தது நல்ல வெய்யில் காலத்தில் என்பதால் தண்ணீரின் அளவு குறைவாயிருந்தது. ஆனால் வருடம் 365 நாட்களும் தண்ணீர் வந்துகொண்டிருகும் என்றார்கள். சீசனில் தண்ணீரின் வீழ்ச்சி பிரம்மாண்டமாய் இருக்குமாம். அந்த சூழலை பார்த்தால் உண்மைதான் எனப்பட்டது.

அங்கிருந்த குரங்குகளை ரசிக்கவே நேரம் போதாது. உண்மையில் அவற்றை பார்க்கப்பார்க்க பொறாமையாகத்தான் இருந்தது. அவற்றுக்கு கிடைத்த வாழ்வு நமக்கு கிடைத்ததா என்றால், சத்தியமாக இல்லை என்றுதான் சொல்வேன்.

ஒரு குரங்கை மட்டும் தொடர்ந்து வெகுநேரம் கவனித்தேன். தன் ஐம்புலன்களின் நுகர்விற்கும் இயற்கை அள்ள அள்ளக் குறையாமல் கொடுத்திருப்பதை, புரிந்தோ புரியாமலோ, முழுமையாய் அனுபவிக்கிறது அது. இயற்கையைத்தாண்டி வேறொன்றிலும் தேவை இருக்கவில்லை அதற்கு. நாம் மட்டும் இவை எதையும் அனுபவிக்காமல் எதைத்தேடி ஓடுகிறோம் இப்படி? அதுவும் வாழ்க்கை முழுக்க!

நம்மில் ஒவ்வொரு தலைமுறையும் தன் அடுத்த தலைமுறையை வளமாக்கவும், அதற்கு சேர்த்து வைக்கவுமே செலவிடப்படுகின்றன. இது ஒரு முடிவே இல்லாமல் தொடர்கிறது எனில், எந்த தலைமுறை எல்லாவற்றையும் அனுபவிக்கும்? அடுத்த தலைமுறையின் தேவை என நாம் நம்புவது எதை? முதல் தலைமுறை, மூன்றாவது தலைமுறைக்கு சேர்த்து வைக்கச்சொல்லி இரண்டாவது தலைமுறையை விரட்டுகிறது! தொடர்ந்து நீளும் இந்த வாழ்வின் போக்கில், வருடத்திற்கு ஒண்றிரண்டு முறைகள் சுற்றுலா என்கிற வாய்ப்புகள் கிடைக்கின்றன - இயற்கையை உணர!

இதோ என் எதிரே அமர்ந்து என்னை வினோதமாய்ப் பார்க்கும் இந்த குரங்கிற்கு தினம் தினம் இன்பச்சுற்றுலாதான். இதன் முன்னோர்கள் இதற்கு என்ன சேர்த்து வைத்தார்கள்? இதன் பேரில் எத்தனை ஏக்கர் நிலம் இருக்கும்?! அல்லது, இந்த குரங்குதான் தன் அடுத்த தலைமுறைக்கு என்ன சேர்த்து வைத்திருக்கிறது? என்ன இல்லை இவற்றின் வாழ்வில்? இதன் தாயும் இதனை தாயன்புடன்தானே பாலூட்டி வளர்த்திருக்க வேண்டும்! தன் உணவைத் தானே தேடும் நிலை வந்ததும் தனக்கான வாழ்க்கையை தானே அமைத்துக்கொள்ள இவர்களுக்கு யார் சொல்லித்தந்தது? அதுதான் இயற்கையின் இயல்போ! நாம் தான் மிக விலகி வந்துவிட்டோமோ?!

"உன்னை பாத்தா ரொம்ப பொறாமையா இருக்கு..." என்றேன் வாய்விட்டு. ஏதோ உளறுகிறான் இவன் என்பதாய் பார்த்துவிட்டு ஓடிவிட்டது.

சும்மா உட்கார்ந்திருக்கிறது
அமைதியாய்,
புல்
தானாகவே வளர்கிறது
வசந்தம் வரும்போது.

-படித்தபோது புரிந்துகொண்ட இந்த ஸென் கவிதையின் அர்த்தத்தை இன்று உணர்ந்துகொண்டேன்.

இன்னும் சற்று மேலே சென்றால் அருவியின் இன்னோரு பகுதியை காணலாம் என்றார்கள். அங்கு செல்ல படிகள் கூட அதிகம் இல்லை. ஆனால் அப்படி ஒன்றும் கடினமாகவும் இல்லை. மிக அற்புதமான ஒரு சூழல் அங்கு. வெகு உயர்ந்த செங்குத்தான மலை முகட்டிலிருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டிருக்கிறது - வேறெந்த பாறையையும் தொடாமல்! கீழேயுள்ள படத்தில் அந்த மலை முகட்டின் ஆரம்பமும் தெரியவிலை, தண்ணீர் விழுந்து தெறிக்கும் தரையும் தெரியவில்லை! (ஆர்வ கோளாரில் அருவியை அடையும் முன்னமே நிறைய படங்கள் எடுத்துவிட்டதால் அருவியை அடைந்தபோது camera battery-யில் charge இல்லை. அதனால் பல நல்ல கோணங்களை தவறவிட நேர்ந்தது.)

குளிக்கலாம் என அருவியில் நின்றால் தண்ணீர் முழுவதும் நேராக நம்மீதுதான் விழுகிறது - மொத்த விசையுடன். ஒவ்வொரு துளியும் தனித்தனி ஊசியாய் உடலில் இறங்குவது போல, வேறெங்கும் உணர முடியாத இன்ப வேதனை அது! அதை உணர்ந்தபோது அடிவயிற்றிலிருந்து குரலெடுத்து ஓவென கத்தினோம். வாழ்வில் மறக்க முடியாத குளியல்!

எவ்வளவு நேரம் போனதென்றே தெரியவில்லை. கிளம்ப மனமில்லாமல் ஆடிக்கொண்டிருந்தோம். இருட்ட ஆரம்பித்ததை உணர்ந்து, ஏழுமலையான் மீது அதீத பக்தி கொண்ட என் நண்பன் கிளம்பலாம் என நச்சரிக்க ஆரம்பித்தான். இரவே ஒருமுறை திருமலைக்கு சென்றுவரவேண்டுமென்பது அவனது ஆசை. காலையில் தான் அங்கு செல்கிறோமே, இங்கு இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் என்றால் கேட்பதாக இல்லை. அன்று சனிக்கிழமையாம். அதுவே இரு விசேஷமாம். அதோடு அன்று பிரதோஷம் வேறாம். அதிலும் பிரம்மோற்சவ நாட்களிளேயே சிறந்த நாளான "கருட சேவை" அன்றுதானம்! இவ்வளவும் ஒன்றாக வேறென்றும் வரவே வராது என்றான். வந்ததே அவனுக்காகத்தான். சரியென்று கிளம்பிவிட்டோம்.

தலகோனாவிலேயே தங்குவதற்கு விடுதிகளும்(Govt.) இருப்பதை அறிந்து, தொலைபேசியில் அறைகள் பதிவு செய்ய யாரை அனுகுவது(மச்சி next time வரப்போ இங்கயே ஒரு நாள் தங்கனும்டா!) என்பதான தகவல்களை சேகரித்து கிளம்பினோம். ஹோட்டல் சாப்பாடு தவிர்த்து, நாம் பணம் கொடுத்து என்ன வேண்டும் என சொல்லிவிட்டால், நமக்கென மீன் முதற்கொண்டு அனைத்தும் சமைத்துத் தர ஆட்கள் இருக்கிறார்கள் இங்கே!

மீண்டும் மெல்லிசை மிதக்கும் மகிழூந்தில், அருவியில் குளித்த அசதி கண்களை அயர்த்த, கண்களை மூடியபடி அமைதியாய் பயனித்து கீழ் திருப்பதி அடைந்தோம். இரவே திருமலைக்குச் சென்று, வெங்கடாஜலபதி கருட வாகனத்தில் பவனி வருவதை தரிசித்து இரவு இரண்டு மணிக்கு கீழிறங்கி அறைக்கு வந்து சேர்ந்தோம்.

மறுநாள் காலையில் திரும்பவும் திருமலை மேலேறி, தரிசனத்திற்காய் நீண்ண்ண்ண்ண்ட வரிசையில் நின்று, அடைத்து வைத்த சந்துகளில் ஒழுங்கற்று நசுக்கிப் பிழியும் கூட்டத்தில், சில மணி நேரங்கள் காத்திருந்து, சில நொடி நேரங்களே தரிசனம் தந்த வெங்கடாஜலபதி - 'என்ன இருக்கிறதென்று இவ்வளவு கூட்டம் இங்கு' என்பதான ஆச்சர்யத்தைத் தவிர வேறெந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்னுள். ஒருவேலை எனக்குத்தான் அதை உணரும் கொடுப்பினை இல்லையோ என்னவோ!

எப்படி இருப்பினும், ஏழுமலையான் சன்னிதியில் என்னால் உணர இயலாத இறையை தலகோனா நீர்வீழ்ச்சியில் உணர்ந்துவிட்டேன்!

Read More