என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

27 May 2006

பழைய ஓவியம் 1

ல்லூரிக் காலங்களில், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் "தொட்டால் தொடரும்" படித்து அவரின் தீவிர வாசகனாகிவிட்டேன். உண்மையில் அந்த நாவலைத் தொட்டால் முடியும்வரை தொடரும். பாதியில் வைக்க முடியாது. ஒவ்வொரு பாத்திரத்தின் குணாதிசயங்களையும் ஒளிந்திருந்து பார்த்ததுபோல் யதார்த்தமாய் எழுதியிருப்பர். கதையின் சம்பவங்கள் கூட வெகு இயல்பாய் நிகழ்வதுபோல் இருக்கும். முடிவு மட்டும் நமது தமிழ்சினிமாத்தனமாக இருக்கும்.

அப்போது ஆர்வக்கோளாரில் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். கீழேயுள்ள படத்துன்! வரைந்த நினைவாக ஒரிஜினலை வைத்துக்கொண்டு அவருக்கு கலர் செராக்ஸ் எடுத்து அனுப்பினேன்.


புதிதாய் இப்போது எதுவும் வரைய நேரமில்லாவிட்டாலும், எனது பழைய ஓவியங்களை இங்கு ஒவ்வொன்றாக தொகுக்க முயற்சிக்கிறேன். உங்களுடன் பகிர்ந்துகொள்வதுடன், இவற்றை பத்திரமாக சேமித்ததுபோலவும் ஆகும் இல்லையா?!

Read More

17 May 2006

கடிதங்கள்

எழுத மறந்த நாட்குறிப்புகள் - 2: கடிதங்கள்

சில வருடங்களுக்கு முன்பு எனது வாழ்தலின் அத்தியாவசியங்களுள் ஒன்றாக விளங்கிய கடிதங்கள், இன்று வெறும் நினைவுச்சுவடுகளாக மட்டுமே எஞ்சியிருக்கிறது. கடிதங்கள் என் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகள் மிகப்பெரியவை. அப்படியிருந்த கடிதங்களை இன்று சுத்தமாக மறந்தே போய்விட்டது மிக ஆச்சர்யமாய் இருக்கிறது!

நேற்று என் நண்பன், தனது திருமண அழைப்பிதழ்களை அனுப்புவதற்காக, அருகில் தபால் நிலையம் எங்கிருக்கிறது எனக்கேட்டான். வெகு இயல்பாக 'தெரிலடா... பக்கத்ததுவீட்டு ஆன்ட்டி கிட்ட வேணா கேட்டுப்பாரு...' என்று சொன்ன பிறகுதான் உணர்ந்தேன்... ஒரு காலத்தில், எந்த இடத்திற்கு வீடு மாறி சென்றாலும், எனது முதல்வேலை அருகிலிருக்கும் தபால் நிலையத்தைத் தேடுவதுதான். இப்போதிருக்கும் இந்த வீட்டிற்கு வந்தபின், கடந்த இரண்டு வருடங்களாக, அருகில் தபால் நிலையம் எங்கிருக்கிறது என்ற தேடலுக்கு அவசியமே இல்லாதிருந்திருக்கிறேன்! இது எப்படி சாத்தியமாயிற்று என தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துவிடேன்.

தொலைபேசியும், மின்னஞ்சலும் எனது அன்றாட வாழ்வில் நுழைய நுழைய, கோபித்துக்கொண்ட கடிதங்கள், என்னிடம் சொல்லாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக வெளியே சென்றுவிட்டன. அடுத்த வினாடிகளில் பதில் கிடைத்துவிடுகிற தொலைபேசியும் மின்னஞ்சலும் இருக்கிறபோது, பதிலுக்காக நான்கைந்து நாட்கள் காக்கவைக்கிற கடிதங்களுக்கு அவசியமில்லாமல் போயிற்று. ஆனால் அதிலிருக்கிற அன்னியோன்யமும், உயிர்ப்பும் இதில் இருக்கிறனவா என யோசித்துப்பார்த்தால், நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடிதங்களுக்கான காத்திருப்புகள் தரும் தவிப்பும், எழுதியவரின் கையெழுத்து தரும் உயிர்ப்பும் அலாதியானவை. கையெழுத்து கொண்டு, அந்த கடிதம் எப்படிப்பட்ட மன நிலையில் எழுதப்பட்டிருக்கிறது என்பதைக்கூட உணர்ந்திருக்கிறேன். எந்த மொழியிலும் நமது உணர்வுகளை நூறு சதவிகிதம் பகிர்ந்துகொள்ள இயலாதெனினும், கடிதங்களில் சில வசதிகள் உண்டு. உதாரணத்திற்கு, 'நீண்ட' என்கிற வார்த்தையில் உள்ள மூன்று சுழி 'ண' வில் பத்துப்பதினைந்து சுழி போட்டு எவ்வளவு நீண்ட என்று உணர்த்துவோம்!

இதுவரை எனக்கு வந்த எல்லா கடிதங்களையுமே நான் சேமித்து வைத்திருக்கிறேன். எனக்காக பிறர் எழுதிய நாட்குறிப்புகள் அவை. நாட்குறிப்புகளை மீண்டும் எடுத்து படிப்பதுபோல், எனக்கு வந்த பழைய கடிதங்களை படிக்க ஆரம்பித்து தூங்காமல் போன இரவுகள் நிரைய. நமது பழைய நாட்களை மீட்டுத்தரும் வல்லமை நாட்குறிப்புகளுக்கு அடுத்து கடிதங்களுக்கே வாய்த்திருக்கிறது.

தபால் நிலையம் மற்றும் கடிதங்களுடனான எனது முதல் பரிச்சயம், எங்கள் கிராமத்து வீட்டில் தான் நிகழ்ந்திருக்கிறது. எங்கள் கிராமத்திற்கு தபால் நிலையம் வந்தபோது எங்கள் உறவினர்களில் ஒருவர்தான் 'போஸ்ட் மாஸ்டர்'. அவர் வீட்டில் தபால் அலுவலகம் வைக்க வசதி இல்லாததாலும், அது கூறை வீடு என்பதாலும், எங்கள் வீட்டின் திண்ணை பக்கம் சாளரம் கொண்ட ஒரு அறையில் தபால் அலுவலகம் வைத்துக்கொள்ள அவர்அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்கு பிறகு எங்கள் வீட்டின் சூழலே சற்று மாறித்தான் போயிருந்தது. வீட்டின்முன் மின்கம்பத்தில் கட்டப்பட்ட தபால் பெட்டி, திண்ணையில் கட்டப்பட்டிருந்த சிவப்பு நிற அறிவிப்பு பலகைகள், அந்த அறையின் உள்புற வாசலில் மாட்டப்பட்டிருந்த "அனுமதியின்றி உள்ளே வராதீர்" போர்டு எல்லாம் எங்களுக்கு வினோதமாக இருந்தன.

எங்கள் கிராமத்து வீட்டில் தபால் நிலையம் வந்தபின், முதல்முறையாக அங்கு விடுமுறைக்கு சென்ற நாட்கள் இன்னும் உயிர்ப்புடன் நினைவில் இருக்கிறது. அந்த அறையை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. விடுமுறைக்கு அங்கு சென்றால் பெரும்பாண்மையான நேரம் அந்த அறையில்தான் இருப்பேன். காலையில் எப்போதடா போஸ்ட் ஆபீஸ் திறப்பார்கள் என்றிருக்கும். டவுனில் சென்று படிப்பவர்கள் என்பதால், தபால்களை கட்டும் சாக்குப்பை, சீல்வைக்கும் அரக்குகள் மற்றும் அச்சுகள், தினமும் தேதி மாற்றி வைக்கப்படும் முத்திரைகள் எல்லாவற்றையும் அணுகும் அனுமதியை நாங்கள் பெற்றிருந்தோம்! தபால் கட்டு வந்தவுடன் அவற்றை ஊர் மற்றும் தெரு வாரியாக பிரிப்பதிலிருந்து, முத்திரை குத்துவது வரை நாங்களே செய்வோம். கடிதம் கிடைக்கப்பெற்றவர்களில் பலர், மீண்டும் அதை எங்கள் வீட்டிற்குத்தான் கொண்டுவருவார்கள். அவற்றை அவர்களுக்கு படித்துக்காட்டி, பதில்கடிதம் எழுதித்தரும் வேலையும் எங்களுடையது. அனேகமாக நான் எழுதிய முதல் கடிதம் எனக்காக இல்லை என்றே நினைக்கிறேன்.

பள்ளிப்படிப்பு முடியும்வரை எனக்கென்று பெரிதாக ஏதும் கடிதங்கள் வந்ததில்லை. பொங்கலுக்கு ஊருக்கு செல்லும்போது வகுப்பில் முகவரிகளை பரிமாறிக்கொள்வோம். 'இந்த அட்ரஸ் போட்டா கரக்டா உனக்கு வந்துடுமாடா?' என நண்பர்கள் கேட்கும்போது, 'டேய்... போஸ்ட் ஆபீஸே எங்க வீட்லதான் இருக்கு. நாங்கதான் கட்டு பிரிப்போம்...' என்று பெருமையாய் சொல்வேன். நண்பர்கள் ஆச்சரியமாய் கேட்கக் கேட்க, போஸ்ட் ஆபீஸில் உபயோகிக்கும் technical-terms எல்லாம் பயன்படுத்தி பந்தா விட்டுக்கொண்டிருப்பேன். எங்கள் கூட்டுக்குடும்பத்தில் நாங்கள் சகோதர சகோதரிகள் மொத்தம் ஏழு பேர். பொங்கலின்போது எங்களின் மனசுக்குள் ஒரு போட்டியே நடக்கும். யாருக்கு அதிக பொங்கல் வாழ்த்துக்கள் வருகிறதென்று!

கல்லூரிக்கு சென்றபின்தான் ஏராளமான கடிதப்போக்குவரத்துகள். முழு நீள வெள்ளைத்தாளில் பக்கம் பக்கமாக எழுதிக்கொள்வோம். கடிதம் எழுதி முடித்தபின்னும் ஏதாவது தோன்றும். margin விட்ட இடங்களும் போதாமல் இண்டு இடுக்குகளிலெல்லாம் எழுதி நிரப்புவோம். காதலர்களின் பேச்சுபோல, 'அப்படி எழுத என்னதான் இருக்கிறது' என அடுத்தவர்கள் வியக்கும்படி எழுதுவோம். உன்ன எப்டில்லாம் miss பண்றேன் தெரியுமா-விலிருந்து இன்னைக்கு எங்க ஹாஸ்டல் மெஸ்ஸில் என்ன மெனு என்பதுவரை அனைத்தையும் எழுதுவோம். 'to my dear lover' என்றெல்லம் முகவரியிலேயே எனது பெயருக்கு முன்னால் ஒரு நண்பன் எழுதுவான்!

தெரிந்த நண்பர்கள் பேதாதென்று பேனா நண்பர்கள் வேறு! பெரிய அறிவுஜீவிகள் கணக்காக சீரியஸான விஷயங்களை எடுத்துக்கொண்டு மாதக்கணக்கில் பேனா நண்பர்களுடன் விவாதிப்போம். அதில் மறக்கவே இயலாத ஒரு நண்பர் - புதுக்கோட்டை அன்னசத்திரம் என்கிற ஊரிலிருந்து வெங்கடாஜலபதி என்பவர். குடும்ப சூழலால் பள்ளிப்படிப்பை தொடர இயலாமல், சைக்கிள் கடையில் வேலைபார்த்துக்கொண்டு, கடிதங்களை தன் வாழ்வின் வடிகாலாகக் கொண்டவர். அருமையாக எழுதுவார். அந்த சூழலிலும், பாலகுமாரன் முதற்கொண்டு ஏகப்பட்ட எழுத்தாளர்களை எப்படியாவது படித்துவிடக்கூடியவர். அவர் எனக்கு அறிமுகப்படுத்திய எழுத்துக்கள் நிரைய. இப்போது அவருடன் கடிதத்தொடர்பு இல்லையென்றாலும், இன்றும் அவரின் பழைய கடிதங்களை அடிக்கடி எடுத்து படிப்பேன்.

ஹாஸ்டலில் கடிதம் வருவது ஒரு கௌரவம். அது எனக்கு மிக அதிகமாகவே கிடைத்தது. B.Sc படிக்கும்போதும் சரி, MCA படிக்கும்போதும் சரி... அதிக கடிதங்கள் வருவது எனக்குத்தான். B.Sc நண்பர்களும் சேர்ந்துகொள்ள, MCA வில் கடிதங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. B. Sc நண்பர்களைப்பிறிந்து MCA சேர்ந்த புதிதில் கடிதங்களே எனக்கு மிகப்பெரும் ஆறுதல். மிக நெருங்கிய நண்பர்கள் வட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்திலேயே தங்கள் மேற்படிப்பைத்தொடர, நான் மட்டும் சென்னை வந்துவிட்டேன். அப்போது 'முஸ்தபா... முஸ்தபா...' பாடல் வெகு பிரசித்தம். "கல்விபயிலும் காலம் வரையில்/ துள்ளித்திரியும் எங்கள் விழியில்/ கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி/ நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்/ நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்/ கண்ணீரில்தானே எங்கள் farewell party" - நண்பர்களை பிரிந்த சூழலில் கேட்டதாலோ என்னவோ, என்னை மிகவும் பாதித்த வரிகள் இவை. ஹாஸ்டல் மொட்டை மாடியில் தனியாய் வாக்மேனில் இந்த பாடல் கேட்டு அழுதிருக்கிறேன்! உடனே ஓடிப்போய் நண்பர்களின் கடிதங்களை எடுத்து படிக்க ஆரம்பித்துவிடுவேன். அவர்களெல்லாம் ஒன்றாக இருப்பதால் அவர்கள் அனைவரின் கடிதங்களிலும் பெரும்பாண்மையான விஷயங்கள் ஒன்றாக இருக்கும். இருப்பினும் ஒவ்வொருவரிடமிருந்தும் தனித்தனி கடிதம் வரும். நான் அவர்களுக்கு எழுதும் கடிதங்களிலும் பெரும்பாண்மையான விஷயங்கள் ஒன்றாகத்தானிருக்கும். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கடிதம் எழுதுவேன்!

ஹாஸ்டலில், பொங்கல் மற்றும் தீபாவளியின் போது போஸ்ட்மேன் பணம் கேட்க வந்தால், நேராக என் அறைக்குத்தான் அனுப்பிவைப்பார்கள். 'இங்க வர்ர லெட்டெர்ஸ்ல பாதிக்குமேல அவனுக்குத்தான் வருது. அவன் கிட்ட போய்க் கேளுங்க...' என்பார்கள். அதுவும் பிறந்தநாளென்றால் கேட்கவே வேண்டாம். வாழ்த்து அட்டைகளும், பரிசுப்பொருள்களுமாய் போஸ்ட்மேன் அள்ளிக்கொண்டு வருவார். ஹாஸ்டலில் எனது அலமாரி முழுக்க கடிதங்கள், கடிதங்கள், கடிதங்கள்தான்... ஒவ்வொரு நாளின் பெரும்பகுதியும் கடிதங்களை படிப்பதிலும் எழுதுவதிலுமே போய்விடும். தேர்வுநாட்களில் கடிதங்களைக் காண இயலாமல் பைத்தியம் பிடிப்பது போலாகிவிடும்.

இப்போது நகரங்களிலும் பெருநகரங்களிலும் கடிதங்கள் வெறும் பத்திரிக்கைகள் அனுப்பவும் ஆவணங்களை அனுப்பவும் மட்டுமே என்றாகிப்போனது மனதை வருந்தச்செய்கிறது. எனது நெருங்கிய நண்பர் ஸ்டாலினுடன் இதுபற்றி பேசிக்கொண்டிருந்தபோது, அவரும் இப்படி சில நாட்களாய் யோசித்துக்கொண்டிருப்பதாயும், மீண்டும் அந்த பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டுமென்று, எனக்கு மிக நீண்டதாய் ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருப்பதாயும் சொன்னார். இந்த 'நீண்ட' வில் பத்துப்பதினைந்து சுழியில் 'ண' போட்டிருந்தால் பொருத்தமாய் இருந்திருக்கும்தானே!?
Read More

02 May 2006

இலக்கற்ற பயணங்கள்

எழுத மறந்த நாட்குறிப்புகள் - 1: இலக்கற்ற பயணங்கள்

சின்ன வயதிலிருந்தே எங்கும் எதிலும் இலக்குகள் வேண்டும் என்றே போதிக்கப்பட்டதாலோ என்னவோ, இலக்கற்ற பயணங்களின் சுவை உணர வாழ்வின் பெரும்பகுதி கடக்கவேண்டியிருந்தது. இலக்கில்லாமல் திரிதல் சுகம். இத்தனை மணிக்கு இன்னாரை பார்க்கவேண்டும் அல்லது இதைச்செய்யவேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லாமல் பயணிப்பதின் சுகம் அதை அனுபவித்தவர்க்கே தெரியும்.

+2 நாட்களில் நண்பன் புருஷோத்தமனுடன் மிதிவண்டியில் இப்படி பயணித்தபோது இதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் இந்த சுகம் எப்படி வருகிறது என்றெல்லாம் ஆராயவில்லை. எங்களுக்கு அதைவிட முக்கியமான வேலைகள் அப்போது இருந்தன! ஆளுக்கொரு மிதிவண்டியில் வந்தாலும் ஏதவது ஒரு தேனீரகத்தில் ஒரு வண்டியை போட்டுவிட்டு ஒரு வண்டியில் சுற்ற ஆரம்பிப்போம். பின்புறம் கேரியர் இருந்தாலும் ஒருமுறை கூட கேரியரில் அமர்ந்ததில்லை. யார் ஓட்டினாலும் மற்றவர் முன்புறம் உள்ள கம்பியில் அமர்ந்து பயணிப்பதே எங்களின் வழக்கம். அதுதான் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் பேசிக்கொண்டே பயணிக்க வசதியாக இருக்கும்.

கல்லூரி நாட்களில் இப்படி பயணிக்க எனக்கு கிடைத்த அரிய துணை, என் நண்பன் சுந்தரமூர்த்தி. இருவருக்கும் ஒரே பிறந்த நாள்(வருடம் உட்பட), ஒரே blood group மற்றும் ஒரே ரசனை! எங்களின் விவாதத்தில், இத்தகைய பணங்களில் காணக்கிடக்கும் சுகத்திற்கான காரணம் இலக்கின்றி பயணிப்பதே என்பதையறிந்தோம். கல்லூரி காலங்கள் முடிந்த பின்னும், இப்போதும் கூட, இப்படி பயணிப்பதற்காகவே நான் மயிலாடுதுறை செல்வதுண்டு.

அவனுடைய bike எடுத்துக்கொண்டு சுற்ற ஆரம்பிப்போம். நினைத்த இடத்தில் நிறுத்தி சூடாக தேனீர் அருந்துவோம். சட்டென்று மனதிற்கு பிடிக்கும் மரநிழல், நீர் சுழித்தோடும் சிற்றோடை, ஏதேனும் ஒரு பாலத்தின் மதில் சுவர் எப்படி ஏதேனும் பார்த்தல் வண்டியை ஓரம்கட்டிவிட்டு அமர்ந்து பேசுவோம், பேசுவோம் பேசிக்கொண்டே இருப்போம்.

வீட்டிலிருந்து கிளம்பும்போது கூட எங்கு செல்வது என்ற எந்த முடிவும் எடுத்திருக்க மாட்டோம். மயிலாடுதுறையைச் சுற்றி ஒரு நாற்பது அல்லது ஐம்பது கிலோமீட்டர் சுற்றளவில் எங்காவது செல்வோம். பூம்புகார் கடற்கரை, தரங்கம்பாடி கடற்கரை, அதையொட்டி அமைந்த டச்சு கோட்டை, கங்கைகொண்டசோழபுரம், வைத்தீஸ்வரன் கோயில், திருக்கடையூர் இப்படி எங்காவது பயணிப்போம்.

திருக்கடையூர் என்றால் அபிராமி கோயிலுக்கு செல்லவேண்டும் என்றில்லை. திருக்கடையூருக்கு சற்று முன்பே ஏதேனும் ஒரு பாலத்தின் மதில் சுவரில் அமர்ந்திருந்துவிட்டுத் திரும்பியிருக்கிறோம். வழிநெடுகிலும் எத்தனையோ பாலங்கள் இருப்பினும், குறிப்பாக அந்தப் பாலத்தைத் தேர்வுசெய்யவென்று பெரிதாக எந்தக் காரணமும் இருக்காது. அதைக் கடக்கையில் எங்கள் மனம் சொல்லும், இங்கு அமரலாமென்று. அவ்வளவுதான். சில சமையம் மயிலாடுதுறை தொடர்வண்டி சந்திப்பின் மேம்பாலத்துடன் எங்கள் பயணம் முடிந்திருக்கும்.

நாங்கள் வழக்கமாக பெட்ரோல் போடும் பங்க் இருக்கும் திசை, சென்றுகொண்டிருக்கும் சாலையின் போக்குவரத்து நெரிசல், முன்னே செல்லும் வாகனத்தின் பின்னே அமர்ந்திருக்கும் அழகிய பெண், சாலையில் எதிர்படும் "அறுவை" அன்பர்கள்... இப்படி யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் எங்கள் பயணத்தின் திசையை தீர்மானிக்கலாம்! ஏனெனில் எங்களின் விருப்பம் ஒரு இலக்கை அடைவதன்று. just பயணிப்பது!

இப்படித்தான் ஒருமுறை, கும்பகோணம் சாலையில் போகலாம் என கிளம்பினோம். மேம்பாலத்தை தாண்டியதும் சித்தர்காடு என்னும் கிராமத்தைல் "டென்ட் கொட்டகை" திரையரங்கை பார்த்தோம். மாலை மற்றும் இரவு காட்சிகள் மட்டுமே திரையிடப்படுகிற அந்த திரையரங்கில், ஏதோ ஒரு பழைய படம் ஓடிக்கொண்டிருந்தது. பால்யங்களில் எங்கள் கிராமத்து திரையரங்கில் படம் பார்த்த உணர்வுகளை மீட்டெடுக்க, என்ன படம் என்றுகூட யோசிக்காமல் உள்ளே புகுந்துவிட்டோம். பெஞ்ச் டிக்கெட்! மண் தரையில் அமைக்கப்பட்ட பெஞ்சுகள், ஆண்-பெண் தடுப்புச்சுவர், பல வேட்டிகளை ஒன்றாக இணைத்து தைத்தது போன்ற திரை, கதை நிகழும் களத்திலேயே அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது போல் எல்லாவற்றையும் மறந்து ரசிக்கும் கிராமத்து மக்கள், கடலை மிட்டாய், கலர் சோடா என களைகட்டும் இடைவேளை... இப்படி எதுவும் மாறாத திரையரங்கு எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது. சின்னச்சின்ன விஷயங்களைக்கூட கவனித்து, 'இது கூட மாறல பார்டா...!' என அதிசயித்தோம்.

இலக்குகளற்ற எங்கள் பயணங்களில் எதிர்பார்ப்புகளே இல்லை. எதிர்பார்ப்புகள் இல்லாததால் எங்கள் பயணங்கள் ஏமாற்றங்களைச் சந்தித்ததே இல்லை. மாறாக, எங்களுக்கு கிடைத்த சின்னச்சின்ன சந்தோஷங்கள் கூட எதிர்பாராதவையாக அமைந்ததால் அவற்றின் சுவை இருமடங்காயிற்று!

தங்களைவிட மென்மையானவற்றை விலக்கியும், வலிமையானவற்றிற்கு வளைந்துகொடுத்தும், தன்னிச்சையாய் பாதையமைத்துச்செல்லும் நதிகள் போன்றவை எங்களின் இத்தகைய பயணங்கள். கடலினை அடையவேண்டும் என்கிற இலக்குடன் நதிகள் பயணிப்பதாய் நான் உணரவில்லை. தன் பாதையில் சட்டென எதிர்ப்படுகின்ற கடலுடன் கறைந்துபோவதாகவே அறிகிறேன். இச்செயல் நதிகளின் வெற்றியோ அல்லது தோல்வியோ அன்று. ஒரு அனுபவம். அவ்வளவே.

இத்தகைய பயணங்களின்போதான எங்களின் மனநிலை, வரையறைக்குட்படாத உன்னத நிலையிலிருக்கும். இவற்றையெல்லாம் இவனிடம் சொல்லவேண்டாமென மனதிற்குள் தணிக்கை செய்துவைத்த விஷயங்களைக்கூட, தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளத்தூண்டும். எண்ணற்ற வேஷங்களுக்கிடயே மறைந்துகிடக்கும் 'உண்மையான எங்களை' மீட்டெடுக்கும் திறன் வாய்ந்தவை இப்பயணங்கள். ஒவ்வொரு பயணமும், சின்னதாய் ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட்ட திருப்தி தரும். இப்படி இருத்தல்தான் உயிர்களின் இயல்போ என்று திகைத்துப்போவோம். நமது அன்றாட வாழ்க்கை நம்மை இயல்பிலிருந்து கண்காணாத தொலைவிற்கு அழைத்துச்சென்றுவிட்டதாய் அயர்ந்துபோவோம். இலக்குகள் நிரைந்த நம் வாழ்வு, நமக்கேயான நம் நாட்களின் பெரும்பாண்மையை, நம் கண்ணெதிறே கொள்ளையிட்டுப்போகும் சோகம் உணர்வோம்.

என்ன உணர்ந்து என்ன? எல்லாம் முடிந்து சென்னை செல்லும் பேருந்து ஏறி இருக்கையில் சாய்ந்ததும், எனது நாளைய இலக்குகளை மனதிற்குள் பட்டியலிட்டபடி, மீண்டும் தொலைந்துபோய்க்கொண்டிருப்பேன் 'நான்'!
Read More