என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

28 June 2007

கூர்க் - இயற்கையின் கொண்டாட்டம்!

ல்லா வேலைகளையும் தூக்கிப்போட்டுவிட்டு ஒரு இரண்டு நாளைக்காவது எங்காவது போய் எந்த கமிட்மென்ட்டும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. இப்படியே யோசித்துக்கொண்டிருந்த சில நண்பர்களையும் அழைத்துக்கொண்டு சமீபத்தில் கர்னாடக மாநிலம், கூர்க்(coorg) சென்றுவந்தேன்.

பொதுவாக கூர்க் போகவேண்டுமென்றால் அங்குள்ள 'மடிகேரி' என்ற ஊருக்கு தான் வழிகாட்டுவார்கள் போலிருக்கிறது. இந்த மடிகேரியைச் சுற்றித்தான் கூர்கின் பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. ஆனால் நாங்கள் யாரையும் எதுவும் விசாரிக்க நேரமில்லாமல் இணையத்தில் கூர்க் பற்றி தேடினோம். பல நல்ல, பெரிய தங்கும் விடுதிகள் மடிகேரியில் தான் இருந்தன. ஒரு இணைய பக்கத்தில் 'home stay' வகையிலான தங்குமிடங்கள் பற்றி காணக்கிடைத்தது. வழக்கமான ஹோட்டல்களைத் தவிர்த்துவிட்டு இப்படி வித்தியாசமாய்த் தங்கலாம் என்ற ஆர்வம் எழுந்ததால் ஏதாவது ஒரு 'home stay'-விலேயே தங்கலாம் என்று முடிவெடுத்துவிட்டோம். அதையும் இணையத்திலேயே தேடி, புகைப்படங்கள் எல்லாம் பார்த்து 'நரிகடி ஹோம் ஸ்டே' என்ற இடத்தைத் தேர்வுசெய்தோம். உடனே தொலைபேசி, முன்பதிவும் செய்துவிட்டோம்.

ஆனால் பெங்களூர் சென்று, அங்கிருந்து கூர்க் நோக்கிப் பயணமாகும்போதுதான் தெரிந்தது, நாங்கள் தங்குவதற்குத் தேர்வுசெய்த இடம் - குட்டா டவுன் - கூர்கின் இன்னொரு எல்லையில்(மடிகேரியிலிருந்து வெகுதொலைவில்) இருக்கிறதென்று. எல்லா இடங்களையும் பார்க்கவேண்டுமென்றால் ரொம்ப அலைய வேண்டியிருக்கும் எனத் தெரிந்தது. ஆனாலும் நாங்கள் தங்கும் இடத்திற்கு வெகு அருகில் 'இருப்பு' என்கிற அருவி இருக்கிறதென்ற தகவல் மட்டும் ஆறுதலாய் இருந்தது.

பெங்களூர்-மைசூர் சாலையில் மைசூருக்குச் சற்று முன் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் வலதுபுறம் திருப்பி, ஹுன்சூர் அடைந்தோம். அங்கிருந்து மடிகேரி செல்லவும் குட்டா டவுன் செல்லவும் வேறு வேறு வழிகள். குட்டா டவுன் செல்லும் வழியில் 'நாஹ்ரஹோலே'-வில் ஒரு தேசிய பூங்கா இருக்கிறது. நாங்கள் அதையெல்லம் தவிர்த்துவிட்டு நேராக குட்டா டவுன் சென்றுவிட்டோம்.

ஹுன்சூர் தாண்டி கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஏதோ புதிய உலகத்திற்குள் வந்த மாதிரி அடர்ந்த காடுகள் ஊடாகவே பயணம். அதற்கப்புறம் வெறும் காடும் மலைகளும் தான்! அங்கங்கே இயற்கையை இம்சிக்கத்தெரியாத சின்னச்சின்ன கிராமங்கள். வழி நெடுக பல இடங்களில் மான்கள் கூட்டம் கூட்டமாக மேய்ந்துகொண்டிருக்கின்றன. எத்தேச்சையாக மிக நல்லதொரு இடத்தைத் தேர்வுசெய்துவிட்டதாகவே எனக்குத் தோன்றியது. இப்படி ஒரு இடத்தில் ஒரு நாளாவது தங்கவேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆசை!

குட்டா டவுன் கொஞ்சம் பெரிய கிராமமாகத் தெரிந்தது. அதன் ஒரு எல்லையில்தான் நங்கள் முன்பதிவு செய்திருந்த 'நரிகடி ஹோம் ஸ்டே'. இம்மாதிரி 'ஹோம் ஸ்டே'-க்கள் அங்கு நிறைய இருக்கின்றன. பெரும்பாலும் இவை அனைத்திற்கும் இணையதளங்கள் இருக்கின்றன. இணையதளம் இல்லாத விடுதிகளில் தங்குதல் பாதுகாப்பானதில்லை என்கிறார்கள். இவை அனைத்துமே முற்றிலும் இயற்கை சூழவே அமைந்திருக்கின்றன. ஒரு விடுதியிலிருந்து பார்த்தால் இன்னொன்று தெரிவதில்லை. மலைகளுக்கும் காடுகளுக்கும் இடையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இவை சிதறிக்கிடக்கின்றன. நரிகடி ஹோம் ஸ்டே மிக அழகானதொரு நில அமைப்பில் இருந்தது. எதிரில் பசுமை படர்ந்த மலைகள்.

விடுதியில் நல்ல வரவேற்பு. உரிமையாளர் தன் மனைவி, மகளுடன் அங்கேயே வசிக்கிறார். விடுதிக்கு அருகிலிருக்கும் மலை வரை அவர்களின் காஃபி எஸ்டேட். டிசம்பர், ஜனவரியில் சீசனாம். அவர்கள் தங்கும் பகுதி தவிர்த்து இரண்டு பகுதிகளில் இரண்டு குடும்பங்கள் தங்கலாம். நமக்கும் சேர்த்து அவர்கள் வீட்டிலேயே சமைத்துவிடுகிறார்கள். மின்சாரம் எல்லா நேரமும் இருப்பதில்லை. மின் இணைப்பு இல்லாத இரவுகளில் தூங்கச் செல்லும் வரை ஜெனரேட்டர் போடுகிறார்கள். நண்பர்கள் வீட்டில் சென்று தங்குவது போலத்தான் இருக்கிறது. மூன்று வேளை உணவு, வேண்டியபோது டீ, காஃபி, தங்குமிடம் எல்லவற்றுக்கும் சேர்த்து ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 1000 அல்லது 1200 ரூபாய் பெற்றுக்கொள்கிறார்கள். தரமான, ருசியான உணவு தாராளமாக தரலாம் என்று சொல்லவைக்கிறது. அசைவம் உட்பட, நம் விருப்பம் கேட்டு சமைத்துத்தருகிறார்கள்.

விடுதிக்கு வெளியே மேசை நாற்காலிகளுடன் இரண்டு சின்ன குடில்கள். மழைச்சாரல் தூவும் நேரங்களில் அங்கு அமர்ந்து தேனீர் அருந்துவதை விட வேறெதுவும் சுகம் உலகில் இருக்குமா எனத் தெரியவில்லை! குளிர்ந்த இரவில், சின்ன மின்விளக்குடன் இந்த குடிலில் அமர்ந்திருக்கையில் நம்மைச் சுற்றி இருட்டும், பூச்சிகளின் ரீங்காரமும் மட்டுமே. இப்படி காடு, மலைகளுக்கு நடுவில் சின்ன குடிலில் இரவில் அமர்ந்து உலகின் பிரம்மாண்டத்தை யோசித்தால் எப்படியெல்லாமோ இருக்கிறது!


அந்த விடுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்குள் 'இருப்பு' அருவி. அந்த அருவிநீர் செல்லும் ஓடைக்குப் பெயர் 'லட்சுமணதீர்த்தா'. இராமனும், இலட்சுமணனும் சீதையைத் தேடி காட்டில் அலைந்தபோது இந்தப் பக்கமாக வந்தார்களாம். அப்போது இராமனுக்கு தாகம் எடுக்கவே, தண்ணீர் தேடினார்களாம். அருகில் தண்ணீர் எங்கும் கிடைக்காததால் லட்சுமணன் ஒரு பாறையில் அம்பெய்தி தண்ணீர் வர வைத்தாராம். அதுதான் லட்சுமணதீர்த்தமாக இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறதாம். இராமன் சென்னைக்கு வந்து சீதையைத் தேடாமல் போய்விட்டாரே என்று ஏக்கமாக இருந்தது!

 


அரை கிலோமீட்டருக்கும் மேலாக நடந்துமட்டுமே அடையக்கூடிய மலைப்பாதையுடன் அந்த அருவி மிக அழகாகவே இருந்தது. நல்ல குறுகலான மலையிடுக்கில் அமைந்த அருவி. நம் பாதம் படமுடியாத பள்ளங்களிலெல்லாம் ஏகத்திற்கும் சேர்ந்துவிட்ட ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களும், பலிதீன் கவர்களும்தான் மிகுந்த வேதனை அளித்தது.

அருவிக்குச் சென்றுவந்ததோடு அன்று வேறு எங்கும் செல்லவில்லை. மாலையில் அந்த மலைப்பாதைகளில் உலாத்தியது நல்ல ஓய்வாக இருந்தது.

தொடரும்...

15 மறுமொழிகள்:

We The People said...

ஏங்க இப்படி வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறீங்க!

இது நல்லாவே இல்லை ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

போன மாசம் ரயில் சிநேகிதம் ஒருத்தங்க கூர்க் தான் ..அட்ரஸ் போன் நம்பர் குடுத்து காபி எஸ்டேட் இருக்கு வாங்கன்னாங்க..போலாம்ன்னு இருந்தோம் ...குழந்தைக்கு உடம்பு சரியில்ல போ முடியல.

உங்க போட்டோ எல்லாம் பார்த்தா சும்மா சூப்பரா இருக்கு..அடுத்த டிரிப் போயிடறோம்.

லக்ஷ்மி said...

அருள், இந்த வகையிலான எல்லா home stay type of hotels பற்றி தகவல் தரும் பொதுவான தளமேதும் உள்ளதா? இருந்தால் சுட்டி தரவும்.

அருள் குமார் said...

//ஏங்க இப்படி வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறீங்க!//

உங்களை அழைத்தும் நீங்கள் வராமல் போனால் நான் என்ன செய்யமுடியும்?!

முத்துலெட்சுமி,

நிச்சயம் ஒரு முறை போய்வாருங்கள். 2 நாட்களில் நாங்கள் கூர்கின் 25% கூட பார்க்கவில்லை.

காவிரி ஆற்றின் ஆரம்பமான தலைக்கவிரி கூட அங்குதான் இருக்கிறது. நேரமின்மையால் போக முடியவில்லை.

லஷ்மி,
அப்படி ஒரு தளம் பார்த்ததாக நினைவு. தேடித்தருகிறேன்.

ilavanji said...

அருள்,

இன்பச்சுற்றுலாவா?! கலக்குங்க :)

பேப்பர் பென்சிலோட போயிருப்பீங்க... க்கூர்கை கோட்டோவியத்தில் வரைஞ்சிருப்பீங்கன்னு நினைச்சேன்! விடுங்க.. அடுத்தமுறை இதையும் கலக்கிருங்க :)))

Unknown said...

அருள்,
நல்ல இடத்தைத்தான் தேர்ந்து எடுத்து உள்ளீர்கள்.

செல்லும் பாதை எப்படி? சாதாரண மலைப் பாதையா? அல்லது hair pin வளைவுகள் கொண்ட பாதையா?
செல்லத் தகுந்த காலங்கள்?

அருள் குமார் said...

//க்கூர்கை கோட்டோவியத்தில் வரைஞ்சிருப்பீங்கன்னு நினைச்சேன்! விடுங்க.. அடுத்தமுறை இதையும் கலக்கிருங்க :)))//

அடுத்தமுறை நிச்சயம் கலக்கிடலாம் இள்வஞ்சி :)

வாங்க கல்வெட்டு,

வெகு சில இடங்களில்தான் பாதை சரியில்லை. மற்றபடி நல்ல பாதை. hair pin வளைவுகள் கூட மிக குறைவு. மலையில் ஏறுவதே தெரியாத ஒரு மலைப்பயணம்!

டிசம்பர், ஜனவரியில் மிக நன்றாய் இருக்கும் என்கிறார்கள்.

ஜி said...

அட.. நான் கூட போன வாரத்துக்கு முந்தின வாரம்தான் கூர்க் போனேன். அதப் பத்தி எழுதலாம்னு நெனச்சிட்டு இருந்தேன். நீங்களே சூப்பரா கலக்கிருக்கீங்க...

நான் குடும்பம், சொந்தக்காரங்களோடு சென்றதால் இது மாதிரி சுத்திப் பாக்கல. ஆனா நிறைய இடங்கள் போனோம். திரும்ப வரும்போது நாகர்வலே காட்டு வழியாதான் வந்தோம். நல்லா இருந்தது. தலக்காவேரி போனீங்களா?? சூப்பரா இருந்தது...

We The People said...

லக்ஷ்மி,

இதோ ஒரு லிங்

http://homestaykodagu.com/

அருள் குமார் said...

லக்ஷ்மி,

http://www.coorgtourisminfo.com/homestays.asp

இந்த லின்க்-ஐயும் பாருங்கள்.

ஜெய் கொடுத்த சுட்டியில் இன்னும் அதிக தகவல்கள் இருக்கின்றன. நன்றி ஜெய்.

அருள் குமார் said...

ஜி,

நீங்கள் ரசித்தவற்றை நீங்களும் எழுதுங்களேன். இரண்டு நாட்கள் போதாததால் நான் அதிகம் பார்க்கவில்லை. தலைக்கவிரி கூட செல்லவில்லை. நீங்கள் விரிவாக எழுதுங்கள்.

லக்ஷ்மி said...

ஜெய், அருள் - சுட்டிகள் தந்து உதவியமைக்கு நன்றி.

சிவபாலன் said...

Excellent Post!

Thanks for Sharing!

யாத்ரீகன் said...

Arul,
Mazhayil Nanaiyum andha Otrai Poo, romba arputham..

btw, yennaku therinja oru gang-um coorg ponaanga.. athula oru arul iruntharnu nenaikuraen.. athu neengala yenna ? ;-)

அருள் குமார் said...

நன்றி யாத்திரீகன்!

//btw, yennaku therinja oru gang-um coorg ponaanga.. athula oru arul iruntharnu nenaikuraen.. athu neengala yenna ? ;-)//

உங்களுக்குத் தெரிஞ்ச அந்த gang பத்தி எனக்குத் தெரிஞ்சாதானே நான் இருந்த gang அதுதானான்னு என்னால சொல்லமுடியும்?!