என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

09 December 2005

தலகோனா

பொதுவாய் கோயில்களுக்கு அவற்றின் சூழலையும், வடிவமைப்பையும் ரசிக்க மட்டுமே செல்வேன். எனக்கு மிகப்பிடித்த கோயில் - கங்கை கொண்ட சோழபுரம் கோயில். காரணம் அந்த புல்வெளியில் நிரம்பியிருக்கும் ரம்மியமான அமைதி. மென்மையான புல் வெளியில் விளைந்த கற்கோபுரங்கள் தரும் அழகு. அந்த சூழல் மிக ரசிக்கத்தக்க வகையில் இருக்கும். பிரார்த்தனைகளில் நம்பிக்கை இல்லாத போதும் எனக்கு மிகப்பிடித்த இடம் கோயில்களே!

சென்னையில் இருப்பதால், நேரம் அமைந்தால் அடிக்கடி மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு செல்வேன். மனம் அமைதியற்று இருக்கும் வேலைகளில் கண்டிப்பாக அங்கு செல்வேன். முதலில் இருக்கும் விநாயகர் சன்னிதியில் திருநீறு வைத்துக்கொண்டு, அருகிலிருக்கும் மண்டபத்தில் அமர்ந்து கொள்வேன், மணிக்கணக்காய்.

இருந்தும், எத்தனையோ நண்பர்கள் அழைத்தும் செல்ல மறுக்கும் இடம் - திருப்பதி. 10-ம் வகுப்பு படிக்கும் போது கடைசியாய் சென்றதாக நினைவு. முதலில் எனக்கு அங்கு பிடிக்காத விஷயம் அங்கு நிரம்பி வழியும் கூட்டம் தான். அந்த நெரிசலும்... நசநசப்பும்... எப்போதடா கிளம்புவேம் என்றாகிவிட்டது.

சமீபத்தில் என் நண்பனுக்காக, அவன் வேண்டுதலுக்காக திருப்பதி சென்றேயாக வேண்டிய சூழல். இரண்டு மாதங்களுக்கு முன்னரே தரிசனத்திற்கு பதிவு செய்தோம். அப்போதிலிருந்தே விசாரிக்க ஆரம்பித்துவிட்டேன்- திருப்பதிக்கு அருகில் ஏதேனும் பார்க்கத்தகுந்த இடங்கள் இருக்கின்றதாவென.

கீழ் திருப்பதியில் இருந்து 60 கி. மீ. தொலைவில் "தலகோனா" என்கிற இடத்தில் ஒரு அருவி இருப்பதாயும், அங்கு "அதர்மம்", "காதல் கொண்டேன்" மற்றும் சில திரைப்படங்களின் படப்பிடிப்பு நிகழ்ந்ததாயும் அறிந்தேன். "காதல் கொண்டேன்" climax அங்குதான் எடுக்கப்பட்டதாம். அருவி என்றதும் மனம் மிக உற்சாகம் கொண்டது. நீரின் வடிவங்களில் எனக்கு மிகப்பிடித்தது அருவிதான். நண்பர்களிடம் அப்படியே அங்கும் செல்லலாம் என சம்மதம் பெற்று, அதன் படி ஒரு நாள் முன்னதாகவே சென்று "தலகோனா" நீர்வீழ்ச்சியையும் பார்ப்பதென முடிவானது.

காலை 11 மணிக்கு கீழ் திருப்பதியை அடைந்தோம். அங்கேயே ஒரு அறை எடுத்து, luggage எல்லாம் போட்டுவிட்டு, தலகோனா விற்கு வழி விசாரித்துக்கொண்டு கிளம்பினோம். கீழ் திருப்பதியிலிருந்து தலகோனா வரை - மெல்லிசை மிதந்த மகிழூந்தில்(அதாங்க... car), இயற்கையை தனிமையில் ரசிக்க மலைகளில் ஏறி இறங்கி தன்னிச்சையாய் ஓடிய சாலையில், மிதமான வேகத்தில் சென்றதே ஒரு சுகானுபவம்.

அருவியை அடைய சுமார் 2 கி. மீ. தூரம் மலைப்பாதையில் நடந்து செல்லவேண்டும் என்றார்கள். அதுதான் நாம் செய்த பாக்கியம் என்று சொல்ல வேண்டும். அந்த மலைப்பாதையில் பாதுகாப்பிற்காக செய்யப்பட்ட சில விஷயங்களைத்தவிர அனைத்தும் இயற்கை... இயற்கை... இயற்கை..!

முதலில் அடைந்த அருவியின் ஒரு பகுதி, சுற்றிலும் மலை சூழ, ஒரு குகைக்குள் சென்ற உணர்வு. ஒருபக்கம் மட்டும் தண்ணீர் விழ, பிரம்மாண்டமான மலைகளுக்கிடையில் நின்றபோது, நான் இயற்கையின் மிகச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சிறிய அங்கம் என உணர்ந்தேன். நாங்கள் சென்றிருந்தது நல்ல வெய்யில் காலத்தில் என்பதால் தண்ணீரின் அளவு குறைவாயிருந்தது. ஆனால் வருடம் 365 நாட்களும் தண்ணீர் வந்துகொண்டிருகும் என்றார்கள். சீசனில் தண்ணீரின் வீழ்ச்சி பிரம்மாண்டமாய் இருக்குமாம். அந்த சூழலை பார்த்தால் உண்மைதான் எனப்பட்டது.

அங்கிருந்த குரங்குகளை ரசிக்கவே நேரம் போதாது. உண்மையில் அவற்றை பார்க்கப்பார்க்க பொறாமையாகத்தான் இருந்தது. அவற்றுக்கு கிடைத்த வாழ்வு நமக்கு கிடைத்ததா என்றால், சத்தியமாக இல்லை என்றுதான் சொல்வேன்.

ஒரு குரங்கை மட்டும் தொடர்ந்து வெகுநேரம் கவனித்தேன். தன் ஐம்புலன்களின் நுகர்விற்கும் இயற்கை அள்ள அள்ளக் குறையாமல் கொடுத்திருப்பதை, புரிந்தோ புரியாமலோ, முழுமையாய் அனுபவிக்கிறது அது. இயற்கையைத்தாண்டி வேறொன்றிலும் தேவை இருக்கவில்லை அதற்கு. நாம் மட்டும் இவை எதையும் அனுபவிக்காமல் எதைத்தேடி ஓடுகிறோம் இப்படி? அதுவும் வாழ்க்கை முழுக்க!

நம்மில் ஒவ்வொரு தலைமுறையும் தன் அடுத்த தலைமுறையை வளமாக்கவும், அதற்கு சேர்த்து வைக்கவுமே செலவிடப்படுகின்றன. இது ஒரு முடிவே இல்லாமல் தொடர்கிறது எனில், எந்த தலைமுறை எல்லாவற்றையும் அனுபவிக்கும்? அடுத்த தலைமுறையின் தேவை என நாம் நம்புவது எதை? முதல் தலைமுறை, மூன்றாவது தலைமுறைக்கு சேர்த்து வைக்கச்சொல்லி இரண்டாவது தலைமுறையை விரட்டுகிறது! தொடர்ந்து நீளும் இந்த வாழ்வின் போக்கில், வருடத்திற்கு ஒண்றிரண்டு முறைகள் சுற்றுலா என்கிற வாய்ப்புகள் கிடைக்கின்றன - இயற்கையை உணர!

இதோ என் எதிரே அமர்ந்து என்னை வினோதமாய்ப் பார்க்கும் இந்த குரங்கிற்கு தினம் தினம் இன்பச்சுற்றுலாதான். இதன் முன்னோர்கள் இதற்கு என்ன சேர்த்து வைத்தார்கள்? இதன் பேரில் எத்தனை ஏக்கர் நிலம் இருக்கும்?! அல்லது, இந்த குரங்குதான் தன் அடுத்த தலைமுறைக்கு என்ன சேர்த்து வைத்திருக்கிறது? என்ன இல்லை இவற்றின் வாழ்வில்? இதன் தாயும் இதனை தாயன்புடன்தானே பாலூட்டி வளர்த்திருக்க வேண்டும்! தன் உணவைத் தானே தேடும் நிலை வந்ததும் தனக்கான வாழ்க்கையை தானே அமைத்துக்கொள்ள இவர்களுக்கு யார் சொல்லித்தந்தது? அதுதான் இயற்கையின் இயல்போ! நாம் தான் மிக விலகி வந்துவிட்டோமோ?!

"உன்னை பாத்தா ரொம்ப பொறாமையா இருக்கு..." என்றேன் வாய்விட்டு. ஏதோ உளறுகிறான் இவன் என்பதாய் பார்த்துவிட்டு ஓடிவிட்டது.

சும்மா உட்கார்ந்திருக்கிறது
அமைதியாய்,
புல்
தானாகவே வளர்கிறது
வசந்தம் வரும்போது.

-படித்தபோது புரிந்துகொண்ட இந்த ஸென் கவிதையின் அர்த்தத்தை இன்று உணர்ந்துகொண்டேன்.

இன்னும் சற்று மேலே சென்றால் அருவியின் இன்னோரு பகுதியை காணலாம் என்றார்கள். அங்கு செல்ல படிகள் கூட அதிகம் இல்லை. ஆனால் அப்படி ஒன்றும் கடினமாகவும் இல்லை. மிக அற்புதமான ஒரு சூழல் அங்கு. வெகு உயர்ந்த செங்குத்தான மலை முகட்டிலிருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டிருக்கிறது - வேறெந்த பாறையையும் தொடாமல்! கீழேயுள்ள படத்தில் அந்த மலை முகட்டின் ஆரம்பமும் தெரியவிலை, தண்ணீர் விழுந்து தெறிக்கும் தரையும் தெரியவில்லை! (ஆர்வ கோளாரில் அருவியை அடையும் முன்னமே நிறைய படங்கள் எடுத்துவிட்டதால் அருவியை அடைந்தபோது camera battery-யில் charge இல்லை. அதனால் பல நல்ல கோணங்களை தவறவிட நேர்ந்தது.)

குளிக்கலாம் என அருவியில் நின்றால் தண்ணீர் முழுவதும் நேராக நம்மீதுதான் விழுகிறது - மொத்த விசையுடன். ஒவ்வொரு துளியும் தனித்தனி ஊசியாய் உடலில் இறங்குவது போல, வேறெங்கும் உணர முடியாத இன்ப வேதனை அது! அதை உணர்ந்தபோது அடிவயிற்றிலிருந்து குரலெடுத்து ஓவென கத்தினோம். வாழ்வில் மறக்க முடியாத குளியல்!

எவ்வளவு நேரம் போனதென்றே தெரியவில்லை. கிளம்ப மனமில்லாமல் ஆடிக்கொண்டிருந்தோம். இருட்ட ஆரம்பித்ததை உணர்ந்து, ஏழுமலையான் மீது அதீத பக்தி கொண்ட என் நண்பன் கிளம்பலாம் என நச்சரிக்க ஆரம்பித்தான். இரவே ஒருமுறை திருமலைக்கு சென்றுவரவேண்டுமென்பது அவனது ஆசை. காலையில் தான் அங்கு செல்கிறோமே, இங்கு இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் என்றால் கேட்பதாக இல்லை. அன்று சனிக்கிழமையாம். அதுவே இரு விசேஷமாம். அதோடு அன்று பிரதோஷம் வேறாம். அதிலும் பிரம்மோற்சவ நாட்களிளேயே சிறந்த நாளான "கருட சேவை" அன்றுதானம்! இவ்வளவும் ஒன்றாக வேறென்றும் வரவே வராது என்றான். வந்ததே அவனுக்காகத்தான். சரியென்று கிளம்பிவிட்டோம்.

தலகோனாவிலேயே தங்குவதற்கு விடுதிகளும்(Govt.) இருப்பதை அறிந்து, தொலைபேசியில் அறைகள் பதிவு செய்ய யாரை அனுகுவது(மச்சி next time வரப்போ இங்கயே ஒரு நாள் தங்கனும்டா!) என்பதான தகவல்களை சேகரித்து கிளம்பினோம். ஹோட்டல் சாப்பாடு தவிர்த்து, நாம் பணம் கொடுத்து என்ன வேண்டும் என சொல்லிவிட்டால், நமக்கென மீன் முதற்கொண்டு அனைத்தும் சமைத்துத் தர ஆட்கள் இருக்கிறார்கள் இங்கே!

மீண்டும் மெல்லிசை மிதக்கும் மகிழூந்தில், அருவியில் குளித்த அசதி கண்களை அயர்த்த, கண்களை மூடியபடி அமைதியாய் பயனித்து கீழ் திருப்பதி அடைந்தோம். இரவே திருமலைக்குச் சென்று, வெங்கடாஜலபதி கருட வாகனத்தில் பவனி வருவதை தரிசித்து இரவு இரண்டு மணிக்கு கீழிறங்கி அறைக்கு வந்து சேர்ந்தோம்.

மறுநாள் காலையில் திரும்பவும் திருமலை மேலேறி, தரிசனத்திற்காய் நீண்ண்ண்ண்ண்ட வரிசையில் நின்று, அடைத்து வைத்த சந்துகளில் ஒழுங்கற்று நசுக்கிப் பிழியும் கூட்டத்தில், சில மணி நேரங்கள் காத்திருந்து, சில நொடி நேரங்களே தரிசனம் தந்த வெங்கடாஜலபதி - 'என்ன இருக்கிறதென்று இவ்வளவு கூட்டம் இங்கு' என்பதான ஆச்சர்யத்தைத் தவிர வேறெந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்னுள். ஒருவேலை எனக்குத்தான் அதை உணரும் கொடுப்பினை இல்லையோ என்னவோ!

எப்படி இருப்பினும், ஏழுமலையான் சன்னிதியில் என்னால் உணர இயலாத இறையை தலகோனா நீர்வீழ்ச்சியில் உணர்ந்துவிட்டேன்!

Read More

22 November 2005

14 October 2005

எதிர்ப்பக்கம்

யிலாடுதுறை பஸ் ஸ்டாண்ட் -

எப்போதும் போல் அவசரமும், பரபரப்பும் தொற்றிக் கொண்டிருந்தது. சுகி மாதிரி!

சுகி. அதாவது சுகிர்தா. எங்களின் (சிவா என்கிற நான், சதீஷ், இளங்கோ) இனிய தோழி. படபடப்பானவள். எதிலும் ஆர்வமானவள். எப்போதும் துறுதுறுவென்றிருப்பவள். நேற்று மாலை கல்லூரி முடிந்ததும், அவள் சொன்ன மாதிரி காத்திருந்த எங்களை நோக்கி வந்தாள். எப்போதும் போல் படபடப்பாய் அவளுக்கே உரித்தான பாணியில், இடையிடையே தனக்கு பஸ் வருகிறதா என்று திரும்பிப் பார்த்துக்கொண்டே அவசரமாய்ச் சொன்னாள்...

"நாளைக்கு மறந்துடாதீங்க... ப்ஸ்டாண்ட்ல பதிணொன்றைக்கு பஸ். கண்டக்டர் கிட்ட பூம்புகார் மேலையூர்னு கேளுங்க. ஏன்னா அதே ரூட்ல இன்னொரு மேலையூர் இருக்கு. அப்புறம்... ம்... என்னோட தம்பி புருஷோத் உங்களுக்காக மேலையூர் பஸ் ஸ்டாப்ல காத்திட்டுருப்பான். சரி சரி... பஸ் வருது எனக்கு... நான் வரேன். நாளைக்கு வந்திருங்க..." - எங்களைப் பேசவிடாமல் ஒரெ மூச்சில் சொல்லிவிட்டுச் சென்றாள்.

மயிலாடுதுறையிலிருந்து 17 கி.மீ. தொலைவில், பூம்புகாருக்கு அருகில் இருக்கிறது அவள் வீடு. தினமும் அங்கிருந்துதான் வந்து செல்கிறாள்.

இளங்கலை இரண்டாமாண்டில் ஆரம்பித்த இந்த இரண்டாண்டுகால நட்பு, பிரிவை நெருங்கிக்கொண்டிருப்பதால்...

"டேய்... அப்பா அம்மால்லாம் உங்கள பாக்கணும்னு சொன்னாங்கடா. சிவா வாவது இந்த ஊர் தான். நீங்க ரெண்டு பேரும் காலேஜ் முடிஞ்சி ஊருக்குப் போனா திரும்ப எப்ப இந்தப் பக்கம் வருவீங்கன்னே தெரியாது. சோ, நெக்ஸ்ட் வீக் நீங்க மூணு பேரும் கண்டிப்பா எங்க வீட்டுக்கு வரீங்க...." என்று போன வாரமே சொல்லியிருந்தாள்.

அதன் படி இப்போது பஸ் ஸ்டாண்டில் நாங்கள். அவள் வீட்டிற்குச் செல்லும் ஆர்வத்தில் பதிணோரு மணிக்கே வந்து காத்திருக்கிறோம்.

"ஏன்டா... மொதல் தடவயா அவங்க வீட்டுக்குப் போறோம். ஏதாச்சும் வாங்கிட்டுப் போக வேணாமா..?" - சதீஷின் கேள்வி நியாயமாய் இருந்தது.

"ஆமா சதீஷ்... நானும் யோசிக்கவே இல்ல. என்ன வாங்கலாம் சொல்லு..." என்றேன்.

"எதுனா பூ, பழம்..." என்ற இளங்கோவை அவசரமாய்த் தடுத்தான் சதீஷ்.

"ஐயோ... பூவெல்லாம் வேணாம். அதெல்லாம் பெரியவங்கதான் வாங்கிட்டு போவங்க." - அனுபவம் போதாத நிலையில் குழம்பினோம்.

"சரி விடு. ஏதச்சும் ஸ்வீட், பிஸ்கட்... இப்படி வாங்கிக்கலாம். நான் போய் வாங்கிட்டு வறேன். இங்கயே வெயிட் பண்ணுங்க..." - சொல்லிவிட்டு சற்று தூரம் சென்ற நான், மீண்டும் திரும்பி... "பஸ் வந்தா சீட் போட்டு வைங்கடா.." என்று கத்திவிட்டுச் சென்றேன்.

திரும்பி வந்தபோது சொன்ன மாதிரி சீட் போட்டு வைத்திருந்தார்கள். ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த இளங்கோவிற்கு அருகில் எனக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

"டேய் இளங்கோ...ப்ளீஸ்டா...." என கெஞ்சலாய்ப் பார்த்தேன்.

அவனும் புரிந்து கொண்டவனாய், "ஆரம்பிச்சிட்டியா... அப்படி இந்த ஜன்னலோர சீட்ல என்ன தான் இருக்கோ தெரியல..." என்று நகர்ந்து எனக்கு ஜன்னலோர சீட் கொடுத்தான்.

.......

ஸ் விட்டு இறங்கியதும், ஏதோ ஓர் அனுமானத்தில் புருஷோத்தைத் தேடினோம். இறங்கியவர்களில் வித்தியாசப்பட்டு நின்ற எங்களை எளிதில் அடையாளம் கண்டுகொண்ட புருஷோத், எங்களிடம் வந்தான்...

"ஹலோ..! நீங்கதானே சிவா, சதீஷ், இளங்கோ....?!"

"நாங்கதான்... புருஷோத் தான நீ...?" என்று புன்னகைத்ததற்கு ஆமோதித்தான்.

"வாங்க போகலாம்..." என்றவனுடன் நடந்தோம்.

சுகி சொல்லியிருக்கிறாள். இருந்தும், வேறென்ன பேசுவது எனத் தெரியாமல் கேட்டேன்...

"என்ன படிக்கற...?"

"டென்த்..."

"இன்னும் ரொம்ப தூரம் நடக்கனுமா..?" - பயணத்தில் கலைந்துபோன தலையை வாரியபடி இளங்கோ கேட்டான்.

"இல்ல பக்கத்துல தான்... அதோ... அந்த பச்சை கலர் வீடுதான். அக்கா கூட வெளில நிக்கறா பாருங்க..."

அப்போது கடந்துகொண்டிருந்த ஒரு வளைவு தாண்டி ஒரு வீட்டைக் காட்டினான்.

சுகி எங்கள் வரவை எதிர்பார்த்துப் புன்னகைத்தபடி நின்றிருந்தாள். எனக்கும் தலை வாரிக்கொள்ளவேண்டும்போல் தோன்றியது. சங்கோஜத்தால் தவிர்த்தேன். இளங்கோ மாதிரி ஏன் கேஷீவலாய் இருக்க முடியவில்லை என யோசிப்பதற்குள் வீடு சமீபித்திருந்தது.

வழக்கமான குறும்புகள் தவிர்த்து, ரொம்ப பொறுப்பாய் சுகி எங்களை வரவேற்றாள். வெளிப்புற கேட் தாண்டி, வீட்டு வாசல் வரை சிமென்ட் நடை. இரண்டு பக்கமும் அழகாய் பூச்செடிகள். அளவாய், அழகாய் கட்டமைக்கப்பட்ட வீடு. வாசலில் நின்றிருந்த அவளின் அப்பாவும் அம்மாவும் வரவேற்று உள்ளே அழைத்து உட்காரச் சொன்னார்கள். தயங்கி நுனி ச்சேரில் அமர்ந்தேன்.

"ஹேய் சிவா... இது உங்க ஹெச். ஓ. டி ரூம் இல்ல. உங்க வீடு மாதிரி தான். நல்லா உக்காரு..." - என் சங்கோஜத்தை ரசித்தாள் சுகி.

"நீங்க தான் சிவாவா..?"

"ஆமாம்பா... இதான் சிவா. சொன்னேன்ல... படம் வரையறதுல எக்ஸ்பர்ட்னு..."

அம்மாவும் அப்பாவும் என்னைப்பார்த்துச் சிரிக்க, நான் எழுந்திருப்பதா இல்லை அமர்ந்தே இருப்பதா எனக் குழம்பி, கொஞ்சம் எழுந்து கொஞ்சம் அமர்ந்து அவர்களின் சிரிப்பிற்கு வழிந்தேன்.

"இது சதீஷ்... கதை கவிதைல்லாம் நல்லா எழுதுவான். போன வருஷம் காலெஜ் மேகசின்ல காமிச்சேன்ல..."

அவனும் பதிலுக்கு வழிந்து வைத்தான். அடுத்த அறிமுகத்திற்கு தன்னை தயார் படுத்திக்கொண்டான் இளங்கோ.

"இது இளங்கோ. என்ன மாதிரி. டிராமா ஸ்கிரிப்ட் எழுதறது, நடிக்கறதுல பெரிய ஆளு..."

"ஐயோ... சுகி அளவுக்கு முடியாதுங்க. நாங்கல்லாம் காலேஜோட சரி. சுகி மாதிரி வீட்ல எல்லாம் இப்படி நடிக்கத் தெரியாது எங்களுக்கு..." என்ற இளங்கோவாவது வழியாமல் பதில் சொன்னானே என்று சந்தோஷப்பட்டேன்.

பின்பு வீட்டை சுற்றிக்காண்பித்தாள். வீடு முழுக்க சுத்தமாய் நேர்த்தியாய் இருந்தது. முன்பு ஒருமுறை, மறுநாள் வரப்போகும் நண்பனுக்காக, என் அறையை அவசர அவசரமாக சுத்தம் செய்தது நினைவுக்கு வந்தது. இவளும் நேற்றுதான் சுத்தப்படுத்தியிருப்பாளோ... 'ச்சே என் புத்தி எங்கே போகும்...'- மனசுக்குள் தலையில் அடித்துக்கொண்டேன்.

மறுபடி ஹாலுக்கு வந்தமர்ந்தோம். இதற்குள் எங்கள் சங்கோஜங்கள் விலகியிருக்க, காலேஜில் அவளுடன் பேசுவது மாதிரி வெகு இயல்பாய்ப் பேச ஆரம்பித்திருந்தோம். அவளின் தம்பி எங்களை விட அருமையாய் அரட்டை அடித்தான். அரட்டைக்கு நடுவே அவள் அம்மா கொண்டுவந்த காஃபி இதமாய் இருந்தது. அனைத்திற்கும் மேலாக அவளின் அப்பா அம்மா எங்களிடம் நட்பாகப் பழகிய விதம் எங்களை மிக இயல்பாய் இருக்கச் செய்தது.

பேச்சின் நடுவே எழுந்து சென்றவள், சின்னதும் பெரிதுமாய் கைக்கடங்காமல் ஆல்பங்களை அள்ளிவந்தாள். ஆளுக்கொன்றாய்ப் பிடுங்க எத்தனித்த எங்களைத் தவிர்த்து...

"இருங்க இருங்க... எல்லாரும் சேந்து பாக்கலாம். என்னால தனித்தனியா ஒவ்வொருத்தருக்கும் கமென்ட்ரி கொடுக்க முடியாது... ஓக்கேவா..." என்றபடி ஒவ்வொரு ஃபோட்டோவுக்கும் சின்னச்சின்ன விஷயங்களைக் கூட நினைவு படுத்தி விளக்கம் கொடுத்தாள். ஃபோட்டோவில் சின்ன வயது சுகி... கைக்குழந்தையாய்க் கட்டிலில், கொஞ்சம் வளர்ந்து அம்மா அப்பாவுடன், school uniform-ல், குட்டித்தம்பியை அனைத்தபடி, தனியாய்... எல்லாவற்றிலும் துறு துறுவென்று. ஏகப்பட்ட கிண்டல் கேலிகளுடன் பார்த்து முடித்தோம். ஏதோ ஒரு school day drama-வில் கட்டபொம்மன் வேஷம் போட்ட சுகியை மட்டும் மறக்கவே முடியவில்லை. மீண்டும் மீண்டும் திருப்பிப் பார்த்து வயிறு வலிக்க சிரித்தோம். "வசனம் நல்லா பேசறான்னு இவளுக்கு கட்டபொம்மன் வேஷம் போட்டுட்டாங்க..." என சொல்லிச்சிரித்தார் அவளின் அப்பா. ஒருமாதிரி ஆகிவிட்டது சுகிக்கு.

"போங்கப்பா... நீங்களும் அவங்களோட சேந்துகிட்டு..." - சிணுங்களுடன் கோபித்துக்கொண்ட சுகியை,

"ச்சும்மா டா... உன்ன கிண்டல் பண்ணுவனா..." என்று அனைத்துக்கொண்டு சமாதானப்படுத்தினார். எங்களுக்குப் பொறாமையாகவும் அவளுக்குப் பெருமையாகவும் இருந்தது.

இதற்குள் சுகியின் அம்மா சாப்பிட அழைக்க, எழுந்து சென்று கை கழுவினேன்.

"என்னடா சிவா... இன்னிக்கு மட்டும் சாப்பிடறதுக்கு முன்னடியே கை கழுவற...?" என்ற இளங்கோவின் கமென்ட்டுக்கு அனைவரும் சிரிக்க,

"டேய்... வேண்டாம். நேரம் பாத்து வாறாத... நம்ம மேட்டர் எல்லாம் நமக்குள்ளயே இருக்கட்டும்..." என்றேன் பொய்க்கோபத்துடன். ஆளாளுக்கு கிண்டல் செய்தபடி ஒரே சத்தமாய் சாப்பிட ஆரம்பித்தோம்.

"வேணுங்கறத கேட்டு வாங்கி சாப்பிடுங்க... சாப்பிடறதுல கூச்சப்படக்கூடாது..." என்ற அம்மாவிடம்,

"இல்லம்மா.... அதெல்லாம் ஏற்கனவே சுகிய பாத்து கத்துகிட்டோம்..." - என்னை முறைத்த சுகியை அலட்சித்து "இன்னும் கொஞ்சம் சாம்பார் விடுங்கம்மா..." என்றேன்.

அவர் சிரித்துக்கொண்டே சாம்பார் ஊற்ற...

"ஐயோ...காயெல்லாம் வேண்டாம்மா... போடாதிங்க...."

"ஏன்... சாப்பிடமாட்டியா...?"

"இல்லம்மா.. பிடிக்காது..."

"சிவாவே ஒரு கொத்தவரங்காதானே... அதான் வேண்டாமாம் அவனுக்கு..."

"நீ கூடத்தான் குண்டு பூசணிக்கா.... இருந்தும் சாப்பிடலியா என்ன...?"

"சரி சரி... சண்ட போடாம சாப்பிடுங்க... சதீஷ், உனக்கு என்னப்பா வேணும்...?"

"கொஞ்சம் ரசம் விடுங்கம்மா..."

"சுகி, உனக்கு...?"

"எனக்கு போதும்மா..."

"சரி சரி... நாங்கள்லாம் இருக்கோம்னு வெக்கப்படாத சுகி... வழக்கம் போல சாப்பிடு..."

"இதுக்கு மேல பேசின உதை வாங்குவ... ஒழுங்கா சாப்பிடு..."

"சரிங்..." என்றேன் பவ்யமாய்.

ஒரு வழியாய் சப்பாட்டுப் படலம் முடிந்து, மீண்டும் அரட்டை ஆரம்பித்தது. கலை, இலக்கியாம், சினிமா என்று ஒரு ரவுண்ட் வந்தோம். பின்பு நேரமாகிவிட்டதால் கிளம்ப மனமின்றி கிளம்பினோம்.

"திரும்ப எப்படா வருவிங்க..." என ஏக்கமாய்க் கேட்ட சுகிக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. இவ்வளவு நாட்களாய் இங்கு வராமல் போய்விட்டோமே என்ற ஏக்கம் அனைவரின் மனதிலும் இருந்தது. வாசலுக்கு வந்தும் கொஞ்ச நேரம் நின்றபடி பேசிக்கொண்டிருந்தோம். அவர்கள் வீட்டு வாசலில் அதைப்பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்தது.

"ஏய் லூசு... என்ன தானா சிரிக்கிற..." என்றாள் சுகி.

"இல்ல... இத பாத்ததும் உன்னோட கட்டபொம்மன் வேஷம் தான் தோணுது..." என்றேன் திருஷ்டி பொம்மையைக் காட்டி. அவள் அப்பா உட்பட, எல்லோருக்கும் மீண்டும் அவள் ஃபோட்டோ நினைவுக்கு வர, அடக்க முடியாமல் சிரித்தோம்.

.......

மீண்டும் மயிலாடுதுறை வந்து, சதீஷையும் இளங்கோவையும் ஹாஸ்டலுக்கு அணுப்பிவிட்டு, தனித்து நடந்தேன். திடீரென்று தனித்து விடப்பட்ட மாதிரி வெறுமையாய் இருந்தது. மனம் சுகி வீட்டையே சுற்றிச் சுற்றி வந்தது.

நம் சமுதாயம் ரொம்பவே மாறிக்கொண்டிருக்கிறது. தன் பெண்ணின் ஆண் நண்பர்களை அங்கீகரிக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாய்ப் பட்டது. சுகியின் பெற்றோர்களை நினைக்கயில் மிகப்பெருமையாய் இருந்தது. என்னுடைய தலைமுறையில் இந்த நிலை இன்னும் வளர்ந்திருக்கும். அது இன்னும் ஆரோக்யமான சமுதாயமாகவும் இருக்கும் எனத் தோன்றியது. வீடு நெருங்கியதும் சிந்தனை ஓட்டம் தடைப்பட்டது. வீட்டிற்குள் நுழைந்ததும்...

"எங்கடா... லீவு நாளும் அதுவுமா காலைலேர்ந்து ஆளையே காணும்..?" என்றார் அப்பா.

"சுகிர்தா வீட்டுக்குப் போயிருந்தேம்ப்பா... அம்மா சொல்லல...?!"

"யார்றா அது சுகிர்தா...?!" - அப்பா புருவம் சுருக்கினார்.

"காலேஜ்ல என்னோட friend-பா.." என்றேன்.

"இதென்னடா இது புதுப் பழக்கம்... பொம்பள ஸ்னேகம் வச்சிகிட்டு நாள் பூரா போய் கூத்தடிசிட்டு வர்றது... உன்ன கவனிக்காம விட்டது தப்பாப் போச்சி. எல்லாம் அவ கொடுக்கற இடம்... ஏய் வாடி இங்க..." என்று ஏகத்துக்கும் கத்த ஆரம்பித்துவிட்ட அப்பாவைப்பர்த்து விக்கித்துப்போய் நின்றேன்!

.......

பின் குறிப்பு: நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய கதை. எனவே பல விஷயங்கள் பழைமையாக இருக்கலாம். adjust பண்ணிக்கோங்க :)
Read More

26 July 2005

தோழியின் நினைவாய்...

என் ப்ரிய தோழியின் பிறந்த நாள் பரிசாய் வரைந்தது...(2001)

click me to view large
மகாபலிபுரம் கடற்கரைக் கோயில் - எனக்கு மிகப்பிடித்த வடிவங்களில் ஒன்று.
Read More

29 June 2005

பூங்கோதை

பூங்கோதையின் மதிய நேரத்துக் குட்டித்தூக்கம் கலைந்தபோது மணி நாலேகால். ஐந்து மணிக்குத் தண்ணீர் பிடிக்கச் செல்லவேண்டுமென மூளை அனிச்சையாய் உணர்த்த, உடைதிருத்தி எழுந்தாள். பின்கட்டுக்குச் சென்று குவளையில் இருந்த நீர் எடுத்து முகத்தில் அடித்து அலம்பியபோது உடம்பு சிலிர்த்தது. இது பூங்கோதைக்கு ரொம்பப் பிடித்த விஷயம். நன்றாய் தூங்கியெழுந்து குளிர்ந்த நீரில் முகம் கழுவியவுடன், முகத்தில் ஒரு தெளிவு படரும். உலகத்திற்கு புதிதாய் வந்தமாதிரி தோன்றும். அதை அவள் அனுபவித்து ரசிப்பாள்.

பூங்கோதை அழகு. கண்களை உறுத்தாத இதமான அழகு. பிறை நெற்றியும், பெறிய விழிகளும், அளவாய் சதைபோட்ட கன்னங்களும், லிப்ஸ்டிக் இல்லாமல் சிவந்திருந்த உதடுகளும் அவளுக்கு இயல்பாய் ஓர் குடும்பப்பாங்கான முகத்தைக் கொடுத்திருந்தன.

பூத்துண்டால் முகம் துடைத்து, கண்ணாடி முன் வந்து நின்றாள். ஆளுயர கண்ணாடி. அப்பாவிடம் அடம் பிடித்து வாங்கியது. வீட்டில் யாரும் இல்லாதபோது அந்தக் கண்ணாடிதான் அவளுக்குத் தோழி. நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்காய் அதன் முன் நின்றிருக்கிறாள். அதனுடன் நிறைய பேசியிருக்கிறாள், பாடியிருக்கிறாள். எப்போதோ படத்தில் பார்த்த ஸ்டெப்ஸை நினைவுபடுத்தி ஆடிப்பார்த்திருக்கிறாள்.

தூங்கியெழுந்ததில் கன்னம் இன்னும் உப்பியிருப்பதாய் உணர்ந்தாள். கலைந்திருந்த தலை பிரித்து மீண்டும் வாரத் தொடங்கினாள். எட்டாம் வகுப்போடு படிப்பு நிறுத்தியதிலிருந்து வெளியில் கிளம்புவது வெகுவாய்க் குறைந்திருந்தது. அவ்வப்பொழுது உறவினர் வீட்டு விசேஷங்கள், எப்போதாவது தோழிகளுடன் உள்ளூர் டாக்கீஸில் சினிமா - அவ்வளவுதான். அவளுக்குப் பிடித்தமான, அவள் நிறத்திற்கு எடுப்பான மாம்பழநிற மற்றும் கருநீல நிறப் பாவாடை தாவணிகள் மற்ற நாட்களில் எழுப்ப ஆளின்றி அலமாரியில் தூங்கிக் கொண்டிருக்கும்.

பின்னி முடித்த கூந்தலை முன்புறம் போட்டு அழகு பார்த்தாள். பின்னல் திருப்தியாய் இருந்தது. முகத்தை மறுபடி அழுந்தத் துடைத்து பவுடர் போட்டு சீராய் தடவினாள். கரிய விழிகள் விரித்து மையெழுதி, கண்களை படபடக்கவிட்டு கண்ணாடி பார்த்தள். ஸ்டிக்கர் பொட்டில் அவளுக்கு என்றும் நம்பிக்கையில்லை. ஒற்றை விரலில் குங்குமம் தொட்டு, மற்ற நான்கு விரல்களில் முகம் தாங்கி, புருவ மத்தியில் அழுந்தப் பொட்டிட்டாள்.

ஜாக்கெட்டிற்குப் பொருத்தமாய், மடித்து வைத்திருந்த தாவணி எடுத்து மாற்றிக்கொண்டாள். பக்கவாட்டிலும், நேராயும் கண்ணாடி முன் நின்றுபார்த்து முந்தானையை சரிசெய்தாள். கண்ணாடியை நெறுங்கி, ஒரு சின்ன முடிக்கற்றையை பிரித்தெடுத்து நெற்றியில் படரவிட்டு, உதடு பிரியாமல் புன்னகைத்துப் பார்த்தள். வெட்கத்தில் முகம் சிவந்து இன்னும் சிரித்து "ச்சீ. போ..." எனச் செல்லமாய் கண்ணாடி பார்த்து சிணுங்கியபோது மணி ஐந்து.

அடுக்களை பக்கம் பார்த்து "அம்மா...தண்ணிக்கு போய்ட்டு வரேன்..." என்று குரல் கொடுத்து, பித்தளை குடம் எடுத்து இடுப்பில் சாய்த்தாள். பளபளத்த அந்தப் பித்தளைக் குடம், அவளின் இடுப்பிற்கு அளவெடுத்து வார்த்ததுபோல் அம்சமாய் பொருந்தியது!

தெருவில் இறங்கி நடந்தபோது அலுப்பாய் உணர்ந்தாள். இரண்டு தெரு தள்ளி ஊருக்குப் பொதுவான தண்ணீர் குழாய். தூரம் பெரிய விஷயமில்லை. இவள் வீட்டுத் தெருவின் கடைசி வீட்டு ஷண்முகம், தண்ணீர் குழாய்க்கு எதிர் டீக்கடையில் வேலையற்று அரட்டையடிக்கும் இவள் வயசு இளைஞர்கள், இவளைப்போல் தண்ணீர் எடுக்க வரும் பக்கத்துத் தெரு விஜயா... இவர்கள்தான் இவள் அலுப்பிற்குக் காரணம்.

விஜயா இவளைப்போல் அழகில்லை. மாநிறத்திற்கும் கொஞ்சம் கம்மி. இவளைப்போள் எடுப்பான உடல் வாகுமில்லை. பூங்கோதையுடன் நட்பாய் பழகினாலும் இவளின் அழகு பார்த்து வெளிப்படையாகவே பொறாமைப்படுவாள். இவள் கவனிக்காதபோது இவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பாள். இவையெல்லாம் பூங்கோதைக்குப் பிடிப்பதில்லை. ஒரு முறை, "எப்படி பூங்கோதை உடம்ப இப்படி சிக்குன்னு வச்சிக்கிற..." என்று விஜயா கேட்டதற்கு, என்ன இவள் இப்படியெல்லாம் அசிங்கமாய் கேட்கிறாள் என முகம் சுளித்தாள். தன் அழகு கண்டு பொறாமைப்பட்டு தனக்கு எதாவது செய்துவிடுவாளோ என பயந்ததும் உண்டு!

இப்படித்தான் கோடி வீட்டு ஷண்முகம். தினம் தினம் இவள் தண்ணீர் எடுக்கச் செல்லும்போது, தன் வீட்டு ஜன்னல் திறந்து உட்கார்ந்திருப்பான். தினமும் சூரியன் உதிக்கத் தவறினாலும் தவறலாம், இவன் மாலை ஐந்து மணிக்கு ஜன்னல் கம்பிகளுக்குப்பின் ஆஜர் ஆவது தவறாது. பூங்கோதைக்கு அவனை சுத்தமாய்ப் பிடிப்பதில்லை. அவனின் பார்வை அத்தனை மட்டம். சில சமயம் இவளின் பார்வை பட்டால் அநாவசியமாய் வழிவான். இவள் முகம் சுலித்து திரும்பிக் கொள்வாள்.

அப்புறம் டீக்கடை அரட்டை கும்பல். ஊர் பொதுக்குழாய் நேர் எதிரே. அந்த நான்கைந்து பேரும் சின்ன வயதில், அந்த ஊர் பள்ளிக்கூடத்தில் இவளுக்குப் பக்கத்திலமர்ந்து பாடம் படித்தவர்கள்தான். நம்ம ஊர் பண்பாடு இந்த சில வருடங்களில் இவளுடன் ஓர் பெரிய விலகலை அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.

இவள் தண்ணீர் எடுக்க வருகையில் தான் "தண்ணி கொடம் எடுத்து... தங்கம் நீ நடந்துவந்தா..." என்று ஆடலுடன் பாடிக்காட்டுவார்கள். இன்னும் எத்தனையோ வகையான கிண்டல்கள். இவளுக்கு கோபத்தில் முகம் சிவக்கும். சிலசமயம், அப்பாவிடம் சொல்லி இவர்களை அதட்டலாமா என்றுகூட யோசிப்பாள்.

இன்று ஷண்முகம் வீட்டைக் கடக்கையில், அதிசயமாய் ஜன்னல் சாத்தியிருந்தது. கழுதை எங்காவது ஊர் சுற்றப் போயிருக்கும் என நினைத்தவளாய் நிம்மதியுடன் நடந்தாள்.

விஜயா வீட்டில் அவளுடைய அம்மா தலைவாரியபடி வாசலில் அமர்ந்திருந்தாள். "என்னக்கா... விஜயா தண்ணிக்கு வரலியா..?" - கடமைக்கு விசாரித்தாள் பூங்கோதை. "அவ அவங்க அத்தை வீட்டுக்கு போயிருக்கா, நாளன்னிக்குதான் வருவா..." என்றாள் விஜயாவின் அம்மா.

இவளுக்கு இன்னும் நிம்மதி. தண்ணீருக்கு வரிசையில் இடம்பிடித்து குடம் வைத்தபோதுதான் கவனித்தாள். டீக்கடையில் அந்த நான்கைந்து பேர் இல்லை. தண்ணீர் பிடித்துத் திரும்பினாள். வரும்போதும் ஷண்முகம் வீட்டு ஜன்னல் சாத்தியிருந்தது.

இன்று அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. வக்கிரப்பார்வை ஷண்முகம், பொறாமை பிடித்த விஜயா, கிண்டலடிக்கிற டீக்கடை கும்பல் - யாரும் இல்லை. சந்தோஷித்த மனதுடன் வீட்டுப் படியேறினாள். ஆளுயர நிலைக்கண்ணாடி கடக்கையில், ஏனோ... இன்றைய முக்கால் மணி நேர அலங்காரமெல்லாம் வீணோ என அவளுக்குத் தோன்றிற்று.
Read More

அறிமுகம்

கைகுலுக்கி
பெயர் சொல்லி
புதிதாய் அறிமுகமாகிற
எவரின் பெயரும்
உடனே நினைவில்
பதிவதில்லை எனக்கு.

சந்திப்பின் முடிவில்
மன்னிக்கச் சொல்லி
மறுபடி பெயர் கேட்டு
மனதில் பதிப்பேன்.

நீ எனக்கு
அறிமுகமானதும்
அப்படித்தன்.

அதன்பின்
புதுப்படம் பார்த்து - அதை
பிய்த்து அலசிய பொழுதுகள்;

புது நாவல் படித்து
அதற்கு
புது முடிவு தேடிய பொழுதுகள்;

சமூகச் சமுத்திரத்தை
சர்ச்சை வலை போட்டு
சலித்தெடுத்த பொழுதுகள்;

நான் நினைத்ததை நீயும்
நீ நினைத்ததை நானும்

பேச்சிலும்
பார்வையிலும்
அசைவிலும்

உணர்ந்த
உணர்த்திய பொழுதுகள்...

இப்படி
நம் எண்ணங்களின்
அலைவரிசை
ஒன்றெனச்சொல்லிய
அற்புத பொழுதுகளில்

நீ
என்னுள் நுழைந்த
பொழுது எது?
Read More

24 June 2005

மனசுக்குள்...

நித்தம் நிழலாய்
அவனின் தொடரல்

காவியமாய் நினைத்தெழுதும்
கிறுக்குத்தனமான கவிதைகள்

பண்டிகைகளுக்காய் காத்திருந்து தரும்
வாழ்த்து அட்டைகள்

பிறந்தநாளன்று வரும்
பிடிக்காத பரிசுப்பொருள்

இவையனைத்தும் அவனில்
எனக்கு எரிச்சலூட்டினாலும்

ஒருவனை கவர்ந்துவிட்ட
கர்வம் தரும்
மனசுக்குள் ஒரு
மெளனமான பூரிப்பு...!

Read More

06 May 2005

மங்கையர்க்கரசி

உறவுகள் எல்லாம்
முறை சொல்லியே
அழைக்கும் அம்மாவை

பெயர் சொல்லியழைக்க
அலுவலக நண்பருமில்லை
அடுக்களை தாண்டாத அவளுக்கு

அப்பா பெயருக்கு கடிதமெழுதி
அம்மாவை விசாரிக்கும்
பிறந்தவீடு தவிர
கடிதம் எழுதவும்
ஆளில்லை அவளுக்கு

அசைகின்ற சொத்துக்கள்
அம்மாவை அலங்கரித்தாலும்
பெயர்சொல்லும் அசையாத சொத்துக்கள்
அப்பாவின் பெயர் தாங்கியே

அவசர மளிகைக்கு
பாத்திரம் நீட்டும்
அடுத்தாத்து மாமியும்
'குமார் அம்மா' என
என் பெயர் இழுப்பாள்
அம்மாவை அழைக்க

திடீரென யாரேனும் கேட்டால்
சற்று யோசித்துதான்
சொல்லவேண்டியிருக்கிறது
பல வருடங்களாய்
பயன்படுத்தப்படாத
அம்மாவின் பெயரை
Read More