என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

12 December 2006

எங்க கிராமத்துல... 1

ந்த நிழற்படங்களெல்லாம் எங்கள் கிராமத்தில் நான் எடுத்தது. எங்கள் ஊர்: சோழன்குடிக்காடு கிராமம், பெரம்பலூர் மாவட்டம். படங்களைப் பெரிதாகக் காண, படங்களின் மீது க்ளிக் செய்யுங்கள்.

ஊர்க்காவலன்

ஊர்க்காவலர்கள்

கழிநி தொட்டி மற்றும் சிதிலமடைந்த எங்கள் சேறுபட்டறை

சேறுபட்டறையின் வேறு சில கோணங்கள்

என் அக்கா மகள்

சமீபத்தில் இந்தப் பூக்களையும் எங்கள் ஊரில் பயிரிட ஆரம்பித்திருக்கிறார்கள். எரியும் தழல் போன்ற இதன் அமைப்பு ரொம்பவும் பிடித்துவிட்டது.

மேலே குறிப்பிட்ட சேறுபட்டறை என்பது தானியக் கிடங்கு. இரண்டு தலைமுறைகளுக்கு முன் செழித்திருந்த எங்கள் குடும்பத்தின் விவசாயமும் இன்று கவனிக்க ஆளில்லாமல் இப்படித்தான் இருக்கிறது :(

இந்தக் கிடங்கின் நடுவில் ஒரு வாசல் இருக்கும்(படத்தில் இருப்பது). அதனுள்ளே சென்று மேலே ஏரி, ஒரு பக்கத்துக்கு ஆறு என்று இரு பக்கமும் இருக்கும் பன்னிரண்டு அறைகளுக்கும் செல்லலாம். ஒவ்வொரு அறையின் மேலேயும் ஒரு ஆள் இறங்குமளவிற்கு சின்ன வாசல் இருக்கும். இந்த அறைகள், தானியங்கள் கெட்டுப் போகாவண்ணம் பாதுகாப்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும்.

எங்கள் பெரிய தாத்தா சிரத்தையெடுத்து கட்டிய இவற்றின் இன்றைய இந்த நிலமைக்கு, படித்துவிட்டு கிராமத்தை விட்டு விலகிய நானும் ஒரு காரணம் என நினைக்கும்போது மனதை ஏதோ செய்கிறது :(

Read More

02 November 2006

கனவுப் பெண்

பழைய ஓவியம் - 3

சின்ன வயதிலிருந்தே ஓவியர் மணியம் செல்வனின்(ம.செ.) ஓவியங்கள் என்றால் கொள்ளை ப்ரியம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காதவை அவரின் ஓவியங்கள். அதிலும் அவரின் கோட்டோவியங்களும் வாட்டர் கலர் ஓவியங்களும் மிகச்சிறப்பானவை. கல்கியில், கல்கியின் சிவகாமியின் சபதம் ம.செ. ஓவியங்களுடன் தொடராக வந்தபோது எனக்கு இரட்டை விருந்து! ம.செ படைத்த சிவகாமியின் அழகு சொல்லி மாளாது. அதில் வரும் அரண்மனைகளாகட்டும், அரச காலத்து உடைகளாகட்டும்... அனைத்தும் நம்மை அந்த காலத்திற்கே அழைத்துச் சென்றுவிடும். ஆனந்த விகடனில் தொடராக வந்த, சுஜாதாவின் 'பூக்குட்டி' கதைக்கான ஓவியங்களும் இப்படித்தான்... என்றும் மறக்க இயலாதவை.

பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல இயலாத எனக்கு, ம.செ வின் ஓவியங்களே பாடங்கள். எங்கள் வீட்டில் வார, மாத இதழ்களுக்குப் பஞ்சமேயில்லாததால், ம.செ வின் ஓவியங்கள் எதில் வந்தாலும் எனக்குக் கிடைத்துவிடும். நான் வரைந்தவற்றில், அவரின் ஓவியங்களைப் பார்த்து வரைந்ததுதான் நிறைய.
ம.செ வின் நாயகிகள், எனது கனவுப்பெண்ணின் சாயலுக்கு மிக நெருங்கியவர்கள்! அப்படி ஒரு நாயகிதான் கீழே இருப்பவர்...



ஓவியத்தின் தற்போதைய நிலை இங்கே...



நன்றி: adobe photoshop
Read More

06 October 2006

சொச்சங்கள்




விதை, ஓவியம்,
பார்வை, சைகை,
மௌனம்

உவமை, உருவகம்,
செயல்முறை விளக்கம்

இன்னும், இன்னும்...

எதைக்கொண்டும் முழுதாய்
சொல்லித்தீர்க்க முடிவதில்லை-
பட்டுணர்ந்தவற்றை!
Read More

28 September 2006

இருத்தலின் சாத்தியங்கள்





ரும்பிக்கொண்டே இருக்கின்றன
மொட்டுகள்-
புதிது புதிதாய்

மலர்ந்த சிலவும்
வாடத்துவங்கும்
மலர்ந்த நொடியிலிருந்தே

மலரும் வாய்ப்பும்
வாடும் நிதர்சனமும்
அறிந்தே அரும்பும்
புதிய மொட்டுகள்-
ஆதி அரும்பின் பரவசத்திற்கு
சற்றும் குறையாத பூரிப்புடன்!

பூங்கா அக்டோபர் 02, 2006 இதழில் இக்கவிதை தொகுக்கப்பட்டுள்ளது.
Read More

21 September 2006

காணக்கிடைக்கும் தெய்வங்கள்

வாழ்வில் அலுக்கவே அலுக்காத விஷயங்கள் என்று ஒவ்வொருவருக்கும் சின்னதாகவாவது ஒரு பட்டியல் இருக்கும். என்னுடைய அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது, குழந்தைகளும் அவர்களின் குறும்புகளும்!

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். நான் புரிந்துகொண்டவரை கடவுள் என்பது ஒரு நிலை. கண்ணில் படுகின்ற எதையும், அவற்றின் மீதான எந்த கற்பிதங்களும் அற்று, அவற்றை அவைகளாகவே பார்க்கும் பாக்கியம் அந்த நிலையில் மட்டுமே வாய்க்கும். அந்த நிலையில் இருப்பவர்கள் குழந்தைகள் மட்டுமே. வாழ்வின் எல்லைகளை உணர்ந்து அடங்கிய, முதிர்ந்த வயதோரையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்!

மாலை வேளைகளில், எங்கள் அலுவலகத்தின் எதிர் வரிசையிலிருக்கும் ஒரு வீட்டின் வாசலில், குழந்தையாய்க் கனிந்துவிட்ட ஒரு முதியவர், சில மாதங்களேயான ஒரு கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சிக்கொண்டிருப்பார். நான் என்னை மறந்து பார்க்கும் காட்சி அது. இருவரின் முகங்களுக்கும் அதிகபட்சம் ஆறு வித்தியாசங்கள் கூட சொல்ல முடியாது! வேறு யாருக்கும் புரியாத, அவர்களுக்கு மட்டுமேயான ஒரு மொழியில் அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். உள்ளம் மலர்ந்து சிரிக்கும் அந்த முகங்களைப் பார்க்கக் கிடைக்க, நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாழ்வின் இரண்டு எதிரெதிர் விளிம்புகளும் ஒன்றானவையே என்று சொல்லாமல் சொல்லும் காட்சியது. அப்பப்பா... இடையில்தான் எவ்வளவு பிரச்சனைகள், அனுபவங்கள். குழந்தைப்பருவத்தின் உன்னதங்கள் உணர்ந்து மீண்டும் அப்படி மாற நம் வாழ்நள் முழுதும் தேவையாயிருக்கிறது நமக்கு!

நான் எனது குழந்தைப்பருவத்தைக் கடந்துகொண்டிருந்த நாட்களிலேயே, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைத்துவிட்டன. ஒவ்வொரு ஆண்டும், விடுமுறையில் பாட்டி வீட்டிற்குச் சென்றால், மாமாவின் குழந்தை, சித்தியின் குழந்தை என்று மாற்றி மாற்றி கைக்குழந்தைகள் இருந்துகொண்டேயிருக்கும். அவர்களை விருப்பத்துடன் பார்த்துக்கொள்பவன் நான் என்பதால், அவர்களின் அம்மாக்கள் என்னிடம் விட்டுவிட்டு அவர்கள் வேலையை நிம்மதியாய் பார்ப்பார்கள். அக்காவின் குழந்தைகள், தங்கையின் குழந்தைகள் என்று இன்னமும் அது தொடர்கிறது. கூட்டுக் குடும்பமென்பதால், கைக்குழ்ந்தையில் இருந்து பள்ளி இறுதியாண்டு வரை, எப்போதும் எல்லா வயதிலும் குழந்தைகளுண்டு எங்கள் வீட்டில்.

நாம் உருவாக்கி வைத்திருக்கும் உலகின் கறைகள் படிந்துவிடாத ஓர் இயல்பான உலகின் தரிசனம், குழந்தைகளுடன் விளையாடும்போது கிடைத்துவிடுகிறது. அந்த உலகின் பொய்களும் கோபங்களும் கூட மிக அழகானவையாகவே இருக்கின்றன. மொழிகளற்றுப் பேசவும், சிரிக்கவும் அங்கே வாய்க்கிறது. மிக முக்கியமாக, அங்கு ஃபார்மாலிட்டி என்கிற ஒரு விஷயமே இல்லை! சக மனிதனிடத்தில் சதி, மதம், அந்தஸ்து என்று எந்த பேதமும் இல்லை!! உள்ளம் உணர்ந்ததை உடற்கூறுகள் சொல்லும் சுதந்திரம், அந்த வயதின் வரம்.

நாம் ஒவ்வொருவரும், நமக்கே தெரியாமல், சொல்லவொண்ணா துயரத்துடன் கடந்துவருகிற நம் வாழ்வின் நாட்கள் எவை தெரியுமா? நம் குழந்தைப் பருவத்தைக் கடக்கிற நாட்கள் தான். அதிலும் குறிப்பாக, ஓஷோ சொல்வது போல், பள்ளிக்கு கொண்டுவிடப்படுகிற நாட்கள்! அங்கேதான், இயற்கை அளித்த நமக்கேயான நம் பாதையிலிருந்து விலகி, முற்றிலும் கற்பிதங்களினாலான ஒரு பாதையில் செல்ல நாம் வற்புறுத்தப்படுகிறோம். நமக்கு இயல்பேயில்லாத கட்டுப்பாடுகளுக்கும், விதிமுறைகளுக்கும் நாம் கட்டாயப் படுத்தப்படுகிறோம். எத்தனை அழுதாலும் புரண்டாலும், இத்தனை மணிவரை இந்த இடத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பணிக்கப் படுகிறோம். நினைத்துப்பார்க்கமுடியாத வன்முறை நம்மீது பிரயோகிக்கப்படுகிற நாட்கள் அவை.

அப்புறம் நம் வாழ்வில் எதுவுமே நமதில்லை! சமூகம் இழுக்கும் எல்லா இழுப்புகளும், முடிந்தவரை வளைந்து கொடுப்பதும், முடியாதவற்றை எதிர்ப்பதால் வெறுக்கப்படுவதும் மாறி மாறி நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. பெற்றோர்கள் தங்கள் வாழ்வில், சரியாகவோ அல்லது தவறாகவோ கற்ற பாடங்களை முன்னிருத்தி, குழந்தைகளின் தனித்தண்மைகள் புரக்கணிப்படுவது இன்னொரு பெரும் சோகம்!

எண்ணற்ற விதிமுறைகளும் கற்பிதங்களும் தந்த சிக்கல்கள் நிறைந்த நம் வாழ்வில், சில மணித்துளிகளாவது இயல்பான வாழ்க்கை வாழ முடிகிறதென்றால், அது நாமும் குழந்தையாய் மாறி முழந்தைகளுடன் விளையாடும்போது மட்டும் தான்! யோசித்துப்பார்த்தால் ஒரு உண்மை மிக ஆச்சர்யமாய் இருக்கிறது. இன்றைக்கு இருக்கிற நல்லவன், கெட்டவன், ஞானி, அரசியல்வாதி, தீவிரவாதி, etc., etc., எல்லோரின் குழந்தைப்பருவத்திலும் அவர்களின் எண்ணமும் மனசும் ஒன்றுபோலவேதானே இருந்திருக்கும்! இயற்கை தந்த இனிய வாழ்வை இடையில் வந்து மாற்றிப்போட்டது யார்?

பூங்கா செப்டம்பர் 25, 2006 இதழில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.
Read More

13 September 2006

இழந்த கவிதைகள்...

ல்லோரைப் போலவே
என்னிடமும் உண்டு
சில கவிதைகள்

உங்கள் ஊடகங்களுக்கான
மொழியில் இல்லை அவை

அர்த்தங்கள் சிதையும்
மொழிபெயர்ப்பிலும் சம்மதமில்லை

இருந்துவிட்டுப் போகட்டும்
என் கவிதைகள்
எனக்கும்
என் உடன் சேர்ந்து
உணர்ந்தவர்களுக்கும்
இடையில் மட்டுமே!

பின்குறிப்பு: நண்பர்களின் விமர்சனங்களுக்குப் பின், சில திருத்தங்கள் செய்யப்பட்ட மீள்பதிவு. ம்..! எப்படியோ... என் வலைப்பதிவு வரலாற்றிலும் ஒரு மீள்பதிவு ;)
Read More

04 September 2006

பிடிபட்டவர்கள்

எழுத மறந்த நாட்குறிப்புகள் - 3: பிடிபட்டவர்கள்

'விஸ்வநாதன் ராமமூர்த்தி' திரைப்படத்தில் விவேக் தன் மனைவியிடம் "யார் திருடன், சொல்லுபாப்போம்?" என்று கேட்பார். அதற்கு அவர் மனைவியின் பதில் - "திருடுறவன் தான் திருடன்!". இந்த கேள்விக்கான, நம் அனைவரின் பதிலும் கூட இதுவாகத்தான் இருக்கக்கூடும். ஆனால் இதை இல்லை என்று மறுத்துவிட்டு விவேக் பதில் சொல்வார்-

"மாட்டிக்கிறவன் தான் திருடன்..!"

அதைத் தொடர்ந்து வந்த நகைச்சுவைக் காட்சிகளுக்கும் கூட சிரிக்கமுடியாமல், சட்டென்று முகத்திலறையும் நிஜம் இது!. 'மாட்டிக்கொள்பவன் தான் திருடன்' என்பதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது, மாட்டிக்கொள்பவன் திருடியவனாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. ஒரு நிரபராதி மாட்டிக்கொண்டால் கூட அவன் திருடன் தான்! ஆக, திருடன் என்பவன் திருடியவன் அல்ல; மாட்டிக்கொண்டவனே!


சின்ன வயதில், திருடன் என்றால் மனசுக்குள் ஒரு பிம்பம் இருந்தது. நம்மைப் போல இல்லாமல் வேறு எப்படியோ இருப்பான் என்று மிதமிஞ்சிய கற்பனைகள். எல்லாம், படித்த கதைப்புத்தகங்கள் மற்றும் பார்த்த திரைப்படங்களின் புண்ணியம்.

ஒருமுறை எங்கள் அத்தையின் ஊருக்கு திருவிழாவிக்குப் போயிருந்தபோதுதான் முதன் முதலாய் ஒரு திருடனைப் பார்த்தேன். முதல் ஆச்சர்யம், அவன் கண்களைச் சுற்றி கருப்புத் துணி கொண்டு கட்டியிருக்கவில்லை! இரண்டாவது, அவன் நம் எல்லோரையும்போலவே வெகு சாதாரணமாய் இருந்தான். திருவிழாக் கடைகளில் ஏதோ திருடிப் பிடிபட்டவனை, ஒரு மரத்தில் கட்டிவைத்து அடித்துக்கொண்டிருந்தார்கள். வைக்கோல் பிரி கொண்டு கட்டப்பட்டிருந்த அவன் உடலின்மேல் தண்ணீர் ஊற்றினார்கள். தண்ணீர் பட்டால் ஏற்கனவே இறுக்கி கட்டப்பட்ட வைக்கோல் பிரி, இன்னும் இறுகி ரத்தம் கட்ட வைக்குமாம்! கூட்டத்தில் யாரோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். கொடுமைப்படுத்தவென்று என்னவெல்லாம் கற்று வைத்திருக்கிறார்கள் என்று வியப்பாய் இருந்தது. ஒரு மத்திம வயதுக்காரன், மிகுந்த கோபத்துடன் அவன் முகத்தில் நச் நச்சென்று குத்திக் கொண்டிருந்தார். வாயிலிருந்து ஒழுகும் ரத்தத்துடன், 'இல்லை... இல்லை...' என்பதாய் தலையசைத்தபடி சோர்ந்து தொங்கியவனைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. ஒருவேளை, வேறுயாரோ திருடியதற்கு இவன் மாட்டிக்கொண்டு அடிவாங்குபவனாயிருந்தால் அது எவ்வளவு கொடுமை என்றோர் எண்ணம் மனசுக்குள் ஓடியது.

திருட்டைப் பற்றியும் மாட்டிக்கொள்ளுதல் பற்றியும் யோசிக்கும்போதெல்லாம், இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வரும். நான் மூன்றோ நான்கோ படித்துக்கொண்டிருந்தபோது, கடலூரின் பொது மைதானத்தில், அந்த ஆண்டிற்கான பொருட்காட்சி ஆரம்பித்திருந்தது. தினமும் பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் கண்ணில் பட்டு ஆர்வத்தை தூண்டிவிட்ட பொருட்கட்சிக்கு, ஆரம்பித்து சில நாட்கள் ஆகியும் போக முடியவில்லை. அப்பாவுக்கு தினமும் வேறு ஏதேதோ வேலைகள். 'இப்பதானே ஆரம்பித்திருக்கிறது போகலாம் போகலாம்' என தினமும் தள்ளிப்போட, நான் அடம் பிடிக்க ஆரம்பித்தேன். அதனால், முதலில் நானும் என் அண்ணனும் மட்டும் அடுத்த நாளே பொருட்காட்சிக்கு போய்வர அனுமதிக்கப்பட்டோம். இன்னொரு நாள் எல்லோருமாக சேர்ந்து போகலாம் என்று அப்பா சொல்லிவிட்டார்.

அடுத்த நாள் மாலை வீட்டுக்கு வந்ததும் கலர் ட்ரஸ் மாற்றிக்கொண்டு கிளம்பிவிட்டோம். 'என்னென்ன வேணும்னு பாத்து வச்சிக்கோங்க. அப்பாவோட போறப்ப வாங்கிக்கலாம்...' என்ற அம்மா, டிக்கெட்டுக்குப் போக ஆளுக்கு ஐந்து ரூபாய் மட்டும் கொடுத்து அனுப்பினார்கள்.

பொருட்காட்சியில் நல்ல கூட்டம். பாதுகாப்பாய் கைகளைக் கோர்த்துக்கொண்டு, எங்கள் விருப்பத்திற்குச் சுற்றினோம். எதை வாங்குவது எதை விடுவது என்று ஒரே குழப்பம். வீட்டில் கேட்டால் வாங்கித்தரமாட்டார்கள் என்று நம்பிய ஒரு 'வாட்டர் கேம்' -ஐ வாங்கினான் அண்ணன். எனக்கு என்ன வாங்குவதென்று தேடிக்கொண்டிருந்தோம்.

ஒரு கடையில் வித விதமான பேனாக்கள் இருந்தன. எழுது பொருட்களின் மீது எனக்கு எப்போதுமே ஒரு ஈடுபாடு உண்டென்பதால், வித்தியாசமான பேனா ஏதாவது வாங்கலாம் என பார்த்தோம். சில வகைகள் பொருட்காட்சியில் மட்டுமே கிடைக்கும். ஒன்றை எடுத்து விலை கேட்க, கூட்டத்தில் கடைக்காரர் அதை கவனித்ததாகவே தெரியவில்லை. சட்டென்று ஒரு எண்ணம். கையில் வைத்திருந்த பேனாவை கால்சட்டைப் பையினுள் போட்டுக் கொண்டு, வேரொன்றை கையில் எடுத்துக்கொண்டு விலை கேட்டேன். அவர் விலை சொன்னபின் வேண்டாமென்பதாய் வைத்துவிட்டு அண்ணனை இழுத்துக் கொண்டு வெளியில் வந்துவிட்டேன்.

வந்தபின் மனசுக்குள் ஒரே பதட்டம், யாரும் பார்த்திருப்பார்களோ என. கொஞ்சதூரம் கடந்தபின்தான் தைரியம் வந்தது. இனி பயமில்லை என்றான பின்பு, சற்று பெருமையாகக் கூட இருந்தது! பேசிக்கொண்டே வந்த அண்ணன் முன், சட்டென்று பேனாவை உருவி, 'எப்படி...?!' என்று காட்டினேன். ஆச்சர்யப்பட்ட அவனைப் பார்த்து எனக்குப் பெருமிதம்! ஆனால் அந்தப் பெருமிதம் சில நொடிகள் கூட நீடிக்கவில்லை. பேனாவை கையில் வைத்து ஆட்டிக் கொண்டிருந்த போதே வெடுக்கென்று யாரோ பின்னாலிருந்து இழுத்து தூக்கினார்கள். அந்த கடைக்காரர்!

அப்படியே தூக்கிக்கொண்டே தன் கடைக்குப் போனார் அவர். ஏனோ அப்பா அம்மாவையெல்லாம் நினைத்து அழ ஆரம்பித்துவிட்டிருந்தேன். என்ன செய்வதென்று தெரியாமல் அண்ணன் கலங்கிய முகத்துடன் பின்தொடர்ந்தான். "தெரியாம எடுத்துடேன்... காசு வேண்னா வச்சிக்கங்க..." என்று தேம்ப்பித் தேம்பி அழுதபடி, சட்டைப் பையில் வைத்திருந்த ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துக்கொடுத்தேன். எனது அழுத முகமும், கசங்கிய ஐந்து ரூபாய் நோட்டுடன் நீண்டிருந்த பிஞ்சுக் கையையும் பார்க்க அவருக்கு மிகப் பாவமாக இருந்திருக்கவேண்டும். "காசெல்லாம் வேணாம்... இனி இப்படில்லாம் செய்யக்கூடாது; என்னா..." என்று பேனாவை வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பிவிட்டார்.

வாழ்வில் என்னையே மிகக் கேவலமாக உணர்ந்த தினம் அதுதான். அந்த ஒரு வினாடியில் அப்படி ஏன் தோன்றியதென்று இன்றுவரை தெரியவில்லை. பொருட்காட்சிக்குக் கிளம்பியபோது இருந்த சந்தோஷம் மொத்தமும் வடிந்துபோயிருந்தது இருவரிடத்தும். வீட்டில் அண்ணன் இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனாலும், சில வருடங்கள் வரை, எங்களுக்குள் எழும் சண்டைகள் உச்சத்தை அடைந்து அவனால் சாமாளிக்க முடியாத பட்சத்தில், "பொருள்காட்சித் திருடா" என்பான் சத்தமாக! எனக்குள் சர்வமும் ஒடுங்கிவிடும். இப்படி அந்த நிகழ்ச்சிக்குப் பின் வந்த எல்லா சண்டைகளிலும் அவனே தொடர்ந்து ஜெயித்தான்! 'அன்னைக்கு ஏன்தான் அப்படிச் செய்தோமோ' என்று என்னையே நொந்துகொள்வேன்.

பின்னாட்களில், அன்று மாட்டியிருக்கவிட்டால் திருட்டு என்னை மேலும் ஊக்கப்படுத்தியிருக்கக் கூடும் என நினைத்துக்கொள்வேன். இந்த இரண்டு சம்பவங்களையும் நினைக்கிற பொழுதெல்லாம் எனக்குத் தோன்றும் ஒரு விஷயம் - முதல் திருட்டில் பிடிபடுகிற எவனும், மீண்டும் திருட்டைப்பற்றியே யோசிக்கமாட்டான் என்பதுதான்!
Read More

26 July 2006

பழைய ஓவியம் - 2

சின்ன வயதில் நான் வரைந்த ஓவியங்களையும் எழுதிய சில கதைகளையும், பல வருடங்களுக்குப் பிறகு இப்போது பார்க்க நேர்கையில் மிகுந்த ஆச்சர்யமாய் இருக்கிறது. அப்போது வரைந்த/எழுதிய சூழல், அப்போது அதைப் பார்த்த/படித்தவர்கள் அளித்த ஊக்கங்கள் எல்லாம் பசுமையாய் நினைவுக்கு வருகின்றன!

பள்ளிக்கூட நாட்களில்(9-ம் வகுப்பிற்குள், எந்த வகுப்பு என நினைவில்லை!) எனது சின்ன வயது புகைப்படத்தைப் பார்த்து வரைந்தது இந்த ஓவியம்.


இந்த ஓவியத்தின் தற்போதய நிலை கீழே...


பழுப்பேறிய கறைகளை நீக்கியிருப்பதுடன், காகிதத்தில் இருந்த சுருக்கங்களையும் photoshop உதவிகொண்டு நீவி விட்டிருக்கிறேன்!
Read More

15 July 2006

சிறுகதைகள்/கட்டுரைகள்

Read More

14 July 2006

மரணம் என்றொரு நிகழ்வு

(தேன்கூடு போட்டிக்கு எழுதிய சிறுகதை)
சுந்தர் இறந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அவன் மனைவியை இன்று ஸ்பென்சரில் பார்த்தேன். பார்க்கிங்கில் என் வண்டிக்கு இடம் தேடிக்கொண்டிருந்த போது என்னைக் கடந்து சென்றுகொண்டிருந்தாள். உடன் இருந்தவர் யாரெனத்தெரியவில்லை. அனேகமாக அது ப்ரேம் சொன்ன 'அவரா'கத்தான் இருக்க வேண்டும்! அவன் சொன்ன மாதிரி அவர்கள் இருவருக்கும் இடையில் பார்த்தமாத்திரத்திலேயே ஒரு அன்னியோன்யத்தை உணரமுடிந்தது.

ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள், ப்ரேம், இப்படி இவர்கள் இருவரையும் சத்யம் தியேட்டரில் வைத்துப் பார்த்திருக்கிறான். அடுத்தநாள் எப்போதடா விடியும் எனக் காத்திருந்தவனாய், ஆபீஸ் வந்ததும் என்னைத் தேடி வந்து விஷயத்தைச் சொன்னதுடன், அவரின் அங்க அடையாளங்களையும் விவரிக்க ஆரம்பித்துவிட்டான்! இப்போது பார்த்த இந்த நபர், ப்ரேம் சொன்ன அடையாளங்களுடன் இருந்தார்.

கிடைத்த இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, மீண்டும் அவர்களைப் பார்க்க எண்ணித் தேடியபோது, கூட்டத்தில் எங்கோ தொலைந்து போயிருந்தார்கள்.

வழக்கம்போல் இன்றும் ஸ்பென்ஸரில் நல்ல கூட்டம். இந்தக் கூட்டத்தை ஏனோ எனக்குப் பிடித்திருந்தது. சில நேரங்களில், வேறெந்த அவசியமும் இல்லாது, வெறுமனே இந்தக் கூட்டத்தை வேடிக்கைப் பார்க்கவென்றே இங்கு வருவேன். இன்றும் அப்படித்தான். எண்ணற்ற மனிதர்களும் அவர்களின் வித விதமான உணர்ச்சிகளும் கொட்டிக்கிடக்கும் இந்த ஸ்பென்ஸரில், கண்ணில் கண்டவற்றையெல்லாம் உள்வாங்கியபடி நடந்துகொண்டிருந்தேன். கூட்டத்திற்குப் பழகிவிட்ட கால்கள் தன்ணுணர்வற்று நடந்து கொண்டிருக்க, மனம் சுந்தரையும் அவன் மரணம் குறித்தான நிகழ்வுகளையும் என் நினைவுகளிலிருந்து மீட்டுக்கொண்டிருந்தது.

சுந்தரின் மனைவியை இதற்கு முன் ஒரேயொரு முறைதான் பார்த்திருக்கிறேன். அதுவும் அவன் இறந்துபோன அன்று! ஆனாலும், என்றுமே மறக்க இயலாத முகமாய், என் மனதின் ஆழத்தில் தேங்கிப்போனது அந்த முகம். அன்றுவரை, அவ்வளவு இழப்பும் வேதனையும் நிறைந்த ஒரு முகத்தை நான் பார்த்தேயிராதது கூட அதற்குக் காரணமாயிருக்கலாம். என் வாழ்வில் நான் எதிர்கொண்ட மிக மோசமான நாட்களில் சுந்தர் இறந்த தினமும் ஒன்று.

இன்றளவும், வீட்டு வேலைகளில் மூழ்கியிருக்கும் என் மனைவியை மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருக்க நேர்கிற சில பொழுதுகளில், கதறி அழும் சுந்தர் மனைவியின் முகம், என் மனதின் மேலெழுந்து வேதனை செய்துகொண்டுதான் இருக்கிறது. எவ்வளவு முயன்றும் அந்த முகத்தை என் மனதினின்றும் அழிக்கவே முடியவில்லை. பல முறை சுந்தர் என்னை அவன் வீட்டிற்கு அழைத்திருந்த போதும், ஏதேதோ காரணங்களால் என்னால் செல்ல முடிந்ததில்லை. அவன் இறந்த அன்றும், அப்படி ஏதாவது ஒரு காரணத்தினால், அங்கு செல்ல இயலாதபடி நிகழ்ந்திருக்கக் கூடாதா என அடிக்கடித் தோன்றும்.

அன்று விபத்தில் சுந்தர் இறந்த செய்தி அறிந்ததும், நானும் ப்ரேமும் அவன் வீட்டிற்கு விரைந்தோம். வடபழனி சரவணபவனுக்கு எதிர்ப்பக்கம், உள்ளே எங்கேயோ அவன் வீடு இருப்பதாய்ச் சொன்னார்கள். சரவணபவன் அருகில் அவன் முகவரியை வைத்து நான் விசாரித்துக் கொண்டிருந்தபோது, அருகிலிருந்த பூக்கடையில் ஒரு பெரிய ரோஜா மாலையை பேரம்பேசி வாங்கிக்கொண்டான் ப்ரேம். ஏனோ அந்த மாலையைப் பார்த்ததும் சோகம் இன்னும் அதிகமானது.

அந்தத் தெருவை அடைந்து அவன் ஃபிளாட்டை விசாரித்தபோது, 'எறந்துட்டாரே அவர் வீடுங்களா...?!' என்று கேட்டு வழி சொன்னார்கள். ஃபிளாட்டின் பார்க்கிங்கில் எங்கள் அலுவலக நண்பர்கள் சிலர், இறுகிப்போன முகங்களுடன், பேசக்கூட திராணியற்று நின்றிருந்தார்கள்.

'மேல ஃபஸ்ட் ஃபுளோர்ல ரைட்ல மொத வீடு. பாத்துட்டு வாங்க...' - கணேஷ் சொல்ல, கனத்த மனதுடன் அவர்களைக் கடந்தோம்.

'எங்களால அங்க நிக்கவே முடியல ப்ரேம்! அதான் வந்துட்டோம்... நீங்க பாத்துட்டு வாங்க...'

குரல் தழுதழுக்கச் சொன்ன 'அக்கவுண்ட்ஸ்' மாணிக்கத்தின் வார்த்தைகளை, அங்கு சென்ற சில நிமிடங்களில் உணர முடிந்தது. சுந்தரின் உடலை ஒரு கண்ணாடிப்பெட்டியில் அடைத்து, ஹாலின் நடுவே வைத்திருந்தார்கள். விபத்தின் சுவடுகள் எதுவும் தெரியாதபடி, அவன் உடல் முழுக்க வெள்ளைத் துணி சுற்றப்பட்டிருந்தது. முகம் மட்டும் எந்த சலனமுமற்று தூங்கிக் கொண்டிருப்பதுபோல் இருந்தது. சுற்றிலும் அவன் உறவினர்கள் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்க, அவன் தலைமாட்டில் அமர்ந்திருந்த அவன் மனைவி, மிக களைத்துப்போன முகத்துடன், பின்புறம் அவளைத் தாங்கியபடி அமர்ந்திருந்தவர்கள் மீது சாய்ந்து கிடந்தாள். சக்தியின்றிப் பாதி மூடிய விழிகளும், கன்ணீரில் நனைந்து முகத்தில் ஒட்டிய கலைந்த கூந்தலுமாய் பேச்சற்று இருந்தவளைப் பார்த்ததும் என் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.

நாங்கள் வருவதற்குச் சற்றுமுன் மூர்ச்சையாகியிருப்பாள் போலும். முகத்தில் தெளிக்கப்பட்ட தண்ணீர், கழுத்தில் வழிந்து நைட்டியை நனைத்திருந்தது. அவளையும் மீறி அவள் உதடுகள் மிக மெலிதாய் எதையோ முனுமுனுத்துக் கொண்டேயிருந்தன. களைத்துப்போய் அமைதியடைந்திருந்த முகம், எதையோ நினைத்தபடி விம்மலுடன் அழ எத்தனிப்பதும், தாங்கிப் பிடித்திருந்தவர்கள் அவள் தோள்களை அழுத்த, மீண்டும் அமைதியடைவதுமாய் இருந்தது.

ப்ரேம் கொண்டு வந்திருந்த மாலையை, கண்ணாடிப்பெட்டியின் மேல் முன்பே வைக்கப்பட்டிருந்த மாலைகளுடன் வைத்துவிட்டு, துளிர்த்த கண்ணீரைத் துடைத்தபடி தலை கவிழ்ந்தோம். ஏற்கனவே அழுது களைத்திருந்த அவன் அப்பா, புதிதாய் வந்த எங்களைப் பார்த்ததும் 'இப்புடி எங்கள ஏமாத்திட்டு போய்ட்டானேப்பா...' என்று மீண்டும் அழ ஆரம்பித்தார். என்ன சொல்லியும் அவரை சமாதானப் படுத்த முடியாது எனத்தோன்ற, இதமாய் அவரின் தோள்களைப் பற்றிக்கொண்டேன். என் கைகளுக்குள் அவர் உடல் இன்னும் அதிகமாய்க் குலுங்க ஆரம்பித்தது. 'சாயங்காலம் என்ன டாக்டர் கிட்ட கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு போனாம்ப்பா...' - பொங்கிய அழுகையினூடே வந்த அவரின் புலம்பல்கள் ஆதரவற்று அலைந்துகொண்டிருந்தன.

சுந்தர் அப்பாவின் வார்த்தைகளைக் கேட்டோ என்னவோ, கண்கள் செருகி பாதி மயக்கத்திலிருந்த அவன் மனைவி, திடீரென எழுந்து 'அய்யோ... இப்படி என்னத் தனியா வுட்டுட்டுப் போய்ட்டீங்களே...நா இனிமே என்ன செய்வேன்...' எனப் பெருங்குரலுடன் அழ ஆரம்பித்தாள். தொடர்ந்து இப்படித்தான் அழுது கொண்டிருக்கிறாள் போலும். எங்களைத்தவிர மற்றவர்கள் இதை எதிர்பார்த்தவர்களாகவே இருந்தார்கள். பக்கத்தில் இருந்த பெண்கள் அவளை இறுக்கிப் பிடித்துக்கொள்ள, திமிறிக்கொண்டு அழுதாள். தாங்காத மனதுடன், 'அய்யோ.. அய்யோ..' என்று அரற்றியபடியே மீண்டும் மூர்ச்சையானாள். அதைக் காணச் சகிக்காமல், பெண்கள் கூட்டம் மொத்தமும் குரலுயர்த்தி அழுதது. பக்கத்திலிருந்தவர்கள் மீண்டும் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து, எதையோ குடிக்கச்செய்தார்கள்.

தொடர்ந்து அந்த முகத்தைப் பார்க்கும் திராணியற்றுத் திரும்பிக் கொண்டேன். என் மனசுக்குள் ஏதோ அறுந்துகொண்டதுபோல் இருந்தது. வாழ்வின் நிலையற்ற தன்மை, தன்னை முழுதும் உணர்த்திப் பயமுறுத்தியது. என் மீது சாய்ந்திருந்த அவன் அப்பா, 'இவள எப்படி காப்பாத்தப்போறேனோ...' என்று மீண்டும் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார். என் நிலை உணர்ந்த அவர் உறவுகளில் ஒருவர், 'மாமா... இப்படி உக்காருங்க... ரொம்ப நேரம் நிக்க வேண்டாம்... வாங்க...' என்றபடி அவரைப் பிடித்து பக்கத்திலிருந்த நாற்காலியில் மெதுவாய் அமர வைத்தார்.

'வா கீழ போய்டலாம்' என்பதாய் ப்ரேமைப் பார்த்தேன். அவனும் அதற்கேக் காத்திருந்தவன் போல் கிளம்பினான். வெளியில் வராண்டா முழுக்க, பக்கத்து வீடுகளில் பெறப்பட்ட ச்சேர்களும் ஸ்டூல்களும் நிறைந்திருக்க, அவற்றை துக்கத்திற்கு வந்திருந்த ஆண்கள் நிறைத்திருந்தார்கள். நாங்கள் கீழிறங்கி, பார்க்கிங் பகுதிக்கு வந்தோம். எங்கள் அலுவலக நண்பர்கள், சுந்தரின் நல்ல குணங்களை நினைவுகூர்ந்தபடி சோகத்தில் மூழ்கியிருந்தார்கள். விபத்து பற்றி விபரமறிந்த ஒருவர் மற்றவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.

சூழ்நிலைக்குச் சற்றும் பொருத்தமில்லாமல், ஒரு குழந்தை, பெரிய பந்து ஒன்றை இங்குமங்கும் உதைத்து விளையாடி, சத்தமாய்ச் சிரித்துக்கொண்டிருந்தது. துக்கத்திற்கு வந்திருந்த ஒருவர், அந்தக் குழந்தைக்கு விளையாட்டு காண்பித்துக் கொண்டிருந்தார்!

'அது சுந்தர் பையன். இன்னும் ரெண்டு வயசுகூட ஆகல...'

கணேஷ் சொன்னதும் மனம் வெறுத்துப் போனது. அழுதுகொண்டிருந்த அவன் மனைவியை விட, சிரித்துக்கொண்டிருந்த அவன் மகனைப் பார்க்க, மிக வேதனையாய் இருந்தது. ஆறோ அறுபதோ... வேறெந்த வயதில் மரணம் சம்பவித்தாலும் ஏற்றுக்கொள்ளலாம். இப்படி இளம் மனைவியையும், ஒன்றரை வயதுக் குழந்தையையும், திக்கற்று நிற்க வைக்கிற, மத்திம வயது மரணங்களை விடக் கொடியது எதுவுமே இல்லை எனத் தோன்றியது. எப்படி யோசித்தும் ஒரு தெளிவிற்கே வரமுடியாத, சுந்தர் மனைவியின் எதிர்காலத்தை நினைத்தபடியே வீடு திரும்பினோம்.

நாங்கள் பயந்தபடியே, சுந்தரின் மனைவி, அவன் இறந்த ஒரு வாரத்திற்குள் இரண்டுமுறை தற்கொலைக்கு முயற்சித்தாள். 'இந்த குழந்தைக்காகவாவது நீ வாழத்தான் வேண்டும்' என்று எப்படியெல்லாமோ அவளைச் சமாதானப் படுத்தியிருக்கிறார்கள். எங்கள் பாஸ், தனக்குத் தெரிந்த ஒரு கம்பெனியில் அவளுக்கு ஒரு நல்ல வேலை வாங்கிக் கொடுத்தார். ப்ரேம் யூகித்தபடி, இப்போது அவளுடன் பார்த்த அவர், அங்கு வேலை செய்பவராயிருக்கலாம்.

ஏதேதோ யோசித்தபடி, ஸ்பென்ஸருக்குள்ளேயே சுற்றிச் சுற்றி, மியூசிக் வேல்டு முன் வந்திருந்தேன். ஆச்சர்யமாய் அவளை மீண்டும் மியூசிக் வேல்டு உள்ளே பார்த்தேன். கூட வந்திருந்தவரைக் காணவில்லை. ஏதோ ஒரு ஆர்வம் உந்த, நானும் உள்ளே சென்று அவளைப் பின்தொடர்ந்தேன். என்னை அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அங்கிருந்த ஒலிப்பேழைகளை மேலோட்டமாய்ப் பார்த்துக்கொண்டே சென்றவள், இளையராஜாவின் 'how to name it' ஆல்பம் பார்த்ததும் சட்டென நின்றுவிட்டாள். அது சுந்தருக்கு மிகப்பிடித்த ஆல்பம். பெரும்பாலான இரவுகளில் அதைக் கேட்கத் தவறுவதில்லை என்று சிலாகித்துச் சொல்லியிருக்கிறான். அவற்றுள் ஒன்றை கையில் எடுத்துவைத்துக்கொண்டு ஆழமாய்ப் பார்த்தவள், பின் அதே இடத்தில் அதை வைத்துவிட்டுச் சென்றபோதுதான் கவனித்தேன்... அவள் காலில் மெட்டி அணிந்திருந்தாள்!

மியூசிக் வேல்டின் வேறொரு பகுதியில் நின்றிருந்த அவரை அவள் அடைந்தபோது, 'ப்ளீஸ் டாடி... ப்ளீஸ்.. ப்ளீஸ்...' என்று அவள் மகன் அவரிடம் உரிமையாய் எதையோ கேட்டு அடம்பிடித்துக் கொண்டிருந்தான். 'என்னங்க..? ரொம்ப படுத்தறானா...?!' என்று அவரைப் பார்த்துக் கேட்ட அவளின் புன்னகை நிரம்பிய முகம், இவ்வளவு நாட்களாய் என் மனதுக்குள்ளேயே இருந்து என்னை இம்சித்துக் கொண்டிருந்த அந்தக் கதறி அழும் முகத்தை எங்கோ விரட்டியடித்துவிட்டது! மனம் மிக லேசானதாய் உணர்ந்தேன். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களை மனமாற வாழ்த்தவேண்டும் என்று எழுந்த ஆசையை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன். ஏனோ அந்த சந்தர்ப்பதில் சுந்தரை அவர்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்பவில்லை.

நிறைந்த மனதோடு ஸ்பென்சர் விட்டு வெளிவே வந்ததும், என்னை வருடிச்சென்ற அந்தி நேரத் தென்றல், உள்ளே அனுபவித்த குளிரூட்டப்பட்டக் காற்றைவிட இதமானதாய் இருந்தது. எவ்வளவு பெரிய துயரத்தையும், 'இது எனக்கு ஒரு விஷயமே இல்லை' என்பதாய்ப் புறந்தள்ளி நடக்கிற காலத்தை வியந்தபடி, பார்க்கிங்கில் என் வாகனத்தைத் தேடியபோது நினைத்துக் கொண்டேன்... இனி எந்த மரணமும் என்னைப் பெரிதாய் பாதிக்காது!
Read More

03 July 2006

ஆறு great வழியல்கள் :)

முன்பு நாலு விளையாட்டிற்கு அழைத்த உண்மை இப்போது ஆறு விளையாட்டிற்கும் அழைத்திருக்கிறார்கள். நன்றி உண்மை :)

முன்னாடியே நாலு நாலா என்ன பாதிச்சதெல்லாம் எழுதிட்டதால, இப்போ கொஞ்சம் வித்தியாசமா வேற எதாச்சும் எழுதலாமேன்னு யோசிச்சேன். நாம ஏதாவது இக்கட்டுல மாட்டி வழியறப்போ மத்தவங்களுக்கு அது ஜாலியாவே இருக்கும். ஏன் கொஞ்ச நாள் கழிச்சு யோசிச்சுப் பாத்தா நமக்கே அது ஜாலியாத்தான் இருக்கும்! வழியறது ஒரு கலை! நமக்கு அது கை வந்தது!! வாழ்க்கைல நான் நிறைய வழிஞ்சிருக்கேன். அதுல எனக்கு பெஸ்ட்டுன்னு தோணின ஆறு இங்கே...

1. சின்ன வயசுல ஒருவாட்டி லீவுக்கு பாட்டி வீட்டுக்குப் போயிருந்தப்போ, வீட்ல அம்மா, சித்தி, மாமி, பாட்டியெல்லாம் பக்கத்துத் தெருல யாரோ ஒரு பொண்ணு வயசுக்கு வந்திருக்குன்னு சொல்லி அவங்க வீட்டுக்குப் போய்ட்டு வந்தாங்க. எனக்கு ரொம்ப நாளாவே 'அப்படின்னா என்ன?'-ன்னு ஒரு டவுட்டு. ஆனா வெளிய யார்கிட்டயும் கேக்க முடியாத மேட்டர்னு மட்டும் புரியுது. ஆர்வம் தாங்காம அன்னிக்கு என் தங்கை கிட்ட கேட்டுட்டேன். அவ விழுந்து விழுந்து சிரிக்கிறா. அப்போ அங்க வந்த எங்க மாமி என்னடின்னு கேக்க, 'இங்க பாருங்க மாமி... குமார் வயசுக்கு வர்றதுன்னா என்னன்னு கேக்கறான்...'-னு போட்டுக்கொடுத்துட்டு சிரிச்சிக்கிட்டே ஓடிட்டா! எங்க மாமியப் பாத்து வழிஞ்சேன் பாருங்க அன்னிக்கு..! 'ஆமா.. ரொம்ப முக்கியம். போடா.' னுட்டு போய்ட்டாங்க!!

2. B. Sc. படிச்சிட்டு இருந்தப்போ, ஒரு ஞாயித்துக்கிழமை ஹாஸ்டல்ல நிம்மதியா தூங்கிட்டு இருந்தேன். early morning 8.30 இருக்கும். ஒரு சீனியர் கைல ஸ்வீட்டோட வந்து எழுப்பினாரு. அவருக்கு அன்னிக்கு B'Day வாம். சொல்லிட்டு ஸ்வீட் எடுத்துக்கச் சொன்னாரு. ஸ்வீட் எடுத்துக்கறதுக்கு முன்னாடி விஷ் பண்ணனும்ல... அதான மறியாத. 'முதல்ல கையக் குடுங்க... best of luck...' னு உளறிடேன்! பசங்கல்லாம் ஒரே சிரிப்பு. 'ஹி ஹி.. சாரிங்க... happy b'day...' னு வழிஞ்சேன். அன்னிக்கு முழுக்க அவர எதிர்ல பாக்கறப்போல்லாம் அவர் சிரிக்க நான் வழிய... அப்படியே போச்சு!

3. B. Sc. final year-ல நம்ம friend வினோத் ஒரு பொண்ண பல மாசமா லுக் விட்டுகிட்டு இருந்தான். தினமும் அவளப்பத்தி ஒரே புலம்பல்தான். அவ பேர வினிதா வினிதா வினிதான்னு 3006 முறை(அதென்ன கணக்கோ தெரியல!) ஒரு நோட்ல எழுதி வச்சிருந்தான். அவதான் வாழ்க்கையேன்னு சொல்லிக்கிட்டே இருப்பான். அந்தப் பொண்ணோட friend ப்ரியா எனக்கும் friend. நீ தான்டா எப்படியாச்சும் ப்ரியா கிட்ட சொல்லி இந்த மேட்டர வினிதாவுக்கு கன்வே பண்ணனும்னு தினமும் ஒரே தொல்லை. சரி போய்த்தொலையறான்னு ப்ரியா கிட்டப் பேசினேன். 'அய்யய்யோ இதெல்லாம் நான் சொல்ல முடியாது. வேணும்னா உன் friend-ட கூட்டிகிட்டு வா... நான் அவளுக்கு intro கொடுக்கறேன். அவனே அவ கிட்ட சொல்லிக்கட்டும்' - னு ப்ரியா சொல்ல, இவன் கிட்ட அத வந்து சொன்னேன். சரிடா ஆனா நான் பேசறப்போ நீயும் என் கூட இருக்கனும்னான்.

ஒருநாள் காலேஜ் முடிஞ்சி காலேஜ் பஸ் மயிலாடுதுறை வர்றப்போ அவ இறங்கற ஸ்டாப்பிங்ல மீட் பண்றதா plan எல்லாம் போட்டாச்சு. நானும் வினோத்தும் முன்னாடியே அவனோட சைக்கிள்ல போய் அந்த ஸ்டாப்பிங் பக்கத்து பொட்டிக் கடை கிட்ட வெயிட் பண்றோம். பையன் நகத்தக் கடிக்கிறான்... கைல இருந்த நோட்டக் கிழிக்கிறான்... ஒன்னும் இருப்புக் கொள்ளல அவனுக்கு. பஸ் வர்றதப் பாத்ததும் ரெம்பப் பரபரப்பாயிட்டான்.

பஸ் வந்து நின்னதும் முதல்ல ப்ரியா இறங்கி வந்தா. என்னப் பாத்து கூப்பிட்டா. இவன பின்னடியே வாடான்னுட்டு நான் ப்ரியா கிட்டப் போய் பேசறேன். 'அவகிட்ட எதாவது சொல்லியிருக்கியா...'-னு கேட்டேன். 'நான் எதுவும் சொல்லல, எத்தேச்சையா மீட் பண்ண மாதிரி இருக்கட்டும். நான் இதுல சம்பந்தப்பட விரும்பல'-னு ப்ரியா சொல்லிகிட்டு இருக்கப்பவே வினிதா பஸ் விட்டு இறங்கி ப்ரியா கிட்ட வர்றா...

'ஏய் வினி, இது என் friend அருள்... உன் கிட்ட ஏதோ பேசணுமாம்...' என்று ப்ரியா அவளுக்கு என்னை intro கொடுக்க, அவள் 'ஹாய்... சொல்லுங்க...'-ன்னா. 'இல்லங்க... இது என் friend வினோத்...'-னு சொல்லிக்கிட்டே திரும்பறேன்... இவன ஆளக்காணோம்! கடை கிட்டயே நிக்கறானோன்னு அங்கப்பாத்தா அங்கயும் இல்ல!! எங்கடா போயிருப்பான்னு சுத்திமுத்திப்பாத்தா, ரொம்ப தூரத்துல சைக்கிள்ல வேகமாப் போய்க்கிட்டிருக்கான்! அப்புறம் என்னத்தச் சொல்ல.... 'ஹி.. ஹி... ப்ரியா உங்களப் பத்தி நிறைய சொல்லியிருக்காங்க... அதான் ச்சும்மா உங்ககிட்ட பேசலாம்னு...'- இப்படி ஏகத்துக்கும் வழிஞ்சி ரெம்பக் கொடுமையாப் போச்சி போங்க!

4. Crescent Engineering College ல MCA சேந்த முதல் வருஷம். வந்த கொஞ்ச நாள்லயே நம்மளோட ஓவியத்திறமை எல்லாருக்கும் தெரிய ஆரம்பிச்சிடுச்சி(class நடக்கறப்போ சும்மா இருந்தாத்தானே!). எங்க டிப்பார்ட்மெண்ட் Symposium வந்தப்போ ஆடிட்டோரியம் வாசல்ல ரங்கோலி போட, என்ன ஸ்கெட்ச் போட்டுத்தர சொன்னாங்க. function-க்கு முத நாள் காலேஞ் எல்லாம் முடிஞ்சு எல்லாரும் போனப்புறம் வேலைய ஆரம்பிச்சோம். என்னையும், லேடிஸ் ஹாஸ்டல்ல இருந்து நாலு BE பொண்ணுங்களையும் ரங்கோலிக்கு assign பண்ணி இருந்தாங்க.

ஒரு ஆளு கோட்டு சூட்டோட கைல எரிஞ்சிக்கிட்டு இருக்கற ஒரு டார்ச் பிடிச்சிகிட்டு இருக்கற மாதிரி out line போடுங்க, நாங்க கலர் அடிச்சிக்கறோம்னு சொன்னாங்க. சரி ஒரு ஆரை மணி நேரம் டைம் கொடுங்கன்னு சொன்னேன். அப்போ நீங்க போட்டு வைங்க, நாங்க ஹாஸ்டல் போயிட்டு வறோம்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. நான் என் திறமையெல்லாம் பயன்படுத்தி 20 நிமிஷத்துலயே முடிச்சிட்டு இவங்களுக்காகக் காத்திருந்தேன். நாலு பேரும் வந்து பாத்திட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க. பின்ன... நான் வரைஞ்ச ஆளு கைல பிடிச்சிட்டு இருக்கறது நாலு பெரிய பேட்டரி போடற டார்ச் லைட்டாச்சே :(

'ஹைய்யோ... நாங்க சொன்னது இந்த டார்ச் இல்லீங்க... ஒலிம்பிக்ல எல்லாம் எடுத்துகிட்டு ஓடுவாங்களே... அது..'-ன்னாங்க. அன்னிக்கு வழிஞ்ச மாதிரி என்னிக்குமே வழியலீங்க! பசங்கன்னக்கூட பரவால்ல. பொண்ணுங்க வேறையா... ரெம்ப அவமானமாப்போச்சு அன்னிக்கு. நான் என்னங்க பண்றது... அதுவரைக்கும் டார்ச்னா எங்க ஊர்ல ராத்திரில வயலுக்கு மக்கள் தண்ணிகட்ட போறப்போ எடுத்துட்டுப் போற பேட்டரி லைட்டுன்னுதான் நினைச்சிட்டு இருந்தேன்!

5. நான் இதுக்கு முன்னாடி வேலை செஞ்ச கம்பெனில, ஒரு நள் என்னோட சீட்ல கால்மேல கால் போட்டு ரிலாக்ஸ்டா உக்காந்து போன்ல ரொம்ப நேரமா கடல போட்டுகிட்டு இருந்தேன். போன்ல ஒரே சிரிப்பு, கிண்டல் தான். ஒரு பத்து நிமிஷமா எங்க boss என் பின்னாடி வந்து நின்னுகிட்டு எல்லாத்தையும் கேட்டுகிட்டு இருந்திருக்கார்! friends எல்லாம் செம டென்ஷன் ஆகி, எனக்கு ஏதேதோ சிக்னல் கொடுத்திருக்காங்க. கடல போடறப்போ நாம எத கவனிச்சிருக்கோம்?! ஒருவழியா பேசி முடிச்சிட்டு திரும்பிப்பாத்தா இவர் நிக்கிறார்! 'ஏம்பா... வேல நேரத்துல என்ன இது...?!' - னு தலைல அடிச்சிக்காத குறையா அவர் கேக்க, வழியறதத்தவிர நமக்கு வேற என்ன வழி..! அவர் என்னல்லாம் கேட்டிருப்பார்னு நான் பேசினதெல்லாம் திரும்பவும் நினைச்சுப்பாத்து அடிக்கடி சிரிச்சுக்குவேன் :)

6. ஒரு நாள் நான், என் friend, அவளோட அம்மா மூணு பேரும் T Nagar போயிருந்தோம். அங்க இருந்து பக்கத்துல எங்கயோ போறதுக்கு ஆட்டோ புடிக்கணும். ரொம்பப் பக்கம் தான், 20 ரூபாக்கு மேல கொடுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டோம். அப்போ அங்க வந்த ஆட்டோவ நிறுத்தி, போக வேண்டிய இடத்தச் சொல்லி, எவ்ளோப்பான்னு நான் கேட்க, அவன் 15 ரூபா கேட்டிருக்கான். நான் அத கவனிக்காம ரொம்ப சீரியசா 'ஏம்பா உனக்கே அநியாயமா இல்ல... பக்கத்துலதான... 20 ரூபா வாங்கிக்க'-னு பேரம் பேசறேன். 'சார் நான் 15 ரூபாதான கேட்டேன்' னு அவன் பாவமா சொல்ல, என் friend விழுந்து விழுந்து சிரிக்கிறா. 'இனிமே பேரம்பேச அருளதான் கூட்டிகிட்டு போகணும்'னு சொல்லி அவங்க அம்மாவும் சிரிக்கிறாங்க. சும்மாவே என்ன பயங்கரமா கலாய்க்கற என் friend-க்கு இந்த சம்பவம் ரொம்ப நாள் யூஸ் ஆச்சு. ஒவ்வொருவாட்டி இத அவ சொல்லிக் காட்டறப்பயும் பதிலுக்கு வேற எதும் சொல்ல முடியாம வழிவேன்!

டிஸ்கி: மூணாவது சம்பவத்துல என்னோட பேரத்தவிர மத்தவங்க பேரெல்லாம் மத்தியிருக்கேன் :)

அப்புறம் என்னங்க... அடுத்த ஆறு பேர கூப்பிடணுமா...? போனவாட்டியே நான் கூப்பிட்ட 4 பேர்ல யாருமே 4 விளையாட்டுக்கு வரல. அதுல மூணு பேர் அந்த அழைப்ப பாக்கவே இல்லன்னு நினைக்கிறேன். நானும் தனிமடல் போட்டு அவங்களுக்குச் சொல்லாம விட்டுட்டேன். சரி அழைப்பது நம் கடமை, வருவது அவங்க உரிமைன்னு நினைச்சு அடுத்த ஆறு பேர கூப்பிட்டுடுவோம். நாம விளையாட்டோட விதிய மீறக்கூடாதில்லையா... :)

1. குழலி
2. கவிதா
3. இளவஞ்சி
4. நாம், இந்திய மக்கள்
5. செல்வராஜ்
6. சிங். செயக்குமார்
Read More

27 June 2006

சில புரிதல்கள்

எதிர்பாராமல் இன்று
உன் குழந்தைகளுடன்
நீ எதிர்ப்பட்ட சந்திப்பில்

வெறுமையாய்ப் புன்னகைத்து
பரஸ்பரம் குடும்பநலம்
விசாரித்துக் கொள்ளமுடிகிற
நம் உள்ளங்கள்
மாறிமாறிச் சொல்லியிருக்கின்றன-

"நீ இல்லாத
ஒரு வாழ்க்கையை
நினைச்சு கூட
பாக்க முடிலடா..."

யார் இல்லாவிட்டாலும்
யாரும் வாழமுடியுமென
கடந்த சில வருடங்களில்
மெளனமாய்
சொல்லிக் கொடுத்திருக்கிறது
காலம்!
Read More

19 June 2006

பெரிய மனுஷன்

(ஜூன் 2006 - தேன்கூடு போட்டிக்கு எழுதிய சிறுகதை)

நாளைக்குக் காலையில் வீட்டில் இருப்போம் என்று நினைத்ததுமே மனசு இறக்கை கட்டிக்கொண்டது. அனேகமாக பஸ்ஸில் அனைவரும் தூங்கிவிட்டார்கள். நான் மட்டும் முகத்திலறையும் குளிர்ந்த காற்றை ஒரு வன்மையுடன் தாங்கிக்கொண்டு கொட்டக் கொட்ட விழித்திருந்தேன். நானும் கவனித்துவிட்டேன், ஊரிலிருந்து ஹாஸ்டலுக்குத் திரும்பும்போதுதான் பஸ்ஸில் ஏறியவுடன் தூக்கம் வருகிறது எனக்கு.

கடந்த ஒரு வருடமாய் இந்த ஹாஸ்டல் வாழ்க்கையுடன் மெல்ல மெல்ல ஒரு சமாதான உடன்படிக்கைக்கு வந்துவிட்டாலும், ஊருக்குச் செல்வதென்றால் ஒரு தனி உற்சாகம் வந்துவிடுகிறது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் 24 மணி நேரமும் நண்பர்களுடன் இருக்கிற ஹாஸ்டல் வாழ்க்கையை ரொம்பவும் பிடித்துத்தான் போயிருந்தது. இங்கு வந்த முதல் இரண்டு மாதங்கள்தான் ராகிங் ராகிங் என்று கலவரப்படுத்திவிட்டார்கள். ஆனால், 'வெல்கம் டே' யிலிருந்து சீனியர்களும் எங்கள் நண்பர்களாகிவிட, ஹாஸ்டல் வாழ்க்கையின் ருசி புரிய ஆரம்பித்தது.

அப்பப்பா... இந்த ஹாஸ்டல் வாழ்க்கையும்தான் எவ்வளவு விஷயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது! எத்தனை விதமான மனிதர்கள்... எத்தனை விதமான குணாதிசயங்கள்! ராஜூவின் கதையை முதன் முதலில் கேட்டபோது வேதனைப்படுவதா இல்லை ஆச்சர்யப்படுவதா எனத் தெரியவில்லை. அவன் சொல்வது போன்ற அப்பாக்களை சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன். தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அம்மாவை அடிக்கும் அப்பாக்கள் நிஜத்திலும் இருக்கிறார்கள் என ராஜூ சொல்லித்தான் தெரியும். அவனை அவனுடைய மாமாதான் இந்த கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறார். இப்படி ஓவ்வொருத்தருக்கும் நல்லதும் கெட்டதுமாய் நிறைய கதைகள்!

'லோக்கல் காலேஜிலேயே படிக்கிறேன், ஹாஸ்டலுக்கெல்லாம் போக மாட்டேன்' என்று அடம்பிடித்த என்னை, 'அப்பதான் உலகம் புரியும்' என்று அப்பாதான் கட்டாயப்படுத்தி சென்னைக்கு அனுப்பிவிட்டார். இப்போது அவரைப் புரிந்துகொள்ள முடிகிறது. வெளியில் வந்து பார்க்கும்போதுதான் என் வீடு என்னை எவ்வளவு சொளகர்யமாய் வைத்திருந்தது என்று உறைத்தது.

ஆனாலும், இந்த 'ஹோம் சிக்' தான் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. +2 வரை வீட்டைப் பிரிந்து இருந்ததே இல்லை. விடுமுறைகளில் உறவினர் வீடுகளுக்குச் சென்றால் கூட குடும்பத்துடன்தான்! அதுவும் இந்தப் பாப்புவுடன் சண்டை போடாமல் என்னவோ போலிருக்கிறது. நான் ஹாஸ்டல் வந்ததிலிருந்து அவள் பாடு ஜாலிதான். வீட்டில் இப்போது அவள் என்ன செய்தாலும் கேட்க ஆளில்லை. இபோதெல்லாம் மாதத்திற்கு ஒரு சனி ஞாயிறு என இரண்டு நாட்கள் ஊருக்குப் போகும்போது கூட, முன்பு போல் பாப்புவுடன் சண்டை போட முடிவதில்லை. எங்கே... அந்த இரண்டு நாட்களில் எனக்குக் கிடைக்கும் ராஜ உபச்சாரங்களை அனுபவிக்கவே நேரமிருப்பதில்லையே!

அந்த இரண்டு நாட்களும் வீட்டில் எனக்குப் பிடித்தவைதான் சமைக்கப்படும். இவ்வளவு விஷயங்கள் நமக்குப் பிடிக்குமென்று அம்மாவுக்குத் தெரியுமா என்று ஆச்சர்யமாய் இருக்கும். அப்பா கூட, அவருடைய friend பாலா அங்கிள் வந்து வெளியில் கூப்பிடும்போது, 'பையன் வந்திருக்காண்டா, அடுத்த வாரம் போலாம்...' என்று வீட்டிலேயே இருந்துவிடுவார். பாப்புதான் ஏகக் கடுப்பில் இருப்பாள். அவளுக்குப் பிடித்ததை அம்மாவிடம் கேட்டால் கூட, 'நீ இங்க தானடா இருக்க... அடுத்த சன்டே செஞ்சுக்கலாம், என்ன...' என்று சொல்லிவிடுவார்கள். அவளுக்குப் பிடித்தது கிடைக்காததல்ல அவள் பிரச்சனை. நான் இருக்கும்போது அவள் இரண்டாம்பட்சமாக ஆனதைத்தான் அவளால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இதில் இவை அனைத்தையும் நல்ல பிள்ளையாய் ஏற்றுக்கொண்டு அவளை நான் பார்க்கும் அலட்சியப் பார்வைதான் அவளை இன்னும் எரிச்சல் படுத்தும்.

நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவளுடன் ஒரே சண்டைதான்.

'போடி பன்னி...'

'நீதாண்டா நாயி...'

'நீதான் எறும மாடு' - என்று ஆரம்பிக்கும் சண்டைகள்...

'நீ சொல்றதெல்லாம் உனக்கே...'

'அதெல்லமே திருப்பியும் உனக்கே...' என்று ஆத்திரம் வலுத்து...

சற்றைக்கெல்லாம் அடிதடியாய் மாறும்.

எவ்வளவுதான் அடித்துக்கொண்டாலும், அப்பவோ இல்லை அம்மாவோ வந்து விலக்கும்போது கடைசியாய் யார் அடித்தார்களோ அவர்களே வென்றதாக எங்களுக்குள் ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. ஒருமுறை அம்மா என்னைப் பிடித்து இழுக்க, அப்பா அவளைப் பிடித்து இழுக்க, கடைசியாய் எட்டி என்னை அடித்துவிட்டாள். எனக்குப் பயங்கர ஆத்திரம். நானாவது தோற்பதாவது. என் வலிமையெல்லாம் திரட்டி, அம்மாவை மீறி, எட்டி விட்டேன் ஒரு உதை. கிட்டத்தட்ட மிஸ் ஆகிவிட்டது என்றுதான் நினைத்தேன். நானே எதிர்பார்க்காமல் என் கால் கட்டைவிரல் லேசாக அவள் மீது பட்டுவிட்டது. அதை உறுதிசெய்யும் வகையில் அவளைப்பார்த்து பழிப்பு காட்டினேன். 'ட்ரெஸ்லதான் பட்டுச்சு. போடா...' என்று அவசரமாய் அழுகையை நிறுத்திச் சொன்னாள். 'ஒன்னும் இல்ல.. அங்க பாரு. உன் கால்லதான் பட்டிருக்கு...' என்று நான் நிரூபித்ததும் மீண்டும் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டாள். எப்பொழுதும் தோற்பவர்கள் வெகுநேரம் அழுதுகொண்டிருப்போம்!

பெரும்பாலும் அடிதடி சண்டைகளில் நான் ஜெயித்தாலும், நான் அடிக்கடி தோற்கும் இடம் - அப்பா அம்மா அவளுக்கு ஏதாவது வாங்கித் தரும் போதுதான். அவளுக்கு மட்டும் தோடு, ச்செயின், வளையல் என தங்கத்தில் வாங்கிக்கொண்டே இருப்பார்கள். இதில் கொலுசு வேறு - அடிக்கடி மாற்ற வேண்டுமாம்! ரொம்ப நாளாக நான் கேட்கும் வாட்ச் மட்டும் எனக்கு வாங்கித்தரவேயில்லை. 'இது வாட்ச் கட்ற வயசில்ல' என்று சொல்லிவிட்டார்கள். பொம்பளை பிள்ளைங்களுக்கு மட்டும் இப்போதிலிருந்தே நகை சேர்க்க வேண்டுமாம். இந்த அநியாயத்தை மட்டும் என்னால் பொருத்துக்கொள்ளவே முடியவில்லை. 'அவளுக்கு மட்டும் எட்டாயிரம் ரூபாக்கு நகை வாங்கியிருக்கீங்க. நான் கேட்ட வாட்ச் எவ்ளோ இருக்கப்போவுது...' என்றெல்லாம் நியாயம் கேட்டுப்பார்த்துவிடேன். இப்படி ஏமாற்றுகிறார்களே என ஆத்திரம் பொங்கும். ரொம்ப நாள் வரைக்கும், அவளுக்கு என்னென்ன எவ்வளவு ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்கள் என்று ஒரு நோட்டின் கடைசி பக்கத்தில் எழுதி வைத்திருந்தேன்!

ஏதேதோ யோசித்தபடி எப்போது தூங்கினேன் என்று எனக்கேத் தெரியாமல் தூங்கிவிட்டிருந்தேன். விடியற்காலையில் எங்கள் ஊர் வந்ததும் யாரோ எழுப்பி விட்டார்கள். அரைத்தூக்கத்திலேயே பஸ்ஸிலிருந்து இறங்கி, வீட்டுக்கு நடந்து, காத்திருந்த அப்பா வந்து கேட் திறக்க, உள்ளே சென்று மறுபடியும் படுத்துத் தூங்கிவிட்டேன்.

காலையில் அம்மா காபியுடன் வந்து எழுப்ப, 'ஆஹா... ஆரம்பமாயிடுச்சுடா விருந்து' என்று நினைத்தபடி சோம்பலுடன் எழுந்து பெட் காபியை அனுபவித்துக் குடித்தேன். பாப்பு இன்னும் சுருண்டு படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். என் பெட்டியிலிருந்து துவைக்கவேண்டிய துணிகளை எடுத்துக்கோண்டிருந்த அம்மாவுக்கு அதைப்பார்த்ததும் ஒன்றும் புரியவில்லை.

'என்னடா இது... வளையல் மாதிரி இருக்கு...' என்றபடி அந்தப் பார்சலைப் பிரித்தார்கள்.

'ஆமாம்மா... வளையல்தான். போன சன்டே ஷாப்பிங் போனமா... அப்போ பாத்தேன். டிசைனெல்லாம் போட்டு வித்தியாசமா இருந்திச்சா, நம்ம பாப்புக்கு நல்லா இருக்குமேன்னு வாங்கினேன்...' என்றதும் அம்மாவுக்கு ஒரே பூரிப்பு.

'ஏங்க... இங்க வாங்களேன்...' என்று அப்பாவை கூப்பிட்டுக் காட்டி,

'நாம அவளுக்கு எதாச்சும் வாங்கினாலே சண்டைக்கு வருவான், இப்ப பாருங்க அவனே வங்கிட்டு வந்திருக்கான்...!' என்றார்கள்.

அப்பா முகத்திலும் பெருமிதம்.

'பின்ன என்னடி... இன்னும் அவன் சின்னப்பையனா என்ன..?! பெரியமனுஷன் ஆயிட்டான்ல...!' என்று கிண்டலாக என்னைப் பார்த்துச் சிரித்தார்.

எனக்கு ஒரே வெட்கமாகப் போய்விட்டது. வாழ்க்கையில் இன்றுதான் எனக்கு முதல் முதலாய் வெட்கம் வருகிறது என்று நினைக்கிறேன்!
Read More

12 June 2006

நாங்க போட்ட நாடகம் 2

முதல் பகுதி இங்கே...

ரு வழியாக ஒத்திகைகள் முடிந்து அரங்கேற்ற நாளும் வந்தது. முன்னரே திட்டமிட்டபடி, அன்று காலையிலேயே ஒவ்வொருவராக, ஆனதாண்டவபுரம் வினோத் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தோம். வீடு நல்ல விசாலமாய் இருந்தது. ஓட்டு வீடுதான் என்றாலும் பெரிய திண்ணைகள், விசாலமான ஆளோடி, வீட்டின் நடுவே மழை வெயில் காற்று எல்லாம் கொண்டு தரும் வாசல் என வசதியாய் இருந்தது. இந்த எல்லா இடங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தென்பட்டனர். வினோத்தின் நண்பர்கள் என்பதால், நாங்கள் மட்டும் அவனுடைய அறைக்கு வந்துவிட்டோம். ராஜேஷ் வாய்ப்பாட்டுக்கும் பெயர் கொடுத்திருந்ததால் வெளியில் தனியாய் ப்ராக்டிஸ் செய்துகொண்டிருந்தான்.

எங்கள் அறையின் கதவை சாத்திவிட்டு, எல்லோரையும் ஒருமுறை தனித்தனியாக அவரவர் காட்சிகளை ஒத்திகை பார்த்துக்கொள்ளும்படி விரட்டிக்கொண்டிருந்தான் பாலாஜி-

'எல்லாரும் டயலாக் பேப்பர் வச்சிருக்கீங்கல்ல. ஒருவாட்டி உங்க சீனையெல்லாம் அப்படியே மனசுல ஓட்டிக்கங்க...'

நானும் வினோத்தும் அதை பெரிதாய் கண்டுகொள்ளாவிட்டாலும், ஜூனியர் மாணவர்கள் ரொம்ப சிரத்தையாய் பாலாஜியின் வார்த்தையைப் பின்பற்றினார்கள். ஆளுக்கொரு மூலையில் தனித்தனியாய் நின்றுகொண்டு சின்னச்சின்ன அசைவுகளுடன் தங்கள் வசனங்களை மெதுவாய் சொல்லிப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். எக்ஸாமுக்கு முன், எக்ஸாம் ஹால் வாசலில், அவசர அவசரமாய் படிக்கும் மாணவர்களைப்போல் இருந்தது அவர்களைப்பார்க்க. இதில் இரண்டுபேர் நடுநடுவே டிஸ்கஷன் வேறு!

செந்தில் ஒரு ஓரமாய் தீவிரமான சிந்தனையில் இருந்தான். முதல் நாடகமல்லவா, நேரம் நெருங்க நெருங்க ரொம்ப டென்ஷன் ஆகிறான் போல. கூர்ந்து கவனித்தால், சின்ன இடைவெளிகளில், லேசாய் தலையையும் கழுத்தையும் திருப்பிக்கொள்வது தெரிந்தது. 'வினோத்து... அங்க பாரேன், மச்சான் மனசுக்குள்ள ரிகர்சல் பண்ணிக்கறான்...' என்றேன் சன்னமாய் சிரித்துக்கொண்டே. பார்த்த வினோத்.

இங்கு வந்ததிலிருந்து எனக்கும் பாலாஜிக்கும் ஒரு டவுட். ஊருக்குள் எங்குமே ஒரு விழாவுக்கான அறிகுறியே இல்லையே என. வினோத்திடம் கேட்டோம்.

'இன்னிக்கு ஒன்னும் விழா இல்லடா. இன்னிக்கு போட்டி மட்டும்தான். அடுத்த வாரம்தான் விழா. இன்னிக்கு ஜெயிக்கறவங்கள அன்னிக்கு கூப்பிட்டு சீஃப் கெஸ்ட் கையால ப்ரைஸ் கொடுப்பாங்க...' என்றான்.

அப்போதே எனக்கு சப்பென்று ஆகிவிட்டது. ம்... அப்போ ரொம்ப ஆடியன்ஸ் எதிர்பாக்க முடியாது!

'ஏன்டா வினோத்... டிராமாக்கு இன்னும் எத்தன டீம் வந்திருக்கு. உங்கப்பாகிட்ட கேட்டியா..?' - பாலாஜி.

'கேட்டேன்டா. நானும் போட்டில இருக்கறதால சொல்லமாட்டேன்னுட்டார்.'

'அடப்பாவி... அவ்ளோ நேர்மையான ஆளா..?! இவர நம்பித்தானடா கண்டிப்பா ப்ரைஸ் கிடைக்கும்னு வந்தோம்..!'

'அதெல்லாம் ரொம்ப எதிர்பாக்காதடா.' என்று குண்டைத்தூக்கிப்போட்டான் வினோத்.

சட்டென வெளியில் சலசலப்பு அடங்கி அமைதியாக, கர்நாடக சங்கீதத்தில் யாரோ பாட ஆரம்பித்தார்கள். 'யார்ரா இவ்ளோ சத்தமா ப்ராக்டிஸ் பண்றா...' என்று நினைத்தபடி, மெதுவாய் கதவைத்திறந்து எட்டிப்பார்த்தோம்.

அங்கே ஒரு பையன் சப்பளங்கால் போட்டு அமர்ந்து பாடிக்கொண்டிருக்க, சற்று இடைவெளிவிட்டு அமைதியாய் மற்ற மாணவர்கள் அமர்ந்திருந்தார்கள். எதிரில் ஈஸிச்சேர் போட்டு அமர்ந்திருந்த வினோத் அப்பா, கையில் ஒரு பேட் வைத்துக்கொண்டு ஏதோ குறித்துக்கொண்டிருந்தார்.

'அடப்பாவிகளா... போட்டி ஆரம்பிச்சிடுச்சிடா..! டேய் வினோத், உங்க வீட்லதான் போட்டியா..? டிராமா எங்கடா போடுவிங்க...?!!' - அதிர்ந்துவிட்டான் பாலாஜி. நாங்களும் குழப்பமாய் வினோத் முகத்தையே பார்த்தோம்.

'எனக்கென்னடா தெரியும். இதெல்லாம் எங்கப்பா எங்கிட்ட சொல்ல மாட்டாருடா. வாய்ப்பாட்டு இன்டிவீஜுவல் பெர்பாமன்ஸ் தான. அதனால வீட்லையே வச்சிருப்பார். நாடகமெல்லாம் இங்க இருக்காதுடா. பக்கத்து கோயில்ல ஒரு மேடை இருக்கு. அனேகமா அங்கயாத்தான் இருக்கும், கவலப்படாதீங்க...' என்று சமாதானப்படுத்தினான் வினோத்.

'அனேகமாவா...! எனக்கென்னவோ நம்பிக்கையில்லை...' என்றேன்.

'நீவேற சும்மா இருடா... பின்ன இங்க எங்க இடம் இருக்கு டிராமா போட...' - கண்களால் வீட்டை அளந்தபடி வினோத்தை ஆமோதித்தான் பாலாஜி. நாங்களே குழம்பிக்கொண்டிருப்பதைப் பார்த்து செந்தில் ஆடிப்போயிருந்தான்.

ஒவ்வொருவராய் நடுவில் வந்தமர்ந்து பாடி முடிக்க, 'ம்... அடுத்து இன்ஸ்டூமெண்டல் சோலோ... யாருப்பா கோகுல்...' என்றார் வினோத் அப்பா. கும்பலிலிருந்து மிருதங்கத்துடன் எழுந்து நடுவுக்கு வந்த அந்தப் பையன் கோகுலாக இருக்கவேண்டும்! நான் மெதுவாய் திரும்பி வினோத்தைப்பார்த்தேன். 'இதுவும் சோலோ தாண்டா...' என்று பல்லைகடித்துக்கொண்டு முனுமுனுத்தான். நான் பேசாமல் திரும்பிக்கொண்டேன்.

இப்படியே ஒவ்வொரு போட்டியாய் முடிந்தது. 'அடுத்து நாடகம்...' என்றபடி வினோத் அப்பா எழுந்துகொண்டார். 'அப்பாடா... எழுந்துவிட்டார். நாடகம் இங்க இல்ல...' - அப்போதுதான் எனக்கு நம்பிக்கையே வந்தது.

'நாடகத்துக்கு ரெண்டு டீம் வந்திருக்கு... ஒன்னு CVC காலேஜ், மயிலாடுதுறை(எங்களோடது!), இன்னொன்னு அரசு கலைக்கல்லூரி கும்பகோணம்...' என்று அறிவித்தார்.

'ரெண்டே டீம் தானா..?!' ஏமாற்றமாய் என்னைப்பார்த்தான் பாலாஜி. 'கவலப்படாதடா, வினோத் அப்பா நமக்கு ஹெல்ப் பண்ணாட்டிகூட நமக்கு ப்ரைஸ் உண்டு...' என்ற என்னை ஏளனமாய் பார்த்த செந்திலுக்கும் எங்களுக்கும் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

'அகர வரிசைப்படி முதல்ல அரசு கலைக்கல்லூரி... ரெடியாப்பா..?' என்று அவர்களை அழைத்தபடி, 'தம்பி... அந்த அண்டா, பக்கெட்டு, பானையெல்லாம் எடுத்து வெளில வைங்க...' என்று நடு வாசலைக்காட்டி தனது அடுத்தடுத்த கட்டளைகளை அசராமல் பிறப்பித்துக்கொண்டிருந்தார் வினோத் அப்பா!

சகலமும் ஒடுங்கிப்போயிறு எங்களுக்கு. ஆக, நடுவாசலில் இறங்கித்தான் நாடகம் போடவேண்டுமென்பது தெளிவாக முடிவாகிவிட்டது. என்னால் செந்தில் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. 'டேய் ஸ்கிரீன் இல்லாம எப்படிடா நந்தி செட் போடுவிங்க..!' வெலவெலத்துவிட்டான் செந்தில். 'இப்ப ஒன்னும் பண்ண முடியாதுடா... அட்ஜஸ் பண்ணிக்க...' - வேறென்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஏக டென்ஷனில் என்னை முறைத்த செந்திலைக் கண்டும் காணாமல் திரும்பிக்கொண்டேன்.

வினோத் அப்பா ஈஸிச்சேரைத் திருப்பி வாசல் பக்கம் போட்டுக்கொண்டார்(இதற்குத்தான் எழுந்தார் போலும்!). பக்கத்தில் ஒரு நாற்காலியையும் இழுத்துப்போட்டு, 'குமரேசு... பக்கத்துல ரெண்டுவீடு தள்ளி வாத்தியார் வீடு தெரியும்ல... பரந்தாமன் வாத்தியாருடா. ஓடிப்போயி அவர கூட்டியா... ஒடு...' என்று ஒரு பையனை ஏவினார். நாடகத்துக்கு இன்னொரு ஜட்ஜாம்!

இதற்குள் வாசல் சுத்தம் செய்யப்பட்டிருக்க, திண்ணைப் பக்கமிருந்து அரசு கலைக்கல்லூரி டீம் மேக்கப்புடன் வந்துகொண்டிருந்தது. பாலாஜி எங்களை அறைக்குள் அழைத்தான்.

'சரி விடுங்க. யாரும் அப்செட் ஆகவேண்டாம். வந்ததுக்கு நம்ம காலேஜ் பேர காப்பாத்திட்டு போகனும். எல்லாரும் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிக்கங்க... அவங்கவங்க காஸ்டியூம் கொண்டாந்திருக்கீங்கல்ல..'

அவரவர் தங்கள் பேக் திறந்து ட்ரஸ் மாற்றிக்கொள்ள ஆரம்பித்தோம். செந்திலுக்குத் தனியாக ட்ரஸ் எதும் இல்லை. போர்வை போர்த்தப்போவதால் போட்டிருக்கிற போண்ட் ஷர்ட் போதும் என்று சொல்லியிருந்தோம். எனக்கு ஊர் நாட்டாமை வேஷம். எஜமான் ரஜினியையும், சின்னக் கவுண்டர் விஜயகாந்தையும், பல படங்களில் சரத்குமாரையும் மனதில்வைத்து அதேபோல கதர்சட்டையும் வேஷ்டியும் கொண்டுவந்திருந்தேன். பச்சை கலர் பட்டை பெல்ட் வேறு. ஒரு பில்டப்புக்கு, பேண்டேஜ் மேல் கருப்பு மையில் நனைத்து காயவைத்த பஞ்சை ஒட்டி நாங்களே தயாரித்த மீசையை ஒட்டிக்கொண்டு, ஒரு கெத்துடன் திரும்பி பாலாஜியை லுக் விட்டேன். அவன் என்னை கவனிக்காமல், 'அய்யோ... என்ன எழவுடா இது....' - சலிப்பின் உச்சத்தில், பிராமின் வேஷம் போட்டிருக்கும் ஒரு ஜூனியரைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்டிருந்ததன். அப்புறம்தான் நானும் கவனித்தேன். கட்சி கரைவேட்டி கட்டிக்கொண்டு பூணூல் மாட்டிக்கொண்டு நின்றிருந்தான் அந்தப் பையன்!

'எங்கப்பாகிட்ட இந்த வேட்டிதான்ண இருந்திச்சி...' என்றான் அவன் பயந்துபோய்.

'முன்னாடியே எங்கிட்ட சொல்லியிருக்கலாம்ல...' என்று முறைத்த பாலாஜியை, இந்த ஸ்டேஜ்க்கு இது போதும் என்று சமாதானப்படுத்தினேன்.

மேக்கப் முடித்தபின், ஜன்னல் வழியாக அந்த டீமின் பெர்பாமன்ஸ் பார்த்தோம். சுத்தமாக வேறு கோணத்தில் காட்சிகளை அமைத்திருந்தார்கள். அட இப்படிக்கூட பண்ணியிருக்கலாமே என்று அப்போதுதான் தோன்றியது! இதற்கே கர்நாடக சங்கீதம் பாடத்தெரிந்தவரில்லை அவர்களுடைய நந்தனார். நந்தி செட்கூட இல்லை. இவர்களுக்கு முன்னால் நந்தி இருப்பதாயும், அது விலகுவதாயும் இவர்களின் ரீயாக்ஷனிலேயே காண்பித்திருந்தார்கள். இதே விஷயங்களைக் கவனித்து, 'டேய் அவங்க நந்தனார் ஒழுங்கா பாடவேயில்லை. நம்ம ராஜேஷ் கலக்கிடுவான். அதோட நந்தியே இல்லை அவங்க டிராமால...' என்று சிரித்த வினோத்தை நான் பாவமாக பார்த்தேன்.

ஆடியன்ஸையும் கவனிக்கத்தவறவில்லை நாங்கள். வாசலைச்சுற்றி, வேறு போட்டிகளில் பங்குபெற்ற பத்துப்பதினைந்து பள்ளி மாணவர்கள்(FYI: போட்டி முடிவை இன்றே அறிவித்துவிடுவதாக வினோத் அப்ப சொல்லியிருக்கிறார்!), கூத்து பார்க்கும் கணக்காய் அந்த கிராமத்து மக்கள் சிலர். ஆனாலும், மத்த போட்டிகளைவிட நாடகத்துக்குக் கொஞ்சம் கூட்டம் ஜாஸ்த்திதான். உள்ளே இடமின்றி ஜன்னல் வழியாகவெல்லாம் சிலர் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்துவீட்டு மாடியிலிருந்துகூட, திறந்த வாசலின் மேல் வழியே சிலர் பார்த்ததாக நாடகம் முடிந்து திரும்பும்போது ஒரு ஜூனியர் சொன்னான்!

மொத்த கூட்டத்திலும் ஒரே ஒரு figure தான் தேறியது. ஆனால் அவள் ஒருத்தி போதும் அந்த கிராமத்துக்கே. அந்தப் பச்சை தாவனி, கிராமத்துக் கிளி, ஓரமாய் ஒரு தூணில் ஓவியம்போல் சாய்ந்திருந்தாள்(அட... கவித! கவித!). எனது ராசி இது. எங்கே போனாலும் கண்டிப்பாக ஒரு figure மாட்டும். அது யாரென வினோத்திடம் அப்புறம் விசாரிக்கவேண்டும் என்று நினைத்துக்கோண்டேன். அதைவிட முக்கியம், ஒருமுறையேனும் இந்த நாட்டாமை ட்ரஸ் இல்லாமல் எனது சாதாரண உடையில் அவளின் கண்ணில் பட்டுவிடவேண்டும்!

அடுத்து நாங்கள் அழைக்கப்பட, போய் மேடையேறினோம்(அல்லது வாசலிறங்கினோம்!). ஸ்கிரீன் இல்லாதது எங்களுக்கேக் கொடுமையாய் இருந்தது. எல்லோரும் பார்க்கும்படி மேடையில் அசம்பில் ஆவதும், பாலாஜி சைகை கொடுக்க காட்சி ஆரம்பிப்பதுமாய் இருந்தது. நாங்களாவது பரவாயில்லை. செந்தில்தான் பாவம். எல்லோர் முன்னிலையிலும் நடுவாசலில் இறங்கி நந்திமாதிரி உட்கார்ந்தான். சுற்றியிருந்த சின்ன குழந்தைகள் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நந்தி தலை தனியே தயாரித்திருக்க வேண்டாம். அவன் முகமே ஏக கடுப்பில் இறுகிப்போய் நந்திமாதிரிதான் இருந்தது. என்னை என்னவெல்லாம் சொல்லித் திட்டிக்கொண்டிருக்கிறானோ! அவன் அப்படி அமர்ந்ததும் ஒருவன் ஓடிவந்து அவன்மீது ஒரு கருப்பு போர்வை போர்த்தினான். இன்னொருவன் அட்டையில் செய்த நந்தி தலையை அவன் தலையில் மாட்டினான். குழந்தைகள் ஓவராய் சிரிக்க ஆரம்பிக்க, வினோத் அப்பா அவர்களைப்பார்த்து முறைத்தார்.

பாலாஜி சைகை கொடுக்க, ராஜேஷ் பாட ஆரம்பித்தான். பக்கத்தில் நாங்கள் - நாட்டாமை, ஊர் பெரிய மனிதர்கள் என நின்று நந்தனார் பாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தோம். நடுவில் நந்தி அசையாமல் சிலை மாதிரி இருந்தது. பாவி மூச்சு விடுகிறானோ இல்லையோ தெரியவில்லை. பரவாயில்லை, நன்றாகத்தன் ப்ராக்டிஸ் பண்ணியிருக்கிறான்!
இதோ ஆயிற்று இரண்டு நிமிடம். நந்தி அசையப்போகிறது. நாங்கள் ஆச்சர்யப்பட தயார் ஆனோம்.

ஆனால் நாங்கள் உண்மையில் ஆச்சர்யப்படும்படி, நந்தி அசையவே இல்லை. என்ன ஆயிற்று இவனுக்கு. catchword-ஐ மிஸ் பண்ணிவிட்டானா?! ஆனால் ராஜேஷும் பாடிக்கொண்டே இருகிறான்!

நேரம் போய்க்கொண்டே இருந்தது.

நான்கு நிமிடங்கள்...

ஐந்து நிமிடங்கள்...

ஆறு நிமிடங்கள்...

ம்ஹூம். நந்தி நெளிய ஆரம்பித்துவிட்டது! அப்போதும் ராஜேஷ் நிறுத்துவதாய் இல்லை.

ஏழாவது நிமிடம்...

நந்தி உள்ளே கால் மாற்றி நிற்க ஆரம்பித்தது!

ராஜேஷ் விடுவதாய் இல்லை. உண்மையிலேயே பக்கத்தில் ஏதும் நந்தி இருந்தால் விலகிவிடும் போலிருந்தது. அவ்வளவு சீரியஸாய் பாடிக்கொண்டிருக்கிறான்!

செந்திலின் நிலை பார்த்து எனக்கு அடக்கவே முடியாமல் சிரிப்பு வந்தது. அப்படியொரு தர்ம சங்கடமான நிலை எனக்கு வந்ததேயில்லை. ரொம்பக் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டேன். அப்படியும் எனது குலுங்கிய முதுகும், கட்டுப்படுத்திய உதடுகளையும் மீறிப் பீரிடும் சிரிப்பும் காட்டிக்கொடுத்துவிட, அதை பாலாஜி பார்த்துவிட்டான். முறைப்பான் என பயந்தேன். அட அவனும் சிரிப்பை அடக்கிக்கொண்டிருக்கிறான்!

கிட்டத்தட்ட பத்துப்பதினைந்து நிமிடங்கள்! நந்தி ஒரு டான்ஸே ஆடிவிட்டது. கட்டக் கடைசியாய் வந்தது அந்த catchword! விட்டால் போதுமென்று நந்தி சாய்ந்து படுத்துக்கொண்டது. எங்களுக்குக் கூட அப்படித்தான் இருந்தது. எவ்வளவு நேரம்தான் சிரிப்பை அடக்குவது?!

ஒருவழியாக எல்லாம் முடிந்து செந்திலை எழுப்பியபோது, அவன் கண்கள் பிதுங்கியிருந்தன. வாயில் நுரை தள்ளாத குறைதான்! பாவம் ரொம்பக் கஷ்டப்பட்டுவிட்டான். கால் மறத்துப்போய் அவனால் நடக்கவே முடியவில்லை. நான் தான் கைத்தாங்கலாய் அழைத்துச்சென்றேன்!

எங்கள் அறைக்கு வந்ததும் மாற்றி மாற்றி ராஜேஷைப் பிடித்து ஏற ஆரம்பித்தோம். படுபாவி, பதிமூன்று நிமிடப்பாடலை, ரிகர்ஸலுக்கு இது போதுமென்று, கடைசி இரண்டு நிமிடங்களை மட்டுமே எங்களுக்குப் பாடிக்காட்டியிருக்கிறான்! குறைந்தபட்சம் எங்களுக்குச் சொல்லவேண்டுமா இல்லையா? கேட்டால், இதுகூடத் தெரியாமலா ஸ்கிரிப்ட் எழுதினீர்கள் என்று எங்களைக் கேட்கிறான்! ஆஹா.. இது backfire ஆகிவிடும் போலிருக்கே என்று அந்த மேட்டரை அப்படியே அமுக்கிவிட்டோம். பாலாஜி செந்திலிடம் ஸாரி கேட்டான்.

'பரவால்ல விடு பாலாஜி. என்னால எதும் பிரச்சனை ஆகாம இருந்தா சரி. நான்கூட பயந்துபோய்ட்டேன். நான் catchword மிஸ் பண்ணிட்டதாலதான் அவன் திரும்பத்திரும்பப் பாடறான்னு!' என்றான்.

கடைசியில் எங்களுக்கு இரண்டாவது பரிசுதான் கிடைத்தது. அது கூட எப்படிக் கிடைத்தது என்று உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அது பத்மாவுக்குத் தெரியாதே! அதுதான் எங்களுக்கு ஒரே ஆறுதல்.

அடுத்தநாள் காலையில் வந்ததும், நாங்கள் பரிசு வாங்கிய மேட்டரை மிகப்பெருமையுடன் நோட்டீஸ் போர்டில் எழுதிப்போட்டுவிட்டோம். இன்று பத்மா வருவாள். பார்த்து வயிறெரிவாள். ஒரே ஆனந்தம் தான் எங்களுக்கு. நேற்று பட்ட கஷ்டமெல்லாம் மறந்துபோயிற்று. எப்போதடா மதியம் வரும் எனக்காத்திருந்தோம். மதியம் வந்ததும் நோட்டீஸ் போர்டு பக்கத்திலேயே எத்தேச்சையாக நிற்கிறமாதிரி நின்றோம். அப்போதுதானே பத்மாவின் வயிற்றெரிச்சலை கண்குளிற பார்க்க முடியும்!

அதோ... பத்மா வருகிறாள். நோட்டீஸ் போர்டு பார்த்து நிற்கிறாள். அனைத்தையும் படிக்கிறாள். ஆனால் நாங்கள் நினைத்தது போலில்லாமல், எங்களை ஏறிட்டுப்பார்த்து மிக அலட்சியமாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டுப் போகிறாள்!

எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நொந்துபோய் பார்த்துக்கொண்டிருந்தோம். அடக்கொடுமையே! அவளின் பின்னே வாய்பொத்தி அடக்கமாய் சிரித்துக்கொண்டு செல்லும் அந்த மஞ்சள் தாவனி - நேற்று தினேஷ் வீட்டில் நான் சைட் அடித்த பச்சை தாவனி!
Read More

06 June 2006

நாங்க போட்ட நாடகம்

(சற்றே பெரிய சிறுகதை)

அந்த நாடகப்போட்டியில் கலந்துகொள்ள நாங்கள் முடிவுசெய்ததற்கு இரண்டு மிக முக்கியமான காரணங்கள் இருந்தன. முதலாவதும், மிக முக்கியமானதுமான காரணம் எங்கள் எதிரி(பின்னே... நாங்கள் போட்டியிடுகிற அத்தனை மேடையிலும் எங்களை ஜெயிக்கிறவள் எங்கள் எதிரிதானே?) பத்மா & கோ அந்த போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை! இரண்டாவது, அந்த போட்டிக்கு நடுவராக வரப்போகிறவர் எங்கள் டீமில் இருக்கும் வினோத்தின் அப்பா!! இது போதாதா, நாங்கள் இரண்டாவது பரிசாவது வாங்கிவிட?! இந்தமுறை கிட்டத்தட்ட முடிவை எழுதிவைத்துக்கொண்டுதான் நாங்கள் களத்தில் இறங்கினோம்.

மயிலாடுதுறை பக்கத்தில் ஆனதாண்டவபுரம் என்ற ஊரில் "கோபால கிருஷ்ண பாரதி விழா" ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறதாம். தமிழில் முதன் முதலில் நலுங்குப் பாடல்கள் பாடியது கோபால கிருஷ்ண பாரதிதானாம்(இனிமேல் கோ. கி. பா. ஓக்கேவா?!). கோ. கி. பா வின் வாழ்வில் ஒருபகுதி, ஆனதாண்டவபுரத்தில் கழிந்ததால் அவர் பெயரில் ஆண்டுதோறும் அங்கு விழா எடுக்கிறார்களாம். இந்த வருடம் வினோத்தின் அப்பா(விழா கமிட்டியின் மெம்பர்!) சொன்ன யோசனையின்படி கல்லூரிகளுக்கிடையேயான இசை, நடனம் மற்றும் நாடகப்போட்டி வைக்கிறார்களாம். இவற்றைச்சொன்னபோதே பத்மா இந்த போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்பதையும் வினோத் சொல்லிவிட்டான்.

போட்டிக்கான அறிவிப்பு officiaலாய் வந்ததும், எங்கள் கல்லூரியின் நுண்கலை மற்ற(fine arts association) ஒருங்கிணைப்பாளர் K.V எனப்படுகிற, பேராசிரியர் K. வேலாயுதம்('சொம்பு'ன்னு சொன்னாதான் காலேஜ்ல முக்காவாசி பேருக்கு தெரியும். அவரை மொத்தமா பாக்க அப்படித்தான் இருக்காராம். எங்கள் முன்னோர்கள் வைத்த பெயர். நாங்கள் வழிமொழிந்துகொண்டிருக்கிறோம்!) அவர்களிடம் பெயர் கொடுக்க சென்றபோது பத்மா இந்த போட்டிக்கு வரவில்லை என்பதை கீழ்கண்டவாறு உறுதிசெய்துகொண்டோம்.

அவர் பெயர் எழுதிக்கொண்டிருந்த பேப்பர் வெறுமையாய் இருப்பதை பார்த்துக்கொண்டே பாலாஜிதான் கேட்டான் -

'ஈவினிங் காலேஜ்-ல யாரும் பேர் கொடுக்கலீங்களா சார்...?'

யாரும் என்ன யாரும். அவளைத்தவிர வேறு யார் வரப்போகிறார்கள். இருந்தாலும் அவள் பேர் சொல்லி கேட்க அவனது ஈகோ இடம் கொடுக்கவில்லை போலும். ஆனாலும் அவர் ஓப்பனாய் சொல்லி மானத்தை வாங்கிவிட்டார்.

'இல்லப்பா. பத்மாதான் லீவ்ல இருக்கால்ல. அவ இல்லாம அவ டீம் வரலன்னு சொல்லிட்டாங்க...'

ஆமா. டீம் பெரிய டீம். அவங்க டீமுக்கு பத்மா மேல அவ்ளோ பாசம்னெல்லாம் நினைச்சிடாதீங்க. அங்க வேற எவளுக்கும் ஸ்கிரிப்ட் எழுதி டைரக்ட் பண்ணத்தெரியாது! ஆனா எங்க டீம்ல எல்லாரும் டைரக்டர்தான்(அதனாலதான் சொதப்பிக்கிதோ?!).

எப்படியோ, இம்சை, வராமல் வயிற்றில் பாலை வார்த்தாள். அப்போ தியாகு சொன்ன தகவல் நிஜம்தான். தியாகுவிற்கு வித்யா மூலம் தெரிந்திருக்கலாம். எங்க டீம் தியாகுவுக்கும் அவங்க டீம் வித்யாவுக்கும் வெகு சீரியஸாய் ஒரு லிங்க் ஓடிக்கொண்டிருக்கிறது. எங்கள் டீம் தோற்றால் அவள் கண்கள் கலங்கிவிடும். அவங்க டீம் தோற்றால் இவன் கண்கள் கலங்குமா எனத்தெரியவில்லை. ஏனென்றால் அப்படி ஒரு சந்தர்ப்பம் இதுவரை வரவேயில்லை! :(

எங்கள் கல்லூரியில் இது ஒரு வசதி. டே காலேஜ், ஈவினிங் காலேஜ் என்று இரண்டு கல்லூரிகளாக இயங்குகிறது. டே காலேஜ் பசங்களுக்கு. ஈவினிங் காலேஜ் பொண்ணுங்களுக்கு. PG மட்டும் கோ-எட். இதனால் எல்லா இன்டர் காலேஜ் போட்டிகளிளும் டே காலேஜ், ஈவினிங் காலேஜ் என்று இரண்டு அணிகளாய் போட்டியிடுவோம். ஈவினிங் காலேஜ் என்றால் பொழுதுசாய ஆரம்பித்து இருட்டியபின்னெல்லாம் விடமாட்டார்கள். எங்களுக்கு 9 to 2, அவங்களுக்கு 1 to 5. சனிக்கிழமை அவங்களுக்கு மட்டும் full day. பெரும்பாண்மையான எங்கள் ஒத்திகைகளை சனிக்கிழமையில்தான் வைத்துக்கொள்வோம். அன்றைக்குத்தான் எங்கள் கல்லூரி, பெண்களின் முழு ஆக்கிரமிப்பில் ஜகஜோதியாய் இருக்கும். சைட் அடிக்க வசதியான எங்களின் இந்த ஏற்பாட்டுக்கு ஆசிரியர்களுக்கு மத்தியில் நல்ல பேர் வேறு. வகுப்புக்கு OD கேட்க்காமல் விடுமுறையில் ஒத்திகை செய்துகொள்கிறோமாம்! ஞாயிறும் விடுமுறைதானே. அன்னிக்கு ரிகர்சல் வச்சுப்பாத்தா தெரியும். ஒரு பய வரமாட்டான்(என்னயும் சேத்துதான்!).

சரி மேட்டருக்கு வருவோம். நாடகத்திற்கு தீம் அவர்களே கொடுத்துவிட்டார்கள்(அப்பாடா... எங்களுக்குள் தகராறு இல்லாம ஒரு மேட்டர் ஓவர்!). கோ. கி. பா. எழுதிய 'நந்தனார் சரித்திர கீர்த்தனை' வெகு பிரசித்தம் என்பதால், நந்தனார் வாழ்க்கை வரலாறு சம்பந்தமாகத்தான் நாடகம் இருக்கவேண்டுமாம். 'என்னடா இவர் வரலாறு...?!' என்று குழம்பிக்கொண்டிருந்த எங்களுக்கு, வினோத்தான் சொன்னான். நந்தனார் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவராம். தீவிரமான சிவ பக்தராம். மேல் ஜாதிக்காரர்கள் இவரை கோயிலுக்குள் அனுமதிக்காததால் வாசலில் நின்றே வழிபடுகிறார். நம்ம கோயில்லதான் 'நடுவுல நந்தி மாதிரி' ஒரு நந்தி இருக்குமே!(ஹ.. ஹா.. இங்கு எது கொடுக்கப்பட்டதோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது!) அதனால் சிவபெருமானை தரிசிக்க முடியாதுபோன நந்தனார், எனக்கு காட்சிதரமாட்டாயா சிவபெருமானே என மனமுருகிப் பாடுகிறார். அப்போதுதான் யாரும் எதிர்பார்க்காத அந்த ஆச்சர்யம் நடக்கிறது. இவர் பக்தியை மெச்சிய சிவபெருமான் நந்தியை சற்று விலக்கி இவருக்கு காட்சிகொடுக்கிறார். ஆம், இவருக்காக நந்தி கொஞ்சம் விலகி நிற்கிறது! ஆகக்கூடி ஒன்றுமட்டும் புரிகிறது. சாமி கூட தாழ்ந்த ஜாதி பக்தனுக்கு கஷ்ட்டப்பட்டு கருங்கல் நந்தியை விலக்கியாவது காட்சிகொடுக்குமே தவிர, கோயிலுக்குள் அனுமதிக்காது!

போதுவாய் நானும் பாலாஜியும்தான் ஸ்கிரிப்ட் ஒர்க் பண்ணுவோம். முதல்கட்ட வேலையாக நந்தனார் பற்றி நிறைய விஷயங்கள் சேகரித்தோம். என்னதான் எங்களுக்கு பரிசு நிச்சயமென்றாலும் அதற்கு ஒரு வேல்யூ இருக்கணுமில்லயா?! அதனால் கொஞ்சம் கஷ்டப்பட்டு நந்தனாரின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்தோம். ஆனால் மேற்சொன்ன மேட்டர் தவிர்த்து, நந்தனார் வாழ்வில், சொல்லும்படி வேறொன்றும் சுவாரஸ்யமாய் இல்லை. அட இதை மெயின் ட்ராக்காக வைத்துக்கொண்டு சைடில் மைல்டாக ஒரு லவ் ட்ராக் இருந்தால்(பூவிழி வாசலிலே மாதிரி!) நல்லாயிருக்குமே என்று பார்த்தால், மனிதர் வாழ்க்கையில் அப்படி ஒரு மேட்டரே இல்லை! எனவே அந்த சம்பவத்தையே மையமாக வைத்து ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுவது என ஒருமனதாக(வேற வழி!) முடிவுசெய்தோம். என்ன ஒன்று, எனது திறமையை(நான் காதல் வசனங்கள் எல்லாம் கலக்கலாக எழுதுவேன்னு மத்தவங்க சொல்வாங்க!) காட்ட இந்த நாடகத்தில் இடம் இல்லை. பரவாயில்லை என்று மனதை தேற்றிக்கொண்டேன்.

ஒருவழியாக ஸ்கிரிப்ட் எழுதி முடித்தாயிற்று. அடுத்தகட்டமாக, ஆர்ட்டிஸ்ட் செலக்ஷன். இதில் மெயின் கேரக்டர் என்று பார்த்தால் நந்தனார் மட்டுமே. நாடகத்தின் ஹீரோ அவர்தானே. அதில் யார் நடிக்கப்போவது என்று எங்கள் மனதிற்குள்ளாகவே ஒரு போட்டி. அதுவும் சும்மாவா... கண்டிப்பாக பரிசு வாங்கப்போகிற நாடகம் வேறு! இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள்தான் எங்கள் நட்பின் ஆழத்தை சோதனை செய்யும். ஒருவருக்கொருவர் என்னை அவன் முன்மொழிவான் என்று நானும், அவனை நான் முன்மொழிவேன் என்று அவனும் எதிர்பார்த்தபடி ஒரு முடிவுக்கு வராமல் மேட்டர் இழுத்துக்கொண்டிருந்தது. கடைசியாக நான்தான் பொதுப்படையாக ஒரு தீர்வு சொன்னேன்.

"நம்மளோட எய்ம் நாடகத்துல கண்டிப்பா ஜெயிக்கணும். அதும் first prize வாங்கணும். சோ, இந்த கேரக்டர்ல நாம நடிக்கிறத விட கர்நாடிக் நல்லா பாடத்தெறிஞ்ச நம்ம ராஜேஷ் நடிக்கறதுதான் பெஸ்ட். என்ன சொல்றீங்க...!"

"அவன் இதுவரைக்கும் நடிச்சதே இல்லையேடா...?" - வேஷம் கைநழுவிப் போய்விடுமோ என்ற ஏக்கத்துடன் பாலாஜி.

"பரவாயில்ல. நாம சொல்லி கொடுத்துக்கலாம். இதுல பெரிசா நடிக்க ஒன்னுமில்ல. முக்கியமா அந்த பாட்டை மனமுருக பாடணும். அதும் கர்நாடக சங்கீதத்துல. அவன்தான் வாய்ப்பாட்டுல எங்க போணாலும் first வரானே..."

"ஆமாண்டா... அது ஒரு பெரிய ப்ளஸ் நமக்கு..." - எப்படியும் நமக்கில்லை என்கிற நம்பிக்கையில் வினோத்.

ஒருவழியாக, அறைமனதுகளான அனைவரின் முழுமனதுடன், அந்த வேடத்தில் ராஜேஷ் நடிப்பதாய் முடிவாயிற்று. அவனைப்போய்க் கேட்டால் 'இதுவரைக்கும் நான் நடிச்சதில்லையேப்பா...' என விலகப்பார்த்தான். மேற்படி மேட்டரெல்லாம்(அதாங்க, கண்டிப்பா prize உண்டுங்கற மேட்டர்!) விளக்கி, 'அந்த பாட்டை மட்டும் வந்து உருப்படியா பாடு. மத்ததேல்லாம் நாங்க பாத்துக்கறோம்' னு சமாதானப்படித்தி உள்ள இழுத்து விட்டோம்.

அப்புறம்... நந்தி. அதற்கொன்றும் பெரிதாக போட்டியில்லை! கருப்பு போர்வை போர்த்தி நந்திமாதிரி படுத்துக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட வரியை நந்தனார் பாடும்போது சற்று தலைசாய்த்தபடி விலகுவதில் பெரிதாய் என்ன திறமையை வெளிப்படித்திவிட முடியும்?! குறைந்தபட்சம், அந்த கேரக்டரில் நடிக்கிறவர் யார் என்றுகூட பார்ப்பவர்களுக்கு தெரியப்போவதில்லை. எனவே நந்தியாக நடிக்க யாரும் முன்வருவதாய்த் தெரியவில்லை. 'சரி இது வேலைக்கு ஆகாது. புதுசா யரையாச்சும்தான் உள்ள இழுத்துவிடனும்' னு முடிவு பண்ணிட்டேன். ஆனா யார கூப்பிடலாம்...?! சரி நம்ம ரூம்மேட் செந்திலை ட்ரை பண்ணலாம்னு தோணிச்சு. செம ஜாலி பார்ட்டி அவன். எப்பவும் எங்களையும் எங்க நாடகத்தையும் கலாய்ச்சுகிட்டே இருப்பான். ஒருமுறை உள்ள வந்து பாத்தாத்தான் அவனுக்கும் எங்க கஷ்டம் தெரியும். நாங்கள்லாம் கடலை போடத்தான் fine arts ல இருக்கோமாம்(ஒரு விதத்துல அதென்னவோ வாஸ்த்தவம்தான்!). ஆனா, அவனுக்கும் நடிக்கனும்னு உள்ளுக்குள்ள ஒரு ஆசை இருக்குன்னு எனக்குத்தெரியும். நடிக்க ஆள் இல்ல, நீ வாடான்னு கேட்க்க முடியாது. ஈகோன்னு ஒன்னு இருக்கே. வேற மாதிரிதான் அப்ரோச் பண்ணணும்!

'மச்சி செந்திலு... புதுசா ஒரு டிராமா போடறோம். ஆர்ட்டிஸ்ட் செலக்ஷன் நடந்துகிட்டு இருக்கு. நா சொன்னா OK சொல்லிடுவாங்க. உனக்கு எதும் இன்ட்ரஸ்ட் இருக்கா..?' - மீன் சிக்குதான்னு ஒரு லீட் விட்டுப்பாத்தேன்.

'பெரிசா ஒன்னும் இன்ட்ரஸ்ட் இல்லடா. ச்சும்மா ஒரு ஜாலிக்கு வேணும்னா செய்யலாம்...' - ம்.. ம்.. மீன் சிக்குது. ஆனால் அதுக்கும் கொஞ்சம் ஈகோ. ஹும்... யாருக்குதான் இல்லை. OK சமாலிச்சுக்கலாம்!

'ஆனா ஹீரோவால்லாம் வேணாம் மச்சி...' - மீன் சீரியஸாய் நம்மள கலாய்க்குதாம்! 'வாடி மகனே வா. என்ன கேரக்டர்னு அங்க வந்து பாரு' என்று மனசுக்குள் சிரித்துக்கொண்டேன். எடுத்தவுடன் நந்தி வேஷம் என்று சொன்னால் பையன் ஓடிவிடுவான். கொஞ்சம் ஜாக்கிறதையாத்தான் ஹேண்டில் பண்ணணும்.

'உனக்கென்னடா... ஹீரோ மாதிரிதானே இருக்கே. நாலைக்கு காலைல ரிகர்சலுக்கு ஆடிட்டோரியம் வந்துறு. உனக்கு என்ன ரோல்னு அங்க பாத்துக்கலாம். ஓக்கேவா?!'

மறுநாள் காலை வேண்டுமென்றே வேறுவேலை வைத்துக்கொண்டு ஆடிடோரியம் செல்லவில்லை நான். செந்தில் அங்கு போனதும், பாலாஜியும் வினோத்தும் ரொம்ப சீரியஸாய் 'யேய் நந்தி வந்தாச்சுப்பா...' என்று அவனை பேசவிடாமல் அவசரப்படுத்தி, நந்தி கேரக்டரைச் சொல்லி தரையில் கவிழ்த்துப்போட்டிருக்கிறார்கள். இருவரையும் செந்திலுக்கு அதிக பழக்கமில்லாததால் வேறு வழியின்றி மாட்டிக்கொண்டான். சற்று நேரம் கழித்து நான் அங்கு போனபோது, செந்தில் மேடையின் நடுவே நந்தி மாதிரி சுறுங்கிக் கவிழ்ந்திருந்தான். பக்கத்தில் நந்தனார் பக்திப்பரவசத்துடன் பாடிக்கொண்டிருந்தார். சட்டென்று அந்த நிலையில் அவனைப்பார்க்க அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது. ட்ரெஸ்ஸிங் ரூம் போய் தனியே சிரித்துவிட்டு வந்தேன். திரும்பி வந்து பார்த்தபோது நந்தி எப்படி விலகவேண்டும் என்று பாலாஜியும் வினோத்தும் கவிழ்ந்திருந்த செந்திலின் கழுத்தைப் பிடித்து பெரேட் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சொன்னபடியெல்லாம் தலையையும் உடலையும் சாய்த்துக்கொண்டிருந்தான் அவன். இப்போது பார்க்க கொஞ்சம் பாவமாவே இருந்தது! ரிகர்சல் முடிந்து எழுந்த செந்தில் என்னைப்பார்த்துவிட்டான். 'நீ ரூமுக்கு வா உன்னை பாத்துக்கறேன்...' என்பதாய் இருந்தது அவன் பார்வை.

அவன் வெறுப்பு புரியாமல் பாலாஜி வேறு அட்வைஸ் கொடுத்துக்கொண்டிருந்தான் - 'நல்லா ஞாபகம் வச்சிக்கோ செந்தில். உன்ன அப்படியே ஒரு ஜடப்பொருளா feel பண்ணிக்கணும். ஒரு சின்ன அசைவு கூட தெரியக்கூடாது. நீ சாயிறப்போதான் ஒரு ஆள் அங்க இருந்ததாவே ஆடியன்ஸ்கு தெரியணும். டெய்லி ரூம்ல கூட கொஞ்சம் பிராக்டிஸ் பண்ணு. திரும்ப நாளைக்கு காலைல பாக்கலாம். ஓக்கேவா?'

'நாளைக்குமா...?!!!' என்ற அதிர்ச்சியிலும், என்மீதிருந்த கோபத்திலும் எதுவும் பேசாமல் பேய்விட்டான் செந்தில். இரவு அவனை சமாதானப்படுத்துவது பெரும்பாடாகிவிட்டது எனக்கு. கத்து கத்தென்று கத்தித் தீர்த்துவிட்டான். 'போன உடனே நந்தி வந்திருச்சிங்கறான். உண்மைய சொல்லு. நேத்திக்கே உனக்கு தெரியும்தானே...?' என்று திரும்பத்திரும்ப கேட்டான். 'கழுத்து இடுப்பேல்லாம் வலிக்குதுடா. கால் மறத்துப்போச்சு தெரியுமா...' - விட்டால் அழுதுவிடுவான் போலிருந்தது. நாளைக்கெல்லாம் வரவேமுடியாது என்றவனை, 'இனிமேல் புதுசா ஆள் பாத்து சொல்லிக்கொடுக்க டைம் இல்லடா', 'இந்த டிராமாவே உன்னை நம்பித்தான் இருக்கு', 'இதுல என்னடா தப்பு. எவ்ளோ வித்தியாசமான கேரக்டர் தெரியுமா', 'அடுத்த டைம் உனக்கு புடிச்சமாதிரி நல்ல கேரக்டர் வாங்கித்தறேன்' என்றெல்லாம் கெஞ்சி, ஒருவழியாக சம்மதிக்க வைத்தேன்.

அப்புறமென்ன... நந்தனாரை உள்ளே விட மறுக்கிற உயர்ந்த ஜாதிக்காரர்கள், 'மற்றும் பலர்'-ஆக நாங்கள், நுண்கலை மன்ற இசைக்குழுவிலிருந்து இசையமைக்க இரண்டுபேர் என எங்கள் ஒத்திகைகள் அமர்க்கலமாகத்தொடர்ந்தன. செந்திலுக்கு எல்லாம் தெளிவாய் சொல்லப்பட்டிருந்தது. அவனுடைய சீன் வரும்போது, ஸ்கிரீன் மூடியிருக்கும்போதே அவன் ஓடிவந்து மேடையின் நடுவே நந்தி மாதிரி படுத்துக்கொள்ள வேண்டும். இரண்டுபேர் ஓடிவந்து அவனுக்கு கருப்பு போர்வை போத்தி, 'நந்தி தலை' செட்டை மட்டிவிட்டு சென்றுவிடுவார்கள். அந்த சீன் முடியும்போது, விலகியிக்கிற நந்தியை எல்லோரும் வியந்து பார்த்துக்கொண்டிருக்க, ஸ்கிரீன் போட்டுவிடுவார்கள். பக்கத்தில் நிர்ப்பவன் எழுப்பிவிட, இவன் எழுந்துவரவேண்டியதுதான். செந்தில், எப்படியும் தன் முகத்தை யாரும் பார்க்கப்போவதில்லை என்கிற வகையில் கொஞ்சம் நிம்மதியாக இருந்தான்.

ஒத்திகைக்கு ராஜேஷ் மட்டும் அதிகம் வரமாட்டான். அவனுக்கான பாடலை அவன் வீட்டிலேயே பாடி பிராக்டிஸ் பண்ணிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டான். அவ்வப்போது வந்து அந்தப்பாடலை மெய்மறந்து மனமுருகப்பாடுவதுபோல் பாடுவான். எளிய தமிழ்ப்பாட்டுதான் என்றாலும், 'படிச்சவன் பாட்ட கெடுத்தான்' கதையாக, கர்நாடக சங்கீதத்தில் பாடும்போது எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ராஜேஷ் பாட ஆரம்பித்து சரியாக இரண்டாவது நிமிடத்தில் அவன் குறிப்பிட்ட 'நந்தி மறைக்குதய்யா' என்று தொடங்கும் அந்த வரி வரும். அதுதான் செந்திலுக்கு catchword. அந்த வரியை பாடும்போதுதான் நந்தி விலவேண்டும். செந்திலும் அந்த வரியை நன்றாக மனப்பாடம் செய்துகொண்டான். தூங்கும்போது யாராவது அந்த வரியை சொன்னால்கூட சற்று விலகிப்படுத்துக்கொள்வான் போலிருந்தது!

அடுத்த பகுதி...


Read More

27 May 2006

பழைய ஓவியம் 1

ல்லூரிக் காலங்களில், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் "தொட்டால் தொடரும்" படித்து அவரின் தீவிர வாசகனாகிவிட்டேன். உண்மையில் அந்த நாவலைத் தொட்டால் முடியும்வரை தொடரும். பாதியில் வைக்க முடியாது. ஒவ்வொரு பாத்திரத்தின் குணாதிசயங்களையும் ஒளிந்திருந்து பார்த்ததுபோல் யதார்த்தமாய் எழுதியிருப்பர். கதையின் சம்பவங்கள் கூட வெகு இயல்பாய் நிகழ்வதுபோல் இருக்கும். முடிவு மட்டும் நமது தமிழ்சினிமாத்தனமாக இருக்கும்.

அப்போது ஆர்வக்கோளாரில் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். கீழேயுள்ள படத்துன்! வரைந்த நினைவாக ஒரிஜினலை வைத்துக்கொண்டு அவருக்கு கலர் செராக்ஸ் எடுத்து அனுப்பினேன்.


புதிதாய் இப்போது எதுவும் வரைய நேரமில்லாவிட்டாலும், எனது பழைய ஓவியங்களை இங்கு ஒவ்வொன்றாக தொகுக்க முயற்சிக்கிறேன். உங்களுடன் பகிர்ந்துகொள்வதுடன், இவற்றை பத்திரமாக சேமித்ததுபோலவும் ஆகும் இல்லையா?!

Read More

17 May 2006

கடிதங்கள்

எழுத மறந்த நாட்குறிப்புகள் - 2: கடிதங்கள்

சில வருடங்களுக்கு முன்பு எனது வாழ்தலின் அத்தியாவசியங்களுள் ஒன்றாக விளங்கிய கடிதங்கள், இன்று வெறும் நினைவுச்சுவடுகளாக மட்டுமே எஞ்சியிருக்கிறது. கடிதங்கள் என் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகள் மிகப்பெரியவை. அப்படியிருந்த கடிதங்களை இன்று சுத்தமாக மறந்தே போய்விட்டது மிக ஆச்சர்யமாய் இருக்கிறது!

நேற்று என் நண்பன், தனது திருமண அழைப்பிதழ்களை அனுப்புவதற்காக, அருகில் தபால் நிலையம் எங்கிருக்கிறது எனக்கேட்டான். வெகு இயல்பாக 'தெரிலடா... பக்கத்ததுவீட்டு ஆன்ட்டி கிட்ட வேணா கேட்டுப்பாரு...' என்று சொன்ன பிறகுதான் உணர்ந்தேன்... ஒரு காலத்தில், எந்த இடத்திற்கு வீடு மாறி சென்றாலும், எனது முதல்வேலை அருகிலிருக்கும் தபால் நிலையத்தைத் தேடுவதுதான். இப்போதிருக்கும் இந்த வீட்டிற்கு வந்தபின், கடந்த இரண்டு வருடங்களாக, அருகில் தபால் நிலையம் எங்கிருக்கிறது என்ற தேடலுக்கு அவசியமே இல்லாதிருந்திருக்கிறேன்! இது எப்படி சாத்தியமாயிற்று என தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துவிடேன்.

தொலைபேசியும், மின்னஞ்சலும் எனது அன்றாட வாழ்வில் நுழைய நுழைய, கோபித்துக்கொண்ட கடிதங்கள், என்னிடம் சொல்லாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக வெளியே சென்றுவிட்டன. அடுத்த வினாடிகளில் பதில் கிடைத்துவிடுகிற தொலைபேசியும் மின்னஞ்சலும் இருக்கிறபோது, பதிலுக்காக நான்கைந்து நாட்கள் காக்கவைக்கிற கடிதங்களுக்கு அவசியமில்லாமல் போயிற்று. ஆனால் அதிலிருக்கிற அன்னியோன்யமும், உயிர்ப்பும் இதில் இருக்கிறனவா என யோசித்துப்பார்த்தால், நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடிதங்களுக்கான காத்திருப்புகள் தரும் தவிப்பும், எழுதியவரின் கையெழுத்து தரும் உயிர்ப்பும் அலாதியானவை. கையெழுத்து கொண்டு, அந்த கடிதம் எப்படிப்பட்ட மன நிலையில் எழுதப்பட்டிருக்கிறது என்பதைக்கூட உணர்ந்திருக்கிறேன். எந்த மொழியிலும் நமது உணர்வுகளை நூறு சதவிகிதம் பகிர்ந்துகொள்ள இயலாதெனினும், கடிதங்களில் சில வசதிகள் உண்டு. உதாரணத்திற்கு, 'நீண்ட' என்கிற வார்த்தையில் உள்ள மூன்று சுழி 'ண' வில் பத்துப்பதினைந்து சுழி போட்டு எவ்வளவு நீண்ட என்று உணர்த்துவோம்!

இதுவரை எனக்கு வந்த எல்லா கடிதங்களையுமே நான் சேமித்து வைத்திருக்கிறேன். எனக்காக பிறர் எழுதிய நாட்குறிப்புகள் அவை. நாட்குறிப்புகளை மீண்டும் எடுத்து படிப்பதுபோல், எனக்கு வந்த பழைய கடிதங்களை படிக்க ஆரம்பித்து தூங்காமல் போன இரவுகள் நிரைய. நமது பழைய நாட்களை மீட்டுத்தரும் வல்லமை நாட்குறிப்புகளுக்கு அடுத்து கடிதங்களுக்கே வாய்த்திருக்கிறது.

தபால் நிலையம் மற்றும் கடிதங்களுடனான எனது முதல் பரிச்சயம், எங்கள் கிராமத்து வீட்டில் தான் நிகழ்ந்திருக்கிறது. எங்கள் கிராமத்திற்கு தபால் நிலையம் வந்தபோது எங்கள் உறவினர்களில் ஒருவர்தான் 'போஸ்ட் மாஸ்டர்'. அவர் வீட்டில் தபால் அலுவலகம் வைக்க வசதி இல்லாததாலும், அது கூறை வீடு என்பதாலும், எங்கள் வீட்டின் திண்ணை பக்கம் சாளரம் கொண்ட ஒரு அறையில் தபால் அலுவலகம் வைத்துக்கொள்ள அவர்அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்கு பிறகு எங்கள் வீட்டின் சூழலே சற்று மாறித்தான் போயிருந்தது. வீட்டின்முன் மின்கம்பத்தில் கட்டப்பட்ட தபால் பெட்டி, திண்ணையில் கட்டப்பட்டிருந்த சிவப்பு நிற அறிவிப்பு பலகைகள், அந்த அறையின் உள்புற வாசலில் மாட்டப்பட்டிருந்த "அனுமதியின்றி உள்ளே வராதீர்" போர்டு எல்லாம் எங்களுக்கு வினோதமாக இருந்தன.

எங்கள் கிராமத்து வீட்டில் தபால் நிலையம் வந்தபின், முதல்முறையாக அங்கு விடுமுறைக்கு சென்ற நாட்கள் இன்னும் உயிர்ப்புடன் நினைவில் இருக்கிறது. அந்த அறையை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. விடுமுறைக்கு அங்கு சென்றால் பெரும்பாண்மையான நேரம் அந்த அறையில்தான் இருப்பேன். காலையில் எப்போதடா போஸ்ட் ஆபீஸ் திறப்பார்கள் என்றிருக்கும். டவுனில் சென்று படிப்பவர்கள் என்பதால், தபால்களை கட்டும் சாக்குப்பை, சீல்வைக்கும் அரக்குகள் மற்றும் அச்சுகள், தினமும் தேதி மாற்றி வைக்கப்படும் முத்திரைகள் எல்லாவற்றையும் அணுகும் அனுமதியை நாங்கள் பெற்றிருந்தோம்! தபால் கட்டு வந்தவுடன் அவற்றை ஊர் மற்றும் தெரு வாரியாக பிரிப்பதிலிருந்து, முத்திரை குத்துவது வரை நாங்களே செய்வோம். கடிதம் கிடைக்கப்பெற்றவர்களில் பலர், மீண்டும் அதை எங்கள் வீட்டிற்குத்தான் கொண்டுவருவார்கள். அவற்றை அவர்களுக்கு படித்துக்காட்டி, பதில்கடிதம் எழுதித்தரும் வேலையும் எங்களுடையது. அனேகமாக நான் எழுதிய முதல் கடிதம் எனக்காக இல்லை என்றே நினைக்கிறேன்.

பள்ளிப்படிப்பு முடியும்வரை எனக்கென்று பெரிதாக ஏதும் கடிதங்கள் வந்ததில்லை. பொங்கலுக்கு ஊருக்கு செல்லும்போது வகுப்பில் முகவரிகளை பரிமாறிக்கொள்வோம். 'இந்த அட்ரஸ் போட்டா கரக்டா உனக்கு வந்துடுமாடா?' என நண்பர்கள் கேட்கும்போது, 'டேய்... போஸ்ட் ஆபீஸே எங்க வீட்லதான் இருக்கு. நாங்கதான் கட்டு பிரிப்போம்...' என்று பெருமையாய் சொல்வேன். நண்பர்கள் ஆச்சரியமாய் கேட்கக் கேட்க, போஸ்ட் ஆபீஸில் உபயோகிக்கும் technical-terms எல்லாம் பயன்படுத்தி பந்தா விட்டுக்கொண்டிருப்பேன். எங்கள் கூட்டுக்குடும்பத்தில் நாங்கள் சகோதர சகோதரிகள் மொத்தம் ஏழு பேர். பொங்கலின்போது எங்களின் மனசுக்குள் ஒரு போட்டியே நடக்கும். யாருக்கு அதிக பொங்கல் வாழ்த்துக்கள் வருகிறதென்று!

கல்லூரிக்கு சென்றபின்தான் ஏராளமான கடிதப்போக்குவரத்துகள். முழு நீள வெள்ளைத்தாளில் பக்கம் பக்கமாக எழுதிக்கொள்வோம். கடிதம் எழுதி முடித்தபின்னும் ஏதாவது தோன்றும். margin விட்ட இடங்களும் போதாமல் இண்டு இடுக்குகளிலெல்லாம் எழுதி நிரப்புவோம். காதலர்களின் பேச்சுபோல, 'அப்படி எழுத என்னதான் இருக்கிறது' என அடுத்தவர்கள் வியக்கும்படி எழுதுவோம். உன்ன எப்டில்லாம் miss பண்றேன் தெரியுமா-விலிருந்து இன்னைக்கு எங்க ஹாஸ்டல் மெஸ்ஸில் என்ன மெனு என்பதுவரை அனைத்தையும் எழுதுவோம். 'to my dear lover' என்றெல்லம் முகவரியிலேயே எனது பெயருக்கு முன்னால் ஒரு நண்பன் எழுதுவான்!

தெரிந்த நண்பர்கள் பேதாதென்று பேனா நண்பர்கள் வேறு! பெரிய அறிவுஜீவிகள் கணக்காக சீரியஸான விஷயங்களை எடுத்துக்கொண்டு மாதக்கணக்கில் பேனா நண்பர்களுடன் விவாதிப்போம். அதில் மறக்கவே இயலாத ஒரு நண்பர் - புதுக்கோட்டை அன்னசத்திரம் என்கிற ஊரிலிருந்து வெங்கடாஜலபதி என்பவர். குடும்ப சூழலால் பள்ளிப்படிப்பை தொடர இயலாமல், சைக்கிள் கடையில் வேலைபார்த்துக்கொண்டு, கடிதங்களை தன் வாழ்வின் வடிகாலாகக் கொண்டவர். அருமையாக எழுதுவார். அந்த சூழலிலும், பாலகுமாரன் முதற்கொண்டு ஏகப்பட்ட எழுத்தாளர்களை எப்படியாவது படித்துவிடக்கூடியவர். அவர் எனக்கு அறிமுகப்படுத்திய எழுத்துக்கள் நிரைய. இப்போது அவருடன் கடிதத்தொடர்பு இல்லையென்றாலும், இன்றும் அவரின் பழைய கடிதங்களை அடிக்கடி எடுத்து படிப்பேன்.

ஹாஸ்டலில் கடிதம் வருவது ஒரு கௌரவம். அது எனக்கு மிக அதிகமாகவே கிடைத்தது. B.Sc படிக்கும்போதும் சரி, MCA படிக்கும்போதும் சரி... அதிக கடிதங்கள் வருவது எனக்குத்தான். B.Sc நண்பர்களும் சேர்ந்துகொள்ள, MCA வில் கடிதங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. B. Sc நண்பர்களைப்பிறிந்து MCA சேர்ந்த புதிதில் கடிதங்களே எனக்கு மிகப்பெரும் ஆறுதல். மிக நெருங்கிய நண்பர்கள் வட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்திலேயே தங்கள் மேற்படிப்பைத்தொடர, நான் மட்டும் சென்னை வந்துவிட்டேன். அப்போது 'முஸ்தபா... முஸ்தபா...' பாடல் வெகு பிரசித்தம். "கல்விபயிலும் காலம் வரையில்/ துள்ளித்திரியும் எங்கள் விழியில்/ கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி/ நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்/ நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்/ கண்ணீரில்தானே எங்கள் farewell party" - நண்பர்களை பிரிந்த சூழலில் கேட்டதாலோ என்னவோ, என்னை மிகவும் பாதித்த வரிகள் இவை. ஹாஸ்டல் மொட்டை மாடியில் தனியாய் வாக்மேனில் இந்த பாடல் கேட்டு அழுதிருக்கிறேன்! உடனே ஓடிப்போய் நண்பர்களின் கடிதங்களை எடுத்து படிக்க ஆரம்பித்துவிடுவேன். அவர்களெல்லாம் ஒன்றாக இருப்பதால் அவர்கள் அனைவரின் கடிதங்களிலும் பெரும்பாண்மையான விஷயங்கள் ஒன்றாக இருக்கும். இருப்பினும் ஒவ்வொருவரிடமிருந்தும் தனித்தனி கடிதம் வரும். நான் அவர்களுக்கு எழுதும் கடிதங்களிலும் பெரும்பாண்மையான விஷயங்கள் ஒன்றாகத்தானிருக்கும். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கடிதம் எழுதுவேன்!

ஹாஸ்டலில், பொங்கல் மற்றும் தீபாவளியின் போது போஸ்ட்மேன் பணம் கேட்க வந்தால், நேராக என் அறைக்குத்தான் அனுப்பிவைப்பார்கள். 'இங்க வர்ர லெட்டெர்ஸ்ல பாதிக்குமேல அவனுக்குத்தான் வருது. அவன் கிட்ட போய்க் கேளுங்க...' என்பார்கள். அதுவும் பிறந்தநாளென்றால் கேட்கவே வேண்டாம். வாழ்த்து அட்டைகளும், பரிசுப்பொருள்களுமாய் போஸ்ட்மேன் அள்ளிக்கொண்டு வருவார். ஹாஸ்டலில் எனது அலமாரி முழுக்க கடிதங்கள், கடிதங்கள், கடிதங்கள்தான்... ஒவ்வொரு நாளின் பெரும்பகுதியும் கடிதங்களை படிப்பதிலும் எழுதுவதிலுமே போய்விடும். தேர்வுநாட்களில் கடிதங்களைக் காண இயலாமல் பைத்தியம் பிடிப்பது போலாகிவிடும்.

இப்போது நகரங்களிலும் பெருநகரங்களிலும் கடிதங்கள் வெறும் பத்திரிக்கைகள் அனுப்பவும் ஆவணங்களை அனுப்பவும் மட்டுமே என்றாகிப்போனது மனதை வருந்தச்செய்கிறது. எனது நெருங்கிய நண்பர் ஸ்டாலினுடன் இதுபற்றி பேசிக்கொண்டிருந்தபோது, அவரும் இப்படி சில நாட்களாய் யோசித்துக்கொண்டிருப்பதாயும், மீண்டும் அந்த பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டுமென்று, எனக்கு மிக நீண்டதாய் ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருப்பதாயும் சொன்னார். இந்த 'நீண்ட' வில் பத்துப்பதினைந்து சுழியில் 'ண' போட்டிருந்தால் பொருத்தமாய் இருந்திருக்கும்தானே!?
Read More

02 May 2006

இலக்கற்ற பயணங்கள்

எழுத மறந்த நாட்குறிப்புகள் - 1: இலக்கற்ற பயணங்கள்

சின்ன வயதிலிருந்தே எங்கும் எதிலும் இலக்குகள் வேண்டும் என்றே போதிக்கப்பட்டதாலோ என்னவோ, இலக்கற்ற பயணங்களின் சுவை உணர வாழ்வின் பெரும்பகுதி கடக்கவேண்டியிருந்தது. இலக்கில்லாமல் திரிதல் சுகம். இத்தனை மணிக்கு இன்னாரை பார்க்கவேண்டும் அல்லது இதைச்செய்யவேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லாமல் பயணிப்பதின் சுகம் அதை அனுபவித்தவர்க்கே தெரியும்.

+2 நாட்களில் நண்பன் புருஷோத்தமனுடன் மிதிவண்டியில் இப்படி பயணித்தபோது இதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் இந்த சுகம் எப்படி வருகிறது என்றெல்லாம் ஆராயவில்லை. எங்களுக்கு அதைவிட முக்கியமான வேலைகள் அப்போது இருந்தன! ஆளுக்கொரு மிதிவண்டியில் வந்தாலும் ஏதவது ஒரு தேனீரகத்தில் ஒரு வண்டியை போட்டுவிட்டு ஒரு வண்டியில் சுற்ற ஆரம்பிப்போம். பின்புறம் கேரியர் இருந்தாலும் ஒருமுறை கூட கேரியரில் அமர்ந்ததில்லை. யார் ஓட்டினாலும் மற்றவர் முன்புறம் உள்ள கம்பியில் அமர்ந்து பயணிப்பதே எங்களின் வழக்கம். அதுதான் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் பேசிக்கொண்டே பயணிக்க வசதியாக இருக்கும்.

கல்லூரி நாட்களில் இப்படி பயணிக்க எனக்கு கிடைத்த அரிய துணை, என் நண்பன் சுந்தரமூர்த்தி. இருவருக்கும் ஒரே பிறந்த நாள்(வருடம் உட்பட), ஒரே blood group மற்றும் ஒரே ரசனை! எங்களின் விவாதத்தில், இத்தகைய பணங்களில் காணக்கிடக்கும் சுகத்திற்கான காரணம் இலக்கின்றி பயணிப்பதே என்பதையறிந்தோம். கல்லூரி காலங்கள் முடிந்த பின்னும், இப்போதும் கூட, இப்படி பயணிப்பதற்காகவே நான் மயிலாடுதுறை செல்வதுண்டு.

அவனுடைய bike எடுத்துக்கொண்டு சுற்ற ஆரம்பிப்போம். நினைத்த இடத்தில் நிறுத்தி சூடாக தேனீர் அருந்துவோம். சட்டென்று மனதிற்கு பிடிக்கும் மரநிழல், நீர் சுழித்தோடும் சிற்றோடை, ஏதேனும் ஒரு பாலத்தின் மதில் சுவர் எப்படி ஏதேனும் பார்த்தல் வண்டியை ஓரம்கட்டிவிட்டு அமர்ந்து பேசுவோம், பேசுவோம் பேசிக்கொண்டே இருப்போம்.

வீட்டிலிருந்து கிளம்பும்போது கூட எங்கு செல்வது என்ற எந்த முடிவும் எடுத்திருக்க மாட்டோம். மயிலாடுதுறையைச் சுற்றி ஒரு நாற்பது அல்லது ஐம்பது கிலோமீட்டர் சுற்றளவில் எங்காவது செல்வோம். பூம்புகார் கடற்கரை, தரங்கம்பாடி கடற்கரை, அதையொட்டி அமைந்த டச்சு கோட்டை, கங்கைகொண்டசோழபுரம், வைத்தீஸ்வரன் கோயில், திருக்கடையூர் இப்படி எங்காவது பயணிப்போம்.

திருக்கடையூர் என்றால் அபிராமி கோயிலுக்கு செல்லவேண்டும் என்றில்லை. திருக்கடையூருக்கு சற்று முன்பே ஏதேனும் ஒரு பாலத்தின் மதில் சுவரில் அமர்ந்திருந்துவிட்டுத் திரும்பியிருக்கிறோம். வழிநெடுகிலும் எத்தனையோ பாலங்கள் இருப்பினும், குறிப்பாக அந்தப் பாலத்தைத் தேர்வுசெய்யவென்று பெரிதாக எந்தக் காரணமும் இருக்காது. அதைக் கடக்கையில் எங்கள் மனம் சொல்லும், இங்கு அமரலாமென்று. அவ்வளவுதான். சில சமையம் மயிலாடுதுறை தொடர்வண்டி சந்திப்பின் மேம்பாலத்துடன் எங்கள் பயணம் முடிந்திருக்கும்.

நாங்கள் வழக்கமாக பெட்ரோல் போடும் பங்க் இருக்கும் திசை, சென்றுகொண்டிருக்கும் சாலையின் போக்குவரத்து நெரிசல், முன்னே செல்லும் வாகனத்தின் பின்னே அமர்ந்திருக்கும் அழகிய பெண், சாலையில் எதிர்படும் "அறுவை" அன்பர்கள்... இப்படி யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் எங்கள் பயணத்தின் திசையை தீர்மானிக்கலாம்! ஏனெனில் எங்களின் விருப்பம் ஒரு இலக்கை அடைவதன்று. just பயணிப்பது!

இப்படித்தான் ஒருமுறை, கும்பகோணம் சாலையில் போகலாம் என கிளம்பினோம். மேம்பாலத்தை தாண்டியதும் சித்தர்காடு என்னும் கிராமத்தைல் "டென்ட் கொட்டகை" திரையரங்கை பார்த்தோம். மாலை மற்றும் இரவு காட்சிகள் மட்டுமே திரையிடப்படுகிற அந்த திரையரங்கில், ஏதோ ஒரு பழைய படம் ஓடிக்கொண்டிருந்தது. பால்யங்களில் எங்கள் கிராமத்து திரையரங்கில் படம் பார்த்த உணர்வுகளை மீட்டெடுக்க, என்ன படம் என்றுகூட யோசிக்காமல் உள்ளே புகுந்துவிட்டோம். பெஞ்ச் டிக்கெட்! மண் தரையில் அமைக்கப்பட்ட பெஞ்சுகள், ஆண்-பெண் தடுப்புச்சுவர், பல வேட்டிகளை ஒன்றாக இணைத்து தைத்தது போன்ற திரை, கதை நிகழும் களத்திலேயே அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது போல் எல்லாவற்றையும் மறந்து ரசிக்கும் கிராமத்து மக்கள், கடலை மிட்டாய், கலர் சோடா என களைகட்டும் இடைவேளை... இப்படி எதுவும் மாறாத திரையரங்கு எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது. சின்னச்சின்ன விஷயங்களைக்கூட கவனித்து, 'இது கூட மாறல பார்டா...!' என அதிசயித்தோம்.

இலக்குகளற்ற எங்கள் பயணங்களில் எதிர்பார்ப்புகளே இல்லை. எதிர்பார்ப்புகள் இல்லாததால் எங்கள் பயணங்கள் ஏமாற்றங்களைச் சந்தித்ததே இல்லை. மாறாக, எங்களுக்கு கிடைத்த சின்னச்சின்ன சந்தோஷங்கள் கூட எதிர்பாராதவையாக அமைந்ததால் அவற்றின் சுவை இருமடங்காயிற்று!

தங்களைவிட மென்மையானவற்றை விலக்கியும், வலிமையானவற்றிற்கு வளைந்துகொடுத்தும், தன்னிச்சையாய் பாதையமைத்துச்செல்லும் நதிகள் போன்றவை எங்களின் இத்தகைய பயணங்கள். கடலினை அடையவேண்டும் என்கிற இலக்குடன் நதிகள் பயணிப்பதாய் நான் உணரவில்லை. தன் பாதையில் சட்டென எதிர்ப்படுகின்ற கடலுடன் கறைந்துபோவதாகவே அறிகிறேன். இச்செயல் நதிகளின் வெற்றியோ அல்லது தோல்வியோ அன்று. ஒரு அனுபவம். அவ்வளவே.

இத்தகைய பயணங்களின்போதான எங்களின் மனநிலை, வரையறைக்குட்படாத உன்னத நிலையிலிருக்கும். இவற்றையெல்லாம் இவனிடம் சொல்லவேண்டாமென மனதிற்குள் தணிக்கை செய்துவைத்த விஷயங்களைக்கூட, தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளத்தூண்டும். எண்ணற்ற வேஷங்களுக்கிடயே மறைந்துகிடக்கும் 'உண்மையான எங்களை' மீட்டெடுக்கும் திறன் வாய்ந்தவை இப்பயணங்கள். ஒவ்வொரு பயணமும், சின்னதாய் ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட்ட திருப்தி தரும். இப்படி இருத்தல்தான் உயிர்களின் இயல்போ என்று திகைத்துப்போவோம். நமது அன்றாட வாழ்க்கை நம்மை இயல்பிலிருந்து கண்காணாத தொலைவிற்கு அழைத்துச்சென்றுவிட்டதாய் அயர்ந்துபோவோம். இலக்குகள் நிரைந்த நம் வாழ்வு, நமக்கேயான நம் நாட்களின் பெரும்பாண்மையை, நம் கண்ணெதிறே கொள்ளையிட்டுப்போகும் சோகம் உணர்வோம்.

என்ன உணர்ந்து என்ன? எல்லாம் முடிந்து சென்னை செல்லும் பேருந்து ஏறி இருக்கையில் சாய்ந்ததும், எனது நாளைய இலக்குகளை மனதிற்குள் பட்டியலிட்டபடி, மீண்டும் தொலைந்துபோய்க்கொண்டிருப்பேன் 'நான்'!
Read More

13 April 2006

கருங்கற் சோலை

ங்கைகொண்டசோழபுரம் கோயிலை பார்க்கும்போது, கருங்கற் பூக்கள் விளைந்த ஒரு சோலை போலத்தான் இருக்கும். ஏனோ தெரியவில்லை, இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலைவிட, அவரின் மகன் இராஜேந்திர சோழன் கட்டிய இந்த கோயிலை மிகவும் பிடித்துவிட்டது!

இந்த புகைப்படங்களை எடுக்கச்சென்றபோது மத்தியில் இருக்கும் பெரிய கோபுரத்தில் வேலைப்பாடுகள் நடந்துகொண்டிருந்ததால் சாரம் கட்டி மறைத்திருந்தார்கள். அந்த பிரம்மாண்டம் நீங்கலாக மற்றவை...


















இக்கோயில் பற்றி மேலும் சில தகவல்கள்.
Read More

23 March 2006

எழுத மறந்த நாட்குறிப்புகள்

வாழ்வின் அத்தியாவசியங்களில் ஒன்று பகிர்தல். எல்லோரும் எல்லா இடங்களிலும் எதையாவது யாருடனாவது பகிர்ந்துகொண்டேதான் இருக்கிறோம். அது ஒரு உணர்வாகவோ, எண்ணமாகவோ அல்லது பொருளாகவோ... எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பகிர்தல் மிக அவசியமாகிறது. phone, mobile phone, email, chat, blog என்று நமது தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை பகிர்தலை சார்ந்தே இருக்கிறன. பகிர்தல் இல்லாத ஒரு வாழ்வை நினைத்துப்பார்க்கவே முடிவதில்லை.

இதில் பெரிதும் பங்கு வகிப்பவர்கள் நண்பர்கள். வெகு அன்னியோன்யமான உணர்வுகளைக்கூட பகிர்ந்துகொள்ள, நமக்கு கிடைத்த வரம் நண்பர்கள். தன் வாழ்க்கைத்துணையிடம் கூட பகிர்ந்துகொள்ளாத விஷயங்களை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்பவர்கள் அதிகம். ஓர் இனிய நட்பு வாழ்க்கைத்துணையாகவோ அல்லது வாழ்க்கைத்துணை ஓர் இனிய நட்பாகவோ அமையப்பெற்றவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.

பள்ளி நாட்களில், அமைதியாய் இருக்க பணிக்கப்பட்டும், கட்டுப்படுத்தவே முடியாமல் புருஷோத்தமனுடன் பேசி அடிவாங்கிய ஆசிரியர் வராத வகுப்புகள்தான் எனக்கு பகிர்தலின் அவசியத்தை முதன்முதலாய் உணர்த்தின. ஏதாவது ஒரு வகுப்புக்கு ஆசிரியர் வராவிட்டால் பக்கத்து வகுப்பு ஆசிரியர் எங்கள் வகுப்புக்கு வந்து, "யார்டா இங்க மானிட்டர்..?" என்பார். கலர் வர்மா எழுந்து நிர்ப்பான். "பேசரவங்க பேரெல்லாம் board-ல எழுதி வை. வந்து கவனிச்சிக்கறேன்..." என்று சொல்லிவிட்டுப்போவார்.

எங்கள் வகுப்பு மானிட்டர் எங்களின் நெருங்கிய நண்பன் என்பதால் இரண்டு மூன்று எச்சரிக்கை சலுகைகள் கிடைக்கும். ஆனாலும் சிறிது நேரத்தில் எங்கள் பெயர்கள் தாங்கிய கரும்பலகை கலர் வர்மாவின் கடமை உணர்வைச்சொல்லும். அதைப்பார்த்த பின்புதான் நாங்கள் மறுபடி பேசியிருக்கிறோம் என்பதே எங்களுக்கு தெரியும்! எப்படியும் பிரம்பு அடி நிச்சயம் என்றான பின்பு மறுபடியும் பேசத்துவங்குவோம். என்ன செய்வது..?! பதிண்ம வயதுகள் புரிந்தும் புரியாமலும் நமக்கு அறிமுகப்படுத்தும் ஆயிரமாயிரம் ரகசியங்களை நண்பர்களிடம் மட்டும்தானே நாம் பகிர்ந்துகொள்ளமுடியும்! அப்பப்பா... எத்தனை ஆச்சர்யங்கள், பயங்கள், இன்ப அதிர்ச்சிகள், கேள்விகள், பதில்கள்!

நண்பர்களுடனான நமது பகிர்தல்கள் அட்சயப்பாத்திரம் போன்றவை. பேசப்பேச விஷயங்கள் தீர்ந்துபோவதில்லை. மறாக இன்னும் பல கிளைகளாக எல்லையற்றுப் பிரிந்து நீள்கின்றன. காலையில் எழுந்ததிலிருந்து அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும்வரை நிகழும் சின்னச்சின்ன விஷயங்களைக்கூட சேர்த்துவைத்து, அனைத்தையும் தொலைபேசியில் சொல்லித்தீர்த்தால்தான் இரவு தூக்கம் வரும் என்று சொல்லும் நண்பர்கள் நமக்கு இருக்கிறார்கள். நம் நெஞ்சைத்தொடுகிற எந்த ஒரு உணர்வும் யாருடனாவது பகிர்ந்துகொண்டாலொழிய முழுமையடைவதேயில்லை. இன்பங்கள் இரட்டிப்பாவதும், துன்பங்கள் பாதியாய் குறைவதும் பகிர்தலின்போதுதானே!

"ஏய்... நான் இங்க வடபழனி கோயில்ல இருக்கேன்டா. இங்க ஒரு குழந்தை என்ன cute தெரியுமா. அதும் மாம்பழ கலர் பட்டுப்பாவாடைல. செம சேட்டை பண்ணுது. நீமட்டும் பாத்த... அப்படியே கடிச்சி சாப்ட்டுடுவ!" - எங்கோ இருக்கும் என் தோழியை நிமிட நேரத்தில் எப்படியாவது வடபழனி முருகன் கோயிலுக்கு கொண்டுவந்து அந்த குழந்தையை அவளுக்கு காட்ட முடியாதா எனத்தவித்துப் பின் முடியாமல், தொலைபேசியில் அழைத்து சொல்லியிருக்கிறேன்.

"அருமையான படம்டா. frame by frame செதுக்கியிருக்கான். என்ன play தெரியுமா...?! ச்சான்சே இல்ல!" - படம் முடிவதற்கு முன்னாலேயே, இடைவேலையில் நண்பனை தொலைபேசியில் அழைத்து புலம்பியிருக்கிறேன்.

"ஹைய்ய்ய்யோ..! செம figure மச்சி..!!" - சாலையில் எதிரில் கடந்த அந்த பெண்ணின் காதில் விழக்கூடும் என்றுகூட யோசிக்காமல், பைக் ஓட்டிக்கொண்டிருந்த நண்பனின் தோளை இறுகப்பற்றியிருக்கிறேன்.

"அப்பா...! university level-ல second prize-பா." - பாரதிதாசன் university festivel-ல் painting-ல் பரிசு வென்றதை, அதிகாலையில் என் அழைப்புமணிக்கு கதவுதிறக்கப்போகும் அப்பாவிடம் சொல்லி அசத்தவேண்டுமென்று திருச்சியில் பஸ் ஏறியதிலிருந்து மனதிற்குள் ஒத்திகை பார்த்தபடி பயணித்திருக்கிறேன்.

இதுபோல சின்னதும் பெரிதுமாய் லட்சோபலட்சம் விஷயங்கள். ஒவ்வொன்றையும் பகிர்ந்த பின்புதான் மனம் நிறைவுற்றது. எவ்வளவு யோசித்தும் புரியவே புரியாத ஆச்சர்யம் அது. நாம் தான் அதை அனுபவிக்கிறோம். அதன் சுவை முழுதும் உணர்கிறோம். ஆனால் பகிர்ந்தால்தான் மனம் நிறைவுறுகிறது!

இங்கே எனது மன நிறைவிற்காய், என்னை பாதித்த பல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன். ஆனந்த விகடனில் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் "துணையெழுத்து" படித்தபோது அந்த வடிவம் என்னை மிகவும் கவர்ந்தது. கதை, கவிதை மாதிரி புனைவதற்கு யோசிக்காமல் உணர்ந்ததை உணர்ந்தபடி பகிர்ந்துகொள்ள உதவும் ஓர் அருமையான வடிவம் அது. சிறுகதையை ஒத்த கட்டுரைபோலவும், மென்மையான சிறுகதைக்கே உரிய ஒரு முடிவுடனும், படிப்பதற்கு அலாதியான வடிவம். படிக்கும்போது யாரோ நமக்கு கதை சொல்லிக்கொண்டிருப்பதுபோல் தோன்றச்செய்யும் இதமான வடிவம். அந்த வடிவத்திலேயே என் உணர்வுகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

கேட்ப்பவர்களுக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பது பற்றியெல்லாம் கூட கவலைப்படாமல் எதைப்பற்றியாவது சுவாரஸ்யமாய் சிலர் பேசிக்கொண்டேயிருப்பார்கள். எனது இந்த பகிர்தல்கள் கூட அப்படி இருக்கலாம்! ஆனாலும், அதைப்பற்றியெல்லாம் நான் கவலைபடப் போவதில்லை!! குறைந்தபட்சம், நான் எழுத மறந்த எனது நாட்குறிப்புகளின் ஒரு பதிவாகவாவது இவை இருந்துவிட்டுப்போகட்டுமே :)
Read More

17 March 2006

யார் இவர்?

கல்லூரி நாட்களில் ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை செம போர் அடித்து உட்கார்ந்திருந்தபோது ஒரு வாரப்பத்திரிக்கையில் கண்ட புகைப்படம் ரொம்ப expressive-வா இருக்கேன்னு impress ஆகி பண்ணிய pencil sketch இது. சென்ற ஞாயிற்றுக்கிழமை செம போர் அடித்ததால் time pass-க்காக என் பொக்கிஷங்களை கிளறும்போது கிடைத்தது. உங்கள விட்டா வேற யார் கிட்ட இதெல்லாம் share பண்ணிக்க முடியும்?! பாத்திட்டு இது யார்னு சொல்லுங்க.



கரெக்டா சொல்லிட்டிங்கன்னா நல்லா வரைஞ்சிருக்கேன்னு அர்த்தம்! இல்லன்னா இது எப்பயோ பண்ணதுதானே இப்பொ வரைஞ்சிருந்தா நல்லா பண்ணியிருப்போம்னு மனச தேத்திக்கறேன் :)
Read More

14 March 2006

சங்கிலித் தொடர்...

உண்மை அவர்களின் அழைப்பை ஏற்று இத்தொடரில் நானும் இணைகிறேன்.

எவ்வளவோ மனிதர்களும், சம்பவங்களும் நிரம்பிய இந்த வாழ்வில், கீழே தொகுத்துள்ள ஒவ்வொன்றிலும் நான்கை மட்டும் குறிப்பிடுவது மிக கடினம். அதிலும் திரைப்படங்கள்... chance-ஏ இல்ல!இருந்தாலும்... இந்த சங்கிலித் தொடரின் நியதிக்கு உட்பட்டு மனதில் சட்டென தோன்றிய நான்குகள் இங்கே...

பணிகள்:
  1. கல்லூரி நாட்களில், A.V.C கல்லூரி மாணவர் இதழான "இளந்தூது" -வில் இணை ஆசிரியராக.
  2. அதே நாட்களில், "நுண் கலை மன்றம்" செயலாலர்.
  3. முதுகலை முடித்த பின் மூன்று ஆண்டுகளாக மென்பொருள் வல்லுனர்.
  4. இப்போது... நண்பனுடன் சேர்ந்து சொந்தமாக மென்பொருள் தயாரிக்கும் தொழில்.

பொழுது போக்குகள்:
  1. திரைப்படங்கள்.
  2. இசை கேட்ப்பது.
  3. தொலைபேசி அரட்டை (அ) கடலை.
  4. புகைப்படக்கருவியுடன் ஊர் சுற்றுவது.

திரைப்படங்கள்:
  1. கோகுலத்தில் சீதை. (எத்தனையோ படங்களை பலமுறை பார்த்திருந்தாலும், தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு காட்சிகள் பார்த்த படம் இது!)
  2. சலங்கை ஒலி.
  3. அழியாத கோலங்கள்.
  4. மல்லி. (சந்தோஷ் சினவின் குறும்படம்).

வாழ்ந்த இடங்கள்:
  1. குடியாத்தம்(குடியேற்றம்).
  2. கடலூர்.
  3. மாயிலாடுதுறை.
  4. சென்னை.
(சொந்த ஊர்களான சோழன்குடிக்காடு கிராமமும், விருத்தாசலமும் அவ்வப்போது விடுமுறைக்கு சென்றுவந்த இடங்கள்!)

உணவு வகைகள்:
  1. பழைய இட்லி வீணாகக்கூடாதென செய்கிற இட்லி உப்மா முதற்கொண்டு அம்மா சமைக்கிற அனைத்தும்.
  2. pizza & burger.
  3. egg briyani.
  4. கடலை மிட்டாய்.
காதலித்த பெண்கள்: எல்லாமே ஒருதலை காதல்தாங்க! :(
  1. ஒண்றாம் வகுப்பில் கரிய விழிகளும், சுருள் முடியும், துடுக்குப்பேச்சுமாய் என்னைக்கவர்ந்த ஷண்முகப்பிரியா.
  2. ஓசை படம் பார்த்ததிலிருந்து இன்றுவரை பேபி ஷாலினி.
  3. +1, +2 chemistry tution-ல் வகுப்புக்கு வந்தாலும் வராவிட்டாலும், என்னை பாடம் கவனிக்க இயலாமல் செய்தவள்.
  4. இன்னும் முற்றுபெறாத ஓவியமாய், நினைவறிந்த வயதிலிருந்து நானறிந்த பெண்கள் அனைவரின் சாயலையும் உள்வாங்கி, என் கற்பனை எனக்குள் வரைந்துகொண்டே இருக்கும் என் dream girl!

பிடித்த இடங்கள்:
  1. எங்கள் கிராமம்(சோழன்குடிக்காடு).
  2. என்னில் பெரிதும் மாறுதல்களை ஏற்படுத்திய A.V.C கல்லூரியும் அதனை சார்ந்த இடங்களும்.
  3. பாட்டி வீட்டின் பின்புறம், முன்பிருந்த நந்தவனம்.
  4. மயிலாடுதுறை கச்சேரி தெருவில் நாங்கள் தங்கியிருந்த மொட்டைமாடி ஒற்றை அறை.

பிடித்த சுற்றுலா தலங்கள்:
  1. கங்கைகொண்டசோழபுரம் கோயில்.
  2. மாமல்லபுரம்.
  3. கொடைக்கானல்.
  4. சென்றுவந்த எல்லா அருவிகளும்.

செல்ல விரும்பும் இடங்கள்:
  1. அந்தமான்.
  2. மாலத்தீவுகள்.
  3. நயாகரா.
  4. இலங்கை.
மிகவும் பத்திரப்படுத்தி வைத்திருப்பவை:
  1. Packet size notebook-லிருந்து அவசரமாய் எழுதி, கிழித்துப் பின் கசக்கி எறியப்பட்ட - எனக்கு வந்த முதல் காதல் கடிதம்!
  2. நண்பர்கள் autograph எழுதிக்கொடுத்த ஏடுகள்.
  3. என் பதின்ம வயதுகளில் சிலவற்றை பதிவுசெய்து வைத்திருக்கும் நாட்குறிப்புகள்.
  4. இப்போதும் என்னை ஆச்சர்யப்படுத்தும், சின்ன வயதில் நான் வரைந்த சில ஓவியங்களும் எழுதிய சில கதைகளும்.
என்னுடன் நிரைய்ய்ய்ய்ய்ய்ய பேசிய தோழர்கள்:
  1. அப்பா.
  2. புருஷோத்தமன்(குழலி).
  3. சுந்தரமூர்த்தி.
  4. வீரமணி.
என்னுடன் நிரைய்ய்ய்ய்ய்ய்ய பேசிய தோழிகள்:
  1. திருமதி A. சுகன்யா.
  2. திருமதி V. ஜானகி.
  3. திருமதி S. வசந்தி (என் தங்கை).
  4. திருமதி B. பூரணி.
என்றும் மறக்க இயலாத நினைவுகள்:
  1. விடுமுறை நாட்களில் கிராமத்தில் விளையாடிக்களைத்த எங்களின் கால்களை மடியில் போட்டு, பாதத்தில் விளக்கெண்ணை தேய்த்து, ராஜா ராணி கதைகள் சொல்லி, எங்கள் பாட்டி எங்களை சுகமாய் தூங்க வைத்த இரவுகள்.
  2. பள்ளியில் அமைதியாய் இருக்க பலமுறை பணிக்கப்பட்டும், கட்டுப்படுத்தவே முடியாமல் புருஷொத்தமனுடன் பேசிப்பேசி அடிவாங்கிய ஆசிரியர் வராத வகுப்புகள்.
  3. நானும் நண்பன் தர்மராஜனும் மிக விரும்பி கஷ்டப்பட்டு நடத்திய இளந்தூது ஏழாம் ஆண்டு விழா.
  4. இளங்கலை படிப்பு முடித்து, கதறி அழுதபடி நண்பர்களை பிரிந்து ஊர்திரும்பிய ஒரு மதிய பொழுது.

இன்னும் படிச்சிட்டு இருக்கீங்களா?!!! நிஜமாவே thanks-ங்க!

இத்தொடரில் நான் இணைக்க விரும்பும் நபர்கள்:
  1. புருஷோத்தமன் (குழலி பக்கங்கள்)
  2. பத்மப்பிரியா (சிறகுகள்) - சில மாதங்களாக இவரை இங்கே காண இயலவில்லை. ஒருவேலை பார்த்தால் எழுதட்டும்.
  3. முகமூடி
  4. நிவேதா (ரேகுப்தி..!!)

நன்றி.


Read More