என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

09 December 2005

தலகோனா

பொதுவாய் கோயில்களுக்கு அவற்றின் சூழலையும், வடிவமைப்பையும் ரசிக்க மட்டுமே செல்வேன். எனக்கு மிகப்பிடித்த கோயில் - கங்கை கொண்ட சோழபுரம் கோயில். காரணம் அந்த புல்வெளியில் நிரம்பியிருக்கும் ரம்மியமான அமைதி. மென்மையான புல் வெளியில் விளைந்த கற்கோபுரங்கள் தரும் அழகு. அந்த சூழல் மிக ரசிக்கத்தக்க வகையில் இருக்கும். பிரார்த்தனைகளில் நம்பிக்கை இல்லாத போதும் எனக்கு மிகப்பிடித்த இடம் கோயில்களே!

சென்னையில் இருப்பதால், நேரம் அமைந்தால் அடிக்கடி மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு செல்வேன். மனம் அமைதியற்று இருக்கும் வேலைகளில் கண்டிப்பாக அங்கு செல்வேன். முதலில் இருக்கும் விநாயகர் சன்னிதியில் திருநீறு வைத்துக்கொண்டு, அருகிலிருக்கும் மண்டபத்தில் அமர்ந்து கொள்வேன், மணிக்கணக்காய்.

இருந்தும், எத்தனையோ நண்பர்கள் அழைத்தும் செல்ல மறுக்கும் இடம் - திருப்பதி. 10-ம் வகுப்பு படிக்கும் போது கடைசியாய் சென்றதாக நினைவு. முதலில் எனக்கு அங்கு பிடிக்காத விஷயம் அங்கு நிரம்பி வழியும் கூட்டம் தான். அந்த நெரிசலும்... நசநசப்பும்... எப்போதடா கிளம்புவேம் என்றாகிவிட்டது.

சமீபத்தில் என் நண்பனுக்காக, அவன் வேண்டுதலுக்காக திருப்பதி சென்றேயாக வேண்டிய சூழல். இரண்டு மாதங்களுக்கு முன்னரே தரிசனத்திற்கு பதிவு செய்தோம். அப்போதிலிருந்தே விசாரிக்க ஆரம்பித்துவிட்டேன்- திருப்பதிக்கு அருகில் ஏதேனும் பார்க்கத்தகுந்த இடங்கள் இருக்கின்றதாவென.

கீழ் திருப்பதியில் இருந்து 60 கி. மீ. தொலைவில் "தலகோனா" என்கிற இடத்தில் ஒரு அருவி இருப்பதாயும், அங்கு "அதர்மம்", "காதல் கொண்டேன்" மற்றும் சில திரைப்படங்களின் படப்பிடிப்பு நிகழ்ந்ததாயும் அறிந்தேன். "காதல் கொண்டேன்" climax அங்குதான் எடுக்கப்பட்டதாம். அருவி என்றதும் மனம் மிக உற்சாகம் கொண்டது. நீரின் வடிவங்களில் எனக்கு மிகப்பிடித்தது அருவிதான். நண்பர்களிடம் அப்படியே அங்கும் செல்லலாம் என சம்மதம் பெற்று, அதன் படி ஒரு நாள் முன்னதாகவே சென்று "தலகோனா" நீர்வீழ்ச்சியையும் பார்ப்பதென முடிவானது.

காலை 11 மணிக்கு கீழ் திருப்பதியை அடைந்தோம். அங்கேயே ஒரு அறை எடுத்து, luggage எல்லாம் போட்டுவிட்டு, தலகோனா விற்கு வழி விசாரித்துக்கொண்டு கிளம்பினோம். கீழ் திருப்பதியிலிருந்து தலகோனா வரை - மெல்லிசை மிதந்த மகிழூந்தில்(அதாங்க... car), இயற்கையை தனிமையில் ரசிக்க மலைகளில் ஏறி இறங்கி தன்னிச்சையாய் ஓடிய சாலையில், மிதமான வேகத்தில் சென்றதே ஒரு சுகானுபவம்.

அருவியை அடைய சுமார் 2 கி. மீ. தூரம் மலைப்பாதையில் நடந்து செல்லவேண்டும் என்றார்கள். அதுதான் நாம் செய்த பாக்கியம் என்று சொல்ல வேண்டும். அந்த மலைப்பாதையில் பாதுகாப்பிற்காக செய்யப்பட்ட சில விஷயங்களைத்தவிர அனைத்தும் இயற்கை... இயற்கை... இயற்கை..!

முதலில் அடைந்த அருவியின் ஒரு பகுதி, சுற்றிலும் மலை சூழ, ஒரு குகைக்குள் சென்ற உணர்வு. ஒருபக்கம் மட்டும் தண்ணீர் விழ, பிரம்மாண்டமான மலைகளுக்கிடையில் நின்றபோது, நான் இயற்கையின் மிகச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சிறிய அங்கம் என உணர்ந்தேன். நாங்கள் சென்றிருந்தது நல்ல வெய்யில் காலத்தில் என்பதால் தண்ணீரின் அளவு குறைவாயிருந்தது. ஆனால் வருடம் 365 நாட்களும் தண்ணீர் வந்துகொண்டிருகும் என்றார்கள். சீசனில் தண்ணீரின் வீழ்ச்சி பிரம்மாண்டமாய் இருக்குமாம். அந்த சூழலை பார்த்தால் உண்மைதான் எனப்பட்டது.

அங்கிருந்த குரங்குகளை ரசிக்கவே நேரம் போதாது. உண்மையில் அவற்றை பார்க்கப்பார்க்க பொறாமையாகத்தான் இருந்தது. அவற்றுக்கு கிடைத்த வாழ்வு நமக்கு கிடைத்ததா என்றால், சத்தியமாக இல்லை என்றுதான் சொல்வேன்.

ஒரு குரங்கை மட்டும் தொடர்ந்து வெகுநேரம் கவனித்தேன். தன் ஐம்புலன்களின் நுகர்விற்கும் இயற்கை அள்ள அள்ளக் குறையாமல் கொடுத்திருப்பதை, புரிந்தோ புரியாமலோ, முழுமையாய் அனுபவிக்கிறது அது. இயற்கையைத்தாண்டி வேறொன்றிலும் தேவை இருக்கவில்லை அதற்கு. நாம் மட்டும் இவை எதையும் அனுபவிக்காமல் எதைத்தேடி ஓடுகிறோம் இப்படி? அதுவும் வாழ்க்கை முழுக்க!

நம்மில் ஒவ்வொரு தலைமுறையும் தன் அடுத்த தலைமுறையை வளமாக்கவும், அதற்கு சேர்த்து வைக்கவுமே செலவிடப்படுகின்றன. இது ஒரு முடிவே இல்லாமல் தொடர்கிறது எனில், எந்த தலைமுறை எல்லாவற்றையும் அனுபவிக்கும்? அடுத்த தலைமுறையின் தேவை என நாம் நம்புவது எதை? முதல் தலைமுறை, மூன்றாவது தலைமுறைக்கு சேர்த்து வைக்கச்சொல்லி இரண்டாவது தலைமுறையை விரட்டுகிறது! தொடர்ந்து நீளும் இந்த வாழ்வின் போக்கில், வருடத்திற்கு ஒண்றிரண்டு முறைகள் சுற்றுலா என்கிற வாய்ப்புகள் கிடைக்கின்றன - இயற்கையை உணர!

இதோ என் எதிரே அமர்ந்து என்னை வினோதமாய்ப் பார்க்கும் இந்த குரங்கிற்கு தினம் தினம் இன்பச்சுற்றுலாதான். இதன் முன்னோர்கள் இதற்கு என்ன சேர்த்து வைத்தார்கள்? இதன் பேரில் எத்தனை ஏக்கர் நிலம் இருக்கும்?! அல்லது, இந்த குரங்குதான் தன் அடுத்த தலைமுறைக்கு என்ன சேர்த்து வைத்திருக்கிறது? என்ன இல்லை இவற்றின் வாழ்வில்? இதன் தாயும் இதனை தாயன்புடன்தானே பாலூட்டி வளர்த்திருக்க வேண்டும்! தன் உணவைத் தானே தேடும் நிலை வந்ததும் தனக்கான வாழ்க்கையை தானே அமைத்துக்கொள்ள இவர்களுக்கு யார் சொல்லித்தந்தது? அதுதான் இயற்கையின் இயல்போ! நாம் தான் மிக விலகி வந்துவிட்டோமோ?!

"உன்னை பாத்தா ரொம்ப பொறாமையா இருக்கு..." என்றேன் வாய்விட்டு. ஏதோ உளறுகிறான் இவன் என்பதாய் பார்த்துவிட்டு ஓடிவிட்டது.

சும்மா உட்கார்ந்திருக்கிறது
அமைதியாய்,
புல்
தானாகவே வளர்கிறது
வசந்தம் வரும்போது.

-படித்தபோது புரிந்துகொண்ட இந்த ஸென் கவிதையின் அர்த்தத்தை இன்று உணர்ந்துகொண்டேன்.

இன்னும் சற்று மேலே சென்றால் அருவியின் இன்னோரு பகுதியை காணலாம் என்றார்கள். அங்கு செல்ல படிகள் கூட அதிகம் இல்லை. ஆனால் அப்படி ஒன்றும் கடினமாகவும் இல்லை. மிக அற்புதமான ஒரு சூழல் அங்கு. வெகு உயர்ந்த செங்குத்தான மலை முகட்டிலிருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டிருக்கிறது - வேறெந்த பாறையையும் தொடாமல்! கீழேயுள்ள படத்தில் அந்த மலை முகட்டின் ஆரம்பமும் தெரியவிலை, தண்ணீர் விழுந்து தெறிக்கும் தரையும் தெரியவில்லை! (ஆர்வ கோளாரில் அருவியை அடையும் முன்னமே நிறைய படங்கள் எடுத்துவிட்டதால் அருவியை அடைந்தபோது camera battery-யில் charge இல்லை. அதனால் பல நல்ல கோணங்களை தவறவிட நேர்ந்தது.)

குளிக்கலாம் என அருவியில் நின்றால் தண்ணீர் முழுவதும் நேராக நம்மீதுதான் விழுகிறது - மொத்த விசையுடன். ஒவ்வொரு துளியும் தனித்தனி ஊசியாய் உடலில் இறங்குவது போல, வேறெங்கும் உணர முடியாத இன்ப வேதனை அது! அதை உணர்ந்தபோது அடிவயிற்றிலிருந்து குரலெடுத்து ஓவென கத்தினோம். வாழ்வில் மறக்க முடியாத குளியல்!

எவ்வளவு நேரம் போனதென்றே தெரியவில்லை. கிளம்ப மனமில்லாமல் ஆடிக்கொண்டிருந்தோம். இருட்ட ஆரம்பித்ததை உணர்ந்து, ஏழுமலையான் மீது அதீத பக்தி கொண்ட என் நண்பன் கிளம்பலாம் என நச்சரிக்க ஆரம்பித்தான். இரவே ஒருமுறை திருமலைக்கு சென்றுவரவேண்டுமென்பது அவனது ஆசை. காலையில் தான் அங்கு செல்கிறோமே, இங்கு இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் என்றால் கேட்பதாக இல்லை. அன்று சனிக்கிழமையாம். அதுவே இரு விசேஷமாம். அதோடு அன்று பிரதோஷம் வேறாம். அதிலும் பிரம்மோற்சவ நாட்களிளேயே சிறந்த நாளான "கருட சேவை" அன்றுதானம்! இவ்வளவும் ஒன்றாக வேறென்றும் வரவே வராது என்றான். வந்ததே அவனுக்காகத்தான். சரியென்று கிளம்பிவிட்டோம்.

தலகோனாவிலேயே தங்குவதற்கு விடுதிகளும்(Govt.) இருப்பதை அறிந்து, தொலைபேசியில் அறைகள் பதிவு செய்ய யாரை அனுகுவது(மச்சி next time வரப்போ இங்கயே ஒரு நாள் தங்கனும்டா!) என்பதான தகவல்களை சேகரித்து கிளம்பினோம். ஹோட்டல் சாப்பாடு தவிர்த்து, நாம் பணம் கொடுத்து என்ன வேண்டும் என சொல்லிவிட்டால், நமக்கென மீன் முதற்கொண்டு அனைத்தும் சமைத்துத் தர ஆட்கள் இருக்கிறார்கள் இங்கே!

மீண்டும் மெல்லிசை மிதக்கும் மகிழூந்தில், அருவியில் குளித்த அசதி கண்களை அயர்த்த, கண்களை மூடியபடி அமைதியாய் பயனித்து கீழ் திருப்பதி அடைந்தோம். இரவே திருமலைக்குச் சென்று, வெங்கடாஜலபதி கருட வாகனத்தில் பவனி வருவதை தரிசித்து இரவு இரண்டு மணிக்கு கீழிறங்கி அறைக்கு வந்து சேர்ந்தோம்.

மறுநாள் காலையில் திரும்பவும் திருமலை மேலேறி, தரிசனத்திற்காய் நீண்ண்ண்ண்ண்ட வரிசையில் நின்று, அடைத்து வைத்த சந்துகளில் ஒழுங்கற்று நசுக்கிப் பிழியும் கூட்டத்தில், சில மணி நேரங்கள் காத்திருந்து, சில நொடி நேரங்களே தரிசனம் தந்த வெங்கடாஜலபதி - 'என்ன இருக்கிறதென்று இவ்வளவு கூட்டம் இங்கு' என்பதான ஆச்சர்யத்தைத் தவிர வேறெந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்னுள். ஒருவேலை எனக்குத்தான் அதை உணரும் கொடுப்பினை இல்லையோ என்னவோ!

எப்படி இருப்பினும், ஏழுமலையான் சன்னிதியில் என்னால் உணர இயலாத இறையை தலகோனா நீர்வீழ்ச்சியில் உணர்ந்துவிட்டேன்!

14 மறுமொழிகள்:

Boston Bala said...

கோனே அருவி என்பார்களே... அதுவும் இதுவும் ஒன்றுதானா?

அருள் குமார் said...

இல்லை பாலா. அது வேறு அருவி. கோனே அருவியை விட இது சிறப்பாய் இருக்கிறது.

வானம்பாடி said...

நானும் இங்கே 2002-ல் போயிருக்கிறேன். அருமையான இடம், பயணமும் அருமையாக அமைந்தது. திருப்பதியிலிருந்து ஒரே ஒரு பேருந்து போகிறது இங்கே. காலையில் போய் நல்ல ஆட்டம் போட்டு விட்டு கடைசி பேருந்து 6.30க்கு வரும் என்று காத்திருந்தோம், காத்திருந்தோம், காத்துக் கொண்டே 7.30 வரை இருந்தோம். சரி, பேருந்து வரவில்லை என்று முடிவு செய்து கொண்டு நடக்க ஆரம்பித்தோம். ஆளரவமில்லாத ஆந்திர காட்டில் சற்றே பயத்துடனே நடந்து கொண்டே இருந்தோம். 'இதோ விளக்கு தெரிகிறது, அங்கே கிராமம் இருப்பது போல் தெரிகிறது' என்று அடுத்த கிராமத்தை தேடி 10 கி.மீ நடந்தோம். நல்லவேலை அது சற்றே பெரிய கிராமமாக இருந்தது. 'தலகோனால இருந்து நடந்தா வறீங்க. அங்கே யாருமே இல்லைன்னு தலகோனா கொவில் பூசாரி சொன்னதால பஸ் டிரைவர் இப்படியே திரும்பி போய்ட்டாரே' என்ற தகவல் கிடைத்தது. 'அடப்பாவி, பூசாரீஈஈஈஈ' என்று கருவிக்கொண்டெ அங்கிருந்த ஜீப்களில் ஏறி பேருந்து கிடைக்கும் வேறொரு இடம் வரை பயணித்து பின்னர் திருப்பதி வந்து சேர்ந்தோம். திருமலைக்கு செல்ல விரும்பிய பக்திமான்கள் இருவரை மட்டும் அனுப்பி வைத்து விட்டு மீதிப் பேர் சென்னை வந்து சேர்ந்தோம். ஆக, அருவி அனுபவத்தை விட திரும்பி வந்த பயணமே மறக்க முடியாததாக அமைந்தது..

அருள் குமார் said...

ஆமாம் சுதர்சன். அது ஒரு த்ரில்லான அனுபவமாகத்தானே அமைந்திருக்கும். எப்படி மறக்கமுடியும்? சே! அந்த காட்டு மலைப்பாதையில், இரவில் நடந்துவரும் வாய்ப்பை நாங்கள் இழந்துவிட்டோமே! :(

குழலி / Kuzhali said...

ம்... எனக்குதான் அனுபவிக்க கொடுத்து வைக்கவில்லை...

Anonymous said...

love your blogs!!! i keep coming here everyday to see if you have posted any new blog!!

அனுசுயா said...

ஆச்சர்யம் உண்மையில் ஒரே மாதிரியான சிந்தனைதான். ஆனால் தங்கள் பதிவு மிக அழகு.

அருள் குமார் said...

நன்றி அனுசுயா! நான் நிரைய்ய்ய்ய்ய்ய்ய எழுதி சொல்லியிருந்ததை நீங்கள் ரொம்ப எளிமையா சொல்லியிருந்தீர்களே... அதுதான் அழகு என நான் நினைக்கிறேன்!

Anonymous said...

hi arul
iam very glad to see ur writtings abt the nature. am very amazed that u r having the same thought as i have abt the nature and man's living out of the nature. very nice expression of the thoughts.and the arruvi is very nice we had not yet gone there and me too have the same idea abt the tirupathi temple, just going since i love travel. and want to enjoy the coll climate there(since we go only in january).my best wishes for ur future works byebye
by vidya

அருள் குமார் said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வித்யா.
விரைவில் தலகோனா சென்றுவந்து உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள்.

Pavals said...

//ஏழுமலையான் சன்னிதியில் என்னால் உணர இயலாத இறையை தலகோனா நீர்வீழ்ச்சியில் உணர்ந்துவிட்டேன்!// அது..!!

அருள் குமார் said...

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ராசா!

Sam said...

//நம்மில் ஒவ்வொரு தலைமுறையும் தன் அடுத்த தலைமுறையை வளமாக்கவும், அதற்கு சேர்த்து வைக்கவுமே செலவிடப்படுகின்றன. இது ஒரு முடிவே இல்லாமல் தொடர்கிறது எனில், எந்த தலைமுறை எல்லாவற்றையும் அனுபவிக்கும்?//
அருமையான சிந்தனையோட்டம். முதல் முறையாக உங்கள் எழுத்துக்களைப் படிக்கிறேன்.
பொறுமையாக மற்றப் பதிவுகளையும் படிக்கப் போகிறேன்
அன்புடன்
சாம்

அருள் குமார் said...

மிக்க நன்றி சாம்! பொறுமையாக படித்துவிட்டு, மறக்காமல் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.