(தேன்கூடு போட்டிக்கு எழுதிய சிறுகதை)
சுந்தர் இறந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அவன் மனைவியை இன்று ஸ்பென்சரில் பார்த்தேன். பார்க்கிங்கில் என் வண்டிக்கு இடம் தேடிக்கொண்டிருந்த போது என்னைக் கடந்து சென்றுகொண்டிருந்தாள். உடன் இருந்தவர் யாரெனத்தெரியவில்லை. அனேகமாக அது ப்ரேம் சொன்ன 'அவரா'கத்தான் இருக்க வேண்டும்! அவன் சொன்ன மாதிரி அவர்கள் இருவருக்கும் இடையில் பார்த்தமாத்திரத்திலேயே ஒரு அன்னியோன்யத்தை உணரமுடிந்தது.
ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள், ப்ரேம், இப்படி இவர்கள் இருவரையும் சத்யம் தியேட்டரில் வைத்துப் பார்த்திருக்கிறான். அடுத்தநாள் எப்போதடா விடியும் எனக் காத்திருந்தவனாய், ஆபீஸ் வந்ததும் என்னைத் தேடி வந்து விஷயத்தைச் சொன்னதுடன், அவரின் அங்க அடையாளங்களையும் விவரிக்க ஆரம்பித்துவிட்டான்! இப்போது பார்த்த இந்த நபர், ப்ரேம் சொன்ன அடையாளங்களுடன் இருந்தார்.
கிடைத்த இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, மீண்டும் அவர்களைப் பார்க்க எண்ணித் தேடியபோது, கூட்டத்தில் எங்கோ தொலைந்து போயிருந்தார்கள்.
வழக்கம்போல் இன்றும் ஸ்பென்ஸரில் நல்ல கூட்டம். இந்தக் கூட்டத்தை ஏனோ எனக்குப் பிடித்திருந்தது. சில நேரங்களில், வேறெந்த அவசியமும் இல்லாது, வெறுமனே இந்தக் கூட்டத்தை வேடிக்கைப் பார்க்கவென்றே இங்கு வருவேன். இன்றும் அப்படித்தான். எண்ணற்ற மனிதர்களும் அவர்களின் வித விதமான உணர்ச்சிகளும் கொட்டிக்கிடக்கும் இந்த ஸ்பென்ஸரில், கண்ணில் கண்டவற்றையெல்லாம் உள்வாங்கியபடி நடந்துகொண்டிருந்தேன். கூட்டத்திற்குப் பழகிவிட்ட கால்கள் தன்ணுணர்வற்று நடந்து கொண்டிருக்க, மனம் சுந்தரையும் அவன் மரணம் குறித்தான நிகழ்வுகளையும் என் நினைவுகளிலிருந்து மீட்டுக்கொண்டிருந்தது.
சுந்தரின் மனைவியை இதற்கு முன் ஒரேயொரு முறைதான் பார்த்திருக்கிறேன். அதுவும் அவன் இறந்துபோன அன்று! ஆனாலும், என்றுமே மறக்க இயலாத முகமாய், என் மனதின் ஆழத்தில் தேங்கிப்போனது அந்த முகம். அன்றுவரை, அவ்வளவு இழப்பும் வேதனையும் நிறைந்த ஒரு முகத்தை நான் பார்த்தேயிராதது கூட அதற்குக் காரணமாயிருக்கலாம். என் வாழ்வில் நான் எதிர்கொண்ட மிக மோசமான நாட்களில் சுந்தர் இறந்த தினமும் ஒன்று.
இன்றளவும், வீட்டு வேலைகளில் மூழ்கியிருக்கும் என் மனைவியை மௌனமாய்ப் பார்த்துக்கொண்டிருக்க நேர்கிற சில பொழுதுகளில், கதறி அழும் சுந்தர் மனைவியின் முகம், என் மனதின் மேலெழுந்து வேதனை செய்துகொண்டுதான் இருக்கிறது. எவ்வளவு முயன்றும் அந்த முகத்தை என் மனதினின்றும் அழிக்கவே முடியவில்லை. பல முறை சுந்தர் என்னை அவன் வீட்டிற்கு அழைத்திருந்த போதும், ஏதேதோ காரணங்களால் என்னால் செல்ல முடிந்ததில்லை. அவன் இறந்த அன்றும், அப்படி ஏதாவது ஒரு காரணத்தினால், அங்கு செல்ல இயலாதபடி நிகழ்ந்திருக்கக் கூடாதா என அடிக்கடித் தோன்றும்.
அன்று விபத்தில் சுந்தர் இறந்த செய்தி அறிந்ததும், நானும் ப்ரேமும் அவன் வீட்டிற்கு விரைந்தோம். வடபழனி சரவணபவனுக்கு எதிர்ப்பக்கம், உள்ளே எங்கேயோ அவன் வீடு இருப்பதாய்ச் சொன்னார்கள். சரவணபவன் அருகில் அவன் முகவரியை வைத்து நான் விசாரித்துக் கொண்டிருந்தபோது, அருகிலிருந்த பூக்கடையில் ஒரு பெரிய ரோஜா மாலையை பேரம்பேசி வாங்கிக்கொண்டான் ப்ரேம். ஏனோ அந்த மாலையைப் பார்த்ததும் சோகம் இன்னும் அதிகமானது.
அந்தத் தெருவை அடைந்து அவன் ஃபிளாட்டை விசாரித்தபோது, 'எறந்துட்டாரே அவர் வீடுங்களா...?!' என்று கேட்டு வழி சொன்னார்கள். ஃபிளாட்டின் பார்க்கிங்கில் எங்கள் அலுவலக நண்பர்கள் சிலர், இறுகிப்போன முகங்களுடன், பேசக்கூட திராணியற்று நின்றிருந்தார்கள்.
'மேல ஃபஸ்ட் ஃபுளோர்ல ரைட்ல மொத வீடு. பாத்துட்டு வாங்க...' - கணேஷ் சொல்ல, கனத்த மனதுடன் அவர்களைக் கடந்தோம்.
'எங்களால அங்க நிக்கவே முடியல ப்ரேம்! அதான் வந்துட்டோம்... நீங்க பாத்துட்டு வாங்க...'
குரல் தழுதழுக்கச் சொன்ன 'அக்கவுண்ட்ஸ்' மாணிக்கத்தின் வார்த்தைகளை, அங்கு சென்ற சில நிமிடங்களில் உணர முடிந்தது. சுந்தரின் உடலை ஒரு கண்ணாடிப்பெட்டியில் அடைத்து, ஹாலின் நடுவே வைத்திருந்தார்கள். விபத்தின் சுவடுகள் எதுவும் தெரியாதபடி, அவன் உடல் முழுக்க வெள்ளைத் துணி சுற்றப்பட்டிருந்தது. முகம் மட்டும் எந்த சலனமுமற்று தூங்கிக் கொண்டிருப்பதுபோல் இருந்தது. சுற்றிலும் அவன் உறவினர்கள் உட்கார்ந்து அழுதுகொண்டிருக்க, அவன் தலைமாட்டில் அமர்ந்திருந்த அவன் மனைவி, மிக களைத்துப்போன முகத்துடன், பின்புறம் அவளைத் தாங்கியபடி அமர்ந்திருந்தவர்கள் மீது சாய்ந்து கிடந்தாள். சக்தியின்றிப் பாதி மூடிய விழிகளும், கன்ணீரில் நனைந்து முகத்தில் ஒட்டிய கலைந்த கூந்தலுமாய் பேச்சற்று இருந்தவளைப் பார்த்ததும் என் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.
நாங்கள் வருவதற்குச் சற்றுமுன் மூர்ச்சையாகியிருப்பாள் போலும். முகத்தில் தெளிக்கப்பட்ட தண்ணீர், கழுத்தில் வழிந்து நைட்டியை நனைத்திருந்தது. அவளையும் மீறி அவள் உதடுகள் மிக மெலிதாய் எதையோ முனுமுனுத்துக் கொண்டேயிருந்தன. களைத்துப்போய் அமைதியடைந்திருந்த முகம், எதையோ நினைத்தபடி விம்மலுடன் அழ எத்தனிப்பதும், தாங்கிப் பிடித்திருந்தவர்கள் அவள் தோள்களை அழுத்த, மீண்டும் அமைதியடைவதுமாய் இருந்தது.
ப்ரேம் கொண்டு வந்திருந்த மாலையை, கண்ணாடிப்பெட்டியின் மேல் முன்பே வைக்கப்பட்டிருந்த மாலைகளுடன் வைத்துவிட்டு, துளிர்த்த கண்ணீரைத் துடைத்தபடி தலை கவிழ்ந்தோம். ஏற்கனவே அழுது களைத்திருந்த அவன் அப்பா, புதிதாய் வந்த எங்களைப் பார்த்ததும் 'இப்புடி எங்கள ஏமாத்திட்டு போய்ட்டானேப்பா...' என்று மீண்டும் அழ ஆரம்பித்தார். என்ன சொல்லியும் அவரை சமாதானப் படுத்த முடியாது எனத்தோன்ற, இதமாய் அவரின் தோள்களைப் பற்றிக்கொண்டேன். என் கைகளுக்குள் அவர் உடல் இன்னும் அதிகமாய்க் குலுங்க ஆரம்பித்தது. 'சாயங்காலம் என்ன டாக்டர் கிட்ட கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு போனாம்ப்பா...' - பொங்கிய அழுகையினூடே வந்த அவரின் புலம்பல்கள் ஆதரவற்று அலைந்துகொண்டிருந்தன.
சுந்தர் அப்பாவின் வார்த்தைகளைக் கேட்டோ என்னவோ, கண்கள் செருகி பாதி மயக்கத்திலிருந்த அவன் மனைவி, திடீரென எழுந்து 'அய்யோ... இப்படி என்னத் தனியா வுட்டுட்டுப் போய்ட்டீங்களே...நா இனிமே என்ன செய்வேன்...' எனப் பெருங்குரலுடன் அழ ஆரம்பித்தாள். தொடர்ந்து இப்படித்தான் அழுது கொண்டிருக்கிறாள் போலும். எங்களைத்தவிர மற்றவர்கள் இதை எதிர்பார்த்தவர்களாகவே இருந்தார்கள். பக்கத்தில் இருந்த பெண்கள் அவளை இறுக்கிப் பிடித்துக்கொள்ள, திமிறிக்கொண்டு அழுதாள். தாங்காத மனதுடன், 'அய்யோ.. அய்யோ..' என்று அரற்றியபடியே மீண்டும் மூர்ச்சையானாள். அதைக் காணச் சகிக்காமல், பெண்கள் கூட்டம் மொத்தமும் குரலுயர்த்தி அழுதது. பக்கத்திலிருந்தவர்கள் மீண்டும் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து, எதையோ குடிக்கச்செய்தார்கள்.
தொடர்ந்து அந்த முகத்தைப் பார்க்கும் திராணியற்றுத் திரும்பிக் கொண்டேன். என் மனசுக்குள் ஏதோ அறுந்துகொண்டதுபோல் இருந்தது. வாழ்வின் நிலையற்ற தன்மை, தன்னை முழுதும் உணர்த்திப் பயமுறுத்தியது. என் மீது சாய்ந்திருந்த அவன் அப்பா, 'இவள எப்படி காப்பாத்தப்போறேனோ...' என்று மீண்டும் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார். என் நிலை உணர்ந்த அவர் உறவுகளில் ஒருவர், 'மாமா... இப்படி உக்காருங்க... ரொம்ப நேரம் நிக்க வேண்டாம்... வாங்க...' என்றபடி அவரைப் பிடித்து பக்கத்திலிருந்த நாற்காலியில் மெதுவாய் அமர வைத்தார்.
'வா கீழ போய்டலாம்' என்பதாய் ப்ரேமைப் பார்த்தேன். அவனும் அதற்கேக் காத்திருந்தவன் போல் கிளம்பினான். வெளியில் வராண்டா முழுக்க, பக்கத்து வீடுகளில் பெறப்பட்ட ச்சேர்களும் ஸ்டூல்களும் நிறைந்திருக்க, அவற்றை துக்கத்திற்கு வந்திருந்த ஆண்கள் நிறைத்திருந்தார்கள். நாங்கள் கீழிறங்கி, பார்க்கிங் பகுதிக்கு வந்தோம். எங்கள் அலுவலக நண்பர்கள், சுந்தரின் நல்ல குணங்களை நினைவுகூர்ந்தபடி சோகத்தில் மூழ்கியிருந்தார்கள். விபத்து பற்றி விபரமறிந்த ஒருவர் மற்றவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்.
சூழ்நிலைக்குச் சற்றும் பொருத்தமில்லாமல், ஒரு குழந்தை, பெரிய பந்து ஒன்றை இங்குமங்கும் உதைத்து விளையாடி, சத்தமாய்ச் சிரித்துக்கொண்டிருந்தது. துக்கத்திற்கு வந்திருந்த ஒருவர், அந்தக் குழந்தைக்கு விளையாட்டு காண்பித்துக் கொண்டிருந்தார்!
'அது சுந்தர் பையன். இன்னும் ரெண்டு வயசுகூட ஆகல...'
கணேஷ் சொன்னதும் மனம் வெறுத்துப் போனது. அழுதுகொண்டிருந்த அவன் மனைவியை விட, சிரித்துக்கொண்டிருந்த அவன் மகனைப் பார்க்க, மிக வேதனையாய் இருந்தது. ஆறோ அறுபதோ... வேறெந்த வயதில் மரணம் சம்பவித்தாலும் ஏற்றுக்கொள்ளலாம். இப்படி இளம் மனைவியையும், ஒன்றரை வயதுக் குழந்தையையும், திக்கற்று நிற்க வைக்கிற, மத்திம வயது மரணங்களை விடக் கொடியது எதுவுமே இல்லை எனத் தோன்றியது. எப்படி யோசித்தும் ஒரு தெளிவிற்கே வரமுடியாத, சுந்தர் மனைவியின் எதிர்காலத்தை நினைத்தபடியே வீடு திரும்பினோம்.
நாங்கள் பயந்தபடியே, சுந்தரின் மனைவி, அவன் இறந்த ஒரு வாரத்திற்குள் இரண்டுமுறை தற்கொலைக்கு முயற்சித்தாள். 'இந்த குழந்தைக்காகவாவது நீ வாழத்தான் வேண்டும்' என்று எப்படியெல்லாமோ அவளைச் சமாதானப் படுத்தியிருக்கிறார்கள். எங்கள் பாஸ், தனக்குத் தெரிந்த ஒரு கம்பெனியில் அவளுக்கு ஒரு நல்ல வேலை வாங்கிக் கொடுத்தார். ப்ரேம் யூகித்தபடி, இப்போது அவளுடன் பார்த்த அவர், அங்கு வேலை செய்பவராயிருக்கலாம்.
ஏதேதோ யோசித்தபடி, ஸ்பென்ஸருக்குள்ளேயே சுற்றிச் சுற்றி, மியூசிக் வேல்டு முன் வந்திருந்தேன். ஆச்சர்யமாய் அவளை மீண்டும் மியூசிக் வேல்டு உள்ளே பார்த்தேன். கூட வந்திருந்தவரைக் காணவில்லை. ஏதோ ஒரு ஆர்வம் உந்த, நானும் உள்ளே சென்று அவளைப் பின்தொடர்ந்தேன். என்னை அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அங்கிருந்த ஒலிப்பேழைகளை மேலோட்டமாய்ப் பார்த்துக்கொண்டே சென்றவள், இளையராஜாவின் 'how to name it' ஆல்பம் பார்த்ததும் சட்டென நின்றுவிட்டாள். அது சுந்தருக்கு மிகப்பிடித்த ஆல்பம். பெரும்பாலான இரவுகளில் அதைக் கேட்கத் தவறுவதில்லை என்று சிலாகித்துச் சொல்லியிருக்கிறான். அவற்றுள் ஒன்றை கையில் எடுத்துவைத்துக்கொண்டு ஆழமாய்ப் பார்த்தவள், பின் அதே இடத்தில் அதை வைத்துவிட்டுச் சென்றபோதுதான் கவனித்தேன்... அவள் காலில் மெட்டி அணிந்திருந்தாள்!
மியூசிக் வேல்டின் வேறொரு பகுதியில் நின்றிருந்த அவரை அவள் அடைந்தபோது, 'ப்ளீஸ் டாடி... ப்ளீஸ்.. ப்ளீஸ்...' என்று அவள் மகன் அவரிடம் உரிமையாய் எதையோ கேட்டு அடம்பிடித்துக் கொண்டிருந்தான். 'என்னங்க..? ரொம்ப படுத்தறானா...?!' என்று அவரைப் பார்த்துக் கேட்ட அவளின் புன்னகை நிரம்பிய முகம், இவ்வளவு நாட்களாய் என் மனதுக்குள்ளேயே இருந்து என்னை இம்சித்துக் கொண்டிருந்த அந்தக் கதறி அழும் முகத்தை எங்கோ விரட்டியடித்துவிட்டது! மனம் மிக லேசானதாய் உணர்ந்தேன். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களை மனமாற வாழ்த்தவேண்டும் என்று எழுந்த ஆசையை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன். ஏனோ அந்த சந்தர்ப்பதில் சுந்தரை அவர்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்பவில்லை.
நிறைந்த மனதோடு ஸ்பென்சர் விட்டு வெளிவே வந்ததும், என்னை வருடிச்சென்ற அந்தி நேரத் தென்றல், உள்ளே அனுபவித்த குளிரூட்டப்பட்டக் காற்றைவிட இதமானதாய் இருந்தது. எவ்வளவு பெரிய துயரத்தையும், 'இது எனக்கு ஒரு விஷயமே இல்லை' என்பதாய்ப் புறந்தள்ளி நடக்கிற காலத்தை வியந்தபடி, பார்க்கிங்கில் என் வாகனத்தைத் தேடியபோது நினைத்துக் கொண்டேன்... இனி எந்த மரணமும் என்னைப் பெரிதாய் பாதிக்காது!
27 மறுமொழிகள்:
//என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களை மனமாற வாழ்த்தவேண்டும் என்று எழுந்த ஆசையை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன். ஏனோ அந்த சந்தர்ப்பதில் சுந்தரை அவர்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்பவில்லை.
//
என்ன சொல்றதுன்னு தெரியலை அருள்.. இந்த வரில எல்லாத்தையும் கொண்டுவந்துட்டீங்க.. இந்தக் கதை சொல்லியின் பரந்த மனப்பான்மையை.. என்ன சொல்றதுன்னு தெரியலை..
அருள்,
அட்டகாசமா வந்துருக்கு கதை. இயல்பான நடை.
வாழ்த்து(க்)கள்.
நல்ல கதை. உங்களுக்கு கர்சீப் குடுக்க ஏன் பொன்ஸ் சொன்னாங்கன்னு இப்போ புரியுது.
நன்றி பொன்ஸ்.
நன்றி துளசி மேடம்.
நன்றி கொத்ஸ்(நானும் இப்படி கூப்பிடலாமா?),
// உங்களுக்கு கர்சீப் குடுக்க ஏன் பொன்ஸ் சொன்னாங்கன்னு இப்போ புரியுது.// ஏன்? எனக்குப் புரியலையே?!
கதையா? அல்லது உண்மை சம்பவமா?
மிக அருமையாக உள்ளது.
கணவனை இழந்த பலப் பெண்கள் அவர்கள்
விருப்ப பட்டால் இதுப் போல நல் வாழ்க்கையை மீண்டும் தொடர்ந்தால் நலமே...
நன்றி
மயிலாடுதுறை சிவா...
நன்றி சிவா.
//கதையா? அல்லது உண்மை சம்பவமா? // இது முழுக்க முழுக்க கதை தான். ஆனால் இப்படி சில நல்ல விஷயங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன என கேள்வியுற்றிருக்கிறேன்.
//கணவனை இழந்த பலப் பெண்கள் அவர்கள்
விருப்ப பட்டால் இதுப் போல நல் வாழ்க்கையை மீண்டும் தொடர்ந்தால் நலமே...// எனது விருப்பமும் அதுவே :)
ஆரம்பத்தில் அந்தப் பெண் இன்னொருவருடன் போவதைக் குறை சொல்லப் போகிறீர்களோ என்று தோன்ற வைத்துக் கடைசியில் நல்லபடியாக முடித்துள்ளீர்கள். அதனால் ஒரு நெருடல். மரனத்துக்குப் பின்னும் வாழ்க்கை ஓடுவதை அழகாக சொல்லியிருக்கலாமே?
மௌன கீதங்கள் படத்தில் மனைவி இறந்ததும் உடன் கட்டை ஏறப்போவதாக கதறி அழும் கணவன் சில மாதங்களிலேயே புதிய மணத்துக்கு பத்திரிகை கொடுப்பது போன்று ஆக்காமல் கதை முழுவதிலுமே ஆக்கபூர்வமான உணர்வுகளை தெளித்திருக்கலாமே?
அன்புடன்,
மா சிவகுமார்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சிவகுமார்.
//மரனத்துக்குப் பின்னும் வாழ்க்கை ஓடுவதை அழகாக சொல்லியிருக்கலாமே?//
இந்த விஷயத்தை, கதையின் சூழலில்,
// 'என்னங்க..? ரொம்ப படுத்தறானா...?!' என்று அவரைப் பார்த்துக் கேட்ட அவளின் புன்னகை நிரம்பிய முகம், //
என்ற வரிகள் சொல்லிவிடும் என நினைத்தேன்!
//கதை முழுவதிலுமே ஆக்கபூர்வமான உணர்வுகளை தெளித்திருக்கலாமே?//
நீங்கள் சொல்வது மிகச் சரி. ஒரு மூன்றாம் மனிதனின் பார்வையில், கணவனை இழந்து தற்கொலைக்கு முயன்ற பெண் சில காலங்களுக்குப் பிறகு வேறொரு வாழ்க்கை அமத்துக்கொள்வதை வைத்து, மரணத்தை புரிந்து கொள்வதாய் சொல்ல முற்பட்டதால் இப்படி அமைந்துவிட்டது!
நல்லா எழுதி இருக்கீங்க அருள்...ரசித்து படித்தேன்,...
இந்தப் போட்டி அறிவிப்பின் பெரிய பலனாய் இங்கு பலருக்குள்ளும் புதைந்து கிடக்கும் புனைவாற்றாலைப் பார்க்க முடிகிறது. நல்ல கற்பனை அருள்குமார். போட்டிகென்று மட்டும் இல்லாமல் அவ்வப்போது வித்தியாசமான புனைவு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் நீங்களெல்லாம். வெற்றிபெற வாழ்த்துக்கள்
@ செந்தழல் ரவி:
மிக்க நன்றி ரவி!
//ரசித்து படித்தேன்,... // ஓட்டு போடறப்போ மறந்துடாதீங்க :))
@செல்வநாயகி:
வாழ்த்துக்களுக்கு நன்றி.
//போட்டிகென்று மட்டும் இல்லாமல் அவ்வப்போது வித்தியாசமான புனைவு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் நீங்களெல்லாம்.//
அப்படிச் செய்ய ஆசைதான். இயன்ற அளவு எழுதிக்கொண்டுதான் இருக்கிறோம். இருந்தாலும் தமிழ்மணத்தில் சாதாரணமாக சிறுகதைகளுக்கு பெரிய வரவேற்பு இல்லை என்றே தோன்றுகிறது! இத்தகைய போட்டிகளில், பரிசை விட, நமது கதைகள் நிறைய பேரின் கவனத்துக்குள்ளாவதே நான் விரும்புவது!
//இது எனக்கு ஒரு விஷயமே இல்லை' என்பதாய்ப் புறந்தள்ளி நடக்கிற காலத்தை வியந்தபடி, பார்க்கிங்கில் என் வாகனத்தைத் தேடியபோது நினைத்துக் கொண்டேன்... இனி எந்த மரணமும் என்னைப் பெரிதாய் பாதிக்காது!//
இந்த கதை நன்றாக இருக்கிறது அருள்... ஆனால் இதை வைத்து மட்டுமே மரணம் நம்மை பெரிதாய் பாதிக்காது என்று என்னால் ஒத்துகொள்ளமுடிவில்லை. சிலரது மரணம் நம்மை, நம் வாழ்க்கையையே பாதித்து வாழ்நாள் முடிய மறக்கமுடியாதாக ஆக்கிவிடுகிறது. எனக்கு என் அப்பாவின் மரணம் அப்படிதான். கதை சொல்லியவருக்கு ஒருவேளை பாதிக்காது என புரிந்துகொள்கிறேன். சிவகுமார்ஜி சொன்னதை போன்று எனக்கும் தோன்றியது.
உங்கள் கருத்துக்கு நன்றி கவிதா.
//நம் வாழ்க்கையையே பாதித்து வாழ்நாள் முடிய மறக்கமுடியாதாக ஆக்கிவிடுகிறது.//
மறக்கவே முடியாது என்பது நிஜம்...
//அங்கிருந்த ஒலிப்பேழைகளை மேலோட்டமாய்ப் பார்த்துக்கொண்டே சென்றவள், இளையராஜாவின் 'how to name it' ஆல்பம் பார்த்ததும் சட்டென நின்றுவிட்டாள். //
ஆனால் அதன் பாதிப்பு நிச்சயம் குறைந்திருக்கும் என்பது என் கருத்து!
உங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன்... உங்கள் தந்தை தவறிய அன்று நீங்கள் சாப்பிடக்கூட முடியாமல் இருந்திருப்பீர்கள். உங்கள் தினசரி வாழ்கை மிக மோசமாய் பாதிக்கப்பட்டிருக்கும். இவ்வளவு காலத்திற்குப் பிறகும் அப்படியா இருக்கிறீர்கள்? உங்கள் தந்தையின் நினைவுகள் இன்று உங்களை வருந்தச்செய்யலாமே தவிர, உங்கள் தினசரி வாழ்க்கையை பெரிதும் பாதித்துவிடாது ன்பதைத்தான் சொல்ல விழைந்திருக்கிறேன்!
=====
//மரனத்துக்குப் பின்னும் வாழ்க்கை ஓடுவதை அழகாக சொல்லியிருக்கலாமே?//
இந்த விஷயத்தை, கதையின் சூழலில்,
// 'என்னங்க..? ரொம்ப படுத்தறானா...?!' என்று அவரைப் பார்த்துக் கேட்ட அவளின் புன்னகை நிரம்பிய முகம், //
என்ற வரிகள் சொல்லிவிடும் என நினைத்தேன்!
=============
அந்த உங்கள் நோக்கம, கதை முழுவதும்் முழுமையாக வெளிப்படவில்லை என்று எனக்குப் பட்டது. கடைசி நான்கு வரிகளில் மட்டும்தான் கதை சொல்பவரின் தன்மை புரிகிறது. அதுவரை ஒரு வகை துப்பறியும் கதை போல பரபரப்பாகத்தான் போகிறது.
அன்புடன்,
மா சிவகுமார்
//நோக்கம, கதை முழுவதும்் முழுமையாக வெளிப்படவில்லை என்று எனக்குப் பட்டது.// நிச்சயமாக. நீங்கள் சொல்லும் விதத்தில் நான் யோசிக்கவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் இன்னும் அழகாக இருக்கும் என படுகிறது. நேரம் வாய்க்கையில் அப்படியும் எழுதிப் பார்க்கிறேன். உங்கள் விமர்சனம் மிகப் பயனுள்ளதாய் அமைந்தது. மிக்க நன்றி சிவகுமார்.
நேரம் கிடைத்தால் எனது பதிவில் இருக்கும் மற்ற சில சிறுகதைகளையும் விமர்சிக்கவும். முன்கூட்டியே நன்றிகள் :)
விமரிசனத்தை நல்ல கோணத்தில் புரிந்து கொண்டதற்கு நன்றி அருள். உங்களுடைய சிறுகதைகளை எல்லாம் தொகுத்து உங்கள் முன் குறிப்புடன், சுட்டிகளுடன் ஒரு பதிவு போட்டு விடுங்களேன். அந்தப் பதிவின் சுட்டியை உங்கள் டெம்ப்ளேட்டிலும் சேர்த்துக் கொண்டால் எல்லோருக்கும் சிறுகதைகளை அணுக ஏதுவாக இருக்கும்.
தேடித் தேடிப் படிக்க மாச்சப்பட்டு, பழத்தை உரித்துக் கொடுத்து விடும்படி கேட்கிறேன் :-)
அன்புடன்,
மா சிவகுமார்
சிவகுமார்,
இதே மாதிரி சுட்டிகள் நானும் போடுறேன்.. என் கதைகளையும் கொஞ்சம் கண்ணெடுத்துப் பார்க்க வேணும்.. :)
அருள்,
அந்த கதையின் சோகத்தை என் மேல் தினித்து விட்டு, சோகத்துக்கு மருந்தாக சுந்தரின் மனைவி மறுமணம் செய்து கொண்டால் என்பதை மென்மையாய் சொல்லி பாராட்ட வச்சுட்டீங்க! இந்த கதையில் சில மரணங்களின் பாதிப்பு தெரியுது...
//*ஆரம்பத்தில் அந்தப் பெண் இன்னொருவருடன் போவதைக் குறை சொல்லப் போகிறீர்களோ என்று தோன்ற வைத்துக் கடைசியில் நல்லபடியாக முடித்துள்ளீர்கள்.*//
சிவகுமார் சொல்வது போல் எனக்கு தோன்றவில்லை :) முடிவு நான் எதிர்ப்பார்தது போல் தான் இருந்தது, ஏன் என்றால் உங்க Feel தான் எனக்கு தெரியுமே!
மறுமணம் ஒரு சாதரணவிசயமாக நம் சமுதாயம் எடுத்துக் கொள்ள இது போன்ற கதை உதவி செய்யும் என்று நினைக்கிறேன்! வாழ்த்துக்கள்!
சிவகுமார்,
//உங்களுடைய சிறுகதைகளை எல்லாம் தொகுத்து உங்கள் முன் குறிப்புடன், சுட்டிகளுடன் ஒரு பதிவு போட்டு விடுங்களேன்.// அந்த அளவுக்கு நிறைய கதைகள் எழுதிவிடவில்லை நான். எனினும் நீங்கள் சொல்லும் ஐடியா நன்றாக இருக்கிறது. செய்துவிட்டு உங்களுக்குச் சொல்கிறேன். நன்றி.
நன்றி ஜெய்,
//முடிவு நான் எதிர்ப்பார்தது போல் தான் இருந்தது, ஏன் என்றால் உங்க Feel தான் எனக்கு தெரியுமே!
// ஆனா நம்மள பத்தி தெரியாதவங்களுக்கு நாம சொல்ல வந்தது சரியா ரீச் ஆகலன்னா, நாம சரியா சொல்லலன்னுதானே அர்த்தம்! சிவகுமார் சொல்வது சரியென்று வேறுவிதமாக சொல்கிறீர்கள். புரிகிறது :)
பொன்ஸ், அருள்
உங்கள் சுட்டிகளைத் தாங்கிய பதிவுக்காகக் காத்திருக்கிறேன். (The ball is in your court :-)
அன்புடன்,
மா சிவகுமார்
சிவகுமார்,
//உங்கள் சுட்டிகளைத் தாங்கிய பதிவுக்காகக் காத்திருக்கிறேன். (The ball is in your court :-)//
அப்பாடா... பாலைத் தூக்கி உங்க கோர்ட்ல போட்டாச்சுங்க...:)
டெம்ப்லேட்லயும் சேத்தச்சு!
இனி உங்க பாடு :) எங்க வேலை ரொம்ப ஈஸி. உங்களுக்குதான் கஷ்டம்! நேரமிருக்கும்போது பாருங்க. நன்றி.
எல்லா சாவுகளுமே இறந்தவர்களை விடுத்து தன்னைச் சார்ந்த கவலைகளை வைத்தே நம்மை சோகம் கொள்ளா வைக்கின்றன என்றே தோன்றுகிறது. என்னை டாக்டரிடம் இன்னைக்கு வந்து கூட்டிட்டு போறேன்னு சொன்னானே என்ற தந்தையின் வருத்தமும்,இனிமேல் எனக்கு யாரு இருக்கா என்ற மனைவியின் வருத்தமும்தான் மனித இயல்பு.
ஆனால்,காலம் எந்தப் புண்ணையும் ஆற்றும். - இந்த இரண்டையும் நன்றாகச் சொல்லியிருக்கீங்க.
வருகைக்கும், மறுமொழிக்கும் மிக்க நன்றி தருமி ஐயா.
//எல்லா சாவுகளுமே இறந்தவர்களை விடுத்து தன்னைச் சார்ந்த கவலைகளை வைத்தே நம்மை சோகம் கொள்ளா வைக்கின்றன என்றே தோன்றுகிறது.//
நிஜம்தான். இறந்தவர்களிடம் வேறெதையும் எதிர்பார்க்காமல், அவர்களுடனான நமது உறவை இழந்ததற்கு வருந்தினாலும், அதுவும் நம்மைச் சார்ந்த இழப்புதானே!
கதையின் கரு மிகவும் புதிது; வரவேற்கத்தக்க முடிவு..!
சில விசயங்களை சில சந்தோசங்களை அனுபவிக்கின்ற போது புரியாது...
இது மாதிரி சொல்லப்படும் போது மயிலறாகால் வருடியதைப்போன்ற ஒரு பிரமை..
பெரும்பாலும் இது போன்ற சம்பவங்கள் நாம் கடந்து செல்லும் பாதையில் தினமும் நம் பார்வைக்கு எட்டாது எவ்வள்வோ!!
ம்ம்ம்ம்ம்ம்ம்....
மூளை தான் உயிர்கணிணி என்றாலும், ஏன் இதயத்தை அன்பின் அடையாளமாக வைத்தார்கள் என்பது பழகிப்பிரிந்தவர்களுக்குப்புரியும்.
நல்ல கதை என்பதை விட ...நன்றாக சொல்லப்பட்ட கதை..
நன்றி சந்திரசேகரன் :)
@ Anonymous:
//நல்ல கதை என்பதை விட ...நன்றாக சொல்லப்பட்ட கதை..// அப்படியா சொல்றீங்க?! கேட்க சந்தோஷமாக இருக்கிறது :)
Post a Comment