வாழ்வின் அத்தியாவசியங்களில் ஒன்று பகிர்தல். எல்லோரும் எல்லா இடங்களிலும் எதையாவது யாருடனாவது பகிர்ந்துகொண்டேதான் இருக்கிறோம். அது ஒரு உணர்வாகவோ, எண்ணமாகவோ அல்லது பொருளாகவோ... எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பகிர்தல் மிக அவசியமாகிறது. phone, mobile phone, email, chat, blog என்று நமது தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை பகிர்தலை சார்ந்தே இருக்கிறன. பகிர்தல் இல்லாத ஒரு வாழ்வை நினைத்துப்பார்க்கவே முடிவதில்லை.
இதில் பெரிதும் பங்கு வகிப்பவர்கள் நண்பர்கள். வெகு அன்னியோன்யமான உணர்வுகளைக்கூட பகிர்ந்துகொள்ள, நமக்கு கிடைத்த வரம் நண்பர்கள். தன் வாழ்க்கைத்துணையிடம் கூட பகிர்ந்துகொள்ளாத விஷயங்களை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்பவர்கள் அதிகம். ஓர் இனிய நட்பு வாழ்க்கைத்துணையாகவோ அல்லது வாழ்க்கைத்துணை ஓர் இனிய நட்பாகவோ அமையப்பெற்றவர்கள் பாக்கியம் செய்தவர்கள்.
பள்ளி நாட்களில், அமைதியாய் இருக்க பணிக்கப்பட்டும், கட்டுப்படுத்தவே முடியாமல் புருஷோத்தமனுடன் பேசி அடிவாங்கிய ஆசிரியர் வராத வகுப்புகள்தான் எனக்கு பகிர்தலின் அவசியத்தை முதன்முதலாய் உணர்த்தின. ஏதாவது ஒரு வகுப்புக்கு ஆசிரியர் வராவிட்டால் பக்கத்து வகுப்பு ஆசிரியர் எங்கள் வகுப்புக்கு வந்து, "யார்டா இங்க மானிட்டர்..?" என்பார். கலர் வர்மா எழுந்து நிர்ப்பான். "பேசரவங்க பேரெல்லாம் board-ல எழுதி வை. வந்து கவனிச்சிக்கறேன்..." என்று சொல்லிவிட்டுப்போவார்.
எங்கள் வகுப்பு மானிட்டர் எங்களின் நெருங்கிய நண்பன் என்பதால் இரண்டு மூன்று எச்சரிக்கை சலுகைகள் கிடைக்கும். ஆனாலும் சிறிது நேரத்தில் எங்கள் பெயர்கள் தாங்கிய கரும்பலகை கலர் வர்மாவின் கடமை உணர்வைச்சொல்லும். அதைப்பார்த்த பின்புதான் நாங்கள் மறுபடி பேசியிருக்கிறோம் என்பதே எங்களுக்கு தெரியும்! எப்படியும் பிரம்பு அடி நிச்சயம் என்றான பின்பு மறுபடியும் பேசத்துவங்குவோம். என்ன செய்வது..?! பதிண்ம வயதுகள் புரிந்தும் புரியாமலும் நமக்கு அறிமுகப்படுத்தும் ஆயிரமாயிரம் ரகசியங்களை நண்பர்களிடம் மட்டும்தானே நாம் பகிர்ந்துகொள்ளமுடியும்! அப்பப்பா... எத்தனை ஆச்சர்யங்கள், பயங்கள், இன்ப அதிர்ச்சிகள், கேள்விகள், பதில்கள்!
நண்பர்களுடனான நமது பகிர்தல்கள் அட்சயப்பாத்திரம் போன்றவை. பேசப்பேச விஷயங்கள் தீர்ந்துபோவதில்லை. மறாக இன்னும் பல கிளைகளாக எல்லையற்றுப் பிரிந்து நீள்கின்றன. காலையில் எழுந்ததிலிருந்து அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும்வரை நிகழும் சின்னச்சின்ன விஷயங்களைக்கூட சேர்த்துவைத்து, அனைத்தையும் தொலைபேசியில் சொல்லித்தீர்த்தால்தான் இரவு தூக்கம் வரும் என்று சொல்லும் நண்பர்கள் நமக்கு இருக்கிறார்கள். நம் நெஞ்சைத்தொடுகிற எந்த ஒரு உணர்வும் யாருடனாவது பகிர்ந்துகொண்டாலொழிய முழுமையடைவதேயில்லை. இன்பங்கள் இரட்டிப்பாவதும், துன்பங்கள் பாதியாய் குறைவதும் பகிர்தலின்போதுதானே!
"ஏய்... நான் இங்க வடபழனி கோயில்ல இருக்கேன்டா. இங்க ஒரு குழந்தை என்ன cute தெரியுமா. அதும் மாம்பழ கலர் பட்டுப்பாவாடைல. செம சேட்டை பண்ணுது. நீமட்டும் பாத்த... அப்படியே கடிச்சி சாப்ட்டுடுவ!" - எங்கோ இருக்கும் என் தோழியை நிமிட நேரத்தில் எப்படியாவது வடபழனி முருகன் கோயிலுக்கு கொண்டுவந்து அந்த குழந்தையை அவளுக்கு காட்ட முடியாதா எனத்தவித்துப் பின் முடியாமல், தொலைபேசியில் அழைத்து சொல்லியிருக்கிறேன்.
"அருமையான படம்டா. frame by frame செதுக்கியிருக்கான். என்ன play தெரியுமா...?! ச்சான்சே இல்ல!" - படம் முடிவதற்கு முன்னாலேயே, இடைவேலையில் நண்பனை தொலைபேசியில் அழைத்து புலம்பியிருக்கிறேன்.
"ஹைய்ய்ய்யோ..! செம figure மச்சி..!!" - சாலையில் எதிரில் கடந்த அந்த பெண்ணின் காதில் விழக்கூடும் என்றுகூட யோசிக்காமல், பைக் ஓட்டிக்கொண்டிருந்த நண்பனின் தோளை இறுகப்பற்றியிருக்கிறேன்.
"அப்பா...! university level-ல second prize-பா." - பாரதிதாசன் university festivel-ல் painting-ல் பரிசு வென்றதை, அதிகாலையில் என் அழைப்புமணிக்கு கதவுதிறக்கப்போகும் அப்பாவிடம் சொல்லி அசத்தவேண்டுமென்று திருச்சியில் பஸ் ஏறியதிலிருந்து மனதிற்குள் ஒத்திகை பார்த்தபடி பயணித்திருக்கிறேன்.
இதுபோல சின்னதும் பெரிதுமாய் லட்சோபலட்சம் விஷயங்கள். ஒவ்வொன்றையும் பகிர்ந்த பின்புதான் மனம் நிறைவுற்றது. எவ்வளவு யோசித்தும் புரியவே புரியாத ஆச்சர்யம் அது. நாம் தான் அதை அனுபவிக்கிறோம். அதன் சுவை முழுதும் உணர்கிறோம். ஆனால் பகிர்ந்தால்தான் மனம் நிறைவுறுகிறது!
இங்கே எனது மன நிறைவிற்காய், என்னை பாதித்த பல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன். ஆனந்த விகடனில் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் "துணையெழுத்து" படித்தபோது அந்த வடிவம் என்னை மிகவும் கவர்ந்தது. கதை, கவிதை மாதிரி புனைவதற்கு யோசிக்காமல் உணர்ந்ததை உணர்ந்தபடி பகிர்ந்துகொள்ள உதவும் ஓர் அருமையான வடிவம் அது. சிறுகதையை ஒத்த கட்டுரைபோலவும், மென்மையான சிறுகதைக்கே உரிய ஒரு முடிவுடனும், படிப்பதற்கு அலாதியான வடிவம். படிக்கும்போது யாரோ நமக்கு கதை சொல்லிக்கொண்டிருப்பதுபோல் தோன்றச்செய்யும் இதமான வடிவம். அந்த வடிவத்திலேயே என் உணர்வுகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன்.
கேட்ப்பவர்களுக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பது பற்றியெல்லாம் கூட கவலைப்படாமல் எதைப்பற்றியாவது சுவாரஸ்யமாய் சிலர் பேசிக்கொண்டேயிருப்பார்கள். எனது இந்த பகிர்தல்கள் கூட அப்படி இருக்கலாம்! ஆனாலும், அதைப்பற்றியெல்லாம் நான் கவலைபடப் போவதில்லை!! குறைந்தபட்சம், நான் எழுத மறந்த எனது நாட்குறிப்புகளின் ஒரு பதிவாகவாவது இவை இருந்துவிட்டுப்போகட்டுமே :)
17 மறுமொழிகள்:
அருமையாக இருக்கிறது.
தொடர்ந்து பதியுங்கள்
//வர்மாவின் கடமை உணர்வைச்சொல்லும்
//
அவன் கடமை உணர்ச்சிக்கு அளவேயில்ல டா...
ம்... அது ஒரு கனாக்காலம்...
@ சந்ரவதனா:
நன்றி சந்ரவதனா. தொடர்ந்து பதிவு செய்கிறேன்.
@குழலி:
ம்.. இன்னமும் அப்படியேதான் இருக்கிறான்னு நினைக்கிறேன்.
ungal pathivugal migavum arumai. "nanbargal namaku kidaitha varam". migavum arumaii. nam nanmbargalidam than migam adigamaga nam mana unarugalai pagigirom . friends are the relations send by god to save our memories
எஸ் ராவ விகடன்ல கொஞ்ச நாளா காணலையேன்னு நெனச்சேன் . அந்த குறை தீர்ந்தது இந்த பதிவு மூலம்!
அவரவர்களின் டைரியை படிப்பது போல இருக்கிறது அருள்..
பழைய நாட்களுக்குள் இதயம் பயணித்துவிட்டு வருவது போன்ற உணர்வு
வாழ்த்துக்கள்
@ Anonymous:
thanks a lot for ur comments.
@ சிங். செயகுமார்:
நன்றி ஜெயகுமார். இப்போது மீண்டும் ஆனந்த விகடனில் எஸ். ராமகிருஷ்ணன் 'தேசாந்திரி' எழுதிக்கொண்டிருக்கிறார். இதுவும் மிக நன்றாக இருக்கிறது. படியுங்கள்.
@ நிலவு நண்பன்:
மிக்க நன்றி ஞானியார். பெரும்பாலான விஷயங்கள் எல்லோர் வாழ்விலும் ஒன்றாகத்தானிருக்கிறது! இன்னும் நிரைய பகிர்ந்துகொள்கிறேன். அவயும் எப்படி இருக்கிறது என படித்துவிட்டுச் சொல்லுங்கள் :)
//இன்பங்கள் இரட்டிப்பாவதும், துன்பங்கள் பாதியாய் குறைவதும் பகிர்தலின்போதுதானே!//
ஒரு + :)
கலக்குங்க...
நன்றி இளவஞ்சி :)
ஹாய் அருள்
பகிர்தல் என்பது அங்கீகாரத் தேடல். அங்கீகாரமென்பது பாதுகாப்பு உணர்வை தரும். நமது இருப்பை அர்தமுள்ளதாக்கும்.
தங்கள் விமர்சனம் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.மிக்க நன்றி.
ஹாய் அருள்
பகிர்தல் என்பது அங்கீகாரத் தேடல். அங்கீகாரமென்பது பாதுகாப்பு உணர்வை தரும். நமது இருப்பை அர்தமுள்ளதாக்கும்.
தங்கள் விமர்சனம் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.மிக்க நன்றி.
priya
priyaraghu.blogspot.com
//பகிர்தல் என்பது அங்கீகாரத் தேடல்//
ஆமாம் பத்மப்ரியா, 100 சதவிகிதம் உண்மைதான். நீங்கள் சொன்ன பிறகுதான் இந்த கோணத்தில் யோசிக்கிறேன்! அதனால் தான் நமக்கு அங்கீகாரம் கிடைக்காது எனத்தெரிகிற விஷயங்களை நாம் பகிர்ந்துகொள்ள விரும்புவதில்லை! இல்லையா?!
மிக்க நன்றி தமிழ்.
அருள்..பகிர்தல் இல்லை என்றால் பைத்தியம் பிடித்து விடாதா..?!!
நட்பை பற்றி அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்..
நன்றி கவிதா.
:) முன்பே பார்த்ததுதான்.. அப்போதும் இதே :-) தான் தோன்றியது :)
நன்றி பொன்ஸ் :)
Post a Comment