என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

02 May 2006

இலக்கற்ற பயணங்கள்

எழுத மறந்த நாட்குறிப்புகள் - 1: இலக்கற்ற பயணங்கள்

சின்ன வயதிலிருந்தே எங்கும் எதிலும் இலக்குகள் வேண்டும் என்றே போதிக்கப்பட்டதாலோ என்னவோ, இலக்கற்ற பயணங்களின் சுவை உணர வாழ்வின் பெரும்பகுதி கடக்கவேண்டியிருந்தது. இலக்கில்லாமல் திரிதல் சுகம். இத்தனை மணிக்கு இன்னாரை பார்க்கவேண்டும் அல்லது இதைச்செய்யவேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லாமல் பயணிப்பதின் சுகம் அதை அனுபவித்தவர்க்கே தெரியும்.

+2 நாட்களில் நண்பன் புருஷோத்தமனுடன் மிதிவண்டியில் இப்படி பயணித்தபோது இதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் இந்த சுகம் எப்படி வருகிறது என்றெல்லாம் ஆராயவில்லை. எங்களுக்கு அதைவிட முக்கியமான வேலைகள் அப்போது இருந்தன! ஆளுக்கொரு மிதிவண்டியில் வந்தாலும் ஏதவது ஒரு தேனீரகத்தில் ஒரு வண்டியை போட்டுவிட்டு ஒரு வண்டியில் சுற்ற ஆரம்பிப்போம். பின்புறம் கேரியர் இருந்தாலும் ஒருமுறை கூட கேரியரில் அமர்ந்ததில்லை. யார் ஓட்டினாலும் மற்றவர் முன்புறம் உள்ள கம்பியில் அமர்ந்து பயணிப்பதே எங்களின் வழக்கம். அதுதான் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் பேசிக்கொண்டே பயணிக்க வசதியாக இருக்கும்.

கல்லூரி நாட்களில் இப்படி பயணிக்க எனக்கு கிடைத்த அரிய துணை, என் நண்பன் சுந்தரமூர்த்தி. இருவருக்கும் ஒரே பிறந்த நாள்(வருடம் உட்பட), ஒரே blood group மற்றும் ஒரே ரசனை! எங்களின் விவாதத்தில், இத்தகைய பணங்களில் காணக்கிடக்கும் சுகத்திற்கான காரணம் இலக்கின்றி பயணிப்பதே என்பதையறிந்தோம். கல்லூரி காலங்கள் முடிந்த பின்னும், இப்போதும் கூட, இப்படி பயணிப்பதற்காகவே நான் மயிலாடுதுறை செல்வதுண்டு.

அவனுடைய bike எடுத்துக்கொண்டு சுற்ற ஆரம்பிப்போம். நினைத்த இடத்தில் நிறுத்தி சூடாக தேனீர் அருந்துவோம். சட்டென்று மனதிற்கு பிடிக்கும் மரநிழல், நீர் சுழித்தோடும் சிற்றோடை, ஏதேனும் ஒரு பாலத்தின் மதில் சுவர் எப்படி ஏதேனும் பார்த்தல் வண்டியை ஓரம்கட்டிவிட்டு அமர்ந்து பேசுவோம், பேசுவோம் பேசிக்கொண்டே இருப்போம்.

வீட்டிலிருந்து கிளம்பும்போது கூட எங்கு செல்வது என்ற எந்த முடிவும் எடுத்திருக்க மாட்டோம். மயிலாடுதுறையைச் சுற்றி ஒரு நாற்பது அல்லது ஐம்பது கிலோமீட்டர் சுற்றளவில் எங்காவது செல்வோம். பூம்புகார் கடற்கரை, தரங்கம்பாடி கடற்கரை, அதையொட்டி அமைந்த டச்சு கோட்டை, கங்கைகொண்டசோழபுரம், வைத்தீஸ்வரன் கோயில், திருக்கடையூர் இப்படி எங்காவது பயணிப்போம்.

திருக்கடையூர் என்றால் அபிராமி கோயிலுக்கு செல்லவேண்டும் என்றில்லை. திருக்கடையூருக்கு சற்று முன்பே ஏதேனும் ஒரு பாலத்தின் மதில் சுவரில் அமர்ந்திருந்துவிட்டுத் திரும்பியிருக்கிறோம். வழிநெடுகிலும் எத்தனையோ பாலங்கள் இருப்பினும், குறிப்பாக அந்தப் பாலத்தைத் தேர்வுசெய்யவென்று பெரிதாக எந்தக் காரணமும் இருக்காது. அதைக் கடக்கையில் எங்கள் மனம் சொல்லும், இங்கு அமரலாமென்று. அவ்வளவுதான். சில சமையம் மயிலாடுதுறை தொடர்வண்டி சந்திப்பின் மேம்பாலத்துடன் எங்கள் பயணம் முடிந்திருக்கும்.

நாங்கள் வழக்கமாக பெட்ரோல் போடும் பங்க் இருக்கும் திசை, சென்றுகொண்டிருக்கும் சாலையின் போக்குவரத்து நெரிசல், முன்னே செல்லும் வாகனத்தின் பின்னே அமர்ந்திருக்கும் அழகிய பெண், சாலையில் எதிர்படும் "அறுவை" அன்பர்கள்... இப்படி யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் எங்கள் பயணத்தின் திசையை தீர்மானிக்கலாம்! ஏனெனில் எங்களின் விருப்பம் ஒரு இலக்கை அடைவதன்று. just பயணிப்பது!

இப்படித்தான் ஒருமுறை, கும்பகோணம் சாலையில் போகலாம் என கிளம்பினோம். மேம்பாலத்தை தாண்டியதும் சித்தர்காடு என்னும் கிராமத்தைல் "டென்ட் கொட்டகை" திரையரங்கை பார்த்தோம். மாலை மற்றும் இரவு காட்சிகள் மட்டுமே திரையிடப்படுகிற அந்த திரையரங்கில், ஏதோ ஒரு பழைய படம் ஓடிக்கொண்டிருந்தது. பால்யங்களில் எங்கள் கிராமத்து திரையரங்கில் படம் பார்த்த உணர்வுகளை மீட்டெடுக்க, என்ன படம் என்றுகூட யோசிக்காமல் உள்ளே புகுந்துவிட்டோம். பெஞ்ச் டிக்கெட்! மண் தரையில் அமைக்கப்பட்ட பெஞ்சுகள், ஆண்-பெண் தடுப்புச்சுவர், பல வேட்டிகளை ஒன்றாக இணைத்து தைத்தது போன்ற திரை, கதை நிகழும் களத்திலேயே அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது போல் எல்லாவற்றையும் மறந்து ரசிக்கும் கிராமத்து மக்கள், கடலை மிட்டாய், கலர் சோடா என களைகட்டும் இடைவேளை... இப்படி எதுவும் மாறாத திரையரங்கு எங்களுக்கு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது. சின்னச்சின்ன விஷயங்களைக்கூட கவனித்து, 'இது கூட மாறல பார்டா...!' என அதிசயித்தோம்.

இலக்குகளற்ற எங்கள் பயணங்களில் எதிர்பார்ப்புகளே இல்லை. எதிர்பார்ப்புகள் இல்லாததால் எங்கள் பயணங்கள் ஏமாற்றங்களைச் சந்தித்ததே இல்லை. மாறாக, எங்களுக்கு கிடைத்த சின்னச்சின்ன சந்தோஷங்கள் கூட எதிர்பாராதவையாக அமைந்ததால் அவற்றின் சுவை இருமடங்காயிற்று!

தங்களைவிட மென்மையானவற்றை விலக்கியும், வலிமையானவற்றிற்கு வளைந்துகொடுத்தும், தன்னிச்சையாய் பாதையமைத்துச்செல்லும் நதிகள் போன்றவை எங்களின் இத்தகைய பயணங்கள். கடலினை அடையவேண்டும் என்கிற இலக்குடன் நதிகள் பயணிப்பதாய் நான் உணரவில்லை. தன் பாதையில் சட்டென எதிர்ப்படுகின்ற கடலுடன் கறைந்துபோவதாகவே அறிகிறேன். இச்செயல் நதிகளின் வெற்றியோ அல்லது தோல்வியோ அன்று. ஒரு அனுபவம். அவ்வளவே.

இத்தகைய பயணங்களின்போதான எங்களின் மனநிலை, வரையறைக்குட்படாத உன்னத நிலையிலிருக்கும். இவற்றையெல்லாம் இவனிடம் சொல்லவேண்டாமென மனதிற்குள் தணிக்கை செய்துவைத்த விஷயங்களைக்கூட, தயக்கமின்றி பகிர்ந்துகொள்ளத்தூண்டும். எண்ணற்ற வேஷங்களுக்கிடயே மறைந்துகிடக்கும் 'உண்மையான எங்களை' மீட்டெடுக்கும் திறன் வாய்ந்தவை இப்பயணங்கள். ஒவ்வொரு பயணமும், சின்னதாய் ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட்ட திருப்தி தரும். இப்படி இருத்தல்தான் உயிர்களின் இயல்போ என்று திகைத்துப்போவோம். நமது அன்றாட வாழ்க்கை நம்மை இயல்பிலிருந்து கண்காணாத தொலைவிற்கு அழைத்துச்சென்றுவிட்டதாய் அயர்ந்துபோவோம். இலக்குகள் நிரைந்த நம் வாழ்வு, நமக்கேயான நம் நாட்களின் பெரும்பாண்மையை, நம் கண்ணெதிறே கொள்ளையிட்டுப்போகும் சோகம் உணர்வோம்.

என்ன உணர்ந்து என்ன? எல்லாம் முடிந்து சென்னை செல்லும் பேருந்து ஏறி இருக்கையில் சாய்ந்ததும், எனது நாளைய இலக்குகளை மனதிற்குள் பட்டியலிட்டபடி, மீண்டும் தொலைந்துபோய்க்கொண்டிருப்பேன் 'நான்'!

15 மறுமொழிகள்:

டிபிஆர்.ஜோசப் said...

இத்தனை மணிக்கு இன்னாரை பார்க்கவேண்டும் அல்லது இதைச்செய்யவேண்டும் என்கிற கட்டுப்பாடு இல்லாமல் பயணிப்பதின் சுகம் அதை அனுபவித்தவர்க்கே தெரியும்.//

வாணத்து பறவைகளைப் பாருங்கள்.. அவைகளுக்கு அப்பாயிண்ட்மெண்ட் என்று ஏதாவது இருக்கிறதா என்ன?

ஆனால் நீங்கள் கூறிய மாணவப்பருவம் ஒரு சுகமான பருவம்தான். வீட்டிற்கு நேரம் கழித்து சில நாட்களில் நடுநிசியில் வந்து ஏச்சும் பேச்சும் வாங்கினாலும் அடுத்த நாள் விடிந்ததுமே சைக்கிளை எடுத்துக்கொண்டு செல்வோமே.. அந்த காலம் மீண்டும் வருமா என்ன?

எனது நாளைய இலக்குகளை மனதிற்குள் பட்டியலிட்டபடி, மீண்டும் தொலைந்துபோய்க்கொண்டிருப்பேன் 'நான்'!//

இதுதாங்க யதார்த்தம்.. மத்ததெல்லாம் கனவு, கற்பனை..

அப்பப்ப நினைச்சி அசைபோட்டுக்கலாம்..அவ்வளவுதான்..

ramachandranusha(உஷா) said...

nice !
+ pooddaassu

அருள் குமார் said...

//இதுதாங்க யதார்த்தம்.. மத்ததெல்லாம் கனவு, கற்பனை..// உண்மைதான் ஜோசப். ஆனால் இப்படி சமாதானம் சொல்லிக்கொண்டே நமது இயல்பை நாம் இழக்கிறோமோ எனத்தோன்றுகிறது. இப்போதெல்லம் இப்படிப்பட்ட பயணங்களை அடக்கடி ஏற்படுத்திக்கொள்கிறேன்! நன்றி ஜோசப்.

அருள் குமார் said...

உஷா மேடம், மிக்க நன்றி.

கவிதா | Kavitha said...

//சென்னை செல்லும் பேருந்து ஏறி இருக்கையில் சாய்ந்ததும், எனது நாளைய இலக்குகளை மனதிற்குள் பட்டியலிட்டபடி, மீண்டும் தொலைந்துபோய்க்கொண்டிருப்பேன் 'நான்'!//

சென்னை வாழ்க்கை அப்படித்தான் ஆகிவிட்டது அருள்..

Muthu said...

//ஐம்பது கிலோமீட்டர் சுற்றளவில் எங்காவது செல்வோம். பூம்புகார் கடற்கரை, தரங்கம்பாடி கடற்கரை, அதையொட்டி அமைந்த டச்சு கோட்டை, கங்கைகொண்டசோழபுரம், வைத்தீஸ்வரன் கோயில், திருக்கடையூர் இப்படி எங்காவது பயணிப்போம்.//


இது போல் சுற்றுவட்டாரம் இருந்தா சரி...நாங்கள்ளாம் எங்க போவோம்?:)))


ஒரு வயது வரை சரி அருள்... ஆனால் வாழ்க்கை நம்மை புரட்டி போடுது...வயித்துக்கு பதில் சொல்ல தேவைஇல்லாட்டி நான் நாடோடி ஆயிருப்பேன்..


நல்ல பதிவு..உங்கள் பதிவுகள் பொதுவாக டச்சியாக உள்ளன.

அருள் குமார் said...

@கவிதா:
ஆம் கவிதா. சென்னை என்றில்லை, பொதுவாகவே நம் வாழ்வின் பெரும்பகுதியை நம் விருப்பப்படி செலவுசெய்ய முடிவதில்லை!

@முத்து:
மிக்க நன்றி முத்து. உங்கள் பாராட்டு மிகுந்த ஊக்கமளிக்கிறது.

//இது போல் சுற்றுவட்டாரம் இருந்தா சரி...நாங்கள்ளாம் எங்க போவோம்?:)))// ஏங்க? நீங்க எந்த ஊர்?

ilavanji said...

அருள், அப்பாடா... ஆரம்பிக்கறதுக்கு இத்தனை நாளா?! :)

//இலக்குகளற்ற எங்கள் பயணங்களில் எதிர்பார்ப்புகளே இல்லை. எதிர்பார்ப்புகள் இல்லாததால் எங்கள் பயணங்கள் ஏமாற்றங்களைச் சந்தித்ததே இல்லை. மாறாக, எங்களுக்கு கிடைத்த சின்னச்சின்ன சந்தோஷங்கள் கூட எதிர்பாராதவையாக அமைந்ததால் அவற்றின் சுவை இருமடங்காயிற்று!// ரொம்ப நல்லா இருக்குங்க!!

அருள் குமார் said...

நன்றி இளவஞ்சி,
கொஞ்சம் வேலை. இனி இவ்வளவு இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன் :)

குழலி / Kuzhali said...

//இனி இவ்வளவு இடைவெளி இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன் :)
//
வேண்டாம் சொன்னா கேளுப்பா இந்தன் ருசி கண்டா விடாது... அவ்ளோதான்.... சொல்லிப்புட்டேன்

குழலி / Kuzhali said...

ஹி ஹி இளவஞ்சி என் முந்தைய பின்னூட்டத்திற்கு கோவிக்க மாட்டார் :-)

Anonymous said...

ரொம்ப பொறாமையா இருக்கு அருள்!
உங்கள் நண்பருக்கும் வாழ்த்துக்கள்!

அருள் குமார் said...

//வேண்டாம் சொன்னா கேளுப்பா // - ஹி.. ஹி.. நாமல்லாம் என்னக்கி யார் சொன்னத கேட்டிருக்கோம்.

அருள் குமார் said...

சந்தர்ப்பம் வாய்க்கிற சில தினங்களிலாவது முழுமையாக வாழ்ந்துவிடுங்கள் பெருமாள். வேறென்ன செய்யமுடியும்?!

Anonymous said...

"//இதுதாங்க யதார்த்தம்.. மத்ததெல்லாம் கனவு, கற்பனை..// உண்மைதான் ஜோசப். ஆனால் இப்படி சமாதானம் சொல்லிக்கொண்டே நமது இயல்பை நாம் இழக்கிறோமோ எனத்தோன்றுகிறது."

நானும் இதையே தான் நினைத்தேன்

நாம் இழந்ததென்று நினைகிறதை மீட்க முயற்சி செய்யாமல் சாக்கு சொல்லிக்கொண்டு வாழ்கிரோம்

நல்லா இருந்தது பதிவு
நான் கல்லூரி முடித்து வேலை தேடிய நாட்களை நிணைவுபடுத்தியது