என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

17 May 2006

கடிதங்கள்

எழுத மறந்த நாட்குறிப்புகள் - 2: கடிதங்கள்

சில வருடங்களுக்கு முன்பு எனது வாழ்தலின் அத்தியாவசியங்களுள் ஒன்றாக விளங்கிய கடிதங்கள், இன்று வெறும் நினைவுச்சுவடுகளாக மட்டுமே எஞ்சியிருக்கிறது. கடிதங்கள் என் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகள் மிகப்பெரியவை. அப்படியிருந்த கடிதங்களை இன்று சுத்தமாக மறந்தே போய்விட்டது மிக ஆச்சர்யமாய் இருக்கிறது!

நேற்று என் நண்பன், தனது திருமண அழைப்பிதழ்களை அனுப்புவதற்காக, அருகில் தபால் நிலையம் எங்கிருக்கிறது எனக்கேட்டான். வெகு இயல்பாக 'தெரிலடா... பக்கத்ததுவீட்டு ஆன்ட்டி கிட்ட வேணா கேட்டுப்பாரு...' என்று சொன்ன பிறகுதான் உணர்ந்தேன்... ஒரு காலத்தில், எந்த இடத்திற்கு வீடு மாறி சென்றாலும், எனது முதல்வேலை அருகிலிருக்கும் தபால் நிலையத்தைத் தேடுவதுதான். இப்போதிருக்கும் இந்த வீட்டிற்கு வந்தபின், கடந்த இரண்டு வருடங்களாக, அருகில் தபால் நிலையம் எங்கிருக்கிறது என்ற தேடலுக்கு அவசியமே இல்லாதிருந்திருக்கிறேன்! இது எப்படி சாத்தியமாயிற்று என தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துவிடேன்.

தொலைபேசியும், மின்னஞ்சலும் எனது அன்றாட வாழ்வில் நுழைய நுழைய, கோபித்துக்கொண்ட கடிதங்கள், என்னிடம் சொல்லாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக வெளியே சென்றுவிட்டன. அடுத்த வினாடிகளில் பதில் கிடைத்துவிடுகிற தொலைபேசியும் மின்னஞ்சலும் இருக்கிறபோது, பதிலுக்காக நான்கைந்து நாட்கள் காக்கவைக்கிற கடிதங்களுக்கு அவசியமில்லாமல் போயிற்று. ஆனால் அதிலிருக்கிற அன்னியோன்யமும், உயிர்ப்பும் இதில் இருக்கிறனவா என யோசித்துப்பார்த்தால், நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடிதங்களுக்கான காத்திருப்புகள் தரும் தவிப்பும், எழுதியவரின் கையெழுத்து தரும் உயிர்ப்பும் அலாதியானவை. கையெழுத்து கொண்டு, அந்த கடிதம் எப்படிப்பட்ட மன நிலையில் எழுதப்பட்டிருக்கிறது என்பதைக்கூட உணர்ந்திருக்கிறேன். எந்த மொழியிலும் நமது உணர்வுகளை நூறு சதவிகிதம் பகிர்ந்துகொள்ள இயலாதெனினும், கடிதங்களில் சில வசதிகள் உண்டு. உதாரணத்திற்கு, 'நீண்ட' என்கிற வார்த்தையில் உள்ள மூன்று சுழி 'ண' வில் பத்துப்பதினைந்து சுழி போட்டு எவ்வளவு நீண்ட என்று உணர்த்துவோம்!

இதுவரை எனக்கு வந்த எல்லா கடிதங்களையுமே நான் சேமித்து வைத்திருக்கிறேன். எனக்காக பிறர் எழுதிய நாட்குறிப்புகள் அவை. நாட்குறிப்புகளை மீண்டும் எடுத்து படிப்பதுபோல், எனக்கு வந்த பழைய கடிதங்களை படிக்க ஆரம்பித்து தூங்காமல் போன இரவுகள் நிரைய. நமது பழைய நாட்களை மீட்டுத்தரும் வல்லமை நாட்குறிப்புகளுக்கு அடுத்து கடிதங்களுக்கே வாய்த்திருக்கிறது.

தபால் நிலையம் மற்றும் கடிதங்களுடனான எனது முதல் பரிச்சயம், எங்கள் கிராமத்து வீட்டில் தான் நிகழ்ந்திருக்கிறது. எங்கள் கிராமத்திற்கு தபால் நிலையம் வந்தபோது எங்கள் உறவினர்களில் ஒருவர்தான் 'போஸ்ட் மாஸ்டர்'. அவர் வீட்டில் தபால் அலுவலகம் வைக்க வசதி இல்லாததாலும், அது கூறை வீடு என்பதாலும், எங்கள் வீட்டின் திண்ணை பக்கம் சாளரம் கொண்ட ஒரு அறையில் தபால் அலுவலகம் வைத்துக்கொள்ள அவர்அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்கு பிறகு எங்கள் வீட்டின் சூழலே சற்று மாறித்தான் போயிருந்தது. வீட்டின்முன் மின்கம்பத்தில் கட்டப்பட்ட தபால் பெட்டி, திண்ணையில் கட்டப்பட்டிருந்த சிவப்பு நிற அறிவிப்பு பலகைகள், அந்த அறையின் உள்புற வாசலில் மாட்டப்பட்டிருந்த "அனுமதியின்றி உள்ளே வராதீர்" போர்டு எல்லாம் எங்களுக்கு வினோதமாக இருந்தன.

எங்கள் கிராமத்து வீட்டில் தபால் நிலையம் வந்தபின், முதல்முறையாக அங்கு விடுமுறைக்கு சென்ற நாட்கள் இன்னும் உயிர்ப்புடன் நினைவில் இருக்கிறது. அந்த அறையை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. விடுமுறைக்கு அங்கு சென்றால் பெரும்பாண்மையான நேரம் அந்த அறையில்தான் இருப்பேன். காலையில் எப்போதடா போஸ்ட் ஆபீஸ் திறப்பார்கள் என்றிருக்கும். டவுனில் சென்று படிப்பவர்கள் என்பதால், தபால்களை கட்டும் சாக்குப்பை, சீல்வைக்கும் அரக்குகள் மற்றும் அச்சுகள், தினமும் தேதி மாற்றி வைக்கப்படும் முத்திரைகள் எல்லாவற்றையும் அணுகும் அனுமதியை நாங்கள் பெற்றிருந்தோம்! தபால் கட்டு வந்தவுடன் அவற்றை ஊர் மற்றும் தெரு வாரியாக பிரிப்பதிலிருந்து, முத்திரை குத்துவது வரை நாங்களே செய்வோம். கடிதம் கிடைக்கப்பெற்றவர்களில் பலர், மீண்டும் அதை எங்கள் வீட்டிற்குத்தான் கொண்டுவருவார்கள். அவற்றை அவர்களுக்கு படித்துக்காட்டி, பதில்கடிதம் எழுதித்தரும் வேலையும் எங்களுடையது. அனேகமாக நான் எழுதிய முதல் கடிதம் எனக்காக இல்லை என்றே நினைக்கிறேன்.

பள்ளிப்படிப்பு முடியும்வரை எனக்கென்று பெரிதாக ஏதும் கடிதங்கள் வந்ததில்லை. பொங்கலுக்கு ஊருக்கு செல்லும்போது வகுப்பில் முகவரிகளை பரிமாறிக்கொள்வோம். 'இந்த அட்ரஸ் போட்டா கரக்டா உனக்கு வந்துடுமாடா?' என நண்பர்கள் கேட்கும்போது, 'டேய்... போஸ்ட் ஆபீஸே எங்க வீட்லதான் இருக்கு. நாங்கதான் கட்டு பிரிப்போம்...' என்று பெருமையாய் சொல்வேன். நண்பர்கள் ஆச்சரியமாய் கேட்கக் கேட்க, போஸ்ட் ஆபீஸில் உபயோகிக்கும் technical-terms எல்லாம் பயன்படுத்தி பந்தா விட்டுக்கொண்டிருப்பேன். எங்கள் கூட்டுக்குடும்பத்தில் நாங்கள் சகோதர சகோதரிகள் மொத்தம் ஏழு பேர். பொங்கலின்போது எங்களின் மனசுக்குள் ஒரு போட்டியே நடக்கும். யாருக்கு அதிக பொங்கல் வாழ்த்துக்கள் வருகிறதென்று!

கல்லூரிக்கு சென்றபின்தான் ஏராளமான கடிதப்போக்குவரத்துகள். முழு நீள வெள்ளைத்தாளில் பக்கம் பக்கமாக எழுதிக்கொள்வோம். கடிதம் எழுதி முடித்தபின்னும் ஏதாவது தோன்றும். margin விட்ட இடங்களும் போதாமல் இண்டு இடுக்குகளிலெல்லாம் எழுதி நிரப்புவோம். காதலர்களின் பேச்சுபோல, 'அப்படி எழுத என்னதான் இருக்கிறது' என அடுத்தவர்கள் வியக்கும்படி எழுதுவோம். உன்ன எப்டில்லாம் miss பண்றேன் தெரியுமா-விலிருந்து இன்னைக்கு எங்க ஹாஸ்டல் மெஸ்ஸில் என்ன மெனு என்பதுவரை அனைத்தையும் எழுதுவோம். 'to my dear lover' என்றெல்லம் முகவரியிலேயே எனது பெயருக்கு முன்னால் ஒரு நண்பன் எழுதுவான்!

தெரிந்த நண்பர்கள் பேதாதென்று பேனா நண்பர்கள் வேறு! பெரிய அறிவுஜீவிகள் கணக்காக சீரியஸான விஷயங்களை எடுத்துக்கொண்டு மாதக்கணக்கில் பேனா நண்பர்களுடன் விவாதிப்போம். அதில் மறக்கவே இயலாத ஒரு நண்பர் - புதுக்கோட்டை அன்னசத்திரம் என்கிற ஊரிலிருந்து வெங்கடாஜலபதி என்பவர். குடும்ப சூழலால் பள்ளிப்படிப்பை தொடர இயலாமல், சைக்கிள் கடையில் வேலைபார்த்துக்கொண்டு, கடிதங்களை தன் வாழ்வின் வடிகாலாகக் கொண்டவர். அருமையாக எழுதுவார். அந்த சூழலிலும், பாலகுமாரன் முதற்கொண்டு ஏகப்பட்ட எழுத்தாளர்களை எப்படியாவது படித்துவிடக்கூடியவர். அவர் எனக்கு அறிமுகப்படுத்திய எழுத்துக்கள் நிரைய. இப்போது அவருடன் கடிதத்தொடர்பு இல்லையென்றாலும், இன்றும் அவரின் பழைய கடிதங்களை அடிக்கடி எடுத்து படிப்பேன்.

ஹாஸ்டலில் கடிதம் வருவது ஒரு கௌரவம். அது எனக்கு மிக அதிகமாகவே கிடைத்தது. B.Sc படிக்கும்போதும் சரி, MCA படிக்கும்போதும் சரி... அதிக கடிதங்கள் வருவது எனக்குத்தான். B.Sc நண்பர்களும் சேர்ந்துகொள்ள, MCA வில் கடிதங்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. B. Sc நண்பர்களைப்பிறிந்து MCA சேர்ந்த புதிதில் கடிதங்களே எனக்கு மிகப்பெரும் ஆறுதல். மிக நெருங்கிய நண்பர்கள் வட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்திலேயே தங்கள் மேற்படிப்பைத்தொடர, நான் மட்டும் சென்னை வந்துவிட்டேன். அப்போது 'முஸ்தபா... முஸ்தபா...' பாடல் வெகு பிரசித்தம். "கல்விபயிலும் காலம் வரையில்/ துள்ளித்திரியும் எங்கள் விழியில்/ கண்ணீரைக் கண்டதில்லை தென்றல் சாட்சி/ நண்பன் பிரிந்து ஊர் திரும்பும்/ நாளில் மட்டும்தான் நீர் அரும்பும்/ கண்ணீரில்தானே எங்கள் farewell party" - நண்பர்களை பிரிந்த சூழலில் கேட்டதாலோ என்னவோ, என்னை மிகவும் பாதித்த வரிகள் இவை. ஹாஸ்டல் மொட்டை மாடியில் தனியாய் வாக்மேனில் இந்த பாடல் கேட்டு அழுதிருக்கிறேன்! உடனே ஓடிப்போய் நண்பர்களின் கடிதங்களை எடுத்து படிக்க ஆரம்பித்துவிடுவேன். அவர்களெல்லாம் ஒன்றாக இருப்பதால் அவர்கள் அனைவரின் கடிதங்களிலும் பெரும்பாண்மையான விஷயங்கள் ஒன்றாக இருக்கும். இருப்பினும் ஒவ்வொருவரிடமிருந்தும் தனித்தனி கடிதம் வரும். நான் அவர்களுக்கு எழுதும் கடிதங்களிலும் பெரும்பாண்மையான விஷயங்கள் ஒன்றாகத்தானிருக்கும். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கடிதம் எழுதுவேன்!

ஹாஸ்டலில், பொங்கல் மற்றும் தீபாவளியின் போது போஸ்ட்மேன் பணம் கேட்க வந்தால், நேராக என் அறைக்குத்தான் அனுப்பிவைப்பார்கள். 'இங்க வர்ர லெட்டெர்ஸ்ல பாதிக்குமேல அவனுக்குத்தான் வருது. அவன் கிட்ட போய்க் கேளுங்க...' என்பார்கள். அதுவும் பிறந்தநாளென்றால் கேட்கவே வேண்டாம். வாழ்த்து அட்டைகளும், பரிசுப்பொருள்களுமாய் போஸ்ட்மேன் அள்ளிக்கொண்டு வருவார். ஹாஸ்டலில் எனது அலமாரி முழுக்க கடிதங்கள், கடிதங்கள், கடிதங்கள்தான்... ஒவ்வொரு நாளின் பெரும்பகுதியும் கடிதங்களை படிப்பதிலும் எழுதுவதிலுமே போய்விடும். தேர்வுநாட்களில் கடிதங்களைக் காண இயலாமல் பைத்தியம் பிடிப்பது போலாகிவிடும்.

இப்போது நகரங்களிலும் பெருநகரங்களிலும் கடிதங்கள் வெறும் பத்திரிக்கைகள் அனுப்பவும் ஆவணங்களை அனுப்பவும் மட்டுமே என்றாகிப்போனது மனதை வருந்தச்செய்கிறது. எனது நெருங்கிய நண்பர் ஸ்டாலினுடன் இதுபற்றி பேசிக்கொண்டிருந்தபோது, அவரும் இப்படி சில நாட்களாய் யோசித்துக்கொண்டிருப்பதாயும், மீண்டும் அந்த பழக்கத்தை ஆரம்பிக்க வேண்டுமென்று, எனக்கு மிக நீண்டதாய் ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருப்பதாயும் சொன்னார். இந்த 'நீண்ட' வில் பத்துப்பதினைந்து சுழியில் 'ண' போட்டிருந்தால் பொருத்தமாய் இருந்திருக்கும்தானே!?

15 மறுமொழிகள்:

Anonymous said...

அருமையான பழைய நினைவுகளை மீண்டும் அசை போட வைத்த பதிவு... நன்றி அருள்!!!
...aadhi

சிங். செயகுமார். said...

உண்மையில் நண்பரே கடிதம் எழுதுவதில்தான் எத்துனை சந்தோஷங்கள். உறவினர் நண்பருக்கெல்லாம் எழுதும் போது நேரில் பார்த்தால் எப்படி பேசுவோமோ அதை போலவும் எழுதி மனம் சந்தோஷ பட்ட நாட்கள் எத்தனை!. என் தந்தைக்கு ஒரு முறை 72 பக்கங்களில் எழுதிய கடிதம். என் வெகுதூரத்திய நினைவுகள் வரும் போது படித்து பரவச பட்டு இருக்கிறார். நள்ளிரவு நேரங்களில் விழிப்ப்பு வரும் போதெல்லாம் அவருக்கு கடிதமே ஆறுதல். கடிதம் எழுதி ஆண்டுகள் ஆகிவிட்டன.ஊடகங்களின் நெருக்கங்கள்.எல்லாவற்றையும் தூக்கி சப்பிட்டுவிட்டன. நான் எழுதும் கடிதம் ஒரு நோக்கில் எழுதி. எதிராளி புரிதல் விதம் பதிதல் விதம் நோக்கி அசை போட்ட தருணங்கள் அழகானவை. அனைவரிடமும் தொலைபேசி அவசரத்திற்கு இரண்டு வார்த்தை. இதனால் எழுதும் பழக்கமும் இழந்து விடுவோமோ எனும் அச்சம் என்னுள் எழுகின்றது.
சாதாரண கடிதம் எழுதினாலும் அதில் நேர்த்தி காண விழைந்த நாட்கள்.எல்லாம் தொலைந்து போய் விட்டனவா. இல்லை .பத்திரமாக பதுக்கபட்டதா. நண்பரே உங்களின் எழுது நடையும் நினைவுகளும் நெஞ்சில் நிறைகின்றது

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

அருள்குமார், இனிய நினைவு கூறல். உங்களது பதிவுகள் பலவும் நன்றாக இருக்கின்றன.

இதைப் போன்றே சில காலம் முன்பு இன்னும் சில பேரும் 'கடிதங்கள்' பற்றி வலைப்பதித்திருந்தோம் - பழைய கடிதம் ஒன்று.

அருள் குமார் said...

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஆதி.

ஜெயகுமார் sir,
இந்த பதிவில் நான் சொல்ல மறந்த சில நல்ல உணர்வுகளை தொகுத்திருக்கிறீர்கள். நன்றி.

அருள் குமார் said...

செல்வராஜ்,
உங்கள் வர்கைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி. நீங்கள் அடைந்த மாற்றங்களை நீங்களே ஆய்ந்து பதிவு செய்திருக்கிற உங்களின் 'பழைய கடிதம் ஒன்று' பதிவு படித்தேன். அவசியமான பதிவு. இப்போது படிக்கையில் அது தரும் உணர்வுகளை நானறிவேன்.

சுந்தரவடிவேல் அவர்களின் கடிதங்கள் ஆழமான கருத்துக்களை கொண்டிருக்கின்றன். அறிமுகப்படுத்தியதற்கு என் நன்றிகள்.

We The People said...

அன்பு அருள்,

கலக்குங்க..உங்கள் உணர்வின் பதிவுகள்..மறந்து போன கடிதங்களும் அதன் நினைவுகளும் கடிதங்களால் நான் பெற்ற சந்தோஷம், சில மறக்க முடியாத நிகழ்ச்சிகள்... காதல் கடிதங்கள், அதில் ஒன்று என் தம்பி கைக்கு போய்..அவன் வீட்டுல போட்டு கொடுத்தது..எல்லாம் ஞாபகம் வருது..விடாம எழுதுங்க..வாழ்க உங்கள் இலக்கிய உணர்வுகள்..வளர்க உங்கள் எழுத்து...

அருள் குமார் said...

நன்றி ஜெய்சங்கர். இருங்கள் இந்த மேட்டரை உங்கள் மனைவியிடம் போட்டுக்கொடுக்கிறேன்!

உங்கள் வலைப்பதிவு முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

பொன்ஸ்~~Poorna said...

கடிதம் எழுதுவதில் இவ்வளவு இருக்கா? நானெல்லாம் கடிதம் எழுதினதே இல்லை.. எல்லாம் இ-மெயில் தான்.. பேப்பர் என்றால் ஏதோ ஒன்றிரண்டு வாழ்த்து அட்டைகளோடு சரி :)

அருள் குமார் said...

//எல்லாம் இ-மெயில் தான்.. பேப்பர் என்றால் ஏதோ ஒன்றிரண்டு வாழ்த்து அட்டைகளோடு சரி :) // இப்போது நானும் அப்படித்தான் ஆகிவிட்டேன் பொன்ஸ் - அப்படி ஆனதே தெரியாமல்!

மீண்டும் காகிதத்தில் கடிதம் எழுதும் பழக்கத்தை ஆரம்பித்திருக்கிறேன்.

Anonymous said...

Dear brother,
Very nice.Letter writting and waiting for letter that too from distance is very good.when i was a small boy, i used to see small boys, girls and elder people daily waiting for post man and enquire for any letter or gift from foreign countries from their family wage earners.now cell , telephone,email and sms replaced all.
Have you seen one hindi song dakiya , dak laya.very fine song i really enjoyed.
thank you for your writting
Raveendran.K

அருள் குமார் said...

நன்றி ரவீந்திரன். நீங்கள் சொன்ன இந்தி பாடலை பார்த்ததில்லை :(

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//தொலைபேசியும், மின்னஞ்சலும் எனது அன்றாட வாழ்வில் நுழைய நுழைய, கோபித்துக்கொண்ட கடிதங்கள், என்னிடம் சொல்லாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக வெளியே சென்றுவிட்டன//

அழகிய எழுத்து நடை நண்பா..கலக்குங்க..

கடிதம் அனுப்புதல் என்றால் என்ன?

ஒரு காலத்தில் மனிதர்கள் காகிதத்தில் பேனாவால் எழுதி தகவல்களை மற்றொருவருக்கு தெரிவிப்பார்கள். இந்த முட்டாள்தனமான முறையே கடிதம் அனுப்புதலாகும்

அப்படின்னு நம்ம தலைமுறைக்கு ஒரு பாடம் வந்தாலும் வரும்னு நினைக்கின்றேன்.

அருள் குமார் said...

நன்றி ஞானியார்,

முட்டாள்தனமான முறை என்று சொல்லாவிட்டாலும், அப்போதெல்லாம் கடிதம் எழுத எவ்வளவு கஷ்டப்பட்டாட்கள் என படித்து வியக்கலாம்! சரிதானே.

சேதுக்கரசி said...

நல்ல பதிவு.

//டேய்... போஸ்ட் ஆபீஸே எங்க வீட்லதான் இருக்கு. நாங்கதான் கட்டு பிரிப்போம்...'//

:))

Unknown said...

அருமையான பதிவு அருள். எனக்கு வந்த கடிதங்களை நானும் சேர்த்து வைத்துள்ளேன். இன்லேண்ட் லெட்டர்கள், மஞ்சள் கவர், ப்ரவுன் கவர், வாழ்த்து அட்டைகள் என்று ஒரு பெட்டி நிறைய பொக்கிஷங்களாய் என்னுடன் எப்போதும் இருக்கும். இப்போதெல்லாம் இமெயிலில் மட்டுமே வருகின்றது கடிதங்கள். அபூர்வமாய் பெறப்படும் கடிதங்கள்.. போஸ்ட் கார்ட் விசாரிப்புக்கள்....நாம் பள்ளியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டம் மிகவும் அழகானது. உங்கள் பதிவை வாசிக்கையில் ஏதேதோ நினைவுகள் மின்னி மறைகின்றன.

பகிர்வுக்கு நன்றி ;))