என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

12 June 2006

நாங்க போட்ட நாடகம் 2

முதல் பகுதி இங்கே...

ரு வழியாக ஒத்திகைகள் முடிந்து அரங்கேற்ற நாளும் வந்தது. முன்னரே திட்டமிட்டபடி, அன்று காலையிலேயே ஒவ்வொருவராக, ஆனதாண்டவபுரம் வினோத் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தோம். வீடு நல்ல விசாலமாய் இருந்தது. ஓட்டு வீடுதான் என்றாலும் பெரிய திண்ணைகள், விசாலமான ஆளோடி, வீட்டின் நடுவே மழை வெயில் காற்று எல்லாம் கொண்டு தரும் வாசல் என வசதியாய் இருந்தது. இந்த எல்லா இடங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தென்பட்டனர். வினோத்தின் நண்பர்கள் என்பதால், நாங்கள் மட்டும் அவனுடைய அறைக்கு வந்துவிட்டோம். ராஜேஷ் வாய்ப்பாட்டுக்கும் பெயர் கொடுத்திருந்ததால் வெளியில் தனியாய் ப்ராக்டிஸ் செய்துகொண்டிருந்தான்.

எங்கள் அறையின் கதவை சாத்திவிட்டு, எல்லோரையும் ஒருமுறை தனித்தனியாக அவரவர் காட்சிகளை ஒத்திகை பார்த்துக்கொள்ளும்படி விரட்டிக்கொண்டிருந்தான் பாலாஜி-

'எல்லாரும் டயலாக் பேப்பர் வச்சிருக்கீங்கல்ல. ஒருவாட்டி உங்க சீனையெல்லாம் அப்படியே மனசுல ஓட்டிக்கங்க...'

நானும் வினோத்தும் அதை பெரிதாய் கண்டுகொள்ளாவிட்டாலும், ஜூனியர் மாணவர்கள் ரொம்ப சிரத்தையாய் பாலாஜியின் வார்த்தையைப் பின்பற்றினார்கள். ஆளுக்கொரு மூலையில் தனித்தனியாய் நின்றுகொண்டு சின்னச்சின்ன அசைவுகளுடன் தங்கள் வசனங்களை மெதுவாய் சொல்லிப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். எக்ஸாமுக்கு முன், எக்ஸாம் ஹால் வாசலில், அவசர அவசரமாய் படிக்கும் மாணவர்களைப்போல் இருந்தது அவர்களைப்பார்க்க. இதில் இரண்டுபேர் நடுநடுவே டிஸ்கஷன் வேறு!

செந்தில் ஒரு ஓரமாய் தீவிரமான சிந்தனையில் இருந்தான். முதல் நாடகமல்லவா, நேரம் நெருங்க நெருங்க ரொம்ப டென்ஷன் ஆகிறான் போல. கூர்ந்து கவனித்தால், சின்ன இடைவெளிகளில், லேசாய் தலையையும் கழுத்தையும் திருப்பிக்கொள்வது தெரிந்தது. 'வினோத்து... அங்க பாரேன், மச்சான் மனசுக்குள்ள ரிகர்சல் பண்ணிக்கறான்...' என்றேன் சன்னமாய் சிரித்துக்கொண்டே. பார்த்த வினோத்.

இங்கு வந்ததிலிருந்து எனக்கும் பாலாஜிக்கும் ஒரு டவுட். ஊருக்குள் எங்குமே ஒரு விழாவுக்கான அறிகுறியே இல்லையே என. வினோத்திடம் கேட்டோம்.

'இன்னிக்கு ஒன்னும் விழா இல்லடா. இன்னிக்கு போட்டி மட்டும்தான். அடுத்த வாரம்தான் விழா. இன்னிக்கு ஜெயிக்கறவங்கள அன்னிக்கு கூப்பிட்டு சீஃப் கெஸ்ட் கையால ப்ரைஸ் கொடுப்பாங்க...' என்றான்.

அப்போதே எனக்கு சப்பென்று ஆகிவிட்டது. ம்... அப்போ ரொம்ப ஆடியன்ஸ் எதிர்பாக்க முடியாது!

'ஏன்டா வினோத்... டிராமாக்கு இன்னும் எத்தன டீம் வந்திருக்கு. உங்கப்பாகிட்ட கேட்டியா..?' - பாலாஜி.

'கேட்டேன்டா. நானும் போட்டில இருக்கறதால சொல்லமாட்டேன்னுட்டார்.'

'அடப்பாவி... அவ்ளோ நேர்மையான ஆளா..?! இவர நம்பித்தானடா கண்டிப்பா ப்ரைஸ் கிடைக்கும்னு வந்தோம்..!'

'அதெல்லாம் ரொம்ப எதிர்பாக்காதடா.' என்று குண்டைத்தூக்கிப்போட்டான் வினோத்.

சட்டென வெளியில் சலசலப்பு அடங்கி அமைதியாக, கர்நாடக சங்கீதத்தில் யாரோ பாட ஆரம்பித்தார்கள். 'யார்ரா இவ்ளோ சத்தமா ப்ராக்டிஸ் பண்றா...' என்று நினைத்தபடி, மெதுவாய் கதவைத்திறந்து எட்டிப்பார்த்தோம்.

அங்கே ஒரு பையன் சப்பளங்கால் போட்டு அமர்ந்து பாடிக்கொண்டிருக்க, சற்று இடைவெளிவிட்டு அமைதியாய் மற்ற மாணவர்கள் அமர்ந்திருந்தார்கள். எதிரில் ஈஸிச்சேர் போட்டு அமர்ந்திருந்த வினோத் அப்பா, கையில் ஒரு பேட் வைத்துக்கொண்டு ஏதோ குறித்துக்கொண்டிருந்தார்.

'அடப்பாவிகளா... போட்டி ஆரம்பிச்சிடுச்சிடா..! டேய் வினோத், உங்க வீட்லதான் போட்டியா..? டிராமா எங்கடா போடுவிங்க...?!!' - அதிர்ந்துவிட்டான் பாலாஜி. நாங்களும் குழப்பமாய் வினோத் முகத்தையே பார்த்தோம்.

'எனக்கென்னடா தெரியும். இதெல்லாம் எங்கப்பா எங்கிட்ட சொல்ல மாட்டாருடா. வாய்ப்பாட்டு இன்டிவீஜுவல் பெர்பாமன்ஸ் தான. அதனால வீட்லையே வச்சிருப்பார். நாடகமெல்லாம் இங்க இருக்காதுடா. பக்கத்து கோயில்ல ஒரு மேடை இருக்கு. அனேகமா அங்கயாத்தான் இருக்கும், கவலப்படாதீங்க...' என்று சமாதானப்படுத்தினான் வினோத்.

'அனேகமாவா...! எனக்கென்னவோ நம்பிக்கையில்லை...' என்றேன்.

'நீவேற சும்மா இருடா... பின்ன இங்க எங்க இடம் இருக்கு டிராமா போட...' - கண்களால் வீட்டை அளந்தபடி வினோத்தை ஆமோதித்தான் பாலாஜி. நாங்களே குழம்பிக்கொண்டிருப்பதைப் பார்த்து செந்தில் ஆடிப்போயிருந்தான்.

ஒவ்வொருவராய் நடுவில் வந்தமர்ந்து பாடி முடிக்க, 'ம்... அடுத்து இன்ஸ்டூமெண்டல் சோலோ... யாருப்பா கோகுல்...' என்றார் வினோத் அப்பா. கும்பலிலிருந்து மிருதங்கத்துடன் எழுந்து நடுவுக்கு வந்த அந்தப் பையன் கோகுலாக இருக்கவேண்டும்! நான் மெதுவாய் திரும்பி வினோத்தைப்பார்த்தேன். 'இதுவும் சோலோ தாண்டா...' என்று பல்லைகடித்துக்கொண்டு முனுமுனுத்தான். நான் பேசாமல் திரும்பிக்கொண்டேன்.

இப்படியே ஒவ்வொரு போட்டியாய் முடிந்தது. 'அடுத்து நாடகம்...' என்றபடி வினோத் அப்பா எழுந்துகொண்டார். 'அப்பாடா... எழுந்துவிட்டார். நாடகம் இங்க இல்ல...' - அப்போதுதான் எனக்கு நம்பிக்கையே வந்தது.

'நாடகத்துக்கு ரெண்டு டீம் வந்திருக்கு... ஒன்னு CVC காலேஜ், மயிலாடுதுறை(எங்களோடது!), இன்னொன்னு அரசு கலைக்கல்லூரி கும்பகோணம்...' என்று அறிவித்தார்.

'ரெண்டே டீம் தானா..?!' ஏமாற்றமாய் என்னைப்பார்த்தான் பாலாஜி. 'கவலப்படாதடா, வினோத் அப்பா நமக்கு ஹெல்ப் பண்ணாட்டிகூட நமக்கு ப்ரைஸ் உண்டு...' என்ற என்னை ஏளனமாய் பார்த்த செந்திலுக்கும் எங்களுக்கும் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

'அகர வரிசைப்படி முதல்ல அரசு கலைக்கல்லூரி... ரெடியாப்பா..?' என்று அவர்களை அழைத்தபடி, 'தம்பி... அந்த அண்டா, பக்கெட்டு, பானையெல்லாம் எடுத்து வெளில வைங்க...' என்று நடு வாசலைக்காட்டி தனது அடுத்தடுத்த கட்டளைகளை அசராமல் பிறப்பித்துக்கொண்டிருந்தார் வினோத் அப்பா!

சகலமும் ஒடுங்கிப்போயிறு எங்களுக்கு. ஆக, நடுவாசலில் இறங்கித்தான் நாடகம் போடவேண்டுமென்பது தெளிவாக முடிவாகிவிட்டது. என்னால் செந்தில் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. 'டேய் ஸ்கிரீன் இல்லாம எப்படிடா நந்தி செட் போடுவிங்க..!' வெலவெலத்துவிட்டான் செந்தில். 'இப்ப ஒன்னும் பண்ண முடியாதுடா... அட்ஜஸ் பண்ணிக்க...' - வேறென்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஏக டென்ஷனில் என்னை முறைத்த செந்திலைக் கண்டும் காணாமல் திரும்பிக்கொண்டேன்.

வினோத் அப்பா ஈஸிச்சேரைத் திருப்பி வாசல் பக்கம் போட்டுக்கொண்டார்(இதற்குத்தான் எழுந்தார் போலும்!). பக்கத்தில் ஒரு நாற்காலியையும் இழுத்துப்போட்டு, 'குமரேசு... பக்கத்துல ரெண்டுவீடு தள்ளி வாத்தியார் வீடு தெரியும்ல... பரந்தாமன் வாத்தியாருடா. ஓடிப்போயி அவர கூட்டியா... ஒடு...' என்று ஒரு பையனை ஏவினார். நாடகத்துக்கு இன்னொரு ஜட்ஜாம்!

இதற்குள் வாசல் சுத்தம் செய்யப்பட்டிருக்க, திண்ணைப் பக்கமிருந்து அரசு கலைக்கல்லூரி டீம் மேக்கப்புடன் வந்துகொண்டிருந்தது. பாலாஜி எங்களை அறைக்குள் அழைத்தான்.

'சரி விடுங்க. யாரும் அப்செட் ஆகவேண்டாம். வந்ததுக்கு நம்ம காலேஜ் பேர காப்பாத்திட்டு போகனும். எல்லாரும் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிக்கங்க... அவங்கவங்க காஸ்டியூம் கொண்டாந்திருக்கீங்கல்ல..'

அவரவர் தங்கள் பேக் திறந்து ட்ரஸ் மாற்றிக்கொள்ள ஆரம்பித்தோம். செந்திலுக்குத் தனியாக ட்ரஸ் எதும் இல்லை. போர்வை போர்த்தப்போவதால் போட்டிருக்கிற போண்ட் ஷர்ட் போதும் என்று சொல்லியிருந்தோம். எனக்கு ஊர் நாட்டாமை வேஷம். எஜமான் ரஜினியையும், சின்னக் கவுண்டர் விஜயகாந்தையும், பல படங்களில் சரத்குமாரையும் மனதில்வைத்து அதேபோல கதர்சட்டையும் வேஷ்டியும் கொண்டுவந்திருந்தேன். பச்சை கலர் பட்டை பெல்ட் வேறு. ஒரு பில்டப்புக்கு, பேண்டேஜ் மேல் கருப்பு மையில் நனைத்து காயவைத்த பஞ்சை ஒட்டி நாங்களே தயாரித்த மீசையை ஒட்டிக்கொண்டு, ஒரு கெத்துடன் திரும்பி பாலாஜியை லுக் விட்டேன். அவன் என்னை கவனிக்காமல், 'அய்யோ... என்ன எழவுடா இது....' - சலிப்பின் உச்சத்தில், பிராமின் வேஷம் போட்டிருக்கும் ஒரு ஜூனியரைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்டிருந்ததன். அப்புறம்தான் நானும் கவனித்தேன். கட்சி கரைவேட்டி கட்டிக்கொண்டு பூணூல் மாட்டிக்கொண்டு நின்றிருந்தான் அந்தப் பையன்!

'எங்கப்பாகிட்ட இந்த வேட்டிதான்ண இருந்திச்சி...' என்றான் அவன் பயந்துபோய்.

'முன்னாடியே எங்கிட்ட சொல்லியிருக்கலாம்ல...' என்று முறைத்த பாலாஜியை, இந்த ஸ்டேஜ்க்கு இது போதும் என்று சமாதானப்படுத்தினேன்.

மேக்கப் முடித்தபின், ஜன்னல் வழியாக அந்த டீமின் பெர்பாமன்ஸ் பார்த்தோம். சுத்தமாக வேறு கோணத்தில் காட்சிகளை அமைத்திருந்தார்கள். அட இப்படிக்கூட பண்ணியிருக்கலாமே என்று அப்போதுதான் தோன்றியது! இதற்கே கர்நாடக சங்கீதம் பாடத்தெரிந்தவரில்லை அவர்களுடைய நந்தனார். நந்தி செட்கூட இல்லை. இவர்களுக்கு முன்னால் நந்தி இருப்பதாயும், அது விலகுவதாயும் இவர்களின் ரீயாக்ஷனிலேயே காண்பித்திருந்தார்கள். இதே விஷயங்களைக் கவனித்து, 'டேய் அவங்க நந்தனார் ஒழுங்கா பாடவேயில்லை. நம்ம ராஜேஷ் கலக்கிடுவான். அதோட நந்தியே இல்லை அவங்க டிராமால...' என்று சிரித்த வினோத்தை நான் பாவமாக பார்த்தேன்.

ஆடியன்ஸையும் கவனிக்கத்தவறவில்லை நாங்கள். வாசலைச்சுற்றி, வேறு போட்டிகளில் பங்குபெற்ற பத்துப்பதினைந்து பள்ளி மாணவர்கள்(FYI: போட்டி முடிவை இன்றே அறிவித்துவிடுவதாக வினோத் அப்ப சொல்லியிருக்கிறார்!), கூத்து பார்க்கும் கணக்காய் அந்த கிராமத்து மக்கள் சிலர். ஆனாலும், மத்த போட்டிகளைவிட நாடகத்துக்குக் கொஞ்சம் கூட்டம் ஜாஸ்த்திதான். உள்ளே இடமின்றி ஜன்னல் வழியாகவெல்லாம் சிலர் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். பக்கத்துவீட்டு மாடியிலிருந்துகூட, திறந்த வாசலின் மேல் வழியே சிலர் பார்த்ததாக நாடகம் முடிந்து திரும்பும்போது ஒரு ஜூனியர் சொன்னான்!

மொத்த கூட்டத்திலும் ஒரே ஒரு figure தான் தேறியது. ஆனால் அவள் ஒருத்தி போதும் அந்த கிராமத்துக்கே. அந்தப் பச்சை தாவனி, கிராமத்துக் கிளி, ஓரமாய் ஒரு தூணில் ஓவியம்போல் சாய்ந்திருந்தாள்(அட... கவித! கவித!). எனது ராசி இது. எங்கே போனாலும் கண்டிப்பாக ஒரு figure மாட்டும். அது யாரென வினோத்திடம் அப்புறம் விசாரிக்கவேண்டும் என்று நினைத்துக்கோண்டேன். அதைவிட முக்கியம், ஒருமுறையேனும் இந்த நாட்டாமை ட்ரஸ் இல்லாமல் எனது சாதாரண உடையில் அவளின் கண்ணில் பட்டுவிடவேண்டும்!

அடுத்து நாங்கள் அழைக்கப்பட, போய் மேடையேறினோம்(அல்லது வாசலிறங்கினோம்!). ஸ்கிரீன் இல்லாதது எங்களுக்கேக் கொடுமையாய் இருந்தது. எல்லோரும் பார்க்கும்படி மேடையில் அசம்பில் ஆவதும், பாலாஜி சைகை கொடுக்க காட்சி ஆரம்பிப்பதுமாய் இருந்தது. நாங்களாவது பரவாயில்லை. செந்தில்தான் பாவம். எல்லோர் முன்னிலையிலும் நடுவாசலில் இறங்கி நந்திமாதிரி உட்கார்ந்தான். சுற்றியிருந்த சின்ன குழந்தைகள் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நந்தி தலை தனியே தயாரித்திருக்க வேண்டாம். அவன் முகமே ஏக கடுப்பில் இறுகிப்போய் நந்திமாதிரிதான் இருந்தது. என்னை என்னவெல்லாம் சொல்லித் திட்டிக்கொண்டிருக்கிறானோ! அவன் அப்படி அமர்ந்ததும் ஒருவன் ஓடிவந்து அவன்மீது ஒரு கருப்பு போர்வை போர்த்தினான். இன்னொருவன் அட்டையில் செய்த நந்தி தலையை அவன் தலையில் மாட்டினான். குழந்தைகள் ஓவராய் சிரிக்க ஆரம்பிக்க, வினோத் அப்பா அவர்களைப்பார்த்து முறைத்தார்.

பாலாஜி சைகை கொடுக்க, ராஜேஷ் பாட ஆரம்பித்தான். பக்கத்தில் நாங்கள் - நாட்டாமை, ஊர் பெரிய மனிதர்கள் என நின்று நந்தனார் பாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தோம். நடுவில் நந்தி அசையாமல் சிலை மாதிரி இருந்தது. பாவி மூச்சு விடுகிறானோ இல்லையோ தெரியவில்லை. பரவாயில்லை, நன்றாகத்தன் ப்ராக்டிஸ் பண்ணியிருக்கிறான்!
இதோ ஆயிற்று இரண்டு நிமிடம். நந்தி அசையப்போகிறது. நாங்கள் ஆச்சர்யப்பட தயார் ஆனோம்.

ஆனால் நாங்கள் உண்மையில் ஆச்சர்யப்படும்படி, நந்தி அசையவே இல்லை. என்ன ஆயிற்று இவனுக்கு. catchword-ஐ மிஸ் பண்ணிவிட்டானா?! ஆனால் ராஜேஷும் பாடிக்கொண்டே இருகிறான்!

நேரம் போய்க்கொண்டே இருந்தது.

நான்கு நிமிடங்கள்...

ஐந்து நிமிடங்கள்...

ஆறு நிமிடங்கள்...

ம்ஹூம். நந்தி நெளிய ஆரம்பித்துவிட்டது! அப்போதும் ராஜேஷ் நிறுத்துவதாய் இல்லை.

ஏழாவது நிமிடம்...

நந்தி உள்ளே கால் மாற்றி நிற்க ஆரம்பித்தது!

ராஜேஷ் விடுவதாய் இல்லை. உண்மையிலேயே பக்கத்தில் ஏதும் நந்தி இருந்தால் விலகிவிடும் போலிருந்தது. அவ்வளவு சீரியஸாய் பாடிக்கொண்டிருக்கிறான்!

செந்திலின் நிலை பார்த்து எனக்கு அடக்கவே முடியாமல் சிரிப்பு வந்தது. அப்படியொரு தர்ம சங்கடமான நிலை எனக்கு வந்ததேயில்லை. ரொம்பக் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டேன். அப்படியும் எனது குலுங்கிய முதுகும், கட்டுப்படுத்திய உதடுகளையும் மீறிப் பீரிடும் சிரிப்பும் காட்டிக்கொடுத்துவிட, அதை பாலாஜி பார்த்துவிட்டான். முறைப்பான் என பயந்தேன். அட அவனும் சிரிப்பை அடக்கிக்கொண்டிருக்கிறான்!

கிட்டத்தட்ட பத்துப்பதினைந்து நிமிடங்கள்! நந்தி ஒரு டான்ஸே ஆடிவிட்டது. கட்டக் கடைசியாய் வந்தது அந்த catchword! விட்டால் போதுமென்று நந்தி சாய்ந்து படுத்துக்கொண்டது. எங்களுக்குக் கூட அப்படித்தான் இருந்தது. எவ்வளவு நேரம்தான் சிரிப்பை அடக்குவது?!

ஒருவழியாக எல்லாம் முடிந்து செந்திலை எழுப்பியபோது, அவன் கண்கள் பிதுங்கியிருந்தன. வாயில் நுரை தள்ளாத குறைதான்! பாவம் ரொம்பக் கஷ்டப்பட்டுவிட்டான். கால் மறத்துப்போய் அவனால் நடக்கவே முடியவில்லை. நான் தான் கைத்தாங்கலாய் அழைத்துச்சென்றேன்!

எங்கள் அறைக்கு வந்ததும் மாற்றி மாற்றி ராஜேஷைப் பிடித்து ஏற ஆரம்பித்தோம். படுபாவி, பதிமூன்று நிமிடப்பாடலை, ரிகர்ஸலுக்கு இது போதுமென்று, கடைசி இரண்டு நிமிடங்களை மட்டுமே எங்களுக்குப் பாடிக்காட்டியிருக்கிறான்! குறைந்தபட்சம் எங்களுக்குச் சொல்லவேண்டுமா இல்லையா? கேட்டால், இதுகூடத் தெரியாமலா ஸ்கிரிப்ட் எழுதினீர்கள் என்று எங்களைக் கேட்கிறான்! ஆஹா.. இது backfire ஆகிவிடும் போலிருக்கே என்று அந்த மேட்டரை அப்படியே அமுக்கிவிட்டோம். பாலாஜி செந்திலிடம் ஸாரி கேட்டான்.

'பரவால்ல விடு பாலாஜி. என்னால எதும் பிரச்சனை ஆகாம இருந்தா சரி. நான்கூட பயந்துபோய்ட்டேன். நான் catchword மிஸ் பண்ணிட்டதாலதான் அவன் திரும்பத்திரும்பப் பாடறான்னு!' என்றான்.

கடைசியில் எங்களுக்கு இரண்டாவது பரிசுதான் கிடைத்தது. அது கூட எப்படிக் கிடைத்தது என்று உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அது பத்மாவுக்குத் தெரியாதே! அதுதான் எங்களுக்கு ஒரே ஆறுதல்.

அடுத்தநாள் காலையில் வந்ததும், நாங்கள் பரிசு வாங்கிய மேட்டரை மிகப்பெருமையுடன் நோட்டீஸ் போர்டில் எழுதிப்போட்டுவிட்டோம். இன்று பத்மா வருவாள். பார்த்து வயிறெரிவாள். ஒரே ஆனந்தம் தான் எங்களுக்கு. நேற்று பட்ட கஷ்டமெல்லாம் மறந்துபோயிற்று. எப்போதடா மதியம் வரும் எனக்காத்திருந்தோம். மதியம் வந்ததும் நோட்டீஸ் போர்டு பக்கத்திலேயே எத்தேச்சையாக நிற்கிறமாதிரி நின்றோம். அப்போதுதானே பத்மாவின் வயிற்றெரிச்சலை கண்குளிற பார்க்க முடியும்!

அதோ... பத்மா வருகிறாள். நோட்டீஸ் போர்டு பார்த்து நிற்கிறாள். அனைத்தையும் படிக்கிறாள். ஆனால் நாங்கள் நினைத்தது போலில்லாமல், எங்களை ஏறிட்டுப்பார்த்து மிக அலட்சியமாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டுப் போகிறாள்!

எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நொந்துபோய் பார்த்துக்கொண்டிருந்தோம். அடக்கொடுமையே! அவளின் பின்னே வாய்பொத்தி அடக்கமாய் சிரித்துக்கொண்டு செல்லும் அந்த மஞ்சள் தாவனி - நேற்று தினேஷ் வீட்டில் நான் சைட் அடித்த பச்சை தாவனி!

11 மறுமொழிகள்:

துளசி கோபால் said...

13 நிமிஷப்பாடலா? அடப்பாவி.....

நிஜமாவே பாவங்க செந்தில்(-:

ஆமாம், நீங்க நடுவாசல்னு சொல்றது திறந்தவெளியா இருக்கும் முற்றம்தானெ?

நாலுபக்கம் வெராந்தா, நடுவிலே மெலே கூரையெ இல்லாத முற்றம்?

ஐய்யோ, அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

அருள் குமார் said...

//ஆமாம், நீங்க நடுவாசல்னு சொல்றது திறந்தவெளியா இருக்கும் முற்றம்தானெ?

நாலுபக்கம் வெராந்தா, நடுவிலே மெலே கூரையெ இல்லாத முற்றம்?//

அதே அதே அதேதாங்க :)

//ஐய்யோ, அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். // - எனக்கும்!

என்ன விந்தை பார்த்தீர்களா துளசி மேடம்?! சுற்றிலும் இருக்கும் இயற்கையைத் தூறந்து செயற்கையாய் வீடுகட்டிக்கொண்டு நடுவில் கொஞ்சமே கொஞ்சம் இயற்கையை அனுமதித்து அதுதான் பிடித்திருக்கிறது என்கிறோம் :)

நன்மனம் said...

//சுற்றிலும் இருக்கும் இயற்கையைத் தூறந்து செயற்கையாய் வீடுகட்டிக்கொண்டு நடுவில் கொஞ்சமே கொஞ்சம் இயற்கையை அனுமதித்து அதுதான் பிடித்திருக்கிறது என்கிறோம் :)//

அருள் எதுவுமே சிறிது இருந்தா தான் அதுக்கு மதிப்புனு தெரிஞ்சு தான் முற்றம் வெச்சிருந்தாங்களோ என்னமோ.

அனாலும் டிராமா சூப்பர்ங்க. :-)

அருள் குமார் said...

நன்றி நன்மனம்.

நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம் :)

- யெஸ்.பாலபாரதி said...

//விசாலமான ஆளோடி//

அப்படினா என்னங்க.. வட்டாரவழக்கு மாதிரி இருக்கே..?
:-(
எனக்கு அதனால புரியாமா போகிடுச்சோ...

அருள் குமார் said...

ஆளோடி ன்னா நம்ம ஹால் மாதிரின்னு வச்சுக்கோங்களேன். அந்த மாதிரி ஓட்டு வீட்டுல அப்படித்தான் சொல்றாங்க :)

Anonymous said...

மிக அருமையான பதிவுங்க...நகைச்சுவை மிக நன்றாக இருக்கிறது :))

அருள் குமார் said...

வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி dudukku :)

அருள் குமார் said...

thanks for ur comments perumal :)

ஜொள்ளுப்பாண்டி said...

//மொத்த கூட்டத்திலும் ஒரே ஒரு figure தான் தேறியது. //

ஒன்னே ஒன்னுதானா ?? :(

//ராஜேஷ் விடுவதாய் இல்லை. உண்மையிலேயே பக்கத்தில் ஏதும் நந்தி இருந்தால் விலகிவிடும் போலிருந்தது. அவ்வளவு சீரியஸாய் பாடிக்கொண்டிருக்கிறான்! ///

:))))))))))))))))))))))))))))))
வயிரு வலிக்குதுங்கண்ணா!

//அடக்கொடுமையே! அவளின் பின்னே வாய்பொத்தி அடக்கமாய் சிரித்துக்கொண்டு செல்லும் அந்த மஞ்சள் தாவனி //

கடைசிலே தாவணிதான் தடுக்கி விழ காரணமா ? :))))

ரொம்ப சிரிச்சேன் ரசிச்சேன் !!! :))

அருள் குமார் said...

//கடைசிலே தாவணிதான் தடுக்கி விழ காரணமா ? :))))//

இது வழக்கம் தானே! உங்க தாவணிக் கனவுகள் படிச்சேன். எனக்கும் அதே ஏக்கம் தான் :)