(ஜூன் 2006 - தேன்கூடு போட்டிக்கு எழுதிய சிறுகதை)
நாளைக்குக் காலையில் வீட்டில் இருப்போம் என்று நினைத்ததுமே மனசு இறக்கை கட்டிக்கொண்டது. அனேகமாக பஸ்ஸில் அனைவரும் தூங்கிவிட்டார்கள். நான் மட்டும் முகத்திலறையும் குளிர்ந்த காற்றை ஒரு வன்மையுடன் தாங்கிக்கொண்டு கொட்டக் கொட்ட விழித்திருந்தேன். நானும் கவனித்துவிட்டேன், ஊரிலிருந்து ஹாஸ்டலுக்குத் திரும்பும்போதுதான் பஸ்ஸில் ஏறியவுடன் தூக்கம் வருகிறது எனக்கு.
கடந்த ஒரு வருடமாய் இந்த ஹாஸ்டல் வாழ்க்கையுடன் மெல்ல மெல்ல ஒரு சமாதான உடன்படிக்கைக்கு வந்துவிட்டாலும், ஊருக்குச் செல்வதென்றால் ஒரு தனி உற்சாகம் வந்துவிடுகிறது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் 24 மணி நேரமும் நண்பர்களுடன் இருக்கிற ஹாஸ்டல் வாழ்க்கையை ரொம்பவும் பிடித்துத்தான் போயிருந்தது. இங்கு வந்த முதல் இரண்டு மாதங்கள்தான் ராகிங் ராகிங் என்று கலவரப்படுத்திவிட்டார்கள். ஆனால், 'வெல்கம் டே' யிலிருந்து சீனியர்களும் எங்கள் நண்பர்களாகிவிட, ஹாஸ்டல் வாழ்க்கையின் ருசி புரிய ஆரம்பித்தது.
அப்பப்பா... இந்த ஹாஸ்டல் வாழ்க்கையும்தான் எவ்வளவு விஷயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது! எத்தனை விதமான மனிதர்கள்... எத்தனை விதமான குணாதிசயங்கள்! ராஜூவின் கதையை முதன் முதலில் கேட்டபோது வேதனைப்படுவதா இல்லை ஆச்சர்யப்படுவதா எனத் தெரியவில்லை. அவன் சொல்வது போன்ற அப்பாக்களை சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன். தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அம்மாவை அடிக்கும் அப்பாக்கள் நிஜத்திலும் இருக்கிறார்கள் என ராஜூ சொல்லித்தான் தெரியும். அவனை அவனுடைய மாமாதான் இந்த கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறார். இப்படி ஓவ்வொருத்தருக்கும் நல்லதும் கெட்டதுமாய் நிறைய கதைகள்!
'லோக்கல் காலேஜிலேயே படிக்கிறேன், ஹாஸ்டலுக்கெல்லாம் போக மாட்டேன்' என்று அடம்பிடித்த என்னை, 'அப்பதான் உலகம் புரியும்' என்று அப்பாதான் கட்டாயப்படுத்தி சென்னைக்கு அனுப்பிவிட்டார். இப்போது அவரைப் புரிந்துகொள்ள முடிகிறது. வெளியில் வந்து பார்க்கும்போதுதான் என் வீடு என்னை எவ்வளவு சொளகர்யமாய் வைத்திருந்தது என்று உறைத்தது.
ஆனாலும், இந்த 'ஹோம் சிக்' தான் என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. +2 வரை வீட்டைப் பிரிந்து இருந்ததே இல்லை. விடுமுறைகளில் உறவினர் வீடுகளுக்குச் சென்றால் கூட குடும்பத்துடன்தான்! அதுவும் இந்தப் பாப்புவுடன் சண்டை போடாமல் என்னவோ போலிருக்கிறது. நான் ஹாஸ்டல் வந்ததிலிருந்து அவள் பாடு ஜாலிதான். வீட்டில் இப்போது அவள் என்ன செய்தாலும் கேட்க ஆளில்லை. இபோதெல்லாம் மாதத்திற்கு ஒரு சனி ஞாயிறு என இரண்டு நாட்கள் ஊருக்குப் போகும்போது கூட, முன்பு போல் பாப்புவுடன் சண்டை போட முடிவதில்லை. எங்கே... அந்த இரண்டு நாட்களில் எனக்குக் கிடைக்கும் ராஜ உபச்சாரங்களை அனுபவிக்கவே நேரமிருப்பதில்லையே!
அந்த இரண்டு நாட்களும் வீட்டில் எனக்குப் பிடித்தவைதான் சமைக்கப்படும். இவ்வளவு விஷயங்கள் நமக்குப் பிடிக்குமென்று அம்மாவுக்குத் தெரியுமா என்று ஆச்சர்யமாய் இருக்கும். அப்பா கூட, அவருடைய friend பாலா அங்கிள் வந்து வெளியில் கூப்பிடும்போது, 'பையன் வந்திருக்காண்டா, அடுத்த வாரம் போலாம்...' என்று வீட்டிலேயே இருந்துவிடுவார். பாப்புதான் ஏகக் கடுப்பில் இருப்பாள். அவளுக்குப் பிடித்ததை அம்மாவிடம் கேட்டால் கூட, 'நீ இங்க தானடா இருக்க... அடுத்த சன்டே செஞ்சுக்கலாம், என்ன...' என்று சொல்லிவிடுவார்கள். அவளுக்குப் பிடித்தது கிடைக்காததல்ல அவள் பிரச்சனை. நான் இருக்கும்போது அவள் இரண்டாம்பட்சமாக ஆனதைத்தான் அவளால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இதில் இவை அனைத்தையும் நல்ல பிள்ளையாய் ஏற்றுக்கொண்டு அவளை நான் பார்க்கும் அலட்சியப் பார்வைதான் அவளை இன்னும் எரிச்சல் படுத்தும்.
நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவளுடன் ஒரே சண்டைதான்.
'போடி பன்னி...'
'நீதாண்டா நாயி...'
'நீதான் எறும மாடு' - என்று ஆரம்பிக்கும் சண்டைகள்...
'நீ சொல்றதெல்லாம் உனக்கே...'
'அதெல்லமே திருப்பியும் உனக்கே...' என்று ஆத்திரம் வலுத்து...
சற்றைக்கெல்லாம் அடிதடியாய் மாறும்.
எவ்வளவுதான் அடித்துக்கொண்டாலும், அப்பவோ இல்லை அம்மாவோ வந்து விலக்கும்போது கடைசியாய் யார் அடித்தார்களோ அவர்களே வென்றதாக எங்களுக்குள் ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. ஒருமுறை அம்மா என்னைப் பிடித்து இழுக்க, அப்பா அவளைப் பிடித்து இழுக்க, கடைசியாய் எட்டி என்னை அடித்துவிட்டாள். எனக்குப் பயங்கர ஆத்திரம். நானாவது தோற்பதாவது. என் வலிமையெல்லாம் திரட்டி, அம்மாவை மீறி, எட்டி விட்டேன் ஒரு உதை. கிட்டத்தட்ட மிஸ் ஆகிவிட்டது என்றுதான் நினைத்தேன். நானே எதிர்பார்க்காமல் என் கால் கட்டைவிரல் லேசாக அவள் மீது பட்டுவிட்டது. அதை உறுதிசெய்யும் வகையில் அவளைப்பார்த்து பழிப்பு காட்டினேன். 'ட்ரெஸ்லதான் பட்டுச்சு. போடா...' என்று அவசரமாய் அழுகையை நிறுத்திச் சொன்னாள். 'ஒன்னும் இல்ல.. அங்க பாரு. உன் கால்லதான் பட்டிருக்கு...' என்று நான் நிரூபித்ததும் மீண்டும் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டாள். எப்பொழுதும் தோற்பவர்கள் வெகுநேரம் அழுதுகொண்டிருப்போம்!
பெரும்பாலும் அடிதடி சண்டைகளில் நான் ஜெயித்தாலும், நான் அடிக்கடி தோற்கும் இடம் - அப்பா அம்மா அவளுக்கு ஏதாவது வாங்கித் தரும் போதுதான். அவளுக்கு மட்டும் தோடு, ச்செயின், வளையல் என தங்கத்தில் வாங்கிக்கொண்டே இருப்பார்கள். இதில் கொலுசு வேறு - அடிக்கடி மாற்ற வேண்டுமாம்! ரொம்ப நாளாக நான் கேட்கும் வாட்ச் மட்டும் எனக்கு வாங்கித்தரவேயில்லை. 'இது வாட்ச் கட்ற வயசில்ல' என்று சொல்லிவிட்டார்கள். பொம்பளை பிள்ளைங்களுக்கு மட்டும் இப்போதிலிருந்தே நகை சேர்க்க வேண்டுமாம். இந்த அநியாயத்தை மட்டும் என்னால் பொருத்துக்கொள்ளவே முடியவில்லை. 'அவளுக்கு மட்டும் எட்டாயிரம் ரூபாக்கு நகை வாங்கியிருக்கீங்க. நான் கேட்ட வாட்ச் எவ்ளோ இருக்கப்போவுது...' என்றெல்லாம் நியாயம் கேட்டுப்பார்த்துவிடேன். இப்படி ஏமாற்றுகிறார்களே என ஆத்திரம் பொங்கும். ரொம்ப நாள் வரைக்கும், அவளுக்கு என்னென்ன எவ்வளவு ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்கள் என்று ஒரு நோட்டின் கடைசி பக்கத்தில் எழுதி வைத்திருந்தேன்!
ஏதேதோ யோசித்தபடி எப்போது தூங்கினேன் என்று எனக்கேத் தெரியாமல் தூங்கிவிட்டிருந்தேன். விடியற்காலையில் எங்கள் ஊர் வந்ததும் யாரோ எழுப்பி விட்டார்கள். அரைத்தூக்கத்திலேயே பஸ்ஸிலிருந்து இறங்கி, வீட்டுக்கு நடந்து, காத்திருந்த அப்பா வந்து கேட் திறக்க, உள்ளே சென்று மறுபடியும் படுத்துத் தூங்கிவிட்டேன்.
காலையில் அம்மா காபியுடன் வந்து எழுப்ப, 'ஆஹா... ஆரம்பமாயிடுச்சுடா விருந்து' என்று நினைத்தபடி சோம்பலுடன் எழுந்து பெட் காபியை அனுபவித்துக் குடித்தேன். பாப்பு இன்னும் சுருண்டு படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். என் பெட்டியிலிருந்து துவைக்கவேண்டிய துணிகளை எடுத்துக்கோண்டிருந்த அம்மாவுக்கு அதைப்பார்த்ததும் ஒன்றும் புரியவில்லை.
'என்னடா இது... வளையல் மாதிரி இருக்கு...' என்றபடி அந்தப் பார்சலைப் பிரித்தார்கள்.
'ஆமாம்மா... வளையல்தான். போன சன்டே ஷாப்பிங் போனமா... அப்போ பாத்தேன். டிசைனெல்லாம் போட்டு வித்தியாசமா இருந்திச்சா, நம்ம பாப்புக்கு நல்லா இருக்குமேன்னு வாங்கினேன்...' என்றதும் அம்மாவுக்கு ஒரே பூரிப்பு.
'ஏங்க... இங்க வாங்களேன்...' என்று அப்பாவை கூப்பிட்டுக் காட்டி,
'நாம அவளுக்கு எதாச்சும் வாங்கினாலே சண்டைக்கு வருவான், இப்ப பாருங்க அவனே வங்கிட்டு வந்திருக்கான்...!' என்றார்கள்.
அப்பா முகத்திலும் பெருமிதம்.
'பின்ன என்னடி... இன்னும் அவன் சின்னப்பையனா என்ன..?! பெரியமனுஷன் ஆயிட்டான்ல...!' என்று கிண்டலாக என்னைப் பார்த்துச் சிரித்தார்.
எனக்கு ஒரே வெட்கமாகப் போய்விட்டது. வாழ்க்கையில் இன்றுதான் எனக்கு முதல் முதலாய் வெட்கம் வருகிறது என்று நினைக்கிறேன்!
31 மறுமொழிகள்:
//'நீ சொல்றதெல்லாம் உனக்கே...'
'அதெல்லமே திருப்பியும் உனக்கே...' என்று ஆத்திரம் வலுத்து...//
//எவ்வளவுதான் அடித்துக்கொண்டாலும், அப்பவோ இல்லை அம்மாவோ வந்து விலக்கும்போது கடைசியாய் யார் அடித்தார்களோ அவர்களே வென்றதாக எங்களுக்குள் ஒரு எழுதப்படாத விதி //
// 'ட்ரெஸ்லதான் பட்டுச்சு. போடா...' என்று அவசரமாய் அழுகையை நிறுத்திச் சொன்னாள். 'ஒன்னும் இல்ல.. அங்க பாரு. உன் கால்லதான் பட்டிருக்கு...' என்று நான் நிரூபித்ததும் மீண்டும் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டாள்.//
Anubaviththu ezhuthi irukkireergal
naan migavum rasiththu padiththen. vithyaasamaana kadahaikkalam.
rasanaiyaana pathivu.
அருள்.. கலக்குங்க.. நல்லா இருக்கு..
வெற்றிக்கு வாழ்த்துகள்
En ponra thangai illadavargalaal periya manidhar aaha mudivadhillai....
Good post.
Mansoor
@குரு:
மிக்க நன்றி குரு.
இந்தப் போட்டிக்கு கிட்டத்தட்ட அனைவரும் ஒரே விஷயத்தை எடுத்துக்கொண்டு எழுதியதாய்த் தெரிந்தது. வளர்சிதை மாற்றத்தில் நாம் அடையும் எத்தனையோ 'தெளிவு' களில் இதுவும் ஒன்றுதானே என்று இதைச்சொன்னேன்.
@பொன்ஸ்:
நன்றி பொன்ஸ் :)
//அருள்.. கலக்குங்க.. நல்லா இருக்கு.. //
எனில்,
//அட்லீஸ்ட் என் வோட்டு எதுக்கு போடுறதுன்னாவது ஒரு தெளிவு வந்துடுச்சு :)// - இதை மறுபரிசீலனை செய்வீர்களா ;)
@மன்சூர்:
நன்றி மன்சூர்.
வாழ்க்கை எல்லோரையும் எப்படியாவது பெரிய மனிதராக்கிவிடுகிறது. சிலருக்கு இப்படி அமையலாம் அவ்வளவே :)
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் வீட்டிற்கு வந்து சென்ற உணர்வு வருகிறது.வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி மணியன் sir.
அருமையான வளர் சிதைமாற்றம்..
வாழ்த்துகிறேன்
'நீ சொல்றதெல்லாம் உனக்கே...'
'அதெல்லமே திருப்பியும் உனக்கே...' என்று ஆத்திரம் வலுத்து...
சற்றைக்கெல்லாம் அடிதடியாய் மாறும்.
:))))))
அப்ப்ப்பிடியே ஈயடிச்சான் காப்பியா இது எங்கவீட்டுலயும் நடக்கும்!
வாழ்த்துக்கள் அருள்!
சிவஞானம்ஜி அவர்களுக்கும் இளவஞ்சி அவர்களுக்கும் என் நன்றிகள் :)
இயல்பான ஓட்டமாய் நன்றாய் இருக்கிறது...
நன்றி செல்வராஜ் :)
வீட்டுக்கு வீடு வாசப்படி, அது சரி எப்போ என் வீட்டில் நடந்த போது நீ வந்த?
//அது சரி எப்போ என் வீட்டில் நடந்த போது நீ வந்த? // :))
நான் அப்போ வரலன்னாலும் நீ என்னிடம் சொல்லாத விஷயமா? :)
very nice story. all the best.
-prabhu.
Arul,
As i told over phone, i enjoyed this post. All the best.
= Suresh Kannan
கதை நல்லா இருக்கு அருள்.. உணர்வுகளை மிக மென்மையாக சொல்லியிருக்கீங்க..(பாப்புவிடம் சண்டைக் கூட)..
அருள்.எங்கப்பா மட்டும் என்னை பாப்புன்னு தான் கூப்பிடுவாங்க..அவங்க நினைவு வந்துடுத்து...
//அப்ப்ப்பிடியே ஈயடிச்சான் காப்பியா இது எங்கவீட்டுலயும் நடக்கும்! //
உங்க வீட்ல மட்டும்தானா? எங்க வீட்லயும்தான் (ஒருவேளை அநேக வீடுகளிலும்)
வாழ்த்துக்கள் - என் மனம் பழைய நினைவுகளை அசை போடுகிறது.
@ prabhu:
மிக்க நன்றி பிரபு :)
@ சுரேஷ் கண்ணன்:
உங்கள் வார்த்தைகள் மிகுந்த நம்பிக்கையூட்டின சுரேஷ் கண்ணன். மிக்க நன்றி. இப்போட்டிக்கான உங்கள் பதிவைப் பார்த்தேன். ரொம்பப் பெரிதாக இருந்ததால் பொறுமையாக படிக்கவேண்டும் என வைத்திருக்கிறேன்.
@ கவிதா:
நன்றி கவிதா. இவ்ளோ நாள் எங்க போயிருந்தீங்க? அணில் குட்டி எப்படி இருக்கு?
@ சுல்தான்:
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி sir.
அருள் கலக்கறீங்க! சூப்பரா இருக்கு. படிக்காமலே ஓட்டு போட்டுட்டோமே ரைட்டா? தப்பான்னு தெரிஞ்சுக்க தான் படிச்சேன், ரைட்டாத்தான் தான் ஓட்டு போட்டு இருக்கோம் என்று சந்தோஷம்! பேசாம ஒரு பார்ட் டைம் எழுத்தாளனா கதை எழுதி பாருங்க, சைடுல கில்மா சம்பாதிக்கலாம் போல இருக்கு! போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
நன்றி தமிழாதமிழா :)
நன்றி ஜெய்.
//படிக்காமலே ஓட்டு போட்டுட்டோமே ரைட்டா? தப்பான்னு தெரிஞ்சுக்க தான் படிச்சேன்,// - என்னதான் நட்புன்னாலும் இப்படில்லாம் பண்ணாதீங்க ஜெய். உண்மையான திறமைக்கு வாக்களியுங்கள் எப்போதும் ;)
Good flow...Good writing!...
All the best Mr.Arul.
மிக்க நன்றி மணிகண்டன் :)
கடைசி வரிகளில் கண்கள் தழும்பி விட்டது. நல்ல எழுத்து அருள்.
அன்புடன்,
மா சிவகுமார்
வருகைக்கும் பாரட்டுக்கும் நன்றி சிவகுமார் :)
பரவாயில்லை... எனக்கும் 20 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அதுல ஒன்னு எனக்கு நானே போட்டுகிட்டது ;) தாங்களும் எனக்கு ஓட்டு போட்டிருப்பதாய் 3 நண்பர்கள் சொன்னார்கள். ஓட்டளித்த மற்ற நன்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
ஹூம்... அடுத்த மாத போட்டிக்கு தலைப்பேல்லாம் யோசிச்சு வச்சிருந்தேன்! பரவால்ல அதை அதற்கடுத்த மாதத்துக்கு யூஸ் பண்ணிக்கறேன் :)
//அடுத்த மாத போட்டிக்கு தலைப்பேல்லாம் யோசிச்சு வச்சிருந்தேன்! பரவால்ல அதை அதற்கடுத்த மாதத்துக்கு யூஸ் பண்ணிக்கறேன் :) //
பரவாயில்லை விடுங்க அருள்.. அடுத்த மாசத்துக்கு அடுத்த மாசம் பயன்படும் :)
ஒண்ணு பார்த்தீங்களா, நம்ம கதை தலைப்பு, இந்த அண்ணா தங்கை சென்டிமென்ட் எல்லாம் ஒரே மாதிரி.. ஓட்டும் ரெண்டுக்கும் 20 தான் :)
//அடுத்த மாசத்துக்கு அடுத்த மாசம் பயன்படும் :)
// - ஆனாலும் இந்த குருட்டுத்தனமான நம்பிக்கைதாங்க உங்க கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது :)
//ஒண்ணு பார்த்தீங்களா, நம்ம கதை தலைப்பு, இந்த அண்ணா தங்கை சென்டிமென்ட் எல்லாம் ஒரே மாதிரி.. ஓட்டும் ரெண்டுக்கும் 20 தான் :) // - ஆமாங்க நானும் கவனிச்சேன். ஆச்சர்யமா இருந்தது!
//தாங்களும் எனக்கு ஓட்டு போட்டிருப்பதாய் 3 நண்பர்கள் சொன்னார்கள்//
சொல்ல மறந்துட்டேன் பாருங்க.. இந்த மூணுல நான் இருக்கேனா? இல்லைன்னா, நாலுன்னு மாத்திக்குங்க என்னையும் சேர்த்து :)..
ஹைய்ய்ய்ய்ய்யோ... நிஜமாவா பொன்ஸ். ரொம்ப thanks-ங்க :))))
smily போடாம சீரியஸாய் சொல்றேன் - தேன்கூடு போட்டில முதலிடம் கிடைச்சிருந்தாக் கூட இவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன்.
என்னதான் என் கதை உங்களுக்குப் பிடிச்சிருந்தாலும், நீங்களும் பங்குபெறும் போட்டியில் அடுத்தவருக்கு வாக்களிக்க ஒரு மனசு வேண்டும்.
பொன்ஸ், நிஜமாவே நீங்க பெரிய மனுஷிதான். :))
அருள்,
//பொன்ஸ், நிஜமாவே நீங்க பெரிய மனுஷிதான். :)) //
இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்குங்க..
இந்த முறை மல்டிபிள் ஆப்ஷன் தானே, என்னுதும் சேர்த்து மொத்தம் நாலு படைப்புக்கு ஓட்டு போட்டேங்க.. மிச்ச ரெண்டு எதுங்கிறது சஸ்பென்ஸ்.. ஒரே ஓட்டு தான்னா என்ன செஞ்சிருப்பேனோ தெரியாது :)
//இந்த முறை மல்டிபிள் ஆப்ஷன் தானே, என்னுதும் சேர்த்து மொத்தம் நாலு படைப்புக்கு ஓட்டு போட்டேங்க..// இருக்கட்டுமேங்க, அப்பயும் மத்தவங்களுக்கும் போடணும்னு தோணனும்ல!
எனக்குத் தோணவேயில்லை :(
Post a Comment