என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

12 December 2006

எங்க கிராமத்துல... 1

ந்த நிழற்படங்களெல்லாம் எங்கள் கிராமத்தில் நான் எடுத்தது. எங்கள் ஊர்: சோழன்குடிக்காடு கிராமம், பெரம்பலூர் மாவட்டம். படங்களைப் பெரிதாகக் காண, படங்களின் மீது க்ளிக் செய்யுங்கள்.

ஊர்க்காவலன்

ஊர்க்காவலர்கள்

கழிநி தொட்டி மற்றும் சிதிலமடைந்த எங்கள் சேறுபட்டறை

சேறுபட்டறையின் வேறு சில கோணங்கள்

என் அக்கா மகள்

சமீபத்தில் இந்தப் பூக்களையும் எங்கள் ஊரில் பயிரிட ஆரம்பித்திருக்கிறார்கள். எரியும் தழல் போன்ற இதன் அமைப்பு ரொம்பவும் பிடித்துவிட்டது.

மேலே குறிப்பிட்ட சேறுபட்டறை என்பது தானியக் கிடங்கு. இரண்டு தலைமுறைகளுக்கு முன் செழித்திருந்த எங்கள் குடும்பத்தின் விவசாயமும் இன்று கவனிக்க ஆளில்லாமல் இப்படித்தான் இருக்கிறது :(

இந்தக் கிடங்கின் நடுவில் ஒரு வாசல் இருக்கும்(படத்தில் இருப்பது). அதனுள்ளே சென்று மேலே ஏரி, ஒரு பக்கத்துக்கு ஆறு என்று இரு பக்கமும் இருக்கும் பன்னிரண்டு அறைகளுக்கும் செல்லலாம். ஒவ்வொரு அறையின் மேலேயும் ஒரு ஆள் இறங்குமளவிற்கு சின்ன வாசல் இருக்கும். இந்த அறைகள், தானியங்கள் கெட்டுப் போகாவண்ணம் பாதுகாப்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும்.

எங்கள் பெரிய தாத்தா சிரத்தையெடுத்து கட்டிய இவற்றின் இன்றைய இந்த நிலமைக்கு, படித்துவிட்டு கிராமத்தை விட்டு விலகிய நானும் ஒரு காரணம் என நினைக்கும்போது மனதை ஏதோ செய்கிறது :(

19 மறுமொழிகள்:

Anonymous said...

விகடன் பத்திரிக்கை பசுமை விகடன் பகுதியில் விவசாயிகள் இப்போது அவர்களின் குடும்பத்து இளைஞர்களை
சாஃப்ட்வேர் தொழிலுக்கு மாற்றிவிடுவதாக சொல்லி இருக்கிறார்கள்.
தலைமுறையா அவங்க கத்துகிட்டு வந்த தொழில் பத்திய அனுபவங்களை கேட்டு அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல ஏதாவது முயற்சி பண்ணுங்களேன்.

Anonymous said...

அருள்,

அந்தப்பூ - செங்காந்தள். செடியைக் கலப்பைக் கிழங்கு என்றும் அழைப்பார்கள். தாவரவியல் பெயர் - Gloriosa superba. கிழங்கு விசத்தன்மையுடையது. சுத்தப்படுத்திய பின்பு சித்தமருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள். அதிலிருந்து colchicine என்ற மருந்து எடுக்கப்படுகிறது. செங்காந்தளே ஈழத்தின் அரசாங்க பூ.

அருள் குமார் said...

//தலைமுறையா அவங்க கத்துகிட்டு வந்த தொழில் பத்திய அனுபவங்களை கேட்டு அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல ஏதாவது முயற்சி பண்ணுங்களேன்.//

நிஜமாகவே அப்படியொரு எண்ணம் இருக்கிறது. நண்பர் சிவகுமாருடன் இதுபற்றி பேச ஆரம்பித்து அப்படியே விட்டுப்போய்விட்டது. திரும்பவும் தொடரவேண்டும். நன்றி லட்சுமி!

செங்காந்தள் பூ பற்றிய விபரங்களுக்கு நன்றி தங்கவேல். இது ஈழத்தின் அரசாங்க பூ என்பதை அறிவேன். ஆனால் பெயரைத்தான் மறந்துவிட்டேன் :(

இதன் விஷத்தன்மை நிலத்தையும் பாதிக்கும் என்கிறார்கள். அறுவடைக்குப் பின் சில வருடங்களுக்கு வேறு எதையும் அந்த நிலத்தில் பயிரிட முடியாது என்கிறார்கள்.

Unknown said...

அட பெரம்பலூர் மாவட்டமா? நம்ம ஏரிய ஆளு. சென்னையில் செட்டிலா?
செங்காந்தள் மலர்கள் என்று நன' டிவியில் கூட காண்பித்தார்களே அந்தப்பூவா?
பழைய இலக்கியங்களிலெல்லாம் பெண்களின் விரல்களுக்கு உவமையாக வருமே.

இன்னும் விவசாயம் அங்கெல்வாம் நல்ல மாதிரி நடந்து கொண்டுதானே இருக்கிறது. பழையன கழிதலும் புதியன புகுத்தலுமாக ஏதாவது விவசாயத்தில் அவர்களுக்கு உதவிகள் செய்யலாமே?
அந்த பழைய கிடங்கை புதுப்பித்து அந்த விவசாயிகளுக்கு வேறு வகையில் உதவிடச் செய்யலாமே.

அனுசுயா said...

உங்கள ஊர் படம் பசுமையாக இருக்கிறது. செங்காந்தழ் மலர் படம் அருமை. நானும் இப்பூவை பார்த்துள்ளேன். ஆனால் இதன் பெயர் தெரியாது. இன்று உங்களால் தெரிந்து கொண்டேன்.

அருள் குமார் said...

சுல்தான், நீங்களும் பெரம்பலூர் மாவட்டமா? எந்த ஊர்?

விவசாயம் இன்னும் அங்கு நல்ல விதமாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் எங்களைப்போன்ற பல குடும்பங்கள் வெளியே வந்துகொண்டிருக்கின்றன. இது நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்கிறது!

வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அனுசுயா!

Unknown said...

லெப்பைக்குடிக்காடு கேள்விப்பட்டருக்கிறீர்களா? அதான் நம்மூர்

சேதுக்கரசி said...

படங்கள் நல்லா இருக்கு அருள், குறிப்பா அந்த செங்காந்தள் படம். அடுத்த முறை ஊருக்குப் போறப்ப எங்க ஊர்க்காவலர்களையும் இப்படி close-up படம் எடுக்கணும்னு நினைக்கவச்சிட்டீங்க :-) உங்க ஊர்ல கொஞ்சம் பசுமை இருக்கும் போலிருக்கு. எங்க ஊர்ல அதுவும் இருக்காது.. எங்க ஊர்லயும் நிறைய வீடுகள் இப்படி சீர்குலைஞ்சு போயிருக்கும்.. "மேங்கோப்பு" அப்படின்னு சொல்லப்படும் மர வேலைப்பாடையெல்லாம் பிரிச்சு வித்துடுவாங்க சில பேர், நல்ல விலைக்குப் போகும். வீடுகள் சிலது இப்படி இருக்கும், அந்தக் காலத்து செழிப்பைப் பறைசாற்றிக்கிட்டு... ஹூம்ம்ம் (பெருமூச்சு)

Sivabalan said...

படங்கள் நன்றாக எடுத்துள்ளீர்கள்..

நேரில் சென்ற உணர்வு ஏற்படுத்தியது..

நன்றி

செல்வநாயகி said...

என் கிராமம்சார்ந்த இழப்புக்கள் குறித்த ஏக்கங்கள் எனக்கும் உண்டு, ஏதாவது செய்யவேண்டும் என்கிற சிந்தனைகளை மட்டும் எப்போதும் மிதக்கவிட்டுக்கொண்டு. அந்த வீட்டின் படங்கள் என்னவோ செய்கின்றன.

Anonymous said...

அருள்,
படங்கள் நன்றாக உள்ளது. ஈழத்தில் இப்பூவுக்குப் பெயர் கார்த்திகைப்பூ.

அருள் குமார் said...

சுல்தான், லெப்பைக்குடிக்காடு நான் நன்கு அறிந்த ஊர். எங்கள் கிராமத்திற்கு மிக அருகில் தான் இருக்கிறது :)

சேதுக்கரசி, சிவபாலன், செல்வநாயகி, ஆதிபகவன்... உங்கள் கருத்துக்கும் என் நன்றிகள்.

//ஏதாவது செய்யவேண்டும் என்கிற சிந்தனைகளை மட்டும் எப்போதும் மிதக்கவிட்டுக்கொண்டு//
ஏதாவது நல்ல விஷயமாய்த் தோன்றினால் சொல்லுங்கள். நாங்களும் செயல்படுத்த முனைகிறோம்.

ப்ரியன் said...

படங்கள் அருமையாக உள்ளது அருள்.எனக்கும் என் கிராமத்து நினைவுகளை கிளரிவிட்டுச் செல்கின்றன இப்படங்கள்.

ஆனாலும் எங்கள் ஊரில் ஊர்காவலன் இல்லை மரத்தடியில் பத்திரகாளியும் இன்னும் சில பெண்தெய்வங்களுமே இருந்தன.இப்போது அவர்களும் மரத்தடிவிட்டு ஊர்விட்டு வெளியேறி பெரும் சம்பளம் வாங்கும் மென்பொருள் வல்லுநர்களின் தயவில் பளிங்கு வீடு கட்டி குடிபுகுந்துவிட்டார்கள்.

/*சமீபத்தில் இந்தப் பூக்களையும் எங்கள் ஊரில் பயிரிட ஆரம்பித்திருக்கிறார்கள். எரியும் தழல் போன்ற இதன் அமைப்பு ரொம்பவும் பிடித்துவிட்டது*/

இதுதாங்க ஈழத்தின் தேசியப் பூ!

அருள் குமார் said...

நன்றி ப்ரியன்.

நீங்கள் சொன்ன மாற்றங்கள் எங்கள் ஊரிலும் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ ஆரம்பித்திருக்கின்றன!

சீனு said...

//அந்தப்பூ - செங்காந்தள்.//

காந்தள் மலர்கள் என்று இலக்கியங்களில் வருமே...அதுவா!!!???

பெரம்பலூர்? ஒரு முறை சென்றிருக்கிறேன் (திருச்சியில் இருந்த பொழுது). அங்கு ஒரு S/W Installation(?)-க்காக சென்றது. அன்று மின்சாரம் கட். எனவே, அங்குள்ள ஒரு தியேட்டரில் மேட்னி 'ரன்' பார்த்த நியாபகம். அந்த ஊருக்கு போன பொழுது எனக்கு கூறப்பட்ட அறிவுரை, "கையில் கழுத்தில் தங்கம் எதையும் போட்டுட்டு போகாதே...".

Thangamani said...

காந்த்ள் தமிழகத்தினந்தேசிய மலரும் கூட.

த.அகிலன் said...

அது தமிழீழத்தின் தேசியப்பூ.எல்லோரும் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள் ஈழத்தில் அதற்கு இன்னொரு பெயர் உண்டு கார்த்திகைப்பூ என்று

G.Ragavan said...

இடிந்தாலும் அழகுதான். படங்கள் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன. எங்க ஊர்ப் பக்கத்திலும் விவசாயம் குறைந்து பலர் அருப்புக்கோட்டை மில்லுக்கும் கோயில்பட்டி மில்லுக்கும் வேலைக்குப் போகிறார்கள். வருந்தத் தக்க நிகழ்வுதான்.

செங்காந்தள் மலர் கூந்தல் என்ற கவியரசரின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. நான் அவனில்லை என்ற படத்தில் வரும் "ராதா காதல் வராதா" என்ற மெல்லிசை மன்னரின் பாடல் வரிகள் அவை.

Satish Kumar K S said...

Please become a full time photographer or atleast submit your photos to competitions. all the best. excellent writing skill.