எழுத மறந்த நாட்குறிப்புகள் - 3: பிடிபட்டவர்கள்
'விஸ்வநாதன் ராமமூர்த்தி' திரைப்படத்தில் விவேக் தன் மனைவியிடம் "யார் திருடன், சொல்லுபாப்போம்?" என்று கேட்பார். அதற்கு அவர் மனைவியின் பதில் - "திருடுறவன் தான் திருடன்!". இந்த கேள்விக்கான, நம் அனைவரின் பதிலும் கூட இதுவாகத்தான் இருக்கக்கூடும். ஆனால் இதை இல்லை என்று மறுத்துவிட்டு விவேக் பதில் சொல்வார்-
"மாட்டிக்கிறவன் தான் திருடன்..!"
அதைத் தொடர்ந்து வந்த நகைச்சுவைக் காட்சிகளுக்கும் கூட சிரிக்கமுடியாமல், சட்டென்று முகத்திலறையும் நிஜம் இது!. 'மாட்டிக்கொள்பவன் தான் திருடன்' என்பதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது, மாட்டிக்கொள்பவன் திருடியவனாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. ஒரு நிரபராதி மாட்டிக்கொண்டால் கூட அவன் திருடன் தான்! ஆக, திருடன் என்பவன் திருடியவன் அல்ல; மாட்டிக்கொண்டவனே!
சின்ன வயதில், திருடன் என்றால் மனசுக்குள் ஒரு பிம்பம் இருந்தது. நம்மைப் போல இல்லாமல் வேறு எப்படியோ இருப்பான் என்று மிதமிஞ்சிய கற்பனைகள். எல்லாம், படித்த கதைப்புத்தகங்கள் மற்றும் பார்த்த திரைப்படங்களின் புண்ணியம்.
ஒருமுறை எங்கள் அத்தையின் ஊருக்கு திருவிழாவிக்குப் போயிருந்தபோதுதான் முதன் முதலாய் ஒரு திருடனைப் பார்த்தேன். முதல் ஆச்சர்யம், அவன் கண்களைச் சுற்றி கருப்புத் துணி கொண்டு கட்டியிருக்கவில்லை! இரண்டாவது, அவன் நம் எல்லோரையும்போலவே வெகு சாதாரணமாய் இருந்தான். திருவிழாக் கடைகளில் ஏதோ திருடிப் பிடிபட்டவனை, ஒரு மரத்தில் கட்டிவைத்து அடித்துக்கொண்டிருந்தார்கள். வைக்கோல் பிரி கொண்டு கட்டப்பட்டிருந்த அவன் உடலின்மேல் தண்ணீர் ஊற்றினார்கள். தண்ணீர் பட்டால் ஏற்கனவே இறுக்கி கட்டப்பட்ட வைக்கோல் பிரி, இன்னும் இறுகி ரத்தம் கட்ட வைக்குமாம்! கூட்டத்தில் யாரோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். கொடுமைப்படுத்தவென்று என்னவெல்லாம் கற்று வைத்திருக்கிறார்கள் என்று வியப்பாய் இருந்தது. ஒரு மத்திம வயதுக்காரன், மிகுந்த கோபத்துடன் அவன் முகத்தில் நச் நச்சென்று குத்திக் கொண்டிருந்தார். வாயிலிருந்து ஒழுகும் ரத்தத்துடன், 'இல்லை... இல்லை...' என்பதாய் தலையசைத்தபடி சோர்ந்து தொங்கியவனைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. ஒருவேளை, வேறுயாரோ திருடியதற்கு இவன் மாட்டிக்கொண்டு அடிவாங்குபவனாயிருந்தால் அது எவ்வளவு கொடுமை என்றோர் எண்ணம் மனசுக்குள் ஓடியது.
திருட்டைப் பற்றியும் மாட்டிக்கொள்ளுதல் பற்றியும் யோசிக்கும்போதெல்லாம், இன்னொரு சம்பவமும் நினைவுக்கு வரும். நான் மூன்றோ நான்கோ படித்துக்கொண்டிருந்தபோது, கடலூரின் பொது மைதானத்தில், அந்த ஆண்டிற்கான பொருட்காட்சி ஆரம்பித்திருந்தது. தினமும் பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் கண்ணில் பட்டு ஆர்வத்தை தூண்டிவிட்ட பொருட்கட்சிக்கு, ஆரம்பித்து சில நாட்கள் ஆகியும் போக முடியவில்லை. அப்பாவுக்கு தினமும் வேறு ஏதேதோ வேலைகள். 'இப்பதானே ஆரம்பித்திருக்கிறது போகலாம் போகலாம்' என தினமும் தள்ளிப்போட, நான் அடம் பிடிக்க ஆரம்பித்தேன். அதனால், முதலில் நானும் என் அண்ணனும் மட்டும் அடுத்த நாளே பொருட்காட்சிக்கு போய்வர அனுமதிக்கப்பட்டோம். இன்னொரு நாள் எல்லோருமாக சேர்ந்து போகலாம் என்று அப்பா சொல்லிவிட்டார்.
அடுத்த நாள் மாலை வீட்டுக்கு வந்ததும் கலர் ட்ரஸ் மாற்றிக்கொண்டு கிளம்பிவிட்டோம். 'என்னென்ன வேணும்னு பாத்து வச்சிக்கோங்க. அப்பாவோட போறப்ப வாங்கிக்கலாம்...' என்ற அம்மா, டிக்கெட்டுக்குப் போக ஆளுக்கு ஐந்து ரூபாய் மட்டும் கொடுத்து அனுப்பினார்கள்.
பொருட்காட்சியில் நல்ல கூட்டம். பாதுகாப்பாய் கைகளைக் கோர்த்துக்கொண்டு, எங்கள் விருப்பத்திற்குச் சுற்றினோம். எதை வாங்குவது எதை விடுவது என்று ஒரே குழப்பம். வீட்டில் கேட்டால் வாங்கித்தரமாட்டார்கள் என்று நம்பிய ஒரு 'வாட்டர் கேம்' -ஐ வாங்கினான் அண்ணன். எனக்கு என்ன வாங்குவதென்று தேடிக்கொண்டிருந்தோம்.
ஒரு கடையில் வித விதமான பேனாக்கள் இருந்தன. எழுது பொருட்களின் மீது எனக்கு எப்போதுமே ஒரு ஈடுபாடு உண்டென்பதால், வித்தியாசமான பேனா ஏதாவது வாங்கலாம் என பார்த்தோம். சில வகைகள் பொருட்காட்சியில் மட்டுமே கிடைக்கும். ஒன்றை எடுத்து விலை கேட்க, கூட்டத்தில் கடைக்காரர் அதை கவனித்ததாகவே தெரியவில்லை. சட்டென்று ஒரு எண்ணம். கையில் வைத்திருந்த பேனாவை கால்சட்டைப் பையினுள் போட்டுக் கொண்டு, வேரொன்றை கையில் எடுத்துக்கொண்டு விலை கேட்டேன். அவர் விலை சொன்னபின் வேண்டாமென்பதாய் வைத்துவிட்டு அண்ணனை இழுத்துக் கொண்டு வெளியில் வந்துவிட்டேன்.
வந்தபின் மனசுக்குள் ஒரே பதட்டம், யாரும் பார்த்திருப்பார்களோ என. கொஞ்சதூரம் கடந்தபின்தான் தைரியம் வந்தது. இனி பயமில்லை என்றான பின்பு, சற்று பெருமையாகக் கூட இருந்தது! பேசிக்கொண்டே வந்த அண்ணன் முன், சட்டென்று பேனாவை உருவி, 'எப்படி...?!' என்று காட்டினேன். ஆச்சர்யப்பட்ட அவனைப் பார்த்து எனக்குப் பெருமிதம்! ஆனால் அந்தப் பெருமிதம் சில நொடிகள் கூட நீடிக்கவில்லை. பேனாவை கையில் வைத்து ஆட்டிக் கொண்டிருந்த போதே வெடுக்கென்று யாரோ பின்னாலிருந்து இழுத்து தூக்கினார்கள். அந்த கடைக்காரர்!
அப்படியே தூக்கிக்கொண்டே தன் கடைக்குப் போனார் அவர். ஏனோ அப்பா அம்மாவையெல்லாம் நினைத்து அழ ஆரம்பித்துவிட்டிருந்தேன். என்ன செய்வதென்று தெரியாமல் அண்ணன் கலங்கிய முகத்துடன் பின்தொடர்ந்தான். "தெரியாம எடுத்துடேன்... காசு வேண்னா வச்சிக்கங்க..." என்று தேம்ப்பித் தேம்பி அழுதபடி, சட்டைப் பையில் வைத்திருந்த ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துக்கொடுத்தேன். எனது அழுத முகமும், கசங்கிய ஐந்து ரூபாய் நோட்டுடன் நீண்டிருந்த பிஞ்சுக் கையையும் பார்க்க அவருக்கு மிகப் பாவமாக இருந்திருக்கவேண்டும். "காசெல்லாம் வேணாம்... இனி இப்படில்லாம் செய்யக்கூடாது; என்னா..." என்று பேனாவை வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பிவிட்டார்.
வாழ்வில் என்னையே மிகக் கேவலமாக உணர்ந்த தினம் அதுதான். அந்த ஒரு வினாடியில் அப்படி ஏன் தோன்றியதென்று இன்றுவரை தெரியவில்லை. பொருட்காட்சிக்குக் கிளம்பியபோது இருந்த சந்தோஷம் மொத்தமும் வடிந்துபோயிருந்தது இருவரிடத்தும். வீட்டில் அண்ணன் இதைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனாலும், சில வருடங்கள் வரை, எங்களுக்குள் எழும் சண்டைகள் உச்சத்தை அடைந்து அவனால் சாமாளிக்க முடியாத பட்சத்தில், "பொருள்காட்சித் திருடா" என்பான் சத்தமாக! எனக்குள் சர்வமும் ஒடுங்கிவிடும். இப்படி அந்த நிகழ்ச்சிக்குப் பின் வந்த எல்லா சண்டைகளிலும் அவனே தொடர்ந்து ஜெயித்தான்! 'அன்னைக்கு ஏன்தான் அப்படிச் செய்தோமோ' என்று என்னையே நொந்துகொள்வேன்.
பின்னாட்களில், அன்று மாட்டியிருக்கவிட்டால் திருட்டு என்னை மேலும் ஊக்கப்படுத்தியிருக்கக் கூடும் என நினைத்துக்கொள்வேன். இந்த இரண்டு சம்பவங்களையும் நினைக்கிற பொழுதெல்லாம் எனக்குத் தோன்றும் ஒரு விஷயம் - முதல் திருட்டில் பிடிபடுகிற எவனும், மீண்டும் திருட்டைப்பற்றியே யோசிக்கமாட்டான் என்பதுதான்!
7 மறுமொழிகள்:
அருள், சரியா தான் சொல்லியிருக்கீங்க... மாட்டிக்கிறவன் தான் திருடன். ஆனா பல அரசியல்வாதிகள் திருடி மாட்டிக்கிட்டாலும் திருடன் என்று தெரிந்தாலும் அவனுக்கே ஓட்டு போட்டு அசத்தர நம்மள என்னவென்று சொல்லுவது!!!
அருள்,
என்ன சொல்றதுன்னு தெரியலை. நம்மூர்லெ போலீஸ்காரன்கிட்டே பிடிச்சுக் குடுத்துருவோமுன்னு
சொல்லி பிள்ளைங்களுக்கு பயம் வைப்பாங்க இல்லையா? பயம் காரணமாவே நாம் பலரும்
தப்பு செய்யறதில்லை. திருடன், திருடின்னு மத்தவங்க சொல்றது கேக்கும்போதே அவமானமாவும்,
ரோசமாவும் இருக்கும் இல்லையா?
உங்க பதிவுக்கு சம்பந்தம் இருக்கான்னு தெரிய்லை. ஆனா ஒரு நிகழ்ச்சி மனசை நாலுநாளா உறுத்துது.
வீட்டுலே பையன் பொழுதண்ணிக்கும் திருடிக்கிட்டே இருந்திருக்கான். 7 வயசுலெ இருந்தே தகராறு.
கடைசியா போன வாரம் அம்மாவோட காரைச் சொல்லாமக் கொள்ளாம எடுத்துக்கிட்டுப் போயிட்டான்.17 வயசுப் பையன்,
பையனுக்கு புத்தி வரட்டுமுன்னு அம்மா போலீஸ்லே சொல்லுச்சு. போலீஸ் பிடிச்சுக்கிட்டுப் போச்சு. ஜெயிலுக்கு
அனுப்பும்போது கைதிகளைக் கூட்டிக்கிட்டுப் போன வேன்லே இருந்த மத்த கைதிகள் கொஞ்சம் பெரிய வயசு(25 வயசு)
இவனை அடிச்சுட்டாங்க. ஜெயிலுக்குப் போய் இறங்குனவுடன் பையன் செத்துட்டான்.
17 வயசுப் பையன். பரிதாபமா இருக்கு. என்னத்தைச் சொல்ல?
ஜெய்,
//ஆனா பல அரசியல்வாதிகள் திருடி மாட்டிக்கிட்டாலும் திருடன் என்று தெரிந்தாலும் அவனுக்கே ஓட்டு போட்டு அசத்தர நம்மள என்னவென்று சொல்லுவது!!! //
நியாயமான கேள்விதான். ஆனால் பதில் சொல்ல முடியாத கேள்வி :)
துளசியக்கா,
அந்தப் பையனுக்கு இது அதிகப்படியான தண்டனை தான். வீட்டில் மட்டும் திருடும் பையன் என்றால் அவனை அவன் பெற்றோர்கள் சரியாக அனுகவில்லை என்றே சொல்ல வேண்டும்! நீங்கள் சொல்வதுபோல்... என்னத்தைச் சொல்ல?!! :(
அருள்,
நானும் உங்களை போலத்தான் சின்ன வயதில். திருடன் என்றால் கண்ணில் கறுப்புத் துணி கட்டிக் கொண்டு கூரான கத்தியால் மிரட்டுபவன் என்றுதான் உருவகம். ஒரு மருத்துவரின் மேசையிலிருந்து ஐம்பது ரூபாயைத் திருடிக் கொண்டு ஒடினான் என்று பிடித்து தெருவில் இழுத்து வரப்பட்டவன்தான் நான் கண்ட முதல் திருடன். உங்களைப் போலவே பரிதாபம்தான் தோன்றியது.
சூழ்நிலைதான் நம்மை எல்லாம் காப்பாற்றி வந்திருக்கிறது என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். நாம் வளர, வளர உலகம் புரிய, உலகம் இயங்கும் அடிப்படை பிடிபட்ட பிறகுதான் ஏன் திருடக் கூடாது என்று மனதில் உறைக்கிறது. அது வரை தண்டனைக்கும் பேருக்கும் பயந்துதான் திருடாமை.
அதுதான் கல்வியும் அனுபவமும் தர வேண்டிய முதிர்ச்சி. இன்றைக்கு அந்தக் கல்வியும் அனுபவமும் எப்படி மாட்டிக் கொள்ளாமல் திருடுவது என்பதில்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் பரிதாபமான ஒன்று. Thou shall not steal என்பது Thou shall not kill என்பதைப் போல மனித குலமும் பண்பாடும் நிலைப்பதற்கான அடிப்படை நிபந்தனைகள் என்பது படிப்படியாக மறந்து கொண்டு போவதுதான் பரிதாபம்.
அன்புடன்,
மா சிவகுமார்
//இன்றைக்கு அந்தக் கல்வியும் அனுபவமும் எப்படி மாட்டிக் கொள்ளாமல் திருடுவது என்பதில்தான் பயன்படுத்தப்படுகிறது //
சரியாகச் சொன்னீர்கள் சிவகுமார். ஜெய் சொல்லும் விஷயம் இதை விடக் கொடுமையானது!
அருள், நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
மிக்க நன்றி செல்வராஜ் :)
Post a Comment