என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

21 September 2006

காணக்கிடைக்கும் தெய்வங்கள்

வாழ்வில் அலுக்கவே அலுக்காத விஷயங்கள் என்று ஒவ்வொருவருக்கும் சின்னதாகவாவது ஒரு பட்டியல் இருக்கும். என்னுடைய அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது, குழந்தைகளும் அவர்களின் குறும்புகளும்!

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். நான் புரிந்துகொண்டவரை கடவுள் என்பது ஒரு நிலை. கண்ணில் படுகின்ற எதையும், அவற்றின் மீதான எந்த கற்பிதங்களும் அற்று, அவற்றை அவைகளாகவே பார்க்கும் பாக்கியம் அந்த நிலையில் மட்டுமே வாய்க்கும். அந்த நிலையில் இருப்பவர்கள் குழந்தைகள் மட்டுமே. வாழ்வின் எல்லைகளை உணர்ந்து அடங்கிய, முதிர்ந்த வயதோரையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்!

மாலை வேளைகளில், எங்கள் அலுவலகத்தின் எதிர் வரிசையிலிருக்கும் ஒரு வீட்டின் வாசலில், குழந்தையாய்க் கனிந்துவிட்ட ஒரு முதியவர், சில மாதங்களேயான ஒரு கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சிக்கொண்டிருப்பார். நான் என்னை மறந்து பார்க்கும் காட்சி அது. இருவரின் முகங்களுக்கும் அதிகபட்சம் ஆறு வித்தியாசங்கள் கூட சொல்ல முடியாது! வேறு யாருக்கும் புரியாத, அவர்களுக்கு மட்டுமேயான ஒரு மொழியில் அவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். உள்ளம் மலர்ந்து சிரிக்கும் அந்த முகங்களைப் பார்க்கக் கிடைக்க, நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாழ்வின் இரண்டு எதிரெதிர் விளிம்புகளும் ஒன்றானவையே என்று சொல்லாமல் சொல்லும் காட்சியது. அப்பப்பா... இடையில்தான் எவ்வளவு பிரச்சனைகள், அனுபவங்கள். குழந்தைப்பருவத்தின் உன்னதங்கள் உணர்ந்து மீண்டும் அப்படி மாற நம் வாழ்நள் முழுதும் தேவையாயிருக்கிறது நமக்கு!

நான் எனது குழந்தைப்பருவத்தைக் கடந்துகொண்டிருந்த நாட்களிலேயே, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைத்துவிட்டன. ஒவ்வொரு ஆண்டும், விடுமுறையில் பாட்டி வீட்டிற்குச் சென்றால், மாமாவின் குழந்தை, சித்தியின் குழந்தை என்று மாற்றி மாற்றி கைக்குழந்தைகள் இருந்துகொண்டேயிருக்கும். அவர்களை விருப்பத்துடன் பார்த்துக்கொள்பவன் நான் என்பதால், அவர்களின் அம்மாக்கள் என்னிடம் விட்டுவிட்டு அவர்கள் வேலையை நிம்மதியாய் பார்ப்பார்கள். அக்காவின் குழந்தைகள், தங்கையின் குழந்தைகள் என்று இன்னமும் அது தொடர்கிறது. கூட்டுக் குடும்பமென்பதால், கைக்குழ்ந்தையில் இருந்து பள்ளி இறுதியாண்டு வரை, எப்போதும் எல்லா வயதிலும் குழந்தைகளுண்டு எங்கள் வீட்டில்.

நாம் உருவாக்கி வைத்திருக்கும் உலகின் கறைகள் படிந்துவிடாத ஓர் இயல்பான உலகின் தரிசனம், குழந்தைகளுடன் விளையாடும்போது கிடைத்துவிடுகிறது. அந்த உலகின் பொய்களும் கோபங்களும் கூட மிக அழகானவையாகவே இருக்கின்றன. மொழிகளற்றுப் பேசவும், சிரிக்கவும் அங்கே வாய்க்கிறது. மிக முக்கியமாக, அங்கு ஃபார்மாலிட்டி என்கிற ஒரு விஷயமே இல்லை! சக மனிதனிடத்தில் சதி, மதம், அந்தஸ்து என்று எந்த பேதமும் இல்லை!! உள்ளம் உணர்ந்ததை உடற்கூறுகள் சொல்லும் சுதந்திரம், அந்த வயதின் வரம்.

நாம் ஒவ்வொருவரும், நமக்கே தெரியாமல், சொல்லவொண்ணா துயரத்துடன் கடந்துவருகிற நம் வாழ்வின் நாட்கள் எவை தெரியுமா? நம் குழந்தைப் பருவத்தைக் கடக்கிற நாட்கள் தான். அதிலும் குறிப்பாக, ஓஷோ சொல்வது போல், பள்ளிக்கு கொண்டுவிடப்படுகிற நாட்கள்! அங்கேதான், இயற்கை அளித்த நமக்கேயான நம் பாதையிலிருந்து விலகி, முற்றிலும் கற்பிதங்களினாலான ஒரு பாதையில் செல்ல நாம் வற்புறுத்தப்படுகிறோம். நமக்கு இயல்பேயில்லாத கட்டுப்பாடுகளுக்கும், விதிமுறைகளுக்கும் நாம் கட்டாயப் படுத்தப்படுகிறோம். எத்தனை அழுதாலும் புரண்டாலும், இத்தனை மணிவரை இந்த இடத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பணிக்கப் படுகிறோம். நினைத்துப்பார்க்கமுடியாத வன்முறை நம்மீது பிரயோகிக்கப்படுகிற நாட்கள் அவை.

அப்புறம் நம் வாழ்வில் எதுவுமே நமதில்லை! சமூகம் இழுக்கும் எல்லா இழுப்புகளும், முடிந்தவரை வளைந்து கொடுப்பதும், முடியாதவற்றை எதிர்ப்பதால் வெறுக்கப்படுவதும் மாறி மாறி நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. பெற்றோர்கள் தங்கள் வாழ்வில், சரியாகவோ அல்லது தவறாகவோ கற்ற பாடங்களை முன்னிருத்தி, குழந்தைகளின் தனித்தண்மைகள் புரக்கணிப்படுவது இன்னொரு பெரும் சோகம்!

எண்ணற்ற விதிமுறைகளும் கற்பிதங்களும் தந்த சிக்கல்கள் நிறைந்த நம் வாழ்வில், சில மணித்துளிகளாவது இயல்பான வாழ்க்கை வாழ முடிகிறதென்றால், அது நாமும் குழந்தையாய் மாறி முழந்தைகளுடன் விளையாடும்போது மட்டும் தான்! யோசித்துப்பார்த்தால் ஒரு உண்மை மிக ஆச்சர்யமாய் இருக்கிறது. இன்றைக்கு இருக்கிற நல்லவன், கெட்டவன், ஞானி, அரசியல்வாதி, தீவிரவாதி, etc., etc., எல்லோரின் குழந்தைப்பருவத்திலும் அவர்களின் எண்ணமும் மனசும் ஒன்றுபோலவேதானே இருந்திருக்கும்! இயற்கை தந்த இனிய வாழ்வை இடையில் வந்து மாற்றிப்போட்டது யார்?

பூங்கா செப்டம்பர் 25, 2006 இதழில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.

19 மறுமொழிகள்:

சீனு said...

புரியுது! நான் வேணும்னா உங்க வீட்டுல உங்க கல்யாணத்தப் பத்தி பேசவா!!

அருள் குமார் said...

ம். பேசுங்களேன். எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. மாறாக மிக்க சந்தோஷம்தான்! ;)

Sud Gopal said...

அருள், இந்தக் கட்டுரை ஒரு இனிய வாசிப்பு அனுபவத்தைத் தந்தது.தொடரவும்.

RBGR said...

அருள்!
எனவேதான் அய்யன் சொன்னார்.

குழலினிது யாழினிது என்பர் தத்தம்
மழலை சொல் கேளாதர்.


என் கருத்து என்னவெனில்,
"மாற்றி மாற்றி கைக்குழந்தைகள் இருந்துகொண்டேயிருக்கும். "

"இதை விட இன்பம் தத்தம் மழலைச்சொல்." என்பது உங்களுக்கும் விரைவில் புரிய வாழ்த்துகள்.


என்றென்றும் நட்புடன்.

அருள் குமார் said...

மிக்க நன்றி சுதர்சன்.கோபால்

தமிழி,
இந்தப் பதிவை பதித்ததும்,

செல்வராஜின் இந்த பதிவு பார்த்துவிட்டு நீங்கள் சொன்னதைத்தான் நினைத்துக்கொண்டேன்!

G.Ragavan said...

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைத்திருந்தால் துயரம் என்று
ஞானியரும் வேதியரும் சொன்னார் அன்று

துளசி கோபால் said...

குழந்தையாவே இருந்துட்டா துக்கமே இல்லை.
ஆனா எத்தனை குழந்தைகளுக்கு துக்கமே வாழ்க்கையாப் போயிருது.(-:

குழந்தையைக் குழந்தையா இருக்கவிடுதா இந்த சமூகம்?

ஹூம்......

- யெஸ்.பாலபாரதி said...

ஆஹா... உங்களுக்கும் கல்யாண ஆசை(அல்ல) ஏக்கம் வந்துவிட்டதென உங்கள் பதிவிலும் முதல் பின்னூட்டத்திற்கான பதிலிலும் தெரிகிறது. எனிவே வாழ்த்துக்கள் அருள்.
:-)))

பிச்சைப்பாத்திரம் said...

Nice post arul.

மெளலி (மதுரையம்பதி) said...

//மாலை வேளைகளில், எங்கள் அலுவலகத்தின் எதிர் வரிசையிலிருக்கும் ஒரு வீட்டின் வாசலில், குழந்தையாய்க் கனிந்துவிட்ட ஒரு முதியவர், சில மாதங்களேயான ஒரு கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சிக்கொண்டிருப்பார். நான் என்னை மறந்து பார்க்கும் காட்சி அது//

என்வீட்டில் என் தந்தையும் என் மகளும் அப்படித்தான் இருக்கிறார்கள்...அது பார்த்தாலே என் மனம் இலேசாகிறது. மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...

அருள் குமார் said...

G. ராகவன், துளசியக்கா, சுரேஷ் கண்ணன், மௌல்ஸ் அனைவருக்கும் என் நன்றிகள்.

அருள் குமார் said...

//ஆஹா... உங்களுக்கும் கல்யாண ஆசை(அல்ல) ஏக்கம் வந்துவிட்டதென உங்கள் பதிவிலும் முதல் பின்னூட்டத்திற்கான பதிலிலும் தெரிகிறது. //

வந்துவிட்டதா?!!! நீங்க வேற... அது வந்து, இருந்து பாத்துட்டு போகப்போகுது :(

Anonymous said...

kalyana yekkathin adutha kattamaga kuzhaindhai aasai-yum thulir vittiruppadhu pola therigaradhu....!! viraivul thirumanam nadandhera vaazhtukal !

oru kaalathil naanum idhe ulagil, kuzhaindhayaga neengal sonna unarvugal thangi magizhndhiruppen endra ninaippae sugama irukkiradhu !

nalla indha padhivukku...nandrigal pala.

செல்வநாயகி said...

நல்ல பதிவு அருள்.

அருள் குமார் said...

நன்றி குமார்.

//kalyana yekkathin adutha kattamaga kuzhaindhai aasai-yum thulir vittiruppadhu pola therigaradhu....!! viraivul thirumanam nadandhera vaazhtukal !
//
என்னங்க ஆளாளுக்கு இதையே சொல்றீங்க. உண்மையில் என் கல்யாணக் கனவுகளுக்கும் இந்தப் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சீனு சும்மா கலாய்க்கறாரேன்னு அப்படி பதில் சொன்னேன் :)

நன்றி செல்வநாயகி.

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

சில பயணங்களில் நான் ரசித்து மகிழ்ந்திருந்த கை குழந்தைகளுடன் புரியாத மொழி பேசும் பெண்களை நினைவுருத்துகிறது உங்களின் இந்த பதிவு. வாழ்வில் தாண்டி வரும் அனுபவங்கள் மட்டுமே ஒரு குழந்தையை இன்று நாம் பார்க்கும் முகமூடி அணிந்த மனிதனாக மாற்றுகிறது என்பது என் கருத்து...

அருள் குமார் said...

வாங்க முத்துக்குமார் :)

உங்கள் கருத்துக்கு நன்றி.

//வாழ்வில் தாண்டி வரும் அனுபவங்கள் மட்டுமே ஒரு குழந்தையை இன்று நாம் பார்க்கும் முகமூடி அணிந்த மனிதனாக மாற்றுகிறது என்பது என் கருத்து//

அந்த அனுபவங்கள் நம்மால் உர்ய்வாக்கப்பட்டவை என்றுதான் நான் நினைக்கிறேன்!

Anonymous said...

அருள் கல்யாணத்திற்கு தயாராகீடீங்க போல இருக்கு!!!. என்ன ம.செ உதவியோட பொண்ணு தேடறீங்களா?
வாழ்த்துக்கள்.

Anonymous said...

that was so good....