என்னில் இயல்பாகவே எழுகிற எந்த ஒரு உணர்வும் தவறானதில்லை!

29 June 2005

பூங்கோதை

பூங்கோதையின் மதிய நேரத்துக் குட்டித்தூக்கம் கலைந்தபோது மணி நாலேகால். ஐந்து மணிக்குத் தண்ணீர் பிடிக்கச் செல்லவேண்டுமென மூளை அனிச்சையாய் உணர்த்த, உடைதிருத்தி எழுந்தாள். பின்கட்டுக்குச் சென்று குவளையில் இருந்த நீர் எடுத்து முகத்தில் அடித்து அலம்பியபோது உடம்பு சிலிர்த்தது. இது பூங்கோதைக்கு ரொம்பப் பிடித்த விஷயம். நன்றாய் தூங்கியெழுந்து குளிர்ந்த நீரில் முகம் கழுவியவுடன், முகத்தில் ஒரு தெளிவு படரும். உலகத்திற்கு புதிதாய் வந்தமாதிரி தோன்றும். அதை அவள் அனுபவித்து ரசிப்பாள்.

பூங்கோதை அழகு. கண்களை உறுத்தாத இதமான அழகு. பிறை நெற்றியும், பெறிய விழிகளும், அளவாய் சதைபோட்ட கன்னங்களும், லிப்ஸ்டிக் இல்லாமல் சிவந்திருந்த உதடுகளும் அவளுக்கு இயல்பாய் ஓர் குடும்பப்பாங்கான முகத்தைக் கொடுத்திருந்தன.

பூத்துண்டால் முகம் துடைத்து, கண்ணாடி முன் வந்து நின்றாள். ஆளுயர கண்ணாடி. அப்பாவிடம் அடம் பிடித்து வாங்கியது. வீட்டில் யாரும் இல்லாதபோது அந்தக் கண்ணாடிதான் அவளுக்குத் தோழி. நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்காய் அதன் முன் நின்றிருக்கிறாள். அதனுடன் நிறைய பேசியிருக்கிறாள், பாடியிருக்கிறாள். எப்போதோ படத்தில் பார்த்த ஸ்டெப்ஸை நினைவுபடுத்தி ஆடிப்பார்த்திருக்கிறாள்.

தூங்கியெழுந்ததில் கன்னம் இன்னும் உப்பியிருப்பதாய் உணர்ந்தாள். கலைந்திருந்த தலை பிரித்து மீண்டும் வாரத் தொடங்கினாள். எட்டாம் வகுப்போடு படிப்பு நிறுத்தியதிலிருந்து வெளியில் கிளம்புவது வெகுவாய்க் குறைந்திருந்தது. அவ்வப்பொழுது உறவினர் வீட்டு விசேஷங்கள், எப்போதாவது தோழிகளுடன் உள்ளூர் டாக்கீஸில் சினிமா - அவ்வளவுதான். அவளுக்குப் பிடித்தமான, அவள் நிறத்திற்கு எடுப்பான மாம்பழநிற மற்றும் கருநீல நிறப் பாவாடை தாவணிகள் மற்ற நாட்களில் எழுப்ப ஆளின்றி அலமாரியில் தூங்கிக் கொண்டிருக்கும்.

பின்னி முடித்த கூந்தலை முன்புறம் போட்டு அழகு பார்த்தாள். பின்னல் திருப்தியாய் இருந்தது. முகத்தை மறுபடி அழுந்தத் துடைத்து பவுடர் போட்டு சீராய் தடவினாள். கரிய விழிகள் விரித்து மையெழுதி, கண்களை படபடக்கவிட்டு கண்ணாடி பார்த்தள். ஸ்டிக்கர் பொட்டில் அவளுக்கு என்றும் நம்பிக்கையில்லை. ஒற்றை விரலில் குங்குமம் தொட்டு, மற்ற நான்கு விரல்களில் முகம் தாங்கி, புருவ மத்தியில் அழுந்தப் பொட்டிட்டாள்.

ஜாக்கெட்டிற்குப் பொருத்தமாய், மடித்து வைத்திருந்த தாவணி எடுத்து மாற்றிக்கொண்டாள். பக்கவாட்டிலும், நேராயும் கண்ணாடி முன் நின்றுபார்த்து முந்தானையை சரிசெய்தாள். கண்ணாடியை நெறுங்கி, ஒரு சின்ன முடிக்கற்றையை பிரித்தெடுத்து நெற்றியில் படரவிட்டு, உதடு பிரியாமல் புன்னகைத்துப் பார்த்தள். வெட்கத்தில் முகம் சிவந்து இன்னும் சிரித்து "ச்சீ. போ..." எனச் செல்லமாய் கண்ணாடி பார்த்து சிணுங்கியபோது மணி ஐந்து.

அடுக்களை பக்கம் பார்த்து "அம்மா...தண்ணிக்கு போய்ட்டு வரேன்..." என்று குரல் கொடுத்து, பித்தளை குடம் எடுத்து இடுப்பில் சாய்த்தாள். பளபளத்த அந்தப் பித்தளைக் குடம், அவளின் இடுப்பிற்கு அளவெடுத்து வார்த்ததுபோல் அம்சமாய் பொருந்தியது!

தெருவில் இறங்கி நடந்தபோது அலுப்பாய் உணர்ந்தாள். இரண்டு தெரு தள்ளி ஊருக்குப் பொதுவான தண்ணீர் குழாய். தூரம் பெரிய விஷயமில்லை. இவள் வீட்டுத் தெருவின் கடைசி வீட்டு ஷண்முகம், தண்ணீர் குழாய்க்கு எதிர் டீக்கடையில் வேலையற்று அரட்டையடிக்கும் இவள் வயசு இளைஞர்கள், இவளைப்போல் தண்ணீர் எடுக்க வரும் பக்கத்துத் தெரு விஜயா... இவர்கள்தான் இவள் அலுப்பிற்குக் காரணம்.

விஜயா இவளைப்போல் அழகில்லை. மாநிறத்திற்கும் கொஞ்சம் கம்மி. இவளைப்போள் எடுப்பான உடல் வாகுமில்லை. பூங்கோதையுடன் நட்பாய் பழகினாலும் இவளின் அழகு பார்த்து வெளிப்படையாகவே பொறாமைப்படுவாள். இவள் கவனிக்காதபோது இவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பாள். இவையெல்லாம் பூங்கோதைக்குப் பிடிப்பதில்லை. ஒரு முறை, "எப்படி பூங்கோதை உடம்ப இப்படி சிக்குன்னு வச்சிக்கிற..." என்று விஜயா கேட்டதற்கு, என்ன இவள் இப்படியெல்லாம் அசிங்கமாய் கேட்கிறாள் என முகம் சுளித்தாள். தன் அழகு கண்டு பொறாமைப்பட்டு தனக்கு எதாவது செய்துவிடுவாளோ என பயந்ததும் உண்டு!

இப்படித்தான் கோடி வீட்டு ஷண்முகம். தினம் தினம் இவள் தண்ணீர் எடுக்கச் செல்லும்போது, தன் வீட்டு ஜன்னல் திறந்து உட்கார்ந்திருப்பான். தினமும் சூரியன் உதிக்கத் தவறினாலும் தவறலாம், இவன் மாலை ஐந்து மணிக்கு ஜன்னல் கம்பிகளுக்குப்பின் ஆஜர் ஆவது தவறாது. பூங்கோதைக்கு அவனை சுத்தமாய்ப் பிடிப்பதில்லை. அவனின் பார்வை அத்தனை மட்டம். சில சமயம் இவளின் பார்வை பட்டால் அநாவசியமாய் வழிவான். இவள் முகம் சுலித்து திரும்பிக் கொள்வாள்.

அப்புறம் டீக்கடை அரட்டை கும்பல். ஊர் பொதுக்குழாய் நேர் எதிரே. அந்த நான்கைந்து பேரும் சின்ன வயதில், அந்த ஊர் பள்ளிக்கூடத்தில் இவளுக்குப் பக்கத்திலமர்ந்து பாடம் படித்தவர்கள்தான். நம்ம ஊர் பண்பாடு இந்த சில வருடங்களில் இவளுடன் ஓர் பெரிய விலகலை அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.

இவள் தண்ணீர் எடுக்க வருகையில் தான் "தண்ணி கொடம் எடுத்து... தங்கம் நீ நடந்துவந்தா..." என்று ஆடலுடன் பாடிக்காட்டுவார்கள். இன்னும் எத்தனையோ வகையான கிண்டல்கள். இவளுக்கு கோபத்தில் முகம் சிவக்கும். சிலசமயம், அப்பாவிடம் சொல்லி இவர்களை அதட்டலாமா என்றுகூட யோசிப்பாள்.

இன்று ஷண்முகம் வீட்டைக் கடக்கையில், அதிசயமாய் ஜன்னல் சாத்தியிருந்தது. கழுதை எங்காவது ஊர் சுற்றப் போயிருக்கும் என நினைத்தவளாய் நிம்மதியுடன் நடந்தாள்.

விஜயா வீட்டில் அவளுடைய அம்மா தலைவாரியபடி வாசலில் அமர்ந்திருந்தாள். "என்னக்கா... விஜயா தண்ணிக்கு வரலியா..?" - கடமைக்கு விசாரித்தாள் பூங்கோதை. "அவ அவங்க அத்தை வீட்டுக்கு போயிருக்கா, நாளன்னிக்குதான் வருவா..." என்றாள் விஜயாவின் அம்மா.

இவளுக்கு இன்னும் நிம்மதி. தண்ணீருக்கு வரிசையில் இடம்பிடித்து குடம் வைத்தபோதுதான் கவனித்தாள். டீக்கடையில் அந்த நான்கைந்து பேர் இல்லை. தண்ணீர் பிடித்துத் திரும்பினாள். வரும்போதும் ஷண்முகம் வீட்டு ஜன்னல் சாத்தியிருந்தது.

இன்று அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. வக்கிரப்பார்வை ஷண்முகம், பொறாமை பிடித்த விஜயா, கிண்டலடிக்கிற டீக்கடை கும்பல் - யாரும் இல்லை. சந்தோஷித்த மனதுடன் வீட்டுப் படியேறினாள். ஆளுயர நிலைக்கண்ணாடி கடக்கையில், ஏனோ... இன்றைய முக்கால் மணி நேர அலங்காரமெல்லாம் வீணோ என அவளுக்குத் தோன்றிற்று.

10 மறுமொழிகள்:

சினேகிதி said...

கதை நல்லா இருக்கு அருள .வக்கிரப் பார்வை பார்கிறவங்களுக்காகவா பூங்கோதை கஷ்டப்பட்டு அலங்காராம் பண்றாங்க??

குழலி / Kuzhali said...

யக்கோவ் சினேகிதி

வேண்டாம் அப்படினா வேண்டுமென்று அர்த்தம்....

பிடிக்கலை அப்படினா பிடிச்சிருக்கு என்று அர்த்தம்...

சீ... போடா அப்படியென்றால்
வாடா என்று அர்த்தம்...

என்பது எனக்குத்தெரியுமே.....

கலக்குறே அருள் நடத்து....

அருள் குமார் said...

நன்றி சினேகிதி.
மனித மனம் விசித்திரங்கள் நிறைந்தது. நம்மை
அறியாமலேயே சில சமயம் இப்படி தோன்றத்தான்
செய்கிறது. அவள் ஷண்முகத்திற்காய்
அலங்கரித்துக்கொள்ளவில்லை தான். ஆனாலும், தன்
அலங்காரங்கள் யாரயும் எந்த விதத்திலும்
பாதிக்காத போது, அவை வீணோ என நினைக்கிறாள்
பூங்கோதை. அவ்வளவே!

குழலிக்கும் எனது நன்றிகள்.

பத்ம ப்ரியா said...

Hi

I think at the starting that it will lead to a long thodar kathai.. but u suddenly finished it as a short story.. it is intresting and u may convert it as thodarkathai..

M. padmapriya

அருள் குமார் said...

Thanks Padmapriya :)

சிவா.. said...

I didnt expect the climax. After a long time i am reading good short stories. Writing style is perfect....Keep it up.

Sivasu

சேதுக்கரசி said...

தமிழ்மணம் "பரண்" உங்க பழைய பதிவைக் கொண்டுவந்தது. கடைசியாகப் பின்னூட்டமிட்டவர் சொன்னதுபோல், உங்கள் எழுத்துநடை நன்றாக இருக்கிறது.

அப்புறம்... உங்கள் வலைப்பூவா என்றே சந்தேகம் வந்துவிட்டது எனக்கு. வார்ப்புரு மாற்றியதோடல்லாமல் புகைப்படத்தையும் மாற்றிவிட்டீர்களே :‍) உங்கள் பழைய புகைப்படத்தில் அப்படியே என் நண்பர் ஒருவரைப் போல் இருப்பீர்கள்... இதில் கொஞ்சம் கனத்தாற்போல் இருக்கிறீர்களே ;‍)

அருள் குமார் said...

நன்றி சேதுக்கரசி!

சமீபத்தில் எடுத்த புகைப்படம் இருக்கட்டுமே என்று மாற்றினேன். அதோடு இந்த புகைப்படத்தில் நான் அழகாக இருப்பதாக பலர் சொன்னார்கள், அதனால்தான் ;)

பாலராஜன்கீதா said...

பூங்கோதை = பதிவர்கள்,
அலங்காரம் = பதிவுகள், பின்னூட்டமிடுபவர்கள் = விஜயா, ஷண்முகம் மற்றும் டீக்கடை அரட்டைகும்பல்
"விஜயா தண்ணிக்கு வரலியா..?" = பி.க.

சரிதானே ? :-)))

அருள் குமார் said...

பாலராஜன்கீதா,
என்னங்க இப்படி கலக்கறீங்க!

இதுல ஹைலைட் என்னன்னா,

//"விஜயா தண்ணிக்கு வரலியா..?" = பி.க.//

- இதான். ரொம்ப ரசிச்சேன் :)))